கொல்லிமலை - 0401. தொல்லைமுதல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தொல்லைமுதல் (கொல்லிமலை)

முருகா!
உண்மைஅறிவு ஆனந்தப் (சச்சிதானந்தப்) பொருளை அடையும் பொருளை அருள்.


தய்யதன தானந்த தய்யதன தானந்த
     தய்யதன தானந்த ...... தனதான


தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
     சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
     தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
     பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப்

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
     பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
     கல்வருக வேநின்று ...... குழலூதுங்

கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
     கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
     கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
     கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே

பதம் பிரித்தல்


தொல்லைமுதல் தான்ஒன்று மெல்லி இரு பேதங்கள்
     சொல்லு குணம் மூ அந்தம் ...... என ஆகி,

துய்ய சதுர் வேதங்கள், வெய்ய புலன் ஓர்ஐந்து
     தொய்யு பொருள் ஆறுஅங்கம் ...... எனமேவும்,

பல்ல பல நாதங்கள், அல்க பசு பாசங்கள்,
     பல்கு தமிழ் தான் ஒன்றி, ...... இசையாகி,

பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருப ஆநந்த
     பெளவம் உறவே நின்றது ...... அருள்வாயே.

கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ, அம்
     புகல் வருகவே நின்று ...... குழல்ஊதும்

கையன் மிசை ஏறு உம்பன், நொய்ய சடையோன், எந்தை,
     கைதொழ மெய்ஞ்ஞானம் சொல் ...... கதிர்வேலா!

கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று
     கொள்ளை கொளும் மாரன் கை ...... அலராலே

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!
     கொல்லிமலை மேல் நின்ற ...... பெருமாளே.


பதவுரை

       கல் உருக --- கல் உருகும்படியும்,

     அல்லல் படு --- துன்பப்படுகின்ற,

     கோ --- பசுக்கள்,

     அம் புகல் வருகவே நின்று --- அழகிய புகுமிடத்திற்கு வந்து சேரும்படியும் நின்று,

     வேயின்கண் குழல் ஊதும் --- மூங்கிலால் அமைந்த புல்லாங்குழல் வாசித்த,

     கையன் மிசை ஏறு --- கண்ணபிரானாகிய மால் விடையின்மீது ஏறுகின்ற,

     உம்பன் --- பெரியோனும்,

     நொய்ய சடையோன் --- புன்சடையோனும்,

     எந்தை --- எமது பிதாவுமாகிய சிவபெருமான்,

     கை தொழ --- கைகுவித்துத் தொழ,

     மெய்ஞானம் சொல் --- உண்மை ஞானத்தை உபதேசித்த,

     கதிர் வேலா --- ஒளிமிகுந்த வேலாயுதரே!

      கொல்லை மிசை வாழ்கின்ற --- தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த,

     வள்ளி புனமே சென்று --- வள்ளி நாயகியின் புனத்தில் சென்று,

     கொள்ளை கொளும் --- உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற,

     மாரன் கை அலராலே --- மன்மதனுடைய கை மலர்க்கணையின் செய்கையால்,

     தழையே கொய்து கொண்டு செல்லும் --- தழைகளைக் கொய்து கொண்டு சென்ற,

     மழவா --- கட்டழகுடையவரே!

       கந்த -  கந்தக்கடவுளே!

       கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே --- கொல்லிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!

       தொல்லை முதல் தான் ஒன்று --- பழம் பொருள் முதற் பொருள் எனத்தான் ஒன்றே விளங்குவதாய்,

     மெல்லிய இரு பேதங்கள் --- சத்தி சிவம் என்னும் இரு வேறு தன்மையதாய்,

     சொல்லு குணமே அந்தம் என ஆகி --- சொல்லப்படுகின்ற முக்குணங்களின் முடிவின் வடிவாய் விளங்கும் மும்மூர்த்திகளாய்,

     துய்ய சதுர் வேதங்கள் --- பரிசுத்தமான நான்கு வேதங்களாய்,

     வெய்ய புலன் ஒர் ஐந்து --- கொடிய புலன்களாகிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஓர் ஐந்தையும்,

     தொய்யு பொருள் --- சோர்வடையச் செய்யும் பொருளைக் கொண்ட,

     ஆறு அங்கம் எனமேவும் --- ஆறு வேதாங்கங்களாய்,

     பல்ல பல நாதங்கள் --- பலப்பல ஒலிகளில் தங்குவதாய்,

     அல்க பச பாசங்கள் --- உயிர் தளைகள் இவற்றின் தன்மை குறையும் பொருட்டு அவற்றில் தங்குவதாய்,

