13. செய்ய வேண்டுவன
வாலிபம்
தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி,
வளர்அறம் செய்ய வேண்டும்;
சீலம்உடை
யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
செய்யாது இருக்க வேண்டும்;
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டும்; கொண்டு,
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை
பலதருமம் நாட்டவேண்டும்;
நாட்டி,
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை அடிபூசை பண்ணவேண்டும்; பண்ணி-
னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர்
கண்டனே! பூதியணி முண்டனே!
அனக! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன்
பொருள்
---
ஆலம் அமர்கண்டனே --- ஆலகால விடம் பொருந்திய
கழுத்தை
உடையவனே!
பூதி அணி முண்டனே --- திருநீற்றினைப் பூசிய
நெற்றியை உடையவனே!,
அனக --- குற்றம் இல்லாதவனே!
எமது அருமை மதவேள் --- எமது அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வாலிபம் தனில் வித்தை கற்கவேண்டும் --- இளமைப்
பருவத்திலேயே ஓருவன் அறிவு நூல்களைக் கற்க வேண்டும்.
கற்ற வழியிலே நிற்கவேண்டும் --- கற்றவாறே
நன்னெறியிலே ஒழுக வேண்டும்,
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும் ---
உலகை வளைத்து இருக்கும் கடலிலே கலம் ஊர்ந்து சென்று பொருளைச் சேர்த்தல் வேண்டும்.
தேடி வளர் அறம் செய்யவேண்டும் --- சேர்த்த
பொருளைக் கொண்டு பெருகும் அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்,
சீலம் உடையோர்களைச் சேர வேண்டும் ---
ஒழுக்கம் உடையவர்களிடத்தே நட்புக் கொள்ள வேண்டும்.
பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் --- அவ்வாறு
நட்புக் கொண்ட பின்னர், அவர்களை நீங்காது
இருத்தல் வேண்டும்.
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ளவேண்டும் --- பல
செந்தமிழ்ப் பாக்களைப் புகழ் மாலையாக ஏற்க வேண்டும்.
கொண்டு தியாகம் கொடுக்க வேண்டும் --- அவ்வாறு
பாடப்படும் பாடல்களை ஏற்று, பாடிய புலவர்களுக்கு
நன்கொடை அளித்தல் வேண்டும்.
ஞாலம் மிசை பல தருமம் நாட்ட வேண்டும் ---
உலகிலே பல திறப்பட்ட அறநிலையங்களை நிறுவுதல் வேண்டும்.
நாட்டி நன்றாய் நடத்தவேண்டும் ---
நிறுவியதோடு நில்லாமல், அவற்றை ஒழுங்காக
நடத்தல் வேண்டும்.
நம்பன் இணையடி பூசை பண்ணவேண்டும் - சிவபெருமானாகிய உனது இரு திருவடிகளினும் வழிபாடு செய்தல் வேண்டும்,
பண்ணினாலும் மிகு பத்தி வேண்டும் - வழிபாடு
செய்தாலும் உள்ளன்போடு இருந்து செய்ய வேண்டும்.
குறிப்பு ---
"கற்கை
நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும்
கற்கை நன்றே" என்பது வெற்றிவேற்கை.
கேடு
இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு, அல்ல மற்றையவை. --- திருக்குறள்.
ஒருவனுக்கு
என்றும் கேட்டினைத் தராத மேலான செல்வம்ர கல்விச் செல்வமே ஆகும். மற்றவை எல்லாம்
செல்வம் அல்ல.
ஒருமைக்
கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு,
எழுமையும்
ஏமாப்பு உடைத்து" --- திருக்குறள்.
யாதானும்
நாடு ஆமால், ஊர் ஆமால், என் ஒருவன்,
சாம்
துணையும் கல்லாதவாறு" --- திருக்குறள்.
அறம்பொருள்
இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை
நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று
உற்றுழியும்
கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை
சிற்றுயிர்க்கு
உற்ற துணை. --- நீதிநெறி
விளக்கம்.
அறம் பொருள் இன்பமும் வீடு என்னும் உயிர்க்கு
உறுதி பயக்கும் புருஷார்த்தங்களைப் பயக்கும். உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலை நிறுத்தும். வருத்தமஉ நேர்ந்த
பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்.
ஆதலால்
சிற்றறிவு உடைய உயிர்களாகிய மக்கள் பிறவிக்குத் தக்க துணை என்பது கல்வியை விடப்
பிறிது இல்லை.
தொடங்கும்
கால் துன்பமாய், இன்பம் பயக்கும்;
மடம்கொன்று
அறிவு அகற்றும் கல்வி; - நெடுங்காமம்
முற்பயக்கும்
சில்நீர இன்பத்தின், முற்று இழாய்!
பிற்பயக்கும்
பீழை பெரிது. --- நீதிநெறி விளக்கம்.
