திருப்பதி மிதியாப் பாதம்





திருப்பதி மிதியாப் பாதம், சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள், இனிய சொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்,
இருப்பினும் பயன் என்? காட்டில் எரிப்பினும் இல்லை தானே.   21

 இதன் பொருள்---
     திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வராத கால்கள்.  சிவபெருமானுடைய திருவடிகளை வணங்காத தலை.  இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் ஈயாத கைகள். இனிமை தரும் சொற்களைக் கேளாத காதுகள். தன்னைக் காத்து வருபவருக்கு இடுக்கண் நேர்ந்த போது, அவருடைய கண்களில் நீர் வழியக் கண்டும், அவருக்காகத் தனது உயிரை விடாத ஒருவனுடைய உடம்பு. இவைகள் எல்லாம் இருந்து என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. இவர்களை இடுகாட்டிலே வைத்து எரித்தாலும் வந்தப் பயனும் விளையாது.

     குறிப்பு ---  பதி என்பது ஊர், தலம், நகர் என்னும் பொருள் பட வருவது. திரு என்பதை அடையாக வைத்து, திருப்பதி என்று சொல்லப்படும். திருப்பதி என்று இப்போது வழங்கப்படும் தலமானது வைணவத் தலமாக உள்ளதால், திருப்பதி என்ற உடனே, அதுதான் திருப்பதி என்று கொள்வோரும் உண்டு. அப்படிக் கொண்டே இப் பாடலுக்கு உரை கண்டோர், திருப்பதி என்பது வைணவத் தலமாகிய திருப்பதி என்று கொண்டே உரை வரைந்து உள்ளனர். அது பொருந்தாது. "திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்" என்று அப்பர் பெருமானும், "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று உலகநீதியும் கூறி இருப்பதைக் கருத்தில் கொள்க. கோயில் என்பது அவரவர் வணங்கும் கடவுளுக்கு எழுப்பியுள்ளது. ஆக, திருப்பதி என்பது இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஊர்களை, பதிகளை, தலங்களைக் குறிக்கும். அந்த தலங்களுக்குச் சென்று இறைவழிபாடு ஆற்ற வேண்டும் என்பதால், அங்கு சென்று வழிபட்டு வராத கால்களை, "திருப்பதி மிதியாப் பாதம்" என்றார்.

கால்களால் பயன் என்,
கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயன் என்.                       ---  அப்பர்.

நோய் புல்கு தோல்திரைய நரைவரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றமெல்லாம் நினை உள்கு மடநெஞ்சே,
வாய் புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.      --- திருஞானசம்பந்தர்.

இலங்கை வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும்
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம், ல்கிய
நலங்கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.  --- திருஞானசம்பந்தர்.

இலங்கை வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி
வலம் கொள்வார் அடி என் தலை மேலவே.        ---  அப்பர்.

இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.       --- அப்பர்.

நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,
தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,
என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?  --- சுந்தரர்.

     "சிவன் அடி வணங்காச் சென்னி" என்றார். சென்னி - தலை. "தலையாரக் கும்பிட்டு" என்றார் அப்பர்.  இறைவனைத் தலையார திருக்கோயிலில் மட்டுமல்ல, எங்கிருந்தும் வணங்கலாம்.  வீட்டிலும் வணங்கலாம். தலையை இறைவன் நமக்கு அளித்ததே, அவனையும், அவன் அடியாரையும் தலையார வணங்கி, தலையான நெறியைச் சார்ந்து, தலையான வீடுபேற்றை அடைவதற்கே. தலை என்று இருந்தால் வணங்க வேண்டும். சிலரை நாம் வணங்கினால் பதிலுக்கு வணங்கமாட்டார்கள். கையை அசைத்து, தலையை ஆட்டி விட்டுச் செல்வார்கள். இது அறியாமையே.

தலையே நீ வணங்காய் -
தலைமாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.                      ---  அப்பர்.

கோள்இல் பொறியின் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.                   --- திருக்குறள்.

குற்றம் குறைத்து, குறைவு இன்றி, மூவுலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி --- முற்ற
உணர்ந்தானைப் பாடாத நா அல்ல, அல்ல
சிறந்தான் தாள் சேராத் தலை.                --- அறநெறிச்சாரம்.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே.      --- அப்பர்.

வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து,
இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.  ---  மணிவாசகர்.

     "இரப்பவருக்கு ஈயாக் கைகள்" என்றார். "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று புறநானூற்றுப் பாடல் அறிவுறுத்துகின்றது. தானும் துய்த்து, பிறருக்கும் கொடுத்து வாழ்வதற்கே கைகள் படைக்கப்பட்டன.

ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                   --- திருக்குறள்.

