திருக் கற்குடி - 0348. நெறித்துப் பொருப்பு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நெறித்துப் பொருப்பு (திருக்கற்குடி)

முருகா!
இயம பயத்தை அகற்றி ஆட்கொண்டு அருள்


தனத்தத் தனத்தத் தத்த
     தனத்தத் தனத்தத் தத்த
          தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான

நெறித்துப் பொருப்புக் கொத்த
     முலைக்குத் தனத்தைக் கொட்டி
          நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய்

நினைத்துக் கொடத்துக் கத்தை
     யவத்தைக் கடுக்கைப் பெற்று
          நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை

இறுக்கிப் பிடித்துக் கட்டி
     யுகைத்துத் துடிக்கப் பற்றி
          யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்

எனக்குக் கணக்குக் கட்டு
     விரித்துத் தொகைக்குட் பட்ட
          இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்

முறுக்கித் திருப்பிச் சுட்டு
     மலத்திற் புகட்டித் திட்டி
          முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்

மொழிக்குத் தரத்துக் குற்ற
     தமிழ்க்குச் சரித்துச் சித்தி
          முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி

உறுக்கிச் சினத்துச் சத்தி
     யயிற்குத் தரத்தைக் கைக்குள்
          உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே

உனைச்சொற் றுதிக்கத் தக்க
     கருத்தைக் கொடுப்பைச் சித்தி
          யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நெறித்துப் பொருப்புக்கு ஒத்த
     முலைக்குத் தனத்தைக் கொட்டி,
          நிறைத்துச் சுகித்து, சிக்கி, ...... வெகுநாளாய்

நினைத்துக் கொடு, த் துக்கத்தை
     அவத்தைக்கு அடுக்கைப் பெற்று
          நிசத்தில் சுழுத்திப் பட்ட ...... அடியேனை,

இறுக்கிப் பிடித்துக் கட்டி,
     உதைத்து, துடிக்க, பற்றி
          இழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்,

எனக்குக் கணக்குக் கட்டு,
     விரித்துத் தொகைக்கு உட்பட்ட
          இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்,

முறுக்கித் திருப்பிச் சுட்டு
     மலத்தில் புகட்டித் திட்டி
          முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்,

மொழிக்குத் தரத்துக்கு உற்ற
     தமிழ்க்குச் சரித்து, சித்தி
          முகத்தில் களிப்புப் பெற்று, ...... மயில்ஏறி.

உறுக்கிச் சினத்துச் சத்தி
     அயிற்குத் தரத்தைக் கைக்குஉள்
          உதிக்கப் பணித்து, பக்கல் ...... வருவாயே

உனைச் சொல் துதிக்கத் தக்க
     கருத்தைக் கொடுப்பை, சித்தி
          உடைக் கற்குடிக்குள் பத்தர் ...... பெருமாளே.


பதவுரை

       சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே --- சித்திகளையுடைய திருக்கற்குடி என்ற தலத்தில் வாழும் அன்பர்கள் போற்றும் பெருமையிற் சிறந்தவரே!

       நெறித்து --- மோகத்தால் மனம் வளைந்து,

     பொருப்புக்கு ஒத்த --- மலைக்கு நிகரான,

     முலைக்கு தனத்தைக் கொட்டி --- முலைக்காக தனத்தை நிரம்பக் கொட்டிக் கொடுத்து,

     நிறைத்து சுகித்து --- நிரம்பவும் இன்பத்தை அநுபவித்து,

     சிக்கி --- ஆசை வலையில் அகப்பட்டு,

     வெகு நாளாய் நினைத்துக் கொடு --- பல நாள்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு,

     அத் துக்கத்தை அடுக்கை பெற்று அடியேனை  --- அந்த துன்பங்களுக்கும், அவத்தைக்கும் ஆளாகி,

     நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை --- உண்மையான மரணத் தூக்கத்தை அடைந்த அடியவனாகிய என்னை,

     யமதூதர்கள் ---இயமனுடைய தூதர்கள்,

     இறுக்கி பிடித்துக் கட்டி --- அழுத்தமாகப் பிடித்துக் கட்டியும்,

     உதைத்தும் --- காலால் உதைத்தும்,

     துடிக்க பற்றி --- துடி துடிக்கப் பற்றியும்,

     இழுத்து சுற்றி வைத்து --- சுற்றி நின்று இழுத்தும் மிதித்தும்,

     எனக்குக் கணக்கு கட்டு விரித்து --- என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டியும்,

