அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கயலைச் சருவி (இரத்தினகிரி)
முருகா!
அடியேன் நற்கதி பெற அருள்
தனனத்
தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
கயலைச்
சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக் ...... கணினாலே
கடிமொய்ப்
புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே
நயபொற்
கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப் ...... பிணையாலே
நலமற்
றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற் ...... றிடுவேனோ
புயலுற்
றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும்
பொருதிட்
டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே
செயசித்
திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே
சிவதைப்
பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கயலைச்
சருவி,
பிணை ஒத்து அலர் பொன்
கமலத்து இயல் மைக் ...... கணினாலே,
கடிமொய்ப்
புயலைக் கருதிக் கறுவிக்
கதிர் விட்டு எழுமைக் ...... குழலாலே,
நயபொன்
கலசத்தினை, வெற்பினை மிக்கு
உள நல் பெருசெப்பு ...... இணையாலே,
நலம்
அற்று, அறிவு அற்று, உணர்வு அற்றனன், நல்
கதி எப்படி பெற் ...... றிடுவேனோ?
புயல்
உற்று இயல் மைக் கடலிற் புகு கொக்கு
அற, முற் சரம் உய்த்து,
...... அமிழ்வோடும்
பொருதிட்டு
அமரர்க்கு உறு துக்கமும் விட்டு
ஒழியப் புகழ் பெற் ...... றிடுவோனே!
செய
சித்திர முத்தமிழ் உற்பவ! நல்
செபம்,முற் பொருள்உற்று ...... அருள்வாழ்வே!
சிவதைப்
பதி ரத்தின வெற்பு அதனில்
திகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே!
பதவுரை
புயல் உற்று இயல் --- மேகங்கள் படியுந்
தன்மையுடைய
மை கடலில் புகு கொக்கு அற --- கரிய
சமுத்திரத்தில் புகுந்து நின்ற மாமரம் அறும்படி,
முன் சரம் உய்த்து அமிழ்வோடும் பொருதிட்டு
--- முன்னாளில் வேலை விடுத்து, அடக்கி ஆழ்த்தும் ஆற்றலுடன் போர் செய்து,
அமரர்க்கு உறு துக்கமும் விட்டு ஒழிய --- தேவர்கட்கு
இருந்த துன்பம் அவர்களைவிட்டு அகலுமாறு செய்த
புகழ் பெற்றிடுவோனே --- புகழைப் பெற்றவரே!
செய சித்திர முத்தமிழ் உற்பவ --- வெற்றியைத்
தரும் அழகிய முத்தமிழ்ப் பாடல்களின் மூலம் வெளிப்படும்,
நல் செபம் முன் பொருளும் உற்று அருள் வாழ்வே ---
சிறந்த மந்திரங்களையும், மேலான பொருளையும் அடைந்து,
அவற்றை உலகுக்கு வழங்கிய வாழ்வே!
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ்
மெய் குமர --- சிவாயம் என்று கூறப்படும், இரத்தினகிரியில் விளங்கும் உண்மை
வடிவாம் குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கயலை சருவி --- கயல் மீனோடு போர்செய்து,
பிணை ஒத்து --- பெண்மானை நிகர்த்து,
அலர் பொன் கமலத்து இயல் --- அழகிய தாமரை
மலரின் தன்மையைக் கொண்ட,
மை கணினாலே --- மை பூசிய கண்ணினாலும்,
கடி மொய் புயலை கருதி கறுவி --- விளக்கமுற்று
நெருங்கிய மேகத்தை நோக்கிக் கோபித்து,
கதிர் விட்டு எழும் மை குழலாலே --- ஒளி வீசி
எழுந்து திகழ்கின்ற கரிய கூந்தலாலும்,
நய பொன் கலசத்தினை, வெற்பினை --- இனிமையும் அழகுங்கொண்ட
குடத்தையும், மலையையும்,
மிக்கு உள நல்பெரு செப்பு இணையாலே --- மேம்பாடுள்ள
நல்ல பெரிய கரகத்தையும் ஒத்த இரு தனங்களாலும்,
நலம் அற்று --- அடியேன் நலன்களை இழந்து,
அறிவு அற்று --- நல்லறிவையும் இழந்து,
உணர்வு அற்றனன் --- மெய்யுணர்வையும்
இழந்துவிட்டேன்,
நல் கதி எப்படி பெற்றிடுவேனோ --- நல்ல முத்தியை
எப்படிப் பெறுவேனோ?
