விராலிமலை - 0367. மேகம் எனும் குழல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மேகம் எனும் குழல் (விராலிமலை)

முருகா! உனது திருவடி மலரை எப்போதும் மறவேன்

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான


மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை
     மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர

மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
     வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை

கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
     கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக்

கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில்
     கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே

மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில்
     மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே

மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
     மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல்

ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
     யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர்

ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
     னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மேகம் எனும் குழல் சாய்த்து, ரு கோகனகம் கொடு கோத்து, ணை
     மேல் விழுகின்ற பராக்கினில் ...... உடை சோர,

மேகலையும் தனி போய், தனியே கரணங்களும் ஆய், கயல்
     வேல் விழியும் குவியா, குரல் ...... மயில்காடை

கோகிலம் என்று எழ, போய்க் கனி வாய் அமுது உண்டு, ருகா, களி
     கூர, உடன் பிரியா கல ...... வியின்மூழ்கி,

கூடி முயங்கி விடாய்த்து, ரு பாரத னங்களின் மேல் துயில்
     கூரினும், ம்புய தாள் துணை ...... மறவேனே!

மோகர துந்துமி ஆர்ப்ப,விராலி விலங்கலின் வீட்டு அதில்,
     மூவுலகும் தொழுது ஏத்திட ...... உறைவோனே!

மூதிசை முன்பு ஒரு கால், தட மேருவை அம்பினில் வீழ்த்திய
     மோகன! சங்கு அரி வாழ்த்திட ...... மதியாமல்

ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று,டல் போய்,தணி
     யாமையின் வென்றவனால், பிற ...... கிடுதேவர்

ஆதி இளந்தலை காத்து,ரசு ஈள அவன்சிறை மீட்டுஅவன்
     ஆள்உலகம் குடி ஏற்றிய ...... பெருமாளே.


பதவுரை


      மோகர துந்துபி ஆர்ப்ப --- பெரிய ஆரவாரத்துடன் பேரிகை ஒலி செய்ய,

     விராலி விலங்கலின் வீடு அதில் --- விராலி மலையின் மீதுள்ள திருக்கோயிலில்

     மூ உலகும் தொழுது ஏத்திட உறைவேனே --- மூன்று உலகில் உள்ளோர்களும் வாழ்த்தும்படி வாழ்கின்றவரே!

     மூ திசை --- வட திசையில்,

     முன்பு ஒரு கால் --- முன்பு ஒரு முறை,

     தட மேருவை அம்பினில் வீழ்த்திய --- விசாலமான மேருமலையைச் செண்டாயுதத்தால் வீழ்த்திய,

     மோகன --- வசீகரமுடையவரே!

     சங்கு அரி வாழ்த்திட --- சங்கையேந்திய திருமால் வாழ்த்தச் சென்று,

     மதியாமல் --- சூரனை ஒரு பொருட்படுத்தாமல்,

     ஆகம் மடிந்திட --- அவனுடைய உடல் அழியும்படி,

     வேல் கொடு --- வேலாயுதத்தைக் கொண்டு,

     சூரனை வென்று --- சூரபன்மனை வென்று,

     அடல்போய் தணியாமையின் வென்றவனால் --- திக்கு விஜயத்தில் போர்க்குப் போய் குறைவுபடாமல் வென்ற சூரபன்மனால்,

     பிறகிடு தேவர் --- புறங்கொடுத்து ஓடிய தேவர்களின்,

     ஆதி இளம் தலை காத்து --- தலைவனாகிய இந்திரன் மகனாகிய சயந்தனைக் காத்து,

     அரசு ஆள --- அவன் அரசு செய்யும்படி,

     அவன் சிறை மீட்டு --- அவனைச் சிறையிலிருந்து மீட்டு அருளி,

     அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய  --- அவன் ஆட்சிபுரிந்த பொன்னுலகில் குடியேற்றிய,

     பெருமாளே! --- பெருமையின் சிறந்தவரே!

      மேகம் எனும் குழல் சாய்த்து --- மேகம் போன்ற கூந்தலைச் சாய்த்து,

     இரு கோகனங்கொடு கோத்து --- தாமரை மலர் போன்ற இரு கண்களைக் கொண்டு இழுத்துச் சேர்த்து,

     அணைமேல் விழுகின்ற பராக்கினில் --- படுக்கை மீது விழுகின்ற விளையாட்டில்,

     உடை சோர --- ஆடை நெகழவும்,

     மேகலையும் தனி போய் --- தனியே மேகலாபரணமும் நீங்கவும்

     தனிய கரணங்களும் ஆய --- தனிப்பட்டு மனம் முதலிய கரணங்கள் ஒன்றுபடவும்,

      கயல் வேல் வழியும் குவியா --- மீனையும் வேலையும் போன்ற கண்கள் குவியும்,

     குரல் மயில் காடை கோகிலம் என்று எழ --- மயில் காடை குயில் போன்ற ஒலி குரலில் எழவும்.,