     தொகைக்கு உட்பட்ட இலக்கப்படிக்குத் தக்கபடியே --- எனது பாவங்களைக் குறித்துள்ள ஏட்டில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றபடியே,

     முறுக்கி --- என்னை முறுக்கியும்,

     திருப்பிச் சுட்டு --- திருப்பித் திருப்பி நெருப்பில் சுட்டும்,

     மலத்தில் புகட்டி --- மலக் குழியில் அழுத்தியும்,

     திட்டி --- வைதும்,

     முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் --- முழுதும் என்னை கலக்கமுறச் செய்ய, அக்கலக்கத்தில் சிறியேன் அலையாத வண்ணம்,

     மொழிக்கு --- அடியேனுடைய மொழியையும்,

     தரத்துக்கு உற்ற தமிழ்க்கு --- தகுதியுள்ள தமிழையும்,

     சரித்து --- அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு,

     சித்தி முகத்தில் களிப்பு பெற்று --- வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன்,

     மயில் ஏறி --- மயிலின்மீது ஏறி,

     உறுக்கி சினத்து சத்தி அயிற்கு --- தண்டிக்கும் சினம் வாய்ந்த ஞான வேலை,

     தரத்தை கைக்கு உள் --- தகுதியுடன் திருக்கரத்தில்,

     உதிக்க பணித்து --- தோன்ற எடுத்துக் கொண்டு,

     பக்கல் வருவாயே --- அடியேனுடைய அருகில் வந்தருளுவீராக,

     உனை சொல் துதிக்கத்தக்க கருத்தைக் கொடுப்பை --- உம்மை நல்ல சொற்களைக் கொண்டு துதிசெய்யத்தக்க, கருத்தைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

            எட்டுச் சித்திகளும் அமைந்த திருக்கற்குடியென்ற திருத்தலத்தில் எழுந்தருளிய அன்பர்கள் வணங்கும் பெருமிதமுடையவரே!

            மோகத்தால் மனம் வளைந்து, மலைக்கு ஒப்பான தனத்துக்காக, தனத்தைக் கொட்டிக் கொடுத்து, நிரம்ப இன்பத்தை அநுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாள்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு, துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும், ஆளாகி, உண்மையில் மரணத்தையடைந்த அடியேனை, யமதுதர்கள் இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டுபோய், உதைத்தும், துடிதுடிக்கப் பற்றியும், சுற்றி நின்று இழுத்து மிதித்தும், என் கணக்குக் கட்டை விரித்துக் காட்டியும், அந்த ஏட்டில் உள்ள என் பாவச் செயல்களுக்கு ஏற்றவாறு, என்னை முறுக்கியும், திருப்பித் திருப்பிச் சுட்டும், மலக் குழியில் அழுத்தியும், திட்டியும் முழுதும் கலங்க வைக்கும் அக்காலத்தில் அடியேன் அலையாத வண்ணம், அடியேனுடைய மொழியையும், தகுதியுள்ள தமிழையும் ஏற்றுக்கொண்டு, வீடுபேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன் மயிலில் ஏறி, தண்டிக்குங் கோபம் வாய்ந்த சக்தி வேலைத் தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்துக்கொண்டு, அடியேனுடைய அருகில் வந்தருளுக; உம்மை இனிய சொற்களைக் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தைத் தந்தருளுக.


விரிவுரை

இத்திருப்புகழில் இயம தண்டனையை அடிகளார் விரித்துக் கூறியருளுகின்றார். முன் திரிசிராமலைத் திருப்புகழ் “புவனத்தொரு” என்ற பாடலிலும் இவ்வாறு கூறியருளினார்.

நெறித்து ---

நெறிதல்-வளைதல்.

மோகத்தால் மனம் குழைந்து மனிதன் வளைகின்றான். மகளிரிடம் வளைந்து நிற்கின்றான்.

