திருச்செங்கோடு - 0390. நீலமஞ்சு ஆனகுழல்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நீலமஞ்சான குழல் (திருச்செங்கோடு)

முருகா!
பொதுமாதர் விருப்பத்தால் வரும் துன்பம் அகல,
உனது திருவடியில் விருப்பம் பெருக,
அடியேனுக்கு ஞானோபதேசம் புரிந்து ஆட்கொள்.

தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான


நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
     நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
     நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
     நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ......ரண்டுபோல

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
     நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
     னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
     நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ..... சம்பையாரஞ்

சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
     தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
     தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத்

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
     தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
     தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
     தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய்

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
     தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
     தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
     தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ......விந்தையோனே

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
     தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
     தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
     சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ......முங்கொள்வேலா

மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
     வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
     மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
     மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ......யொன்றுமானை

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
     வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
     வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
     வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


நீலமஞ்சு ஆனகுழல், மாலைவண்டு ஓடுகதி,
     நீடுபந்து ஆடுவிழி யார், பளிங்கு ஆன நகை,
நீலபொன் சாபநுதல், ஆசையின் தோடு அசையும்
     நீள்முகம் தாமரையினார், மொழிந்து ஆர மொழி
நேர் சுகம் போல, கமுகு ஆன கந்தாரர், புய
     நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார், மலை......இரண்டுபோல

நீள் இபம் கோடு இளநிர் தேன் இருந்த ஆரமுலை,
     நீடு அலங்கார சரமோடு அடைந் தார் மருவி,
நீள் மணம் சாறு பொழிய அ வளம் போது, வையில்
     நீலவண்டு ஏவிய நல் காமன் அங்காரம், நிறை
நேச சந்தான அல்குல், காம பண்டார, அமுதை
     நேரு சம்போகர், டை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் ....சம்பையார், அம்

சாலு பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண
     தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து, ஆனநடை
சாதி சந்தான் எகின மார்பர்,ம் தோகை என
     தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி
தாவு கொண்டே, கலிய நோய்கள் கொண்டே, பிறவி
தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும்வினை ...... அஞ்சி ஓடத்

தார்கடம்ப் ஆடுகழல் பாத செந்தாமரைகள்
     தாழ் பெரும் பாதை வழியே படிந்தே, வருகு
தாபம் விண்டே, அமுத வாரி உண்டே, பசிகள்
     தாபமும் தீர, துகிர் போல்நிறக் காழ்கொள் உரு
சாரவும், சோதி முருகா எனும் காதல்கொடு
     தான் இருந்து ஓத இருவோர் அகம் பேறு உறுக ...... விஞ்சைதாராய்.

சூலி, எம் தாய், கவுரி, மோக சங்காரி, குழை
     தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி, நல
தூள் அணைந்து ஆளி, நிருவாணி, அங்காளி, கலை
     தோகை செந்தாமரையின் மாது, நின்றே துதி செய்
தூய அம்பா, கழைகொள் தோளி பங்காள, க்ருபை
     தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் ...... விந்தையோனே!

சூர சங்கார! சுரர் லோக பங்கா! அறுவர்
     தோகை மைந்தா! குமரவேள்! கடம்பு ஆர தொடை
தோள! அகண்டா! பரமதேசிக! அந்தா! அமரர்
     தோகை பங்கா என, வேதாகமம் சூழ்சுருதி
தோதகம் பாட, மலை ஏழு துண்டாய் எழுவர்
     சோரி கொண்டு ஆறு வர, வேல் எறிந்தே நடனமும் ......கொள்வேலா!

மாலியன் பாற, ஒரு ஆடகன் சாக, மிகு
     வாலியும் பாழிமரமோடு, கும்பாகனனும்,
ஆழியும், கோர வலி ராவணன் பாற விடு
     மாசுகன், கோல முகிலோன் உகந்து ஓது இடையர்
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு
     மார்பகன், காணமுடியோன் அணங்கு ஆன மதி ......ஒன்றுமானை

மார்புடன் கோடு தனபாரமும் சேர, இடை
     வார் துவண்டு ஆட, முகமோடு உகந்து, ர ரச
வாய் இதம் கோதி, மணி நூபுரம் பாட, மண
     ஆசை கொண்டு ஆடு மயில் ஆளி! துங்கா! குறவி
மாது பங்கா! மறை குலாவு செங்கோடை நகர்
     வாழ வந்தாய்! கரிய மால் அயன் தேவர்புகழ் ....தம்பிரானே.


