விராலிமலை - 0366. மாலாசை கோபம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாலாசை கோபம் (விராலிமலை)

முருகா! ஞானோபதேசம் அருள்

தானான தான தானான தான
     தானான தான ...... தனதான


மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மால், ஆசை, கோபம், ஓயாது எந்நாளும்
     மாயா விகார ...... வழியேசெல்,

மாபாவி, காளி, தான் ஏனும், நாத!
     மாதா பிதாவும் ...... இனி நீயே,

நால்ஆன வேத நூல் ஆகம ஆதி
     நான் ஓதினேனும் ...... இலை, வீணே

நாள்போய் விடாமல், றாறு மீதில்
     ஞான உபதேசம் ...... அருள்வாயே.

பாலா! கலார ஆமோத! லேப
     பாடீர வாக! ...... அணிமீதே

பாதாள பூமி ஆதார! மீன
     பானீய மேலை ...... வயலூரா!

வேலா! விராலி வாழ்வே! சமூக
     வேதாள பூத ...... பதிசேயே!

வீரா! கடோர சூரஅரியே! செ
     வேளே! சுர ஈசர் ...... பெருமாளே!


பதவுரை


      பாலா --- இளைமையானவரே!

     கலார ஆமோத --- செங்குவளை மலரில் பிரியமானவரே!

     அணி மீதே பாடீர லேப வாக --- ஆபரணங்களின் மீது சந்தனக்கலவைப் பூச்சு அணிந்துள்ள அழகரே!

     பாதாள பூமி ஆதார --- பாதலத்துக்கும் பூதலத்துக்கும் பற்றுக் கோடானவரே!

     மீன பானீய மேலை வயலூரா --- மீன் நிறைந்த நீர்சூழ்ந்த மேலை வயலூரில் வாழும் வள்ளலே!

     வேலா --- வேலாயுதரே!

     விராலி வாழ்வே --- விராலி மலையில் வாழ்பவரே!

     சமூக வேதாள பூதபதி சேயே --- கூட்டமான பேய்கள் பூதகணங்கள் இவைகட்குத் தலைவரான சிவகுமாரரே!

     வீரா --- வீரமூர்த்தியே!

     கடோர சூர அரியே --- கொடுமை வாய்ந்த சூரனை அழித்தவரே!

     செவ்வேளே --- செவ்வேட் பரமரே!

     சுர ஈசர் --- தேவர்கட்குத் தலைவராககிய,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

         மால் ஆசை கோபம் --- மயக்கம் ஆசை கோபம் என்ற இவை,

     ஓயாது --- ஓய்வு இல்லாமல்,

     எந்நாளும் --- எந்நாளும்,

     மாயா விகார வழியே செல் மா பாவி --- உலக மாயையாகிய விகார வழியிலே செல்லுகின்ற பெரிய பாவியும்,

     காளி --- விஷகுணமுள்ளவனும்,

     தானேனும் --- இப்படிப்பட்டவனாக அடியேன் இருப்பினும்,

     நாத --- தலைவரே!

     மாதா பிதாவும் இனி நீயே --- தாயும் தந்தையும் இனி எனக்கு நீர் தான்;

     நால் ஆன வேதநூல் --- நான்கு வேத நூல்களையும்,

     ஆகம ஆதி --- ஆகம முதலிய நூல்களையும்,

     நான் ஓதினேனும் இலை --- அடியேன் படித்ததும் இல்லை.

     வீணே நாள் போய் விடாமல் --- வீணாக நாள் போய்விடாத வண்ணம்,

     ஆறாது மீதில் --- முப்பத்தாறு தத்துவங்கட்கு அப்பர்ற்பட்ட நிலையில்,

     ஞான உபதேசம் அருள்வாயே --- ஞான உபதேசத்தை அருள்புரிவீராக.

   
பொழிப்புரை

      இளங் குமாரரே!

     செங்கழுநீர் மலர் மாலையில் அன்புள்ளவரே!

     ஆபரணங்கள் மீது சந்தனக் கலவை அணிந்துள்ளவரே!

     பாதலத்துக்கும் பூதலத்துக்கும் தலைவரே!

     மீன் நிறைந்த தண்ணீர் சூழ்ந்த மேலை வயலூரில் வாழ்பவரே!

     வேலாயுதரே!

     பேய்கள், பூதங்களின் கூட்டங்களின் தலைவராய சிவ குமாரரே!

     வீர மூர்த்தியே!

     கொடுமையான சூரபன்மனுக்குப் பகைவரே!

     செவ்வேட் பரமரே!

     தேவர்தலைவராகிய பெருமிதமுடையவரே!

         மயக்கம் ஆசை கோப முதலியவை ஓயாது, என்றும் மாயா விகார வழியில் செல்லுகின்ற பெரிய பாவியும் விஷ குணமுள்ளவன் எனினும் தலைவரே! எனக்கு தாயும் தந்தையும் நீர்தான். வேதாகமம் முதலிய நூல்களை அடியேன் ஓதினேனில்லை. வீணே நாள் கழித்து போகாமல் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள ஞானத்தை உபதேசித்தருளுவீர்.

விரிவுரை

மாலாசை கோபாம் ---

ஆசை, ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் தோன்றும்.

இந்த மூன்று பசையற அற்றால் பிறிவி அறும்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்.                 --- திருக்குறள்.

பற்று அவா வேரொடும் பசை அற பிறவிபோய்”   --- கம்பர்

காளி ---

காளம்-விஷம். விஷகுணமுள்ளவன் காளி.

நால் ஆனவேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இலை ---

கற்கவேண்டிய நூல்களில் தலையானவை வேதாகமங்கள். வேதம்-பொது; ஆகமம்-சிறப்பு. சிறிதேனும் வேதாகம ஞானம் பெற வேண்டும்.

மாதா பிதாவும் இனி நீயே ---

அடியேனுக்கு முருகா! நீதான் தாயும் தந்தையும்” என்கின்றார் அருணகிரிநாதர்.

மாதாபிதாவின் அருள்நலம் மாறா மகாரில் எனையினி
   மாஞானபோதம் அருள்செய்         நினைவாயே”  --- (ஆசாரவீன). திருப்புகழ்.

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ!
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறைநாயகனே!          --- கந்தர் அநுபூதி.


ஆறாறுமீதில் ஞானபதேசம் அருள்வாயே ---

ஆன்ம தத்துவம்24, வித்யாதத்துவம் 7, சிவ தத்துவம் 5, ஆக 36, இந்த முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த இடத்தில் சென்று உபதேசம் பெற விழைக்கின்றார்.

ஆறுஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே!              --- கந்தர் அநுபூதி.

கல்லாரம் ---

கல்லாரம் என்பது சந்தத்தை ஒட்டி கலாரம் என்று வந்தது. கல்லாரம்- செங்குவளை.

முருகனுக்குப் பிரியமான மலர் செங்குவளை, செங்குவளை மலர்வதனால் திருத்தணிக்குக் கல்லார கிரி என்று பேர். அங்கு வாழும் முருகன் செங்கல்வராயன்.

கருத்துரை

விராலிமலை முருகா! ஞானோபதேசம் புரிந்தருள்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...