அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீரான கோல கால
(விராலிமலை)
முருகா!
வேலும், மயிலும், அன்னைமார்
இருவரும் கூடி உள்ள உனது அழகிய திருவடியை எப்போதும் மறவேன்.
தானான
தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ......
மலராறும்
சீராடு
வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ......
இருதாளும்
ஆராத
காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ......
முறைவாழ்வும்
ஆராயு
நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ......
பெறவேணும்
ஏராரு
மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ......
ளதிகாரம்
ஈடாய
வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி
யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு ......
மருகோனே
கோடாம
லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சீர்ஆன கோல கால நவமணி
மாலா, அபிஷேக பார, வெகுவித
தேவ அதிதேவர் சேவை செயும் முக ......
மலர்ஆறும்,
சீராடும்
வீர மாது மருவிய
ஈராறு தோளும், நீளும் வரிஅளி
சீராகம் ஓது நீப பரிமள ......
இருதாளும்,
ஆராத
காதல் வேடர் மடமகள்,
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்,
ஆதார பூதம் ஆக, வலம்இடம் ...... உறைவாழ்வும்,
ஆராயும்
நீதி வேலும், மயிலும்,மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்,
ஆபாதனேனும் நாளும் நினைவுஅது ......
பெறவேணும்.
ஏர்ஆரும்
மாட கூட மதுரையில்
மீது, ஏறி, மாறி ஆடும் இறையவர்,
ஏழ்ஏழு பேர்கள் கூற வருபொருள் ...... அதிகாரம்,
ஈடுஆய, ஊமர் போல வணிகர் இல்
ஊடுஆடி, ஆல வாயில் விதிசெய்த
லீலா! விசார! தீர! வரதர! ......
குருநாதா!
கூர்ஆழியால், முன் வீய நினைபவன்,
ஈடேறு மாறு பாநு மறைவுசெய்,
கோபால ராயன் நேயம் உளதிரு ......
மருகோனே!
கோடாமல்
ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை ...... பெருமாளே!
பதவுரை
ஏர் ஆரும் --- அழகு நிறைந்த,
மாட கூட மதுரையில் மீது --- மாட கூடங்களுடன்
கூடிய மதுரையம்பதியில்,
ஏறி மாறி ஆடும் இறைவர் ---
வெள்ளியம்பலத்திலேறி கால் மாறி ஆடிய கண்ணுதற் கடவுள்,
ஏழ் ஏழு பேர்கள் --- நாற்பத்தொன்பது
சங்கப்புலவர்கள்,
கூற வரு பொருள் அதிகாரம் --- உறைவகுத்துக்
கூறுமாறு அருளிய பொருளதிகாரத்தின்,
ஈடு ஆய --- அவ்வுரைகளுள் சிறந்ததனை
ஆய்ந்துரைக்கும் பொருட்டு,
ஊமர் போல வணிகர் இல் ஊடாடி --- ஊமைப் பிள்ளையைப்
போல் உருத்திரஜன்மர் என்ற திருநாமத்துடன் செட்டி வீட்டில் தோன்றி விளையாடி,
ஆலவாயில் --- மதுரையம்பதியில்,
விதி செய்த லீலா --- உரைகளின் தாரதம்மியத்தைப் பகுத்து
வெளியிட்ட திருவிளையாடலைச் செய்தவரே!
விசார --- ஆராய்ச்சி உடையவரே!
தீர --- தைரியத்தை உடையவரே!
வரதர --- வரத்தை அருள்பவரே!
குருநாதா --- உலகங்களுக்கெல்லாம்
குருமூர்த்தியாக விளங்குபவரே!