 பதவுரை

     சூலி --- சூலத்தை யேந்தியவள்,

     எம் தாய் --- எங்கள் அன்னை,

     கவுரி --- பொன்னிறமுடையவள்,

     மோக சங்காரி --- ஆசையை யறுப்பவள்,

     குழை தோடு கொண்டு ஆடு --- குழையும் தோடும் பூண்டு நடனஞ் செய்கின்ற,

     சிவகாமசுந்தரி --- சிவத்தை விரும்புகின்ற அழகி,

     நல தூள் அணைந்து ஆளி --- நல்ல விபூதி அணிந்து ஆள்பவள்,

     நிருவாணி --- திகம்பரி,

     அம்காளி --- அழகிய காளி,

     கலை தோகை --- கலைமகளும்,

     செம் தாமரையின் மாது --- சிவந்த தாமரையில் வாழுகின்ற இலக்குமியும்,

     நின்றே துதி செய் --- நின்று துதிக்கின்ற,

     தூய அம்பா --- பரிசுத்தமான அன்னை,

     கழை கொள் தோளி --- மூங்கில் போன்ற தோள்களை உடையவளாய் விளங்கும் தேவியை,

     பங்காள --- பங்கில் உடையவராய்,

     க்ருபை தோய் பரன் --- கருணை நிறைந்த சிவபெருமானுடைய,

     சேய் எனவும் --- திருக்குமாரர் என்று

     பெரும் பார்புகழும் --- பெரிய உலகம் புகழ்கின்ற,

     விந்தையோனே --- விசித்திரமுடையோனே!

     சூர சங்கார --- சூரரை சங்கரித்தவரே!

     சுராலோக பங்கா --- தேவலோகத்துக்கு வேண்டியவரே!

     அறுவர் தோகை மைந்தா --- ஆறு கார்த்திகைப் பெண்களின் புதல்வரே!

     குமரவேள் --- குமரவேளே!

     கடம்பு ஆர் தொடை தோள --- கடப்ப மலர் நிறைந்த மாலையணிந்த அழகரே!

     அமரர் தோகை பங்கா என --- தேவகுமாரியாகிய தெய்வயானையின் கணவரேயென்று,

     வேதாகமம் சூழ் --- வேதாகமங்கள் ஆய்ந்த தேவர்கள்,

     கருதி --- முறையீடு,

     தோதகம் பாட --- தங்கள் வருத்தத்தை எடுத்துகூற;

     மலை ஏழு துண்டாய் --- ஏழுமலைகளும் துண்டாகிப் பொடிபட,

     எழுவர் --- அம்மலைகளிலிருந்து எழுந்த அசுரர்கள்,

     சோரி கொண்டு ஆறு வர --- உதிரம் ஆறாகப் பெருகிவர,

     வேல் எறிந்தே --- வேலாயுதத்தை விடுத்து,

     நடனமும் கொள் --- நடனஞ் செய்த

     வேலா --- வேலாயுதத்தையுடையவரே!

     மாலியன் பாற --- மாலியவான் சாகவும்

     ஒரு ஆடகன் சாக --- ஒப்பற்ற இரணியன் இறக்கவும்,

     மிகு வாலியும்-வலி மிகுந்த வாலியும்,

     பாழி மரமோடு --- பருத்த மரமும்,

     கும்பாகனனும் --- கும்பகர்ணனும்,

     ஆழியும் --- கடலும்,

     கோர வலி ராவணன் பாற விடும் --- பயங்கரமான வலிமை கொண்டிருந்த இராவணனும் இறக்குமாறு விடுத்த,

     ஆசுகன் --- அம்பினையுடையவரும்,

     கோல முகிலோன் --- அழகிய மேக நிறத்தினனும்,

     உகந்து ஓது இடையர் மாதுடன் கூடி --- மகிழ்ச்சியுடன் துதிக்கின்ற ஆயர் குலமாதர்களுடன் சேர்ந்து,

