திருச்செங்கோடு - 0381. அன்பாக வந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அன்பாக வந்து (திருச்செங்கோடு)

முருகா!
அடியேன் அறியாமையால் அலையாமல்,
நினைத்த இடத்தில் வந்து அருள் புரிவாய்.

தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான


அன்பாக வந்து உன்றாள் பணிந்து
     ஐம்பூத மொன்ற ...... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
     ளம்போரு கங்கள் ...... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடு கின்ற ...... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அன்பாக வந்து, உன்தாள் பணிந்து,
     ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல்,

அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள்,
     அம்போருகங்கள் ...... முலைதானும்,

கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று
     கொண்டாடுகின்ற ...... குழலாரைக்

கொண்டே நினைந்து, மன் பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ?

மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த
     வம்புஆர் கடம்பை ...... அணிவோனே!

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா!

சென்றே இடங்கள் கந்தா எனும் பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்.

செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
     செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.

பதவுரை

      மன்று ஆடி தந்த மைந்தா --- சபையில் ஆடிய நடராஜப் பெருமானுடைய திருக் குமாரரே!

      மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே --- மிக்க வாசனை நிறைந்த கடப்ப மலரை அணிபவரே!

      வந்தே பணிந்து நின்றார் பவங்கள் --- சந்நிதிக்கு வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களின்,

     வம்பே தொலைந்த வடிவேலா --- துயரத்தைக் களைந்த கூரிய வேலாயுதரே!

      செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த --- செந்நெற்பயிரும், தாமரையும், ஒன்றுபட்டு வளர்ந்துள்ள

     செங்கோடு அமர்ந்த பெருமாளே --- திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      அன்பாக வந்து உன்தாள் பணிந்து --- அன்பாக வந்து, உமது திருவடியைப் பணிந்து,

     ஐம்பூதம் ஒன்ற நினையாமல் --- ஐம்பூதங்களும், ஒருமைபட்ட உம்மை நினையாமல்,

     அன்பால் மிகுந்து --- அன்பு மிகுந்து,

     நஞ்சு ஆரும் கண்கள் ---  விடம் நிறைந்த கண்கள்,

     அம்போருகங்கள் முலைதானும் --- தாமரைமொட்டு போன்ற தனங்கள்,

      கொந்தே மிகுந்த --- பூங்கொத்துக்கள் நிரம்பி,

     வண்டு ஆடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை ---  வண்டுகள் நீங்காமல் நின்று விளையாடுகின்ற கூந்தல் இவற்றையுடைய  

     கொண்டே நினைந்து --- பொது மாதரை, மனதில் கொண்டு நிறைந்து,

     மன்பேது மண்டி --- நிலை பெற்ற அறியாமை நிறைந்து

     குன்றா மலைந்து அலைவேனோ --- மனம் குன்றி ஒரு வழிப் படாமல் அலைச்சல் உறுவேனோ?

     சென்றே இடங்கள் கந்தா எனும் பொ --- அடியேன் சென்ற இடங்களில் கந்தக் கடவுளே என்று அழைக்கும்பொழுது

     செம் சேவல் கொண்டு வரவேணும் --- செவ்விய சேவலை ஏந்தி என் முன் வரவேண்டும்,

 
பொழிப்புரை

     சபையில் நடனம் புரிகின்ற நடராஜப் பெருமானுடைய திருக்குமாரரே!

     மிகுந்த வாசனை நிறைந்த கடப்ப மலர்மாலை புனைந்தவரே!

     உமது சந்நிதிக்கு வந்து பணிந்த அடியார்களின் பிறவித் துயரைக் களையும் வடிவேலவரே! 

     செந்நெற்பயிரும் தாமரையும் ஒன்றுபட்டு வளர்கின்ற திருச்செங்கோட்டில் அமர்ந்த பெருமிதமுடையவரே!