முன் வீய நினைபவன் --- முன்னாளில் தான்
கூறியபடி,
“சயத்ரதனைப் பொழுது
போவதற்குள் கொல்லா தொழியின் இறந்துபட்டொழிவேன்” என்று எண்ணிய அருச்சுனன்,
ஈடேறுமாறு --- இறவாது உய்வு பெறும் பொருட்டு,
கூர் ஆழியாமல் பாநு மறைவு செய் --- கூர்மை
பொருந்திய சக்கரப் படைக்கலத்தால் சூரியனை மறைத்தருளிய,
கோபாலராயன் --- யதுகுலத் தலைவராகிய
கண்ணபிரானுடைய,
நேயம் உள்ள திருமருகோனே --- அன்புடைய
திருமருகரே!
கோடாமல் ஆரவார அலை எறி --- எக்காலத்தும்
குறைவின்றி ஆரவாரத்துடன் அலைகளை வீசிப்பெருக்கெடுத்து ஓடுகின்ற,
காவேரி ஆறு பாயும் வயலியில் --- காவேரி
நதிபாய்ந்து வளஞ்செய்கின்ற வயலூர் என்னும் புண்ணிய தலத்திலும்,
கோனாடு சூழ் --- கோனாடு என்னும் திருநாடு
சூழப்பெற்ற,
விராலி மலை --- விராலி மலையிலும்,
உறை பெருமாளே --- வாழ்கின்ற பெருமையின்
மிக்கவரே!
சீர் ஆன --- சிறப்பு வாய்ந்ததும்,
கோலகால --- கோலாகலத்துடன் கூடியதும்,
நவமணி மாலா --- ஒன்பது மணிகளின் வரிசையினால்
பொலிவதும் ஆகிய,
அபிஷேக பார --- திருமுடிகளைத் தாங்கி
விளங்குவதும்,
வெகு வித தேவ --- அநேகவகைப்பட்ட அமரர்களும்,
அதிதேவர் --- தேவர்களின் தலைவர்களும்,
சேவை செயும் --- சேவித்து வணங்கும்,
மலர் முகம் ஆறும் --- தாமரை மலர்போன்ற ஆறு
திருமுகங்களையும்.
சீர் ஆடு வீர மாது மருவிய --- பெருமை நிறைந்த
வீர இலக்கு தழுவி வாழ்கின்ற,
ஈராறு தோளும் --- பன்னிரு புயாசலங்களையும்,
நீளும் வரி அளி --- நீண்ட வரிகளுடன் கூடிய
வண்டுகள்,
சீராகம் ஓது --- ஸ்ரீராகம் என்னும்
பண்ணைப்பாடி மொய்த்திருக்கின்ற,
நீப பரிமள --- கடப்ப மலர்களால் மணமிகுந்த,
இருதாளும் --- இரண்டு திருவடிகளையும்,
ஆராத காதல் வேடர் மட மகள் --- தணியாத
காதலுடன் கூடிய வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியம்மையாரும்,
ஜீமுதம் ஊர் --- மேகத்தின் மீது ஏறுபவனும்,
வல அரி --- வலன் என்ற நிருதனை வதைத்தவனுமாகிய
இந்திரனுடைய,
மட மகள் --- மடம் என்னும் குணம் பொருந்திய
தெய்வயானையம்மையாரும்,
ஆதார பூதம் ஆக --- உலகங்கட்கு ஆதார சக்திகளாக
வலம் இடம் உறை வாழ்வும் --- முறையே
வலப்புறமும் இடப்புறமுமாக வாழ்கின்ற வாழ்வையும்,
ஆராயும் நீதி வேலும் --- நீதியை ஆராய்கின்ற
ஞானமேயாகிய வேலாயுதத்தையும்,
மயிலும் --- மயில் வாகனத்தையும்,
மெய் --- சத்து,
ஞானம் --- சித்து,
அபிராம தாபம் --- அழகின் மிகுதி (அதனால்
விளைவது ஆனந்தம்)
வடிவமும் --- சச்சிதானந்தத்
திருவுருவத்தையும்,
ஆபாதனேனும் --- கொடியேனாகிய அடியேனும்,
நாளும் நினைவது பெறவேணும் --- இடையறாது
நினைக்கும் தன்மையைப் பெற்று உய்யவேண்டும்.