     விளையாடு சம்போக --- விளையாடி மருவியவரும்,

     திருமார்பகன் --- இலக்குமியை மார்பில் கொண்டவரும்,

     காண முடியேன் --- பொன் முடியினரும் ஆகிய திருமாலின்

     அணங்கு ஆன --- புதல்வியாகிய,

     மதி ஒன்றும் ஆனை --- அறிவு பொருந்திய தெய்வயானையின்,

     மார்புடன் --- திருமார்பும்,

     கோடு தனபாரமும் சேர --- மலைபோன்ற தனபாரமும் பொருந்த,

     இடைவார் துவண்டாட --- இடையின் நுண்மை நெகிழ்ந்து அசையவும்,

     முகமோடு உகந்து --- அவருடைய திருமுகத்தில் மகிழ்ச்சியுற்று,

      ஈர ரச --- கருணாரசத்துடன்,

     வாய் இதம் கோதி --- வாயிலிருந்து வரும் இனிமையை அனுபவித்து,

     மணி நூபுரம் பாட --- இரத்தினச் சிலம்பு ஒலிக்க,

     மண ஆசை கொண்டாடும் மயிலாளி --- அவரை மணக்கும் காதலைப் பாராட்டும் மயில் வாகனரே!

     துங்கா --- தூயவரே!

     குறவ மாது பங்கா --- வள்ளியம்மையின் கணவரே!

     மறை குலாவு --- வேதம் முழங்கும்,

     கெங்கோடை நகர் வாழ வந்தாய் --- திருச்செங்கோட்டு நகரில் வாழ வந்தவரே!

     கரியமால் அயன் தேவர் புகழ் --- கரிய நிறமுள்ள திருமாலும் பிரமனும் தேவர்களும் புகழ்கின்ற!

     தம்பிரானே --- தனிப்பெருந்தலைவரே!

     நீல மஞ்சு ஆன குழல் --- கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள,

     மாலை வண்டு ஓடு கதி --- வண்டுகள் மொய்க்கின்ற நிலையும்,

     பந்து ஆடு --- பந்தாடுவது போல் அங்கும் இங்கும் புரள்கின்ற,

     நீடு விழியார் --- நீண்ட கண்களையுடையவர்கள்,

     பளிங்கு ஆன நகை --- பளிங்கு போன்ற வெண்மையான பற்களும்,

     நீல பொன் சாப நுதல் --- கரிய அழகிய வில்போன்ற புருவமும்,

     ஆசையின் தோடு அசையும் --- பொன்தோடு அசைகின்ற,

     நீள் முகம் தாமரையினர் --- ஒளி நீளுகின்ற தாமரை போன்ற முகத்துடன் விளங்குபவர்கள்,

     மொழிந்து ஆரமொழி சுகம் போல --- நேர் பேசி நிறையும் பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர்கள்,

     கமுகு ஆன கந்தாரர் --- பாக்கு போன்ற கழுத்தினர்,

     புயம் நேர் --- தோள்கள் பொருந்திய,

     சுணங்கு --- தேமலோடு,

     ஆவி --- வாசனை கொண்டு,

     கிளை ஏர் சிறந்தார் --- மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர்கள்,

     மலை இரண்டு போல --- இரண்டு மலைகள் போலவும்,

     நீளியங்கோடு --- நீண்ட யானைக் கொம்பு,

     இளநீர்-இளநீர்

     தேன் இருந்த ஆர முலை --- தேன் போன்று இனிக்கும் முத்துமாலை யணிந்த கொங்கையர்,

     நீடு அலங்கார சரமோடு அடைந்தார் --- நீண்ட அலங்காரமான கழுத்து அணியுடன் கூடியவர்கள்,

     மருவி நீள்மணம் சாறு பொழி அவளம் --- மிகுந்த நறுமணம் பொருந்திய கலவைச் சந்தனம் உள்ள அந்த வள்ளம் போன்ற வயிற்றினர்;

     போது இவையின் நீலவண்டு ஏவிய --- மலர்க்கணைகளுள் நீலோற்பல பாணத்தை ஏவிய,

     நல்காமன் அங்காரம் நிறை --- நல்ல மன்மதனுடைய அகங்காரம் நிறைந்ததும்,

     நேச சந்தான --- அன்புள்ள சந்ததியைத் தருகின்றதுமான,

     அல்குல் காம பண்டார அமுதை நேரும் சம்போகர் --- அல்குலாகிய காம ரீதியான அமுதத்தைத் தருகின்ற சம்போகத்தினர்;

     இடை நூல் ஒளிர்ந்து --- இடையானது நூல் போல மெல்லியதாய் விளங்கி,

     ஆசை உயிர் சம்பையார் --- திசைகளில் வாய்விட்டு மின்னும் மின்னலைப் போன்றவர்கள்,

     அம்சாலும் பொன் தோகை அமை --- அழகு நிறைந்த பொன் சரிகையிட்ட முன்தானையமைத்த,

     பாளிதம் சூழ் சரண தாள் --- பட்டுப்புடவை சூழ்ந்துள்ளதும் இளைஞர்கள் சரணம் அடையக் கூடியதுமான பாதத்தில்