கல்வியானது படிக்கத் தொடங்கும்
காலத்தில் துன்பம் தருவதாகத்தான் தோன்றும். அது தான் பின்னர் இன்பத்தைக் கொடுக்கும். அறியாமையை நீக்கி அறிவைப் பெருகச்
செய்யும்; ஆனால் என்றும்
அகலாத மிகுதியான
காம ஆசையானது, தொடக்கத்தில் தருகின்ற
சிறிது காலமே இருக்கக் கூடிய இன்பத்தைத் தந்து, பின்னர் பெரும் துன்பத்தையே தரும்.
கல்வியே
கற்புடைப் பெண்டிர், அப்
பெண்டிர்க்குச்
செல்வப்
புதல்வனே ஈர்ங்கவியா, - சொல்வளம்
மல்லல்
வெறுக்கையா, மாணவை
மண்உறுத்தும்
செல்வமும்
உண்டு சிலர்க்கு. --- நீதிநெறி விளக்கம்.
கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே
கற்புடைய மனைவியராகவும், அம் மனைவியர்க்கு
இனிய பாடலே அருமையான புதல்வனாகவும்,
அப்பாடலின்
சொல்வளமே வளப்பம் மிகுந்த செல்வமாகவும் இருக்க, மாட்சிமைப்பட்ட அறிஞர் அவையினை
அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளது.
குஞ்சி
அழகும், கொடுந்தானைக் கோட்டு
அழகும்,
மஞ்சள்
அழகும் அழகு அல்ல, - நெஞ்சத்து
நல்லம்
யாம் என்னும் நடுவு நிலைமையால்,
கல்வி
அழகே அழகு. --- நாலடியார்.
வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும், முகத்தில்
ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும், ஒருவருக்கு உண்மையில்
அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராக வாழும், நடுநிலை தவறாத நல்ல
நெறியிலே செலுத்தும் கல்வி தான் ஒருவருக்குச் சிறந்த அழகினைத் தரும் அணிகலன்
ஆகும்.
இடைவனப்பும்,
தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும்,
நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின்
வனப்பும் வனப்பு அல்ல, எண்ணோடு
எழுத்தின்
வனப்பே வனப்பு. --- ஏலாதி
இடையின் அழகும், தோளின் அழகும், பெருமையின் அழகும், நடையின் அழகும், நாணுடைமையினால் வரும் அழகும், புடை அமைந்த கழுத்தின் அழகும் அழகு அல்ல. ஒருவர்க்கு எண்ணும் எழுத்தும் அறிதலாகிய
அழகே அழகு.
"எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப, வாழும் உயிர்க்கு"
என்னும் திருக்குறள் கருத்து சிந்தனைக்கு உரியது.
இம்மை
பயக்குமால், ஈயக் குறைவு இன்றால்,
தம்மை
விளக்குமால், தாமுளராக் கேடு இன்றால்,
எம்மை
உலகத்தும் யாம்காணேம், கல்விபோல்
மம்மர்
அறுக்கும் மருந்து. --- நாலடியார்.
ஒருவன் கற்கும் கல்வியானது இப்பிறப்பிலேயே
நல்ல பயனைத் தரும். கற்ற கல்வியைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறைவு
படாது. கல்வியானது கற்றவரைப் பலரும் அறிந்து புகழ்ந்து பேசுமாறு விளக்கம் உறச்
செய்யும். எக்காலத்தும் அழியாது நிலைபெற்றிருப்பது கல்வியே ஆகும். எனவே, எந்த
உலகத்திலும் கல்வியைப் போல மனமயக்கம் போக்கும் ஒரு மருந்தை நாம் கண்டது இல்லை.
வருந்த
வளை வேய் அரசர் மாமுடியின் மேலாம்,
வருந்த
வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர்
கைப்புகுந்து, மேதினி எல்லாம் திரிந்து,
தாழும்அவர்
தம்அடிக்கீழ்த் தான். --- நீதிவெண்பா
தன்னை மக்கள் வளைத்து வருத்தப்படுத்த
வளைந்து கொடுத்த மூங்கில் கொம்பு,
பெருமை
வாய்ந்த அரசரின் தலைமுடியின்மேல் பல்லக்கு ஆகச் சிறப்புப் பெறும். வளையாத மூங்கில் கம்பானது, தாழ்வுபெற்று கழைக்கூத்தாடிகளின் கையில்
அகப்பட்டு அவருடைய காலின்கீழ் கிடந்து உலகமெல்லாம் அலைந்து இழிவுபடும்.