பொழிப்புரை
அழகு நிறைந்த மாடகூடங்களுடன் கூடிய
மதுரையம்பதியிலே, வெள்ளியம்பத்தில், நின்று கால்மாறி யாடிய கண்ணுதற் கடவுள்
கூறியருளிய இறையனார் அகப் பொருள் என்னும் நூலுக்கு நாற்பத்தொன்பது
சங்கப்புலவர்களும் பொருள் கூறி தத்தம் உரையே பெரிதெனக் கலாம் விளைக்க, அதிற் சிறந்தவுரையை ஆராய்ந்து சொல்ல
ஊமைப்பிள்ளைப்போல வணிகர் வீட்டில் தோன்றி (உருத்திரஜன்மர் என்ற திருநாமத்துடன்
விளங்கி) கலாந் தீர்ந்து முறை செய்த திருவிளையாடலைச் செய்தவரே!
ஆராய்ச்சியை உடையவரே!
தீரரே!
தீப்புகுந்து இறக்க நினைக்கும்
அர்ச்சுனன் உய்வு பெரும் பொருட்டு கூரிய சக்கரப்படையால் கதிரவனை மறைத்தருளிய கோபால
மணிவண்ணனுக்கு அன்புமிக்க திருமருகரே!
குறையாமல் எப்பொழுதும் ஆரவாரத்துடன்
அலைகளை வீசும் காவிரி நதி பாயும் வயலூரிலும், கோனாடு சூழ்கின்ற விராலிமலையிலும்
எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!
சிறப்பு வாய்ந்து கோலாகலத்துடன் கூடிய
நவமணிகளை வரிசையாகப் பதித்த மணிமகுடங்களைத் தாங்கி விளங்குவதும், தேவர்களாலும் தேவதேவர்களாலும் சேவை
செய்யப்டுவதும் ஆகிய மலர் போன்ற ஆறு திருமுகங்களையும், பெருமை பொருந்திய வீரமகள் வாழும்
பன்னிரு திருப்புயங்களையும், நீண்ட வரிகளுடன் கூடிய
வண்டுகள் இருந்து ஸ்ரீராகம் என்னும் பண்பாடும் கடப்பமலர்களால் மணங் கமழ்கின்ற இரு
திருவடிகளையும் தணியாத காதலுடைய வள்ளி யம்மையாரும் மேகவாகனனாம் இந்திரனுடைய
புதல்வியராகிய தேவகுஞ்சரி யாரும் வலப்புறமும் இடப்புறமுமாக எழுந்தருளியுள்ள
வாழ்வையும் நீதியை ஆராய்கின்ற ஞானமாகிய வேலாயுதத்தையும், மயில் வாகனத்தையும், சச்சிதானந்த வடிவத்தையும் கொடியேனாகிய
அடியேன் எப்பொழுதும் மறவாமல் நினைந்து உய்யவேண்டும்.
விரிவுரை
சீரான.............முகமாறும்
---
கோலாகலம்
என்பது கோலகாலமென சந்தத்தைக் குறித்து மாறி வந்தது. கோலாகலம்-சம்பிரமம்.
அபிஷேகம்-முடி.
‘உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும‘ --- சீர்பாதவகுப்பு.
தேவாதிதேவர்
- தேவ அதிதேவர். முப்பத்துமுக்கோடி தேவர்களும், அவர் களுக்குத் தலைவர்களாகிய மூவர்களும்
பணியநின்ற முழுமுதற்கடவுள் முருகவேள்.
“இதழ்பொதி அவிழ்ந்த தாமரையின்
மணவறை புகுந்த நான்முகனும்,
எறிதிரை அலம்பு பால்உததி நஞ்சுஅராமேல்
இருவிழி துயின்ற நாரணனும்,
உமைமருவு சந்த்ர சேகரனும்,
இமையவர் வணங்கு வாசவனும்,
நின்றுதாழும்
முதல்வ................................” ---
(உததியறல்) திருப்புகழ்.