     சிலம்பு ஓலம் இட நடந்து --- சிலம்பு ஒலிக்க நடந்து,

     ஆன நடை --- கூடிய நடையானது,

     சாதி சந்தான் எகின --- உயர்ந்த வமிசத்து அன்னம் எனவும்,

     மார்பர் --- மார்பையுடையவராய்,

     அம்தோகை என தான் --- அழகிய மயில் என்னவும்,

      எழும் கோல விலைமாதர் --- எழுந்து தோன்றும் அழகிய விலை மகளிரின்,

     இன்பு ஆர் கலவி --- இன்பம் நிறைந்த சேர்க்கையில்,

     தாவு கொண்டே-பாய்தலைக் கொண்டு,

     கரிய நோய்கள் கொண்டே --- துன்பத்தைத் தரும் நோய்களையடைந்து,

     பிறவிதான் அடைந்து ஆழும் --- பல பிறவிகளை அடைந்து துன்பத்தில் அழுந்துகின்ற,

     அடியேன் இடம் --- அடியேனிடத்தில்,

     சாலும் வினை அஞ்சி ஓட --- நிறைந்த வினைகள் அஞ்சி விலக,

     தார் கடம்பு ஆடு --- கடப்ப மலர் மாலை அசைகின்றதும்,

     கழல் --- வீரக் கழலையணிந்ததுமான,

     பாத செந்தாமரைகள் --- பாதமாகிய செந்தாமரையை,

     தாழ் பெரும் பாதை வழியே படிந்து --- வணங்குகின்ற பெரிய வழியில் பொருந்தி,

     வருகு தாபம் விண்டே --- அடுத்து வரும் தாகங்களை ஒழித்து,

     அமுத வாரி உண்டே --- அமுத வெள்ளத்தைப் பருகி,

     பசிகள் தாபமும் தீர --- பசியுந் தாகமுந் தீர,

     துகிர்போல் நிறம் --- பவளம் போல நிறமும்,

     காழ்கொள் உரு சராவும் --- ஒளி கொண்ட உருவம் பொருந்த

     சோதி முருகா எனும் காதல் கொடு --- ஜோதி முருகா என்று கூறும் விருப்பத்தைக் கொண்டு,

     தான் இருந்து ஓத --- மன அமைதியுடன் இருந்து ஓத,

     இரு ஓர் அகம் பேறு உறு --- பெருமை பொருந்திய ஒப்பற்ற உள்ளம் பேறுபெறும்படியான,

     விஞ்சை தாராய் --- ஞானத்தைத் தந்தருளுவீராக.


பொழிப்புரை

         திரிசூலத்தை ஏந்தியவரும், எமது அன்னையும், பொன்னிறமுடையவரும், ஆசையைப் போக்குபவளும், குழையுந் தோடும் பூண்டு ஆடுகின்ற சிவபெருமானை விரும்பும் அழகியும், நல்ல விபூதியை அணிந்து காப்பாற்றுபவளும், திகம்பரியும், அழகிய காளியும், கலைமகளும், திருமகளும் நின்று துதிக்கின்ற தூய அன்னையும், மூங்கில் போன்ற திரண்ட தோளையுடையவளும் ஆகிய உமாதேவியைப் பாகத்தில் கொண்ட கருணை நிறைந்த பரமசிவத்தின் புதல்வர் என்று பெரிய உலகத்தவர் புகழும் விசித்திரம் உடையவரே!

     சூரனைச் சங்கரித்தவரே!

     தேவலோகத்துக்கு உரியவரே!

     ஆறு கார்த்திகை மாதர்களின் மைந்தரே!

     குமாரக் கடவுளே!

     உபகாரியே!

     கடப்ப மலர் மாலையணிந்த புயத்தை யுடையவரே!

     வீரரே!

     சிவகுருவே!

     அழகரே!

     தேவ குமாரியாகிய தெய்வயானையின் கணவரே!

     வேதங்களையும் ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்கள் முறையீட்டின் ஒலியானது உமது ஆற்றலைப்பாட, ஏழுமலைகளும், துண்டாகப் பொடிபட, அம்மலைகளிலிருந்து எழுந்திருந்த அசுரர்களின் உதிரம் பெருகி ஆறாகிவர, வேலைவிடுத்து நடனம் கொண்ட வேலவரே!