தனத்தைக் கொட்டி ---

விலமகளிரின் தனத்தை விரும்பி நிரம்பவும் தனத்தைக் கொட்டித் தந்து மனிதர் மகிழ்ந்து மயங்குகின்றார்கள்.

சுகித்துச் சிக்கி ---

அம்மாதரிடம் இன்புற்று, அவர்களின் மையல் வலையில் சிக்கிக் கொள்ளுகின்றார்கள்

திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல் காட்டில்
கண்ணி வைப்பார் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ?        --- தாயுமானார்.

வெகுநாளாய் நினைத்து கொடு ---

மனிதன் இறைவனையும், தான் வந்த கருமத்தையும் நினையாமல், முன்னுகர்ந்த போக இன்பத்தையே சதா நினந்து நெஞ்சம் புண்ணாகி மண்ணாகின்றான்.

நிசத்திற் சுழுத்திப்பட்ட அடியேனை ---

தினந்தினஞ் சுழுத்தி (தூக்கம்) வருகின்றது. முடிவில் பெரிய சுழுத்தியாகிய மரணத் தூக்கம் வந்து விடுகின்றது. அதுதான் உண்மையான தூக்கம்.

இறுக்கிப் பிடித்துக் கட்டி ---

யமதூதர்கள், பாவிகளைப் பாசக் கயிற்றால் சேர்த்து இறுக்கிக் கட்டிப்பிடித்து இழுத்து, தண்ணீர் இல்லாத சுடுமணற்பாதையில், தண்ணீர் தண்ணீர் என்றுஆன்மா தவிக்கத் தவிக்க அடித்தும் உதைத்து துன்புறுத்திக் கொண்டு செல்லுவார்கள்.

கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர்; எரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.               --- கந்தரலங்காரம்.

எனக்குக் கணக்குக் கட்டு விரித்து ---

என்னுடைய பாவச் செயல்கள் நிரம்பிய கணக்குக் கட்டுகளை எடுத்துக் காட்டுவார்கள் யமதூதர்கள். ஆன்மாக்கள் நினைப்பவை, பேசுபவை, செய்பவை அனைத்தும் அக்கணக்கில் தானே பதிவாகும். இயமதூதர்கள் அதைக் காட்டி, அக்கணக்கின்படி தண்டிப்பார்கள். ஆதலால் தீய எண்ணங்களை மனதில்கூட நினையாமல் எப்போதும் எம்பெருமானையே நினைக்க வேண்டும்.

முறுக்கித் திருப்பிச் சுட்டு ---

முகத்தைப் பின்புறமாக முறுக்கியும், திருப்பித் திருப்பி நெருப்பில் சுட்டும் துன்புறுத்துவார்கள்.


திட்டி ---

பெறுவதற்கரிய மனிதப் பிறவியெடுத்து அப்பிறப்பை வீணாக்கிய பாவி! சண்டாளா! மூடனே! குடிகேடனே! என்று வைவார்கள்.

வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று           தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொடர்ந்து      அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தன யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து         விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மென்றன்      முனமேதான்         --- திருப்புகழ்.

முழுக்கக் கலக்கப்பட்டு அலையாமல் ---

இத்தகைய நரக வேதனையில் அடியேன் முழுதும் துன்புற்று அலையாத வண்ணம் காத்தருள்வாய்” என்று சுவாமிகள் முருகனை வழுத்துகின்றார்.

மொழிக்குத் தரத்துக்குற்ற மொழிக்கு ---

இனிய மொழியையும் தரமுள்ள தமிழ் மொழியையும் ஏற்றுக்கொண்டு மயிலின் மீது வந்தருள்க.

துதிக்கத்தக்க கருத்தைக் கொடுப்பை ---

முருகனைத் துதிக்கத்தக்க உயர்ந்த எண்ணத்தைத் தந்தருள்க என்று வேண்டுகின்றார்.

சித்தியுடைக் கற்குடி ---

திருக்கற்குடி என்ற திருத்தலம் அஷ்டமா சித்திகளையும் உடைய அரிய தலம்.

அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி” என்று திருஞானசம்பந்தர் திருக்காளத்தி மலையைச் சிறப்பிக்கின்றார்.

கருத்துரை

திருக்கற்குடி இறைவா! யமவாதனை அகற்றி ஆண்டருள்வீர்.




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...