     பல்கு தமிழ் தான் ஒன்றி --- பெருகுகின்ற தமிழில் பொருந்தி,

     இசை ஆகி --- இன்னியைாய்,

     பல் உயிரும் ஆய் --- பல உயிர்களுமாய்,

     அந்தம் இல்ல --- முடிவில்லாததாய் உள்ள,

     சொருப ஆனந்த பௌவம் உறவே நின்றது --- ஆனந்த உருவக் கடலை அடையும்படி செய்யவல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை,

     அருள்வாயே --- அருளுவீராக.

பொழிப்புரை

     கல் உருகுமாறும், துன்பப்படும் பசுக்கள் அழகிய புகுமிடத்திற்கு வந்து சேருமாறும் நின்று புல்லாங்குழல் ஊதிய திருமாலாகிய இடபத்தின் மீது ஏறுகின்ற பெரியோனும், புன்சடையோனும், எமது பரமபிதாவுமாகிய சிவபெருமான் கைகூப்பித் தொழ, உண்மைப் பொருளை உபதேசித்த ஒளிமிகுந்த வேலாயுதரே!

     தினைப்புனத்தில் வள்ளிபிராட்டியின் வனத்திற் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற மன்மதனுடைய கைமலர்க் கணையின் செய்கையால், தழை கொய்து கொண்டு சென்ற கட்டழகுடையவரே!

     கந்தவேளே!

     கொல்லி மலைமீது நின்ற பெருமித முடையவரே!

     பழம்பொருள் முதற்பொருள் எனத் தான் ஒன்றே விளங்குவதாய், சக்தி சிவம் என்ற இரு வேறு தன்மையதாய், சொல்லப்படும் தாமதம் இராசஸம் சாத்துவீகம் என்ற முக்குண முடிவின் வடிவாய், மும்மூர்த்திகளாய், பரிசுத்தமான நான்கு வேதங்களாய், கொடிய புலன்களாய், சுவை ஒளி ஊறு ஓசை, நாற்றம் என்ற ஐந்ததையும் சோர்வடையச் செய்யும் ஆறு அங்கங்களாய், பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர் தளைகளின் குற்றம் நீங்க அவற்றுள் தங்குவதாய், பெருகும் தமிழில் பொருந்திய இன்னிசையாய், பல உயிர்களுமாய், முடிவில்லாததாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்ய வல்ல பொருள் எதுவோ, அந்தப் பொருளை அருளுவீராக.

விரிவுரை

தொல்லை முதல் தான் ஒன்று ---

இத் திருப்புகழ் எண்ணலங்காரமாக ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகு கவித் திறத்தைக் காட்டுகின்றது.

இதேபோல் திருமந்திரத்திலும் வருவது காண்க.
  
ஒன்றுஅவன் தானே, இரண்டுஅவன் இன்அருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குஉணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன்; ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

இறைவன் ஒருவனே முதல்வன்.

மெல்லி இரு பேதங்கள் ---

சக்தியும் சிவமுமாக விளங்கி இறைவன் உயிர்கட்கு அருள் புரிகின்றான்.

தட்ப வெப்பத்தால் உலகம் நடைபெறுகின்றது. தட்பத்தின் சூட்சமும் சக்தி; வெப்பத்தின் சூட்சுமம் சிவம்..

சொல்லு குணம் மூவந்தம் என ஆகி ---

சத்துவம், இராஜஸம், தாமதம் என்ற முக்குணங்களின் முடிவின் சொரூபமாய்,  அரன் அயன் அரி என்ற மும்மூர்த்திகளும் தொழிற்படுகின்றார்கள்.

அம்மூர்த்திகளை அதிஷ்டித்து இறைவன் அருள்புரிகின்றான்.

அயன் என ஆகி, அரி என ஆகி,
   அரன் என ஆகி அவர் மேலாய்”         --- (அகரமு) திருப்புகழ்.

துய்ய சதுர் வேதங்கள் ---

வேதம் நான்கு. ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று சொல்லுவது ஒரு வழக்கம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்பவையே வேதங்கள் என்று பரமன் காட்டியதாகத் திருமுறை தெளிவிக்கின்றது. கல்லால மரத்தின் கீழ் இருந்து சிவபெருமான் நால்வர்க்கு உறதேசித்தது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையே என்பதைத் திருஞானசம்பந்தர், அப்பர், மணிவாசகர் அருளியிருப்பதை அறிக.

சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.    --- திருஞானசம்பந்தர்.

உரித்தானை மதவேழம் தன்னை, மின்னார்
            ஒளிமுடிஎம் பெருமானை, உமைஓர் பாகம்
தரித்தானை, தரியலர்தம் புரம்எய் தானை,
            தன்அடைந்தார் தம்வினைநோய் பாவம் எல்லாம்
அரித்தானை, ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு
            அறம்பொருள்வீடு இன்பம் ஆறுஅங்கம் வேதம்
தெரித்தானை, திருநாகேச் சரத்து உளானைச்
            சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.               ---அப்பர்.

அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து,அவருக்கு அருளும்அது எனக்குஅறிய இயம்பேடீ,
அருந்தவருக்கு அறம் முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ.    --- மணிவாசகம்.

ஈதல் அறம், தீவினைவிட்டு ஈட்டல்பொருள், எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.                                                --- ஔவையார்.

வெய்யபுலன் ஓர் ஐந்து ---

புலன்கள், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம். இவற்றை வென்றவர் உலகை வென்றவராவார்.

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்க் ஓர் வித்து.            --- திருக்குறள்


சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.                   --- திருக்குறள்

இந்த ஐந்த புலன்களையும் அடக்குவார் பலர். அடக்குகின்றவரையில் அவை அடங்கும். பின்னர் முன்னையினும் வேகமாக மேலெழும். ஐந்தையும் அவித்துவிட வேண்டும். அவித்த

நெல் முளைக்காது. அவித்த புலன்கள் தொழிற்பட மாட்டா.

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி                  --- திருக்குறள்.

இந்தியங்களை அவித்திருத்தல் மேயினான்” - கம்பராமாயணம்.

தொய்யு பொருள் ஆறு அங்கம் எனமேவும் ---

வேதபுருஷனுக்கு ஆறு அங்கள், சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜ்யோதிஷம், கல்பம், இவை முறையே நாசி வாய், கால், காது, கண், கை.

(1) சிட்கை (நாசி)

எழுத்துக்களின் உச்சாரணம் மாத்திரை உற்பத்தி முதலியவற்றை வரையறுப்பது. “இந்திரன் சத்ரு” என்ற சொல்லின் உச்சாரண மாறுபட்டால் மாண்டான் துவஷ்டா.

(2) வ்யாகரணம் (வாய்)

நடேசப் பெருமானுடைய டமருகத்தில் எழுந்த 14 ஒலிகளையே பாணினி 14 சூத்திரங்களாக எழுதினார். இதுவே வியாகரணத்துக்கு மூலம். மகேச்வர சூத்ரம் எனப் பெறும். பாணினியின் சூத்திரத்துக்கு விரிவுரை செய்தவர் பதஞ்சலி.

சிவபெருமானுடைய மூச்சுக் காற்று வேதம் - கைக்காற்று - வியாகரணம்.

திருவடியில் தரித்துள்ள ஆதிசேடன் பதஞ்சலியாக வந்து பாஷ்யம் செய்தார்.

(3) சந்தசு (கால்)

யாப்பு போன்றது சந்தசு. இன்ன இன்ன பத்தியத்திற்கு இத்தனை எழுத்து; இத்தனை பதம்; இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது. பத்யம்-கவி. கத்யம்-வசனம். வேதமந்திரங்கள் சந்தஸ். மற்றவை சுலோகம். இவையில்லாமல் நிற் முடியாது ஆதலால் சந்தஸ் கால் போன்றது.
  
(4) நிருக்தம் (காது)

நிருக்தம்-நிகண்டு. ஏன்? இந்தப் பதம் இங்கு வந்தது? என்பதை விளக்குவது.

ஹ்ருதயம்-ஹ்ருதி-அயம் ஹ்ருதயத்தில் இவன் இருக்கின்றான் என்பது பொருள். பரமாத்வா உறைகின்றான் என்பது போன்ற காரணங்களைக் கூறுவது நிருக்தம்.

(5)  ஜ்யோதிஷம் (கண்)

கண் தொலைவிலுள்ளதைக் காட்டுவதுபோல் மேல் விளைவதைத் தெரிவிப்பது ஜ்யோதிஷம்.

