திரு வன்னியூர்
(அன்னியூர், அன்னூர்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - நாச்சியார்கோவில் -
பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று அங்கிருந்து வடக்கே 3 கி.மீ. பயணம் செய்து இத்தலத்தை
அடையலாம்.
திருக்கருவிலிக் கொட்டிட்டை என்ற
மற்றொரு பாடல் பெற்ற திருத்தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மீ. பயணம் செய்தும் இத்திருத்தலத்தை
அடையலாம்.
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ். புதூர் என்ற இடத்திற்கு வந்து, அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம்
சென்று அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால் திருஅன்னியூரை
அடையலாம்.
கும்பகோணத்தலிருந்து அன்னியூருக்கு
நகரப்பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
இறைவர்
: அக்கினிபுரீசுவரர், அக்னீசுவரர்,
இறைவியார்
: கௌரி
தல
மரம் : வன்னி.
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - காடுகொண்டரங்கா
சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற
அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில்
அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக
இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும்
தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும்
கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட
தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல
தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம்
இத்தலத்திற்கும் வந்து இலிங்கம் அமைத்து, தீர்த்தம்
உண்டாக்கி, வன்னி இலைகளால்
இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன்
அக்னிபுரீசுவரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர்
பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள் புரிந்த அக்னீசுவரரை வணங்கி, இத்தலத்திற்கு வந்து அக்னி
தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை
வேண்டினான். எனவே உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில்
நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில்
குணமாகும்.
பார்வதி தேவி காத்தியாயன முனிவரின்
மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி
தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே
இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின்
திருமணம் கூடும் என்பது இன்றுமுள்ள நம்பிக்கை.
சிறிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம்
அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச்
சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாகவுள்ளன -
பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம்
வன்னியும் உள்ளன. கோபுர வாயில்க் கடந்தவுடன் நேரே பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்துள்ள
முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம்
தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே இத்தல இறைவன் சுயம்பு
மூர்த்தியாக இலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவார
பாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், ஊழிதொறும் மன்னி ஊர் மால்விடையாய், வானவா என்று தொழ வன்னியூர் வாழும்
மணிகண்டா" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 249
சார்ந்தார்தம்
புகல்இடத்தைத் தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்துஆர்வம்
உறப்பணிந்து, கோதுஇல்தமிழ்த்
தொடைபுனைந்து,
வார்ந்துஆடும்
சடையார்தம் பதிபலவும்
வணங்கி,உடன்
சேர்ந்தார்கள்
தம்பெருமான் திருவீழி மிழலையினை.
பொழிப்புரை : தம்மை வந்து
அடைந்தவர்க்கு அடைக்கலந் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமானை, அப்பதியில் உள்ள `தான் தோன்றி மாடம்` என்னும் கோயிலினுள் கண்டு, மிகுந்த அன்பு பொருந்த வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்த் தொடை மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர்
வீற்றிருந்தருளும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப், பின்னர் அவ்விருவரும் (திருஞானசம்பந்தரும், அப்பரும்) தம் பெருமானின்
திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய
பதிகம்: `முடித்தாமரை` - திருத்தாண்டகம்.
பதி பலவும் என ஆசிரியர் கூறுதற்கு இயைய
திருமீயச்சூர், திருவன்னியூர் ஆகிய
பதிகளைக் கொள்ளலாம்.
1. திருமீயச்சூர்
இளங்கோயில்: `தோற்றும் கோயிலும்` (தி.5 ப.11)- திருக்குறுந்தொகை.
2. திருவன்னியூர்: `காடு கொண்டரங்கா` (தி.5 ப.26) - திருக் குறுந்தொகை.
5. 026 திருவன்னியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
காடு
கொண்டுஅரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட
மாநடம் ஆடும் பரமனார்
வாட
மானிறம் கொள்வர் மணங்கமழ்
மாட
மாமதில் சூழ்வன்னி யூரரே.