சீராடு
வீர மருவிய ஈராறு தோளும் ---
சூராதி
அவுணர்களை அழித்து வாகைமாலை சூடியது எம்பிரானுடைய தோள். வீரமடந்தைக்கு வேறு
எங்கும் தங்குவதற்கு இடமின்றி குமரன் தோள்களிற் குடிபுகுந்தனள்.
“அலகில் அவுணரைக்
கொன்ற தோளென” --- திருப்புகழ்
அளவிலா
அவுணரை அழித்து உலகங்கட்கு வாழ்வு தந்தது அத்தோளே. ஆகலின், கச்சியப்பர் வாழ்த்துச் சொல்ல வந்தபோது
முதலில் தோளை வாழ்த்தினர்.
“ஆறிரு தடந்தோள் வாழ்க” --- கந்தபுராணம்.
நீளும்
வரி அளி சீராகம் ஓதும் நீபம்:-
நீபம்-கடப்பமலர்.வண்டுகள்
மலரிலுள்ள தேனை யுண்டு ஸ்ரீராகம் என்னும் இராகத்தைப் பாடுகின்றன. மேலும் புயவகுப்பில், வண்டுகள் இராகமாலிகை பாடுகின்றன
என்பார்.
“வகைவகை குழுமி
மொகுமொகு மொகென அநேக,ச
மூகராக மதுபம் விழச்சிறு
சண்பகஞ் செறிந்த தாரில் பொலிந்தன” --- புயவகுப்பு.
இத்
திருப்புகழை ஸ்ரீராகத்தில் பாடுவது மரபு; மிக்க
இன்பத்தை விளைவிக்கும்.
ஆராத
காதல் வேடர் மடமகள் ---
ஆராத-தணியாத.முருகவேளுக்கு
வள்ளிநாயகியாரிடம் தணியாத காதல் என்பது அவரை உய்விக்கும் பொருட்டு எழுந்த தயவைக்
குறிக்கும்.
திணியான
மனோ சிலைமீது உனதாள்
அணிஆர்
அரவிந்தம் அரும்பும் அதோ?
பணி
யா என வள்ளிபதம் பணியும்
தணியா
அதிமோக தயாபரனே” --- கந்தர்
அநுபூதி.
மட
மகள் - மடமைக்குணம் பொருந்தியவர். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வர்; அது பொருந்தாது, பெண்களுடைய நாற்குணங்களில் ஒன்று மடம், அது அறியாமையாயின் மகளிருக்கு அறியாமை
ஒரு குணமாக அமையலாமா?
பின்னர், மடம் என்பதற்குக் கொளுத்தியது விடாமை
என்பது பொருள். தாய் தந்தை, கணவன் ஆகியோர்களால்
நல்லறிவு பெறக் கூறிக் கொளுத்தியது விடாமை எனப்படும்.
ஆராயு
நீதி வேலும்
---
வேல்
என்பது ஞானம். ஞாமே நீதியை ஆராய வல்லது. “அறத்தை நிலைகாணும்” என்றார்
வேல்வகுப்பிலும்.
மெய்ஞ்ஞான
அபிராம தாப வடிவமும் ---
மெய்-உண்மை; ஞானம்-அறிவு; அபிராமம்-அழகு; அழகினால் விளைவது ஆனந்தம். காரியத்தைக்
காரணமாகப் பேசப்பட்டது. இறைவன் சச்சிதானந்த சொரூபன்.
நாளும்
நினைவது பெறவேண்டும் ---
இறைவனை அடைவதற்குச் சிறந்தவழி, பரம பிதாவை இடைவிடாது
நினைப்பதுவே.