     அன்புடன் வந்து உமது பாத மலரைப் பணிந்து ஐம்பூதங்களும், ஒருமைபட்ட உம்மை நினையாமல், அன்புமிகுந்த நஞ்சு நிறைந்த கண்களும் தாமரை மொட்டுகள் போன்ற தனங்களும், பூங்கொத்துக்களும் நிரம்பி வண்டுகள் விளையாடுகின்ற கூந்தலும் படைத்த பொது மாதரை மனதில் கொண்டு நினைத்து நிறைபெற்ற அறியாமை நிறைந்து மனம் குன்றி ஒரு வழிப்படாது அலைச்சல் உறுவேனோ?

     அடியேன் சென்ற இடங்களில் “கந்தா!” என்று அழைப்பேனாயின், அங்கு நீர் சேவல் கொடியை ஏந்திக் கொண்டு என்முன் வந்தருளவேண்டும்.


விரிவுரை


அன்பாக வந்து உன்தாள் பணிந்து ---

முருகனிடம் சென்று அன்போடு என்புருக வழிபட்டு வணங்குதல் வேண்டும். 

ஐம்பூதம் ஒன்ற நினையாமல் ---

இறைவனை மண், நீர், கனல், காற்று, விண் என்ற ஐம்பூதங்களும் ஒரு வழிப்பட நினைக்கவேண்டும். ஐம்பூதங்களும் ஒன்றுபட்டால் அதன் சூட்சுமமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களும் ஒன்றுபடும்.

மன்பேது மண்டி ---

மன்-நிலைபேறு. பேது-அறியாமை. நிலைபெற்ற அறியாமையுடன் கூடியது ஆன்மா.

குன்றா மலைந்து அலைவேனோ ---

குன்ற-குன்றதலையடைந்து, மலைதல்-ஒருவழிப்படாது நிற்றல்.
  
மன்றாடி ---

சிவபெருமான்திருமுன்வந்து பணிந்தவர்களின் பிறவித் துயரைத் தொலைத்து ஆட்கொள்ளுவர்.

அறிவால்அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்
   அடியார் இடைஞ்சல் களைவோனே”     --- (விறல்மார) திருப்புகழ்.

"தொலைத்த" என்ற சொல் "தொலைந்த" என்று சந்தத்துக்காக நின்றது.


சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் ---

இந்த அடி மிக அருமையானது; சுவையானது; அன்பர்கள் மனதில் மறவாமல் பதித்துக் கொள்ள வேண்டியது.

முருகா! அடியேன் சென்ற சென்ற இடங்களில் “கந்தா” என்று உன்னை அழைப்பேனாயின் நீ சேவன் கொடியைக் கையில் ஏந்திகொண்டு என்முன் வந்து காட்சி தரவேணும்” என்று அருணகிரி சுவாமிகள் உருக்கமாக வேண்டிக் கொள்ளுகின்றார்.

முருகவேள் அடியவரது அல்லலை யகற்றச் செல்லும்போது சேவல் கொடியுடன் சென்றருள்வார். சயந்தன் கனவில் கந்தவேள் சென்று காட்சிதந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணங் கழறுகின்றது.

வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்
  ...............அறுமுகங் கொண்டு வேளடைந்தான்”  --- கந்தபுராணம்.

"எனும் பொழுது" என்ற சொல், "எனும்பொ" என வந்தது.
  
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு ---

செஞ்சாலி - நெற்பயிர். கஞ்சம் - தாமரை.

நெற்பயிர் பசியைத் தீர்ப்பது. தான்யம் --- தான்ய லட்சுமி; தாமரையில் இருப்பவள் தனலட்சுமி. செந்நெல்லும் தாமரையும் ஒன்றுபட்டிருப்பது, தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் ஒன்றுபட்டு காட்சியளிப்பது போல் திகழ்கின்றது.

கருத்துரை

         திருச்செங்கோட்டு வேலவரே! அறியாமையால் அலையாவண்ணம் ஆண்டருள்வீர்.       

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...