பொழிப்புரை : மணம் கமழ்கின்ற
மாடங்களும், மாமதில்களும்
சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம்
ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண்
வாட, இவளது பொன்னிறத்தைத்
தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.
பாடல்
எண் : 2
செங்கண்
நாகம் அரையது, தீத்திரள்
அங்கை
யேந்திநின்று ஆர்எரி ஆடுவர்,
கங்கை
வார்சடை மேல்இடம் கொண்டவர்,
மங்கை
பாகம்வைத் தார்வன்னி யூரரே.
பொழிப்புரை : உமையம்மையாரை ஒரு
பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக்
கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய
கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில்
கங்கையைக் கொண்டவர்.
பாடல்
எண் : 3
ஞானம்
காட்டுவர், நன்னெறி காட்டுவர்,
தானம்
காட்டுவர், தம்அடைந்
தார்க்கெலாம்
தானம்
காட்டித்தன் தாள்அடைந் தார்கட்கு
வானம்
காட்டுவர் போல்வன்னி யூரரே.
பொழிப்புரை : வன்னியூர்த் தலத்து
இறைவர், தம்மையடைந்த
அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத்
தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.
பாடல்
எண் : 4
இம்மை
அம்மை எனஇரண் டும்இவை
மெய்ம்மை
தான்அறி யாது விளம்புவர்
மெய்ம்மை
யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின்
தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே.
பொழிப்புரை : உலகினுள்ளீரே!
வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத்
தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை
அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக.
பாடல்
எண் : 5
பிறைகொள்
வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக்
கொள்பவர், நீறுஅணி மேனியர்,
கறைகொள்
கண்டத்தர், வெண்மழு வாளினர்,
மறைகொள்
வாய்மொழி யார்வன்னி யூரரே.
பொழிப்புரை : வேதங்களை வாய்மொழியாக
உடைய வன்னியூர்த்தலத்து இறைவர்,
பிறையின்
பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர்
ஆவர்.
பாடல்
எண் : 6
திளைக்கும்
வண்டொடு தேன்படு கொன்றையர்,
துளைக்கை
வேழத்தர், தோலர், சுடர்மதி
முளைக்கு
மூரல் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும்
வார்சடை யார்வன்னி யூரரே.
பொழிப்புரை : வன்னியூர்த்தலத்து
இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும்
கொன்றையர்; துளையுடைய அயிராவணம்
என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும்
நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.
பாடல்
எண் : 7
குணங்கொள்
தோள்எட்டு மூர்த்தி இணையடி
இணங்கு
வார்கட்கு இனியனு மாய்நின்றான்
வணங்கி
மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு
வார்மனத் தார்வன்னி யூரரே.
பொழிப்புரை : வன்னியூர்த்தலத்து
இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு
இனியராகியவர்; மலர்கள் கொண்டு
வணங்குவார் மனத்தின் கண்ணவர்.
பாடல்
எண் : 8
இயலு
மாலொடு நான்முகன் செய்தஅம்
முயலில்
காண்புஅரி தாய்நின்ற மூர்த்திதான்,
அயல்
எலாம்அன்னம் மேயும்அந் தாமரை
வயல்
எலாம்கயல் பாய்வன்னி யூரரே.
பொழிப்புரை : அயற்பக்கமெலாம்
அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய
வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து
இறைவர், இயலுகின்ற திருமாலோடு
நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்.
பாடல்
எண் : 9
* * * * * * * * * *
பாடல்
எண் : 10
நலங்கொள்
பாகனை நன்று முனிந்திடா
விலங்கல்
கோத்துஎடுத் தானது மிக்கிட
இலங்கை
மன்னன் இருபது தோளினை
மலங்க
ஊன்றிவைத் தார்வன்னி யூரரே.
பொழிப்புரை : வன்னியூர்த்தலத்து
இறைவர், நன்மை கொண்ட பாகராகிய
தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது
அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment