திருவீழிமிழலை - 3
4. 095    திருவீழிமிழலை                 திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வான்சொட்டச் சொட்டநின்று அட்டும் வளர்மதி யோடுஅயலே
தேன்சொட்டச் சொட்டநின்று அட்டும் திருக்கொன்றை சென்னிவைத்தீர்,
மான்பெட்டை நோக்கி மணாளீர், மணிநீர் மிழலைஉளீர்,
நான்சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே

         பொழிப்புரை : வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று , அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே ! பெண் மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர் ! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய வீழி மிழலையில் உள்ள செம்மையீர் ! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள் .


பாடல் எண் : 2
அந்தமும் ஆதியும் ஆகிநின் றீர், அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர், பசு ஏற்றுஉகந்தீர்,
வெந்தழல் ஓம்பு மிழலை உள்ளீர், என்னைத் தென்திசைக்கே
உந்திடும் போது மறக்கினும், என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : ஆதியும் அந்தமுமாக உள்ளவரே ! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே ! காளையை இவர்தலை விரும்பு கின்றவரே ! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே ! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும் .


பாடல் எண் : 3
அலைக்கின்ற நீர்நிலம் காற்றுஅனல் அம்பரம் ஆகிநின்றீர்,
கலைக்கன்று சேரும் கரத்தீர், கலைப்பொருள் ஆகிநின்றீர்,
விலக்குஇன்றி நல்கும் மிழலை உளீர், மெய்யில் கையொடுகால்
குலைக்குஇன்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே ! மான்கன்று பொருந்திய கையை உடையவரே ! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே ! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே ! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும் .


பாடல் எண் : 4
தீத்தொழி லான்தலை தீயில்இட் டு,செய்த வேள்விசெற்றீர்,
பேய்த்தொழில் ஆட்டியைப் பெற்றுஉடையீர், பிடித் துத்திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர், விக்கி அஞ்செழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக்குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின் .


பாடல் எண் : 5
தோள்பட்ட நாகமும் சூலமும், சுற்றியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுஉடையீர்,
நாள்பட்டு வந்து பிறந்தேன், இறக்க நமன் தமர் தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும் , தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர் ! நெடுங்காலம் உயிர் வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந் தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .


பாடல் எண் : 6
கண்டியில் பட்ட கழுத்துஉடை யீர், கரி காட்டில்இட்ட
பண்டியில் பட்ட பரிகலத் தீர், பதி வீழிகொண்டீர்,
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை,ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே ! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண் கலமாக உடையவரே ! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! உணவு உண்ட போதும் , உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும் , உறங்கும்போதும் , ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .


பாடல் எண் : 7
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர், தூய வெள்எருதுஒன்று
எற்றம்கொண் டீர், எழில்வீழி மிழலை இருக்கைகொண்டீர்,
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்ததொர் பாசத்தால் வீசிய,வெம்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : இவ்வுலகைப் படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே ! தூய வெள்ளிய காளையை வாகனமாகக் கொண்டவரே ! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக் கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .


பாடல் எண் : 8
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச்சொக் கம்பயின்றீர்,
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுஉடையீர், படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர், மிழலைஉள் ளீர், பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.

         பொழிப்புரை : நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே ! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே ! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே ! வீழிமிழலையில் உள்ளவரே ! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .


பாடல் எண் : 9
பிள்ளையில் பட்ட பிறைமுடி யீர், மறை ஓத வல்லீர்,
வெள்ளையில் பட்டதொர் நீற்றீர், விரிநீர் மிழலை உள்ளீர்,
நள்ளையில் பட்டுஐவர் நக்கரைப் பிக்க, நமன்தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே ! வேதம் ஓதவல்லவரே ! வெள்ளிய நீற்றை அணிந்தவரே ! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே ! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக் கொண்மின் .


பாடல் எண் : 10
கறுக்கொண்ட அரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென்று இறச்செற்ற சேவடி யால்கூற்றை நீறுசெய்தீர்,
வெறிக்கொன்றை மாலை முடியீர், விரிநீர் மிழலை உள்ளீர்,
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே.

         பொழிப்புரை : மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே ! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே ! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே ! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .
                                             திருச்சிற்றம்பலம்5. 013    திருவீழிமிழலை         திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
என்பொ னே,இமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னே,நலம் தீங்குஅறிவு ஒன்றிலேன்
செம்பொ னே, திரு வீழி மிழலையுள்
அன்ப னே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : என் உயர்ந்த பொருளே ! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே ! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன் ; எனது செம்பொன்னே ! திருவீழி மிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 2
கண்ணி னால்களி கூர,கை யால்தொழுது
எண்ணு மாறுஅறி யாதுஇளைப் பேன்தனை,
விண் உளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லே,அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு , கையால் தொழுது, எண்ணுமாறறியாது இளைக்கும் எளியேனை, தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே , குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 3
ஞால மே,விசும் பே,நலம் தீமையே,
கால மே,கருத் தே,கருத் தால்தொழும்
சீல மே,திரு வீழி மிழலையுள்
கோல மே,அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : உலகமே ! விண்ணே ! நன்மையே ! தீமையே! காலமே! கருத்தே! கருத்தாற்றொழும் சீலமே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 4
முத்தனே, முதல்வா, முகிழும் முளை
ஒத்தனே,  ஒருவா, உருவாகிய
சித்தனே, திருவீழி மிழலையுள்
அத்தனே, அடியேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : முத்தனே ! முதல்வா ! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே ! ஒப்பற்றவனே ! உருவத்திருமேனி உடைய சித்தனே! திரு வீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 5
கருவ னே,கரு வாய்த்தெளி வார்க்குஎலாம்
ஒருவ னே, உயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
திருவ னே, திரு வீழி மிழலையுள்
குருவ னே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : மூலப்பொருளாக உள்ளவனே ! கருவாயுள்ளாய் என்று தெளிந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே ! உயிர்ப்பாகவும் , உணர்வாகவும் நின்ற செல்வனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குரு மூர்த்தியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 6
காத்த னேபொழில் ஏழையும் காதலால்,
ஆத்த னே அம ரர்க்கு, அயன் தன்தலை
சேர்த்த னே, திரு வீழி மிழலையுள்
கூத்த னே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே ! அமரர்க்கு ஆப்தனே! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 7
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்து
ஓதி வானவ ரும்உண ராததுஓர்
வேதி யா,விகிர் தா,திரு வீழியுள்
ஆதி யே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா ! விகிர்தனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 8
பழகி நின்அடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னே, அணி வீழி மிழலையுள்
குழக னே, இடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே ! அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே ! அடி யேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 9
அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்சு
உண்ட வானவ னே, உணர்வு ஒன்றுஇலேன்,
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே ! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே ! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .


பாடல் எண் : 10
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான்உரம்
வருத்தி னாய், வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னே, திரு வீழி மிழலையுள்
அருத்த னே, அடி யேனைக் குறிக்கொளே.

         பொழிப்புரை : ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே ! வஞ்சனை உடையேன் மனத்தின்கண் நிலை பெற்ற திருந்தியவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

                                             திருச்சிற்றம்பலம்


6. 051     திருவீழிமிழலை        திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கயிலாய மலைஉள்ளார், காரோ ணத்தார்,
         கந்தமா தனத்துஉளார், காளத்தி யார்,
மயிலாடு துறைஉளார், மாகா ளத்தார்,
         வக்கரையார், சக்கரம்மாற்கு ஈந்தார், வாய்ந்த
அயில்வாய சூலமும் காபா லமும்
         அமரும் திருக்கரத்தார், ஆன் ஏறுஏறி
வெயில்ஆய சோதி விளங்கு நீற்றார்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார் , கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக்கைகளை உடையவராய் , காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை , நாகை குடந்தைக் காரோணங்கள் , கந்தமாதனம் , காளத்தி , மயிலாடுதுறை , உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , வக்கரை இவற்றில் தங்கித் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 2
பூதிஅணி பொன்நிறத்தர், பூண நூலர்,
         பொங்குஅரவர், சங்கரர்,வெண் குழைஓர் காதர்,
கேதிசரம் மேவினார், கேதா ரத்தார்,
         கெடில வடஅதிகை வீரட் டத்தார்,
மாதுயரம் தீர்த்துஎன்னை உய்யக் கொண்டார்,
         மழபாடி மேய மழுவா ளனார்,
வேதிகுடி உள்ளார், மீயச் சூரார்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி , பூணூல் தரித்து , கோபம் மிக்க பாம்பினை அணிந்து , காதில் வெண்குழையை இட்டு , எல்லோருக்கும் நன்மை செய்பவராய் , கேதீச்சரம் , கேதாரம் , மழு ஏந்தும் மழபாடி , வேதிகுடி , மீயச்சூர் , இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 3
அண்ணா மலைஅமர்ந்தார், ஆரூர் உள்ளார்,
         அளப்பூரார், அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணா ழிகையார், உமையா ளோடும்
         இமையோர் பெருமானார், ஒற்றி யூரார்,
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
         மாடத்தார், கூடத்தார், பேரா வூரார்,
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை , ஆரூர், அளப்பூர் , அந்தணர்கள் மிக்க வைகல், மாடக் கோயிலின் மூலத் தானம் , ஒற்றியூர் , பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம் , பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார் .


பாடல் எண் : 4
வெண்காட்டார், செங்காட்டங் குடியார், வெண்ணி
         நல்நகரார், வேட்களத்தார், வேத நாவார்,
பண்காட்டும் வண்டுஆர் பழனத்து உள்ளார்,
         பராய்த்துறையார், சிராப்பள்ளி உள்ளார், பண்டுஓர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
         உரித்துஉரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :வேதம் ஓதும் நாவினராய் , முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி , வெண்காடு , செங்காட்டங்குடி , வெண்ணி , வேட்களம் , வண்டுகள் பண்பாடும் பழனம் , பராய்த்துறை , சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 5
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாட,
         புலியூர்ச்சிற் றம்பலத்தே நடம் ஆடுவார்,
உடைசூழ்ந்த புலித்தோலர், கலிக்கச்சிமேற்
         றளிஉளார், குளிர்சோலை ஏகம் பத்தார்,
கடைசூழ்ந்து பலிதேரும் கங்கா ளனார்,
         கழுமலத்தார், செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார், மல்கு செல்வ
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான் , புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி , குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம் , கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும் , முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த, வடிவத்தாராய் , மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 6
பெரும்புலியூர் விரும்பினார், பெரும்பா ழிய்யார்,
         பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்,
இரும்புதலார், இரும்பூளை உள்ளார், ஏர்ஆர்
         இன்னம்ப ரார், ஈங்கோய் மலையார், இன்சொல்
கரும்புஅனையாள் உமையோடும் கருகா வூரார்,
         கருப்பறிய லூரார், கரவீ ரத்தார்,
விரும்புஅமரர் இரவுபகல் பரவி ஏத்த
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான் , அவ்வூர் மூலத்தானம் , அரதைப்பெரும்பாழி , இரும்புதல் , இரும்பூளை , இன்னம்பர் , ஈங்கோய்மலை , கருகாவூர் , கருப்பறியலூர் , கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார் .


பாடல் எண் : 7