(6) கல்பம் (கை)

காரியங்களைச் செய்வதற்குக் கரம் என்று பேர். சத்கர் மாக்களை வரையறுப்பது கல்பம். இன்ன வருணத்தார்; இன்ன ஆச்சிரமத்தார்; இன்ன இன்ன கர்மாவைச் செய்யவேண்டும். இன்ன கர்மாவுக்கு இன்ன மந்திரம்; இன்ன திரவியம்; ரித்விக்குக்களுக்கு இலக்கணம். பாத்திரங்களின் அமைப்பு; இவற்றை விளக்குவது கல்பம்.

வேதமோடு ஆறங்கமாயினை” என்று தேவாரமும், “கருதிய ஆறங்க வேள்வி அந்தணர்” என்று திருப்புகழும் கூறுகின்றது.

பல்லபல நாதங்கள்:-

அநேக வித ஒலிகள், யாவும் இறைவன் மயமே யாகும்.

ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே”        --- அப்பர்.

அல்க பசுபாசங்கள் ---

பசு பாசங்களின் குற்றமும் குறையும் பொருட்டு அவற்றில் இறைவன் நீக்கமின்றி நிற்கின்றான்.


சொருபானந்த பௌவமுறவே நின்றது அருள்வாயே:-

ஆனந்த சொரூபமான சுகக்கடலில் முழுக அருள்செய் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

கல்லுருக வேயின்கண்..........குழலூதி ---

கண்ணபிரான் புல்லாங்குழல் ஊதிய போது அங்கிருந்த கல்லுகள் உருகினவாம். இசைக்குக் கல்லும் இரும்பும் உருகும்.

ஒரு சமயம் இராவணன் அகத்தியர் வாழும் பொதியமலை சென்று அவருடைய தவத்துக்கு இடையூறு விளைவித்தான். வீணையில் வல்லோம் என்ற தருக்குடைய இராவணனை அழைத்து, முன்னிலையில் இருத்தி யாழ்மீட்டி வாசித்தார். அப்போது யாழின் இன்னிசையால் பொதியமலை யுருகியது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டார். அதனுள் இராவணன் சிக்கிக் கொண்டு துன்புற்றான். இராவணன் அகத்தியரைத் தொழுது வேண்ட மீண்டும் யாழ்வாசித்து அவனை விடுவித்தார்.

இனிய  பைந்தமிழின் பொதிய மாமலைபோல்
   இசைக்கு உருகாது”               --- சோணசைலமாலை.

இதனால் இசைக்குக் கல்லருகும் எனத் தெளிவாகின்றது.

கையன்மிசை ஏறு உம்பன்:-

கையன் - கண்ணன். ஏறு உம்பன். உம்பன்-உயர்ந்தவன். திரிபுரம் எரிக்க முயன்ற போது, தேவர்கள் விநாயகரை வணங்காமல் தொடங்கியதால் தேர் அச்சு முறிந்தது. அப்போது திருமால் இடபமாகி இறைவைனைத் தாங்கினார்.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. --- திருவாசகம். 

கொய்து தழையே கொண்டு செல்லுமழவர் ---

அகப்பொருளில் “தழைகொண்டு சேறல்” என்பது ஒரு துறை. குறிஞ்சி நிலப்பெண்கள் தழையைத் தைத்து உடுப்பார்கள். அம் மாதரை விரும்பிச் செல்லும் தலைவன் கையுறையாகச் சந்தனம் முதலிய தழைகளை எடுத்துக்கொண்டு செல்வான்.

ஆரத் தழைஅராப் பூண்டுஅம் பலத்துஅனல் ஆடி,அன்பர்க்கு
ஆரத் தழைஅன்பு அருளிநின் றோன்சென்ற மாமலயத்து
ஆரத் தழைஅண்ணல் தந்தால், இவைஅவள் அல்குல்கண்டால்
ஆர்அத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே.           --- திருக்கோவையார்.

மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்துஉலவு
   வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்"      --- வேடிச்சிகாவலன் வகுப்பு.

தழை உடுத்த குறத்தி பதத்துணை
     வருடி, வட்டமுகத் தில தக்குறி
          தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொற்பணி கச்சு விசித்து,இரு
     குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
          தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.     --- (பழைமை) திருப்புகழ்.


கருத்துரை

கொல்லிமலைக் குமாரா! ஆனந்தக் கடலில் மூழ்க அருள் செய்வாய்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...