     மாலியவான் இறக்கவும் ஒப்பற்ற இரணியன் அழியவும், வலிமை மிகுந்த வாலியும், பருத்த மராமரமும், கும்பகர்ணனும், கடலும் பயங்கரமான வலிமை கொண்ட இராவணனும் அழியவும், செலுத்திய அம்பையுடையவரும், அழகிய மேகவண்ணரும், மகிழ்ச்சியுடைய கோபிகைகளுடன் கூடி விளையாடிக் கலந்தவரும், இலக்குமியைத் தரித்த திருமார்பினரும், பொன்மகுடம் பூண்டவருமாகிய திருமாலின் புதல்வியின் அறிவு நிறைந்த தெய்வயானையம்மையின் மார்பும் மலை போன்ற தனமும் பொருந்தவும், இடையில் நுட்பம் நெகிழ்ந்து அசையவும், திருமுகத்தில் மகிழ்ச்சியுற்று, கருணாரசத்துடன் வாயிலிருந்து வரும் இனிமையை நுகர்ந்தும், இரத்தினச் சிலம்பு ஒலிக்கவும், அவரை மணக்குங் காதலைப் பாராட்டியும் மகிழ்ந்த மயில் வாகனரே!

     தூயவரே!

     வள்ளிநாயகிக்கு நாயகரே!

     வேதமுழக்கம் விளங்கும் திருச்செங்கோட்டு நகரில் வாழ வந்தவரே!

     கருநிறம் படைத்த திருமாலும் பிரமனும் தேவர்களும் புகழும் தனிப் பெருந்தலைவரே!

     கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், பந்துபோல் புரள்கின்ற அழகிய புருவமும், பொன்தோடு அசையும் ஒளிமிக்க தாமரை போன்ற முகமும் உடையவர்கள்.

     கிளியைப் போல் கொஞ்சும் மொழியை உடையவர்கள்.
    
     பாக்கு போன்ற கழுத்தினர்.

     தேமலும் வாசனையும் பொருந்திய மூங்கில் போன்ற தோள்களையுடையவர்கள்.

      இரு மலைகள் போலவும், நீண்ட யானைக்கொம்பு, இளநீர் போலவும், தேன்போல் இனித்தும், முத்துமாலை தரித்தும், விளங்குவதுமாகிய தனத்தினர்.

     நீண்ட அலங்காரமான கண்டசரம் தரித்தவர்கள்.

     நறுமணம் பொருந்திய கலவைச் சந்தனக்கிண்ணம் போன்ற வயிற்றினர்.

     நீலோற்பலக் கணையை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்ததும் அன்புக்கு இடமானதும் சந்ததியைத் தருகின்றதுமான அல்குல் என்ற காமநிதியாம் அமுதத்தைத்தரும் சம்போகத்தினர்.

     திக்குகளில் மின்னும் மின்னலைப் போன்ற-நூல் போன்ற நுண்ணிய இடையினர்.

     அழகு நிறைந்த பொற்சரிகையிட்ட முன்தானை அமைந்த பட்டுபுடவை சூழ்ந்துள்ளதும் இளைஞர்கள் சரணம் புகுவதுமான காலில் சிலம்பு ஒலிக்க நடந்து, உயர்ந்த குலத்து அன்னம் போன்ற நடையினர்.

     அழகிய மார்பினர்.

     அழகிய மயில் போன்றவர்கள்.

     ஆகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் தாவிப் பாய்வதைக் கொண்டு, துன்பத்தைத் தருவதான நோய்களை யடைந்து, பல பிறவிகளையடைந்து, வேதனையில் அழுந்தும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினைகள் அஞ்சி அகல, கடப்ப மலர் மாலை அசைகின்றதும், வீரக்கழலை அணிந்ததும், செந்தாமரை போன்றதுமாகிய திருவடியை விரும்பும் அப்பெரு நெறியில் பொருந்தி, ஆசைகளை ஒழித்து, அருள் அமுத வெள்ளத்தைப் பருகி, பசியுந் தாகமும் நீங்க,

     பவள நிறமும் ஒளியுங் கொண்ட உருவமும் பொருந்த, “ஜோதி முருகா” என்று கூறும் விருப்பங் கொண்டு, மன அமைதியுடன் இருந்து ஓத பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்தருளுவீராக.