பொழிப்புரை
மேகங்கள் படியும் தன்மை உடைய கரிய
கடலில் புகுந்து, மாமரமாய் நின்ற சூரபன்மன் மாயும்படி, முன்னாள் வேலாயுதத்தை
விடுத்து போர் புரிந்து, தேவர்கட்கு இருந்த துயரத்தைக் களைந்து
புகழ் பெற்றவரே!
வெற்றியைத் தரும் முத்தமிழ்ப் பாடல்களின்
மூலம் வெளிப்படும் சிறந்த மந்திரங்களையும், மேன்மையான பொருளையும் உலகுக்கு அருளிய
செல்வமே!
சிவாயம் என்ற இரத்தினகிரியில் விளங்குகின்ற, உண்மைப்
பொருளாகிய குமாரக் கடவுளே!
பெருமிதமுடையவரே!
கயல் மீனோடு போர் புரிந்து, பெண்
மானை நிகர்த்து, அழகிய தாமரை மலரின் தன்மையுடைய மை பூசிய கண்ணினாலும், விளக்கமுற்று
நெருங்கிய மேகத்தை நோக்கிக் கோபித்துஒளி வீசி எழுந்து திகழும் கரிய கூந்தலினாலும், இனிமையும்
அழகும் படைத்த குடத்தையும், மலையையும், மேம்பாடு உள்ள நல்ல கரகத்தையும் ஒத்த
இரு தனங்களாலும், நலமும் மெய்யறிவும் மெய்யுணர்வும் அடியேன் இழந்தேன்; இனி
நான் நற்கதியை எப்படிப் பெறுவேனோ?
விரிவுரை
கயலைச்
சருவி ---
பெண்களின்
கண்கள் மீனைக் காட்டிலும், புரட்சியும், பொலிவும் மிகுந்திருப்பதனால் கயல்
மீனுடன் போர் புரிந்து வென்றது என்றார்.
பிணையொத்து
---
பிணை
- பெண்மான். பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையுடைய கண்கள்.
பிணையோர்
மடநோக்கும் நாணும் உடையார்க்கு
அணிஎவனோ
ஏதில தந்து. ---திருக்குறள்.
அலர்பொற்
கமலத்தில் மைகண் ---
அலர்ந்த
அழகிய தாமரை மலர்போன்ற கண்கள்.
நலம்
அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் ---
ஆன்ம
லாபமாகிய நலத்தையும், நல்லறிவையும் மெய்யுணர்வையும் மாந்தர்கள்
மாதர் மயலால் இழந்து விடுகின்றார்கள்.
நற்கதி
எப்படி பெற்றிடுவேனோ? ---
“நலமான பரகதியை அடியேன் எவ்வாறு பெற்று உய்வேனோ?” என்று
அடிகளார் ஏங்குகின்றார்.
புயல்
உற்றுஇயல் மைக்கடலிற்புகு கொக்கு அற ---
கொக்கு
- மாமரம். முடிவில் சூரபன்மன் கடலில் மாமரமாக நின்றான்.
விடம்பிடித் தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே. --- கந்தபுராணம்.
செய
சித்திர முத்தமிழ் உற்பவ நற் செபம் முற்பொருள் உற்றருள் வாழ்வே ---
திருஞானசம்பந்தரை
முருகவேள் அதிட்டித்துச் செய்த திருவருளை இது குறிக்கின்றது.
சிவதைப்பதி
---
இரத்தினகிரிக்குச்
சிவாயம் என்று பெயர் உண்டு.
“சடைவிராய விருப்புச்
சிவாயமே
சங்கரற்கு விருப்புச் சிவாயமே” --- வாட்போக்கிக் கலம்பகம்.
“சடைவிராய விருப்புச்
சிவாயமே
சிவபிரானுடைய சடையில் கலந்து உச்சியில் உள்ளது
கங்கை. வாயம் - நீர்.
“சங்கரற்கு விருப்புச் சிவாயமே”
சிவபிரானுக்கு
விருப்பமான தலம் சிவாய மலையாகும்.
கருத்துரை
இரத்தினகிரி
மேவிய இளம் பூரணரே! அடியே நற்கதி பெற அருள் புரிவீர்.
No comments:
Post a Comment