“நினையே தினம் நினைக்கவும்
தருவாய்” --- (மனத்தி)
திருப்புகழ்
“நினைப்பவர் மனம்
கோயிலாகக் கொண்டவன் --- அப்பர்
மாறியாடும்
இறையவர் ---
மதுரையில்
அரசுபுரிந்த விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் இராஜசேகர பாண்டியன் இனிது அறநெறி
வழுவாது அரசாண்டான். அவன் 64 கலைகளையும்
உணர்ந்திருந்தனன். சோழநாட்டிலிருந்து வந்த ஒருவன்; தனது மன்னன் கரிகால் வளவன் 64 கலைகளிலும் வல்லவன் என்றனன்; அது கேட்ட பாண்டியன் தான் உணராதிருந்த 64ஆவது கலையாகிய பரதசாத்திரத்தைத்
தக்காரைக் கொண்டு பழகினான்.
அப்போது
தனக்கு ஏற்பட்ட கால்வலியை நோக்கி,
“சிறிது
நேரம் நாம் நடிப்பதற்கே கால் வலிக்கின்தே? நடராஜமூர்த்தி அனவரதம் ஓவாது நடிக்கின்றனரே? அவருக்கும் திருவடி வருந்துமே? தாண்டவத்தை நிறுத்தச் சொன்னால் உலகம்
நடைபெறாதழியும். ஆதலின் கால் மாறியாடுமாறு பெருமானை வேண்டிக்கொள்வோம்” என்று எண்ணி, திருவாலயம் போய், வெள்ளியம்பலத்துள் ஆடும் விரிசடைக்
கூந்தனைக் கண்டு வணங்கிக் கால்மாறியாட வேண்டினான்.
நின்றதாள்
எடுத்து வீசி எடுத்த தாள் நிலமீது ஊன்றி
இன்று
நாம் காண மாறி ஆடி என் வருத்தமெல்லாம்
பொன்றுமா
செய்தி, அன்றேல், பொன்றுவல் என்னா, அன்பின்
குன்றனான்
சுரிகை வாண்மேற் குப்புற வீழ்வேன் என்னா.
அரசன்
வேண்டி உயிர்விடத் தொடங்கலும், பெருமான் வலக்காலைத்
தூக்கித் திரு நடனம் புரிந்தருளினார்.
வான்
மாறினும் மொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
கான்மாறி
ஆடிய கற்பகமே, நின் கருணை என்மேல்
தான்மாறினும்
விட்டு நான் மாறிடேன், பெற்ற தாய்க்கு
முலைப்
பால்
மாறினும் பிள்ளை பால்மாறுமோ அதில் பல்இடுமே. --- திருஅருட்பா
ஏழேழுபேர்கள்........விதிசெய்த
லீலா ---
சங்கப்புலவர் கலகந் தீர்த்த
வரலாறு
“தென்னாடு டைய சிவனே
போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவாபோற்றி”
என்ற
மணிவாசகத்தால் புகழ் பெற்ற தென் தமிழ்நாட்டின் தலைநகர் மதுரை. அதன் பெருமை எம்மால்
அளக்கற்பாற்றோ?
அம்மதுரை
மா நகரத்தை வம்சசேகர பாண்டியனது புதல்வன் வம்ச சூடாமணி என்னும் பாண்டியன் அரசு
புரிவானாயினான். நாள்தோறும் அம்மன்னர் பெருமான் சண்பகமலர்கள் கொண்டு சோமசுந்தரப்
பெருமானை யருச்சிக்கும் நியமம் பூண்டிருந்தனன். அதனால் அவற்குச் சண்பக பாண்டியன்
என்னும் பேரும் போந்தது. அறநெறி வழாது அவன் அரசு புரியுங்கால் கிரக நிலை
மாற்றத்தால் மழையின்றி, மக்கள்
தடுமாற்றமடைந்தனர். பன்னிரு வருடம் பஞ்சத்தால் உலகம் வாடியது. அது காலை
ஆங்காங்குள்ள தமிழ்புலவர்கள் பசியால் வருந்தி ஒருங்கு கூடி பாண்டியனை யடுத்தனர்.
பாண்டியன் அவர்களை அன்னைபோல் ஆதரித்துப் போற்றினன்.
பின்னர்
மன்னன் அச்சங்கப் புலவர்களை அன்புடன் நோக்கி, “முத்தமிழ் வல்ல உத்தம சீலர்களே! இங்ஙனே
எஞ்ஞான்று மிருந்து அமிழ்தினு மினிய தமிழ் நூல்களை ஆய்மின்” என்றனன். புலவர்
“புரவலரேறே” ஐந்திலக்கணங்களுள் பொருள் நடுநாயகமாக மிளிர்வது. எழுத்தும் சொல்லும்
யாப்பும் அணியும் பொருள் மாட்டன்றே?
அப்பொருள்
நூலின்றி யாங்கள் எவ்வாறு ஆய்வோம்?”
என்று
வருந்திக் கூறினார்கள். அரசன் ஆலவாய் அண்ணல் ஆலயத்தேகி, “தேவ தேவா! இக்குறையை தேவரீரே
நீக்கியருளல் வேண்டும்; தமிழும் தமிழ்நாடும்
தழைக்கத் தன்னருள்புரிவீர்.” என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வெள்ளம் பெருக
முறையிட்டனன். அன்பர் கருத்தறிந்து அருளும் எம் சொக்கலிங்கப் பெருமான், இறையனார் அகப்பொருள் என்னும் பொருள்
நூலையருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தருளினார்.
வடமொழி
பாணினியாற் செய்த வியாகரணத்தை உடைத்து; அப்பாணியினினும்
பல்லாயிரமடங்கு மகத்துவம் உடையவரும், கரத்தைச்
சிறிது கவிழ்த்தலால் விந்தகிரியையும், நிமிர்த்தலால்
ஏழ்கடலையும் அடக்கிய பேராற்றலும் பெருந்தவமும் உடையவருமாகிய அகத்திய முனிவரால்
செய்யப் பெற்ற இலக்கணமே அன்றி, சிவமூர்த்தியார்
செய்தருளிய இலக்கணத்தையும் உடையது இத்தமிழ் எனின் இதன் பெருமையையும் அருமையையும்
அளக்க வல்லவர் யாவர்? அதனைத் தாய்
மொழியாகக் கொண்ட எமது புண்ணியப் பேற்றைத்தான் அளக்க முடியுமோ?
“அன்பி
னைந்திணைக்களவெனப்படுவ
தந்தண ரருமறை மன்ற லெட்டினுட்
கந்தருவ வழக்க மென்மனார் புலவர்”
என்ற
சூத்திர முதலாக அறுபது சூத்திரங்களை யுடையது இறையனார் அகப்பொருள். திருவலகிடச்
சென்ற அந்தணர் அதனைக் கண்டு எடுத்தேகி அரசனிடம் அளித்தனர். அவன் அளவற்ற
மகிழ்ச்சியை அடைந்து, அதன் பொருள் எளிதில்
விளங்காமையின் புலவர்களை நோக்கி,
“இதற்கு
உரை செய்மின்” என்று வேண்டினன். அங்ஙனமே நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பதின்மரும் உரை
செய்தனர். பிறகு அவர்களுக்குள் தங்கள்
தங்கள் உரைகளே சிறந்தன என்று கலகம் உண்டாயிற்று. “இவர்கள் உரைகளை ஆய்ந்து இதுவே
சிறந்தது என்று முடிவு கூறுவதற்கு இவரினும் சிறந்த கல்வி கரைகண்ட புலவர்
யாண்டுளார்? என் செய்வேன்? ஆண்டவனே! தேவரீரே இக்கலகத்தை நீக்கி அருள்செய்ய
வேண்டும்” என்று தென்னவனாகிய மன்னவன், முன்னவன் திருமுன் முறையிட்டனன்.
“வேந்தனே! இவ்வூரிலே
உப்பூரிகுடி கிழார் மகனாவன் உருத்திரசன்மரை அழைத்துவந்து உரை கேட்பின் மெய்யுரை
அவன் தெரிக்கும். அந்தப் பிள்ளை குமார சுவாமியாகும். மெய்யுரைக்குக் கண்ணீர்
சொரிந்து உடல் கம்பித்து ஆனந்தமடைவன்” என்று அசரீரி கூறிற்று. (அசரீரி கூறியதாக
அந்நூலுக்கு உரைகண்ட நக்கீரர் பாயிரத்தில் கூறினர். இனி திருவிளையாடற் புராணத்துள்
பெருமான் புலவர்போல் வந்து கூறியதாகவும் தனபதி என்னும் வணிகனுக்கும்
குணசாலினிக்கும் மகனாகி வளர்ந்தார் என்றும் கூறும்).
அதுகேட்ட
புரவலனும் புலவரும் விம்மிதமுற்றுத் திருவருளைப் புகழ்ந்து, வணிகர் திருமனையில் அதரித்து வளரும்
உருத்திர ஜன்மரிட மேகினர். அந்தக் குழந்தை, செங்கண்ணன்; புன்மயிரன்; ஐயாட்டைப் பருவத்தன்; மூகை போல் ஒன்றும் பேசலன்; இதத்தகு முழுது உணர் புலவனாம் முருகக்
குழந்தையை அனைவரும் வணங்கி முறைப்படி அழைத்து வந்து, சங்கப்பலகையிலிருந்து வாச நீராட்டி வெண்துகில்
வெண்மலர், வெண்சாந்தி
முதலியவற்றால் அலங்கரித்து, போற்றிசெய்து புலவர்
யாவரும் தத்தம் உரைகளை வாசித்தனர். உருத்திரசன்மராம் கந்தக் கடவுள் அவ்வுரைகளைக்
கேட்டு வரவாராயினார். சிலர் சொல் வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார். சிலர்
சொல்லழகைப் புகழ்ந்தார். சிலர் பொருளாழத்தை உவந்தார். சிலர் பொருளை பெறுத்தார்
கபிலர், பரணர் என்னும்
புலவர்கள் வாசிக்கும்போது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை யசைத்னர்; மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார்
தம்முரையை வாசித்தபோது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து மெய்
புளகித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து இதுவே உண்மை யுரையென விளக்கியருளினார்.
பாண்டியனும் பாவலரும் மெய்யுரை பெற்றேமென்று கழி பேருவகை யுற்றனர்.
நுழைந்தான்
பொருளுதொறும் சொல்தொறும், நுண்தீஞ் சுவையுண்டே
தழைந்தான்
உடல், புலன்ஐந்தினும்
தனித்தான், சிரம் பனித்தான்
குழைந்தான்,விழி வழிவேலையுள் குளித்தான் தனையளித்தான்
விழைந்தான்
புரி தவப்பேற்றினை விளைந்தான் களி திளைத்தான்
--- திருவிளையாடற்புராணம்
இனி, முருகவேள் உருத்திரஜன்மராக வந்தார்
என்பது பற்றிச் சிறிது கூறுதும். ஓலமறைகள் அறைகின்ற ஒருவனும், மூவருங்காணாத முழுமுதல்வனும் ஆகிய
முருகவேள் உருத்திர ஜன்மராக வந்தார் என்பது அவருடைய முழு முதற்றன்மைக்கு
இழுக்கன்றோவெனின், இழுக்காகாது. முருக
சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திர ஜன்மராக
அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், ஞானசம்பந்தராகவும்
வந்ததையும் அங்ஙனமே ஸ்ரீகண்டருத்திரர், வீரபத்திரர், வைரவர், ஆகியோர் செயல்களைப் பரவசித்தின் செயலாக
ஏற்றித் தேவார திருவாசகங்கள் கூறுவதனால் பரசிவத்திற்கு இழுக்கில்லையாமாறு போல், அபரசுப்ரமண்யர்கள் சம்பந்தராகவும்
உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும்
வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது.