     போய் கனி வாய் அமுது உண்டு உருகா --- சென்று மாதர்களின் கனிபோன்ற அதரத்தின் அமுதத்தைப் பருகியுருகியும்,

     களிகூர ---  மகிழ்ச்சி மிகவும், உடம் பிரியா கலவியில் மூழ்கி ---உடனாகவே இருந்து நீங்குதல் இல்லாத புணர்ச்சியின்பத்தில் முழுகி,,

     இரு பார தனங்களில் மேல் துயில் கூரினும் --- பெரிய இரு கொங்கயைின் மீது மோகத் தூக்கம் புரிந்தாலும்,

     அம்புய தாள் துணை மறவேனே --- உமது இரு தாமரைகள் போன்ற திருவடிகளை அடியேன் மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


         பெரிய ஆரவாரத்துடன் பேரிசை ஒலிக்க விராலிமலைக் கோயிலில் மூன்று உலகத்தவரும் வணங்கி வாழ்த்தும்படி வாழ்கின்றவரே!
    
     வடதிசையில் உள்ள விசாலமான மேருமலையை முன் ஒரு சயமம் செண்டினால் வீழ்த்திய வசீகரமுடையவரே!

     திருமால் வாழ்த்தச் சென்று சூரபன்மனுடைய உடல் அழியும்படி வேலினால் வென்ற, அவனிடம் புறங்கொடுத்து ஓடிய தேவர்களின் தலைனாகிய இந்திரனுடைய புதல்வன் சயந்தனைக் காத்தருளி, அவனைச் சிறை மீட்டு, பழையபடி ஆட்சி புரியும்படி பொன்னுலகில் குடியேற்றிய பெருமிதம் உடையவரே!

         மேகம் போன்ற கூந்தலைச் சாய்த்து, தாமரை மலர் போன்ற இருகண்களை கொண்டு ஈர்த்துச் சென்று படுக்கை மீது விழுகின்ற விளையாட்டில் ஆடை நெகிழவும், மேகலாபரணம் நீங்கவும், கருவி கரணங்கள் ஒன்றுபடவும், மீனையும் வேலையும் ஒத்த கண்கள் குவியும், மயில் காடை குயில் போன்ற ஒலி குரலில் எழவும், பொது மாதருடைய அதர பானஞ் செய்தும், மகிழ்ச்சி மிகுந்து புணர்ந்து இளைத்து இரண்டு கொங்கைகளின் மேல் மோகத் துயில் புரிந்தாலும் உமது திருவடித் தாமரைகளை அடியேன் மறக்கமாட்டேன்.

விரிவுரை


மேகமெனுங் குழல் சாய்த்து ---

பொது மகளிர்போன்ற இருண்ட கூந்தலைத் தொங்கவிட்டு வீதியில் நின்று இளைஞர்களை வசப்படுத்துவர்.

அங்கை மென்குழல் ஆய்வார் போலே
   சந்தி நின்று அயலூடே போவார்
   அன்பு கொண்டிட நீரோ போரீர்.   அறியீரோ” --- திருப்புகழ்.

இரு கோகனகங் கொடு கோத்து ---

கோகனகம்-தாமரை;உவமை ஆகுபெயரைக் கண்ணைக் குறிக்கின்றது.

தாமரை மலர்போன்ற விழியால் மருட்டி ஆடவரை ஈர்த்து மயக்குவர்.

தனங்களின் மேல் துயில் கூறினும் அம்புய தாள் துணை மறவேனே:-

முருகா! மாதர்மீது அன்புகொண்டு அவர் வசமாகி அவரைத் தழுவி உறங்கினாலும் உமது திருவடியை ஒரு சிறிதும் மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார்.

கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன், முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டு எனக்கொட்டி ஆட,வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.  --- கந்தரலங்காரம்

மூவுலகுந் தொழுதேத்திட வுறைவோனே ---

முருகவேள் மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆதலின் சுவர்க்கம், பூதலம், பாதலம் என்று மூன்று உலகத்தவர்களும் வணங்கித் துதிசெய்கிறார்கள்.

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத”     --- (சிவனார்மனங்) திருப்புகழ்

மேருவை அம்பினில் வீழ்த்திய மோகன ---

மேருவைச்செண்டால் எறிந்த திருவிளையாடல்.

சங்கரி வாழ்த்திட ---

சங்கு அரி. சங்கையேந்திய திருமால்.

இளந்தலை காத்து ---

இந்திரன் புதல்வனாகிய சயந்தன் சிறையில் கிடந்து துன்புற்றபோது, ஆறுமுகப்பெருமான் அவன் கனவில் தோன்றி அருள்புரிந்தார்.

அவன் சிறை மீள அருளி, அமரலோக வாழ்வும் வழங்கினார்.


கருத்துரை

விராலிமலை மேவு முருகா! எப்போதும் உமது மலரடியை மறவேன்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...