இளமைப் பருவத்திலேயே தந்தையாரும் ஆசிரியரும்
கட்டாயப்படுத்திப் படிக்க வைக்க, அப்போது நன்கு
வருந்திக் கற்றுக் கொண்ட பிள்ளைகள், பிற்காலத்தில் வேந்தரும் பாராட்டும்படி பெருமை
அடைவார்கள். இளமைப் பருவத்தில் உடம்பு வளைந்து படித்துக் கொள்ளாத பிள்ளைகள்,
பின்னர்க் குடிக்கக் கஞ்சி, உடுத்தத் துணி முதலியன இல்லாமல், ஊர் ஊராய்ச் சுற்றித்
திரிந்து, கீழ்மக்கள் இடுகின்ற வேலைகளைச் செய்து, அவர் காலால் உதைபட்டுக்
கிடப்பார்கள். இது இந்தப் பாட்டில் அமைந்து உள்ள உவமையால் பெறப்படும் பொருள்
ஆகும். பல்லக்கு மூங்கிலால் செய்து அரசர்கள் ஏறிச் செல்ல உதவுவது. வளைந்தால்
பல்லக்கு ஆகும். வளையாவிட்டால், வேழம்பர் என்று சொல்லப்படும் கழைக்கூத்தாடிகளின்
கையில் வளையாத தடியாக இருக்கும்.
இதுகாறும் காட்டியவற்றால், "இளமையில்
கல்" என்னும் ஆத்திசூடியின் பொருளும், "வாலிபம் தன்னில் வித்தை கற்க
வேண்டும்" என்னும் இப் பாடல் கருத்தும் தெற்றென விளங்கும்.
அடுத்து, "கற்ற வழியிலே நிற்க
வேண்டும்" என்றார் இந்நூல் ஆசிரியர். திருவள்ளுவ நாயனார் வலியுறுத்துவதும் இதுவே ஆகும்.
"கற்க
கசடு அற, கற்பவை கற்றபின்,
நிற்க
அதற்குத் தக"
என்னும்
திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
பின்
வரும் பாடல்களையும் உணர்க....
எப்பிறப்பு
ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள்
பிறப்பில் பிறிது இல்லை-அப்பிறப்பில்
கற்றலும்,
கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்
நிற்றலும்
கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
மக்கள் பிறப்பில் படிப்பதற்கு உரியவற்றைப்
படித்தலும், படித்தவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிவடைதலும், அவ்வாறு கற்றும்
கேட்டும் தெளிந்த வழியிலே நிற்றலும் பொருந்தப் பெற்றால், வேறு எந்த வகைப் பிறப்பாக
இருந்தாலும், மனிதனாகப் பிறப்பதைப் போல ஒருவனுக்கு இன்பம் தரக்கூடியது வேறு
ஒன்றும் இல்லை. அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறந்த பயன் ஆகும்.
காரணம், அப்போதுதான், மனதில் தீய எண்ணங்கள்
தோன்றாதிருக்கும். பின்வரும் பாடலைக் காண்க..
கற்றதுவும்
கற்று, ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்,
மற்று
ஒருபால் போக மறித்திட்டுத்-தெற்றென
நெஞ்சத்துள்
தீமை எழுதருமேல், இன்னாதே
கஞ்சத்துள்
கல்பட்டால் போன்று. --- அறநெறிச்சாரம்.
படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, அதனால்
பெற்ற அறிவு ஒழுக்கம் ஆகியவற்றோடு பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் ஒரு
பெறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவும், படித்த நூல்களின் கருத்தில்
இருந்து மாறுபட்டு, மற்றொருபுறம் செல்லவும், நல்லொழுக்கத்தில் நடப்பதை விடுத்து,
மனத்திலைவிரைந்து கெட்ட எண்ணம் உண்டாகுமானால், அது, தின்னும் உணவில் கலந்து
இருக்கும் கல்லைப் போல, மிக்க துன்பத்தைத்
தருவதாகும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றதற்கு ஏற்ப, கற்ற வழி நின்று, நல்வழியிலே
பொருளைத் தேட வேண்டும்.
"செல்வத்துப் பயனே ஈதல்" என்னும் புறநானூற்றுப்
பாடல் வரிக்கு ஏற்பவும், "ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு"
என்னும் திருக்குறள் கருத்துக்கு இசைய அறங்களைச் செய்ய வேண்டும்.
இது பின்னும் நிலைத்து இருக்க வேண்டுமானால், நல்லவர்கள்
கூட்டத்திலே ஒருவன் இருக்க வேண்டும். "பெரியாரைத்
துணைக்கோடல்" என்னும் அதிகாரத்தில் நாயனார் அறிவுறுத்தி உள்ளதைக் காண்க.
"நம்பன் இணையடி பூசை பண்ணவேண்டும்"
எல்லாம் இறைவன் திருவருள் வலத்தாலேயே நடப்பதால், இறைவனை மறவாது வழிபடுதல் வேண்டும்.
பயனை எதிர் பாராமல், உள்ளார்ந்த பத்தியோடு கூடியதாக அந்த வழிபாடு அமையவேண்டும்.
No comments:
Post a Comment