இதனைக் கூர்த்த மதி கொண்டு நுனித்து உணர்ந்து ஐயந்தெளிந்து அமைதியுறுக.
“திருத்தகு மதுரைதனில்
சிவன்பொருள் நிறுக்கும் ஆற்றால்
உருத்திர
சருமனாகி உறுபொருள் விரித்தோன்‘ ---
கந்தபுராணம்
“செஞ்சொற் புலவர்கள்
சங்கத் தமிழ்தெரி
செந்தில் பதிநகர் உறைவோனே” --- (வஞ்சத்துட)
திருப்புகழ்
“உரைக்கச் செட்டிய
னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்கவிப்புணர்
ஒடுக்கத் துச்செறிவாய்த் தலத்துறை
பெருமாளே” ---
(வழக்குச்)
திருப்புகழ்
“அரியதாதை தான்ஏவ
மதுரேசன்
அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற
அகிலநாலும் ஆராயும் இளையோனே” --- (மனகபாட)
திருப்புகழ்
சடிலத்
தவன்இட் டவிசிட் டகுலத்து,
ஒருசெட் டியிடத் தின்உதித் தருள்வித்
தக,ருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே,
சநகர்க்
கும்அகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் கும்அநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத்
...... தியில்ஞான
படலத்து
உறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற்று உணர்வித்து அருள்வித் தகசற்
...... குருநாதா
--- (கடலைச்சிறை) திருப்புகழ்.
கூராழியால்............கோபாலராயன்
---
அருச்சுனன்
தன்மகன் அபிமன்யுவை சயத்ரதன் நீதிக்கு மாறாகப் பொருது கொன்றமையால், சினந்து “நாளை பொழுது சாய்வதற்குள்
சயத்ரதனைக் கொல்லேனாயின் தீப்புகுந்து மாள்வேள்” என்று சூளுரை பகர்ந்து, பதினான்காவது நாள் துரியோதனன் சேனையை
அழித்தேகுவானாயினான். நெடுந் தொலைவில் சயத்ரதனிருந்தமையால் அவனைக் கொல்வது அரியது
எனத் தேர்ந்த கன்னபிரான் ஆழியால் ஆதித்தனை மறைத்தருளினார். தனஞ்சயன் தீப்புக
முயலுகையில் சயத்ரதன் அருகிலடைந்தனன். அப்போது கண்ணபிரான் சக்கரத்தை விலக்கி
அருச்சுனனைக் கொண்டு சயத்திரதனைக் கொல்வித்து உய்வு தந்தனர்.
முருக
தலங்களுள் சிறந்தது விராமலை. அருணகிரியார் வயலூரில் தங்கியிருந்தபோது, கனவில் பெருமான் தோன்றி “நம்
விராலிமலைக்கு வருக” என்று அருள்புரிந்தனர். அப்பரைத் திருவாமூருக்கு அரனார்
அழைத்ததுபோல் அருணகிரியார் உடனே எழுந்து விராலிமலைபோய் வழிப்பட்டனர்.
கருத்துரை
சங்கப்புலவர்கலகந்
தீர்த்த குருநாதரே! திருமால் மருகரே! விராலிமலை வேலவரே! தேவரீருடைய
ஆறுமுகங்களையும் பன்னிரு புயங்களையும், திருவடிகளையும், அம்மையார் இருவரையும் வேலையும்
மயிலையும் உண்மை யறிவானந்த உருவையும் இடையறாது அடியேன் நினைந்து உய்வேனாக.
No comments:
Post a Comment