     வறியவருக்கு, அதாவது, துய்ப்பதற்கு ஏதும் இல்லாது வந்து இரப்போர்க்கு ஈவது தான் ஈகை. மற்றபடி கொடுப்பது என்பது, மாற்றாக எதையோ எதிர்பார்த்தே அமையும் என்பதனால்,

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

     ஈயாமல் வாழ்ந்து பலனில்லை என்று தண்டலையார் சதகம் பின்வருமாறு கூறும்.

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
     கனிகள் உபகாரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளை எல்லாம்
     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
     வாழ்ந்தாலும் என்உண் டாமே?

     மரங்கள் பழுத்தால் தன்னிடம் வந்தவருக்கு எல்லாம் கொடுத்து உதவும்.  ஆலமரமானது தான் பழுத்த உடன் பறவைகளுக்குச் சீட்டு எழுதி அனுப்புபவர் யாரும் இல்லை.

ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
     எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலம்அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
     உதவி செய்து கனமே செய்வார்;
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே!
     அவரிடத்தே வருவார் யாரும்!
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பாற்
     சீட்டெவரே அனுப்பு வாரே?                  --- தண்டலையார் சதகம்.

     ஒருவன் மலை போன்ற உப்புக் குவியலின் மீது அமர்ந்து, உணவினை உண்டாலும், அந்த உணவில், சிறிது உப்பினை இடாமல் உண்பானானால், அதில் சுவை இருக்காது. உப்பினை இட்டு உண்டால்தான் சுவை இருக்கும்.  அதுபோல, ஏழுவகைத் தாதுக்களாலும் கூடிய நல்ல உடம்பினையும், செல்வத்தினையும் உடையவன், ஒப்பற்ற அறச்செயல்களைச் செய்யாவிட்டால், அவன் தனது உடம்பாலும், செல்வத்தாலும் எப்பயனையும் அடையான்.

உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்,
இட்டு உணாக் காலத்து கூராதாம் --- தொக்க
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை
தொடங்காக் கால் என்ன பயன்?          --- அறநெறிச்சாரம்.

     "இனிய சொல் கேளாக் காது" என்றார்.  காது - செவி.  காதால் கேட்பதும் செல்வம் என்பதால், அது, கேள்விச் செல்வம் எனப்பட்டது. அதுவே தலை சிறந்த செல்வம் என்பதால்,

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்றார் திருவள்ளுவ நாயனார்.  அவரே, அத்தகைய காது இருந்தாலும் செவிட்டுக் காது என்கின்றார்.

கேட்பினும் கேளாத் தகையவே, கேள்வியால்
தோட்கப் படாத செவி

என்றும் கூறினார்.

     கால்கள் நடந்து கொண்டே இருந்தால் வலிக்கும். கண்கள் பார்த்தக் கொண்டே இருந்தால் வலிக்கும். வாய் பேசிக்கண்டோ அல்லது உண்டுக்கொண்டோ இருந்தால், வலிக்கத்தான் செய்யும். கைகளால் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்துக் கொண்டே இருந்தால் வலிக்கும். ஆனால், எவ்வளவு கேட்டாலும் வலிக்காதது காது ஒன்றே தான். எனவே, அந்தக் காதுகளைக் கொண்டு, இனிமையும் நன்மையும் பயக்கக் கூடியவற்றையே கேட்கவேண்டும்.

செவிகாள் கேண்மின்களோ,
சிவன் எம் இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.                   ---  அப்பர்.

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன் தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே.        --- திருஞானசம்பந்தர்.

     "புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்" என்றார் ஆசிரியர்.

புரந்தார் கண் நீரமல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து.          --- திருக்குறள்.

புரந்தார் - பாதுகாத்தவர், காப்பாற்றியவர்.

     காப்பாற்றியவரின் கண்களில் நீர் ததும்புமாறு உயிர்விடும் வல்லமை உடையதாயின், அந்நிலை இரந்தாயினும் பெற்றுக் கொள்ளத் தக்கதாகும்.

     அன்றியும், புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழி தரவும் சாகாத் தேகம் என்றும் கொண்டு, தம்மைக் காப்பாற்றியவர், தம் நிலை மாறி, வறுமை நிலையை அடைந்து வருந்துகின்ற நிலையை ஒருவன் கண்டும், அவர் படும் துன்பத்தைப் போக்க முடியாமல், வாழ நேரும் நிலையில் உடம்போடு வாழ்வது பயனில்லை என்றும் கொள்ளலாம். அது பொருந்துமாறு இல்லை.  எனவே, திருவள்ளுவ நாயனார் அருள் வாக்கே பொருந்தும் எனக் கொள்ளலாம்.    

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...