விரிவுரை

இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகள் பெண்களின் கேசாதிபாத வருணனையைக் கூறுகின்றார்.

சுணங்காவி கிளை ---

சுணங்கு-தேமல்.ஆவி-வாசனை. கிளை-மூங்கில், பெண்களின் தோள் மூங்கில் போலவும், தேமலும் வாசனையும், நிறைந்து அழகு செய்யும்.

சாறு பொழியாவளம் ---

சாறு பொழி அ வளம். வள்ளம்-என்ற சொல் வளம் என வந்தது. வள்ளம்- கிண்ணம். இது வயிற்றுக்கு உவமையாயிற்று.

நீலவண்டேவி ---

நீலம்-நீலோற்பல மலர். வண்டு - கணை.
  
அங்கார நிறை ---

அகங்காரம்-இறுகாப்பு. இறுமாப்பு நிறைந்த, அகங்காரம் என்ற சொல் அங்காரம் என வந்தது.

அஞ்சாறு பொன்தோகை அமை பாளிதம் ---

அம்-அழகு. சாலும்-மிகுந்த. அழகு மிகுந்த பொன் சரிகைக் கரையமைந்த முன்தானையுடன் கூடிய புடவை சூழ்கின்ற பாதம்.


பாத செந்தாமரைகள் தாழ் பெரும்பாதை வழியே படிந்து ---

முருகப் பெருமானுடைய திருவடியை வணங்குவதே உய்யும் பெரு நெறியாகும். “பெறநெறி பிடித்தொழுக வேண்டும்” என்பர். இராமலிங்கர்.

அமுத வாரியுண்டே பசிகள் தாபமுந் தீர ---

இறைவனுடைய திருவருளாகிய ஆரமுதம் உண்டவர்க்குப் பசி தாகங்கள் பொருந்த மாட்டா.

குகனெ குருபர னே என நெஞ்சிற்
    புகழ்அருள் கொடு நாவினில் இன்பக்
       குமுளி சிவவமு தூறுக உந்திப்  பசியாறி”  --- திருப்புகழ்.

சோதி முருகா எனுங்காதல் கொடு தானிருந்தோத ---

சோதி முருகா!” “சோதி முருகா!” என்று காதலுடன் தனிமையிலிருந்து ஓதுதல் வேண்டும்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்”    - தேவராம்.

இருவோரகம் பேறு ---

இரு-பெரிய-பெருமை. ஓர்-ஒப்பற்ற, அகம்-உள்ளம். பெருமை தங்கிய ஒப்பற்ற உள்ளத்தில் பேறு பெறும் ஞானத்தைத் தந்தருள்.
  
கவுரி ---

கவுரம்-பொன்னிறம்.

தூள் அணைந்தாள் ---

தூள் - விபூதி.

கழைகொள் தோளி ---

கழை-மூங்கில். மூங்கில் போன்ற உருண்ட தோள்களை யுடையவள்.

வேயுறு தோளிபங்கன்”              --- தேவாரம்.

பரமதேசிகந்தா ---

பரம தேசிக அந்தா, பரமனுக்குக் குருவே! அழகனே!

தோதகம் பாட ---

தோதகம்-வல்லமை. முருகனுடைய வல்லமையைப் பாடித்துதித்தார்கள்.


வேலெறிந்தே நடனமும் கொள்வோர் ---

வேலால்சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் துடிக்கூத்து ஆடியருளினார்.

மாக்கடல் நடுவண் சூர்த்திறங்க கடந்தோன்
   ஆடிய துடியும்”                       - சிலப்பதிகாரம்

மாலியன் ---

மாலியவான்.. இவன் இராவணனுடைய சிறிய பாட்டன். தலைமை அமைச்சனுமாக இருந்து அறிவுரைப் பகர்ந்தான்.

மதிநெறி யறிவு சான்ற மாலியவான்”    --- கம்பராமாயணம்.

காணமுடியோன் ---

காணம்-பொன்.

கையில் ஒன்றும் காணமில்லை"            --- தேவாரம்.

மறைகுலாவு செங்கோடை நகர் ---

திருச்செங்கோட்டில் எப்போதும் வேத முழக்கம் முழங்குகின்றது.

செழுமறை தேர்தென்றலையம் புசகபூதா.      --- கந்தரந்தாதி.

கருத்துரை

         திருச்செங்கோட்டு முருகா! ஞானத்தைத் தந்தருள்வீர்

                 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...