விராலிமலை - 0356. எதிர்எதிர் கண்டு
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எதிரெதிர் கண்டோடி (விராலிமலை)

முருகா!
மாதர் மயக்கில் அழுந்தி அழியாமல் ஆட்கொண்டு அருள்.


தனதனனந் தான தாத்த
     தனதனனந் தான தாத்த
     தனதனனந் தான தாத்த ...... தனதான


எதிரெதிர்கண் டோடி யாட்கள்
     களவதறிந் தாசை பூட்டி
     இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர்

இறைவைகொளுங் கூவல் மூத்த
     கறையொழுகுந் தாரை பார்க்கி
     லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத

அதிவிகடம் பீழ லாற்ற
     அழுகிவிழும் பீற லூத்தை
     அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில்

அருவிசலம் பாயு மோட்டை
     அடைவுகெடுந் தூரை பாழ்த்த
     அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே

விதுரனெடுந் த்ரோண மேற்று
     எதிர்பொருமம் பாதி யேற்றி
     விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள

விரவுஜெயன் காளி காட்டில்
     வருதருமன் தூத னீற்ற
     விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே

மதியணையுஞ் சோலை யார்த்து
     மதிவளசந் தான கோட்டின்
     வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி

மலைமருவும் பாதி யேற்றி
     கடிகமழ்சந் தான கோட்டில்
     வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

எதிர்எதிர் கண்டு ஒடி, ஆட்கள்
     களவு அது அறிந்து, ஆசை பூட்டி,
     இடறி விழும் பாழி காட்டும் ...... மடமாதர்,

இறைவை கொளும் கூவல், மூத்த
     கறை ஒழுகும் தாரை, பார்க்கில்
     இளமை கொடும் காதல் ஆற்றில், ...... நிலையாத

அதி விகடம் பீழல், ஆற்ற
     அழுகி விழும் பீறல், த்தை
     அடையும் இடம், சீலை தீற்று ...... கருவாயில்,

அருவி சலம் பாயும் ஓட்டை,
     அடைவு கெடும் தூரை, பாழ்த்த
     அளறில் அழுந்தாமல்  ஆட்கொடு ...... அருள்வாயே.

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று,
     எதிர்பொரும் அம்பு ஆதி ஏற்றி,
     விரகின் எழுந்து ஓய, நூற்று ...... வரும் மாள,

விரவு ஜெயன், காளி காட்டில்
     வரு தருமன் தூதன், நீற்ற
     விஜயன் நெடும் பாக, தீர்த்தன் ...... மருகோனே!

மதி அணையும் சோலை ஆர்த்து,
     மதிவள சந்தான கோட்டின்
     வழி, அருளின் பேறு காட்டிய ...... விராலி

மலை மருவும் பாதி ஏற்றி,
     கடி கமழ் சந்தான கோட்டில்
     வழி அருளின் பேறு காட்டு ...... பெருமாளே.


பதவுரை

     விதுரன் நெடுந் த்ரோணம் ஏற்று --- விதுரர் தமது பெரிய வில்லைஎடுத்து,

     எதிர் பொரும் அம்பு ஆதி ஏற்றி --- எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய கணைகளைத் தொடுத்து,

     விரகின் எழுந்து ஓய --- சமர்த்துடன் எழுந்துபோர் புரியுஞ் செயல் ஓயுமாறும்,

     நூற்றுவரும் மாள --- துரியோதனன் முதலிய நூறுபேர்களும் இறந்து போம்படியும்,

     விரவு ஜெயன் --- உபாயஞ்செய்த ஜெயவீரனும்,

     காளி காட்டில் வரு தருமன் தூதன் --- காளிக்கு உரிய வனத்தில் வாழ்ந்து வந்த தருமராஜனுடைய தூதனும்,

     நீற்ற விஜம் நெடும் பாகன் --- திருநீற்றையணிந்த அர்ச்சுனனுடைய பெரிய தேர்ப்பாகனும், ஆகிய

     தீர்த்தன் மருகோனே --- பரிசுத்த மூர்த்தியாகிய கண்ணபிரானுடைய திருமருகரே!

     மதி அணையும் -- சந்திரன் அணையும்படி உயர்ந்துள்ள,

     சோலை ஆர்த்தும் --- சோலைகளோடு கூடியும்,

     அதிவள --- அதிக வளப்பமுள்ள,

     சந்தான கோட்டின் --- சந்தானம் என்னுந் தேவதருவைப்போல்,

     வழி அருளின் பேறு காட்டிய --- தன்னை வழிபட்டோர்க்கு விரும்பிய பேறுகளை உதிவுகின்ற,

     விராலிமலை மருவும் பாதி ஏற்றி --- விராலி மலையில் பாதி மலையில் வரச்செய்து,

     கடிகமழ் சந்தான கோட்டில் --- அங்குள்ள சந்தான கோட்டம் என்ற வாசனை வீசும் இடத்தில் எழுந்தருளியிருந்து,

     வழி அருளின் பேறு காட்டு --- தம்மை அடைந்த அன்பர்கட்கு விரும்பிய நலன்களை வழங்கிக் காட்டுகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      எதிர் எதிர்கொண்டு --- தங்கள் எதிர் எதிரில் வருகின்றவர்களைக் கண்டவுடன்,

     ஓடி ஆட்கள் --- ஓடிச் சென்று ஆட்களை,

     களவு அது அறிந்து --- திருட்டுத் தனமாக அவர்களின் நிலையை அறிந்து,

     ஆசை பூட்டி --- அவர்கட்கு ஆசை பிறக்குமாறு செய்து,

     இடறி விழும் பாழி காட்டும் --- அந்த ஆடவர்கள் தடுக்கி விழும்படி தமது மறைவிடத்தைக் காட்டுகின்ற,

     மடமாதர் -- மடமாதர்களுடைய,

     இறைவை கொளும் கூவல் --- இறை கூடையைக் கொள்கின்ற கிணறு போன்றது,

     மூத்த கறை ஒழுங்கும் தாரை --- பழைய அழுக்குகள் ஒழுகும் வழி,

     பார்க்கில் --- ஆராய்ந்து பார்க்கில்,

     இளமை கொடும் காதல் ஆற்றில் --- இளமைப் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில்,

     நிலையாத --- நிலைக்க முடியாத,

     அதி விகடம் பீழல் --- மிகுந்த துன்பத்தைத் தரும் இடம்,

     ஆற்ற அழுகி விழும் பீறல் --- மிகவும் அழுகி விழுகின்ற கிழிந்த இடம்,

     ஊத்தை அடையும் இடம் --- அழுக்கு சேரும் இடம்,

     சீலை தீற்று கருவாயில் --- ஆடை மூடுகின்ற, கரு உண்டாகின்ற துவார வாசல்,

     அருவி சலம் பாயும் ஓட்டை --- அருவிபோல் நீர் பாய்கின்ற ஓட்டை,

     அடைவு கெடும் தூரை --- தகுதியற்ற அடிப்பாகம் ஆகிய,

     பாழ்த்த அளறில் --- பாழுஞ் சேற்றில்

     அழுந்தாமல் --- அடியேன் அழுந்திவிடாமல்,

     ஆட்கொண்டு அருள்வாயே --- தேவரீர் ஆட்கொண்டருள வேண்டும்.


பொழிப்புரை


     பெரிய வில்லை வளைத்து அதில் அம்புகளைத் தொடுத்து சாமர்த்தியத்துடன் போர் புரியாமல் விதுரர் ஓயும்படியும், துரியோதனனாதியர் நூற்றுவரும் இறக்கும்படியும், உபாயம் செய்த ஜெயவீரனும், காளிக்கு உரிய கானகத்தில் வாழ்ந்து வந்த தருமபுத்திரனுடைய தூதுவரும், திருநீறு பூசுகின்ற அர்ச்சுனனுடைய தேர்ப்பாகருமாகிய புனித மூர்த்தியாகிய கண்ணபிரானுடைய திருமருகரே!

     சந்திரன் அணையுமாறு உயர்ந்த சோலைகள் சூழ்ந்து, அதிகவளமுள்ள சந்தானம் என்ற தேவதருவைப் போல் தன்னை வழிப்பட்டோர்க்கு விரும்பியவற்றைத் தரவல்ல விராலிமலையில், பாதி மலையளவில் அடியவர் ஏற வைத்து, அங்கு நறுமணம் வீசும் சந்தான கோட்டம் என்ற இடத்தில் எழுந்தருளியிருந்து, அன்பர்கட்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் பெருமிதம் உடையவரே!

     தங்கள் எதிரில் வருகின்ற ஆடவர்களை ஓடிச்சென்று வரவேற்று வஞ்சனையால் அவர்களின் நிலையை யறிந்து, ஆசையை ஊட்டி, ஆடவர்கள் தடுக்கி விழும்படி மறைவிடத்தைக் காட்டுகின்ற, மடமாதர்களுடைய, இறை கூடையைக் கொள்கின்ற கிணறு; பழைய அழுக்குகள் ஒழுகுகின்றவழி; ஆராய்ந்து பார்க்கில் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பரப்புள்ள பீழல், மிகவும் அழுகி விழுகின்ற கிழியும் இடம், அழுக்கு சேரும்இடம், ஆடை மூடிய கருவுண்டாகும், துவாரவாசல், அருவிபோல் நீர்பாயும் ஓட்டை, தகுதியற்ற அடிப்பாகம், ஆகிய சேற்றில் அடியேன் அழுந்தாமல் என்னை ஆட்கொண்டருள வேண்டும்.


விரிவுரை


அடிகள் இத் திருப்புகழில் முதற்பகுதியில் பொதுமாதரின் தன்மையைக் குறிப்பிடுகின்றார்.

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும்அம் பாதியேற்று 
விரகின் எழுந்து ஓய ---

அர்ச்சுனனுடைய வில் காண்டீபம். இது பிரம்மனுடைய வில். விதுரரிடம் இருந்தது விஷ்ணுவின் வில். அது கோதண்டம். விஷ்ணு வில்லை பிரமனுடைய வில் வெல்லாது. ஆதலால் விதுரருடைய வில்லை ஒழிக்கவேணும் என்று கருதினார் கண்ணபிரான்.

அவர் தூது சென்ற போது, விதுரருடைய திருமாளிகைக்கு எழுந்தருளித் தங்கினார். இதனால் சினங்கொண்ட துரியோதனன் விதுரரை நிந்தித்தான். அதனால் விதுரர் சினங்கொண்டு தன் வில்லை வெட்டிவிட்டு, தீர்த்த யாத்திரை சென்றார். அவரைப் போர் புரியாமல் விலக்கி விட்டார் கிருஷ்ணர்.

காளி காட்டில் வரு தருமன் ---

காளி வாழ்கின்ற இடமாகிய வனத்தில் பன்னிரு ஆண்டுகள் தருமர் தனது துணைவருடன் வாழ்ந்தார்.

நீற்ற விஜயன் ---

அர்ச்சுனன் பரசிவ பக்தன். திருநீறு பூசுபவன். சிவபூசை செய்பவன்.

ஆசிலு நான்மறைப்படியும் எண்ணில் கோடி
    ஆகமத்தின்படியும் எழுத்து ஐந்துங் கூறிப்
    பூசினான் வடிவமெலாம் விபூதி”             --- மகாபாரதம்.

சந்தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி ---

சந்தானம் என்ற தரு தெய்வ தரு. இது தன்னை அடைந்தார்க்கு எல்லாம் தர வல்லது. இதுபோல் விராலிமலையும் தன்னை அடைந்து வழிபடும் அடியார்க்கு வேண்டிய வேண்டியாங்கு வழங்க வல்லது.

பாதியேற்றி கடிகமழ் சந்தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு ---

விராலிமலைக்கு வரும் அடியவர்களை பாதி மலைவரை ஏறச்செய்து, அங்கு நறுமணம் கமழ விளங்கும் சந்தான கோட்டம் என்ற இடத்தில் எம்பிரான் எழுந்தருளியிருக்கின்றார்.

வழிபட்டோர்க்கு எல்லா நலன்களும் அருளுகின்றார்.


கருத்துரை


விராலிமலை முருகா! மாதர் மயக்கத்தில் அழுந்தா வண்ணம் ஆண்டருள்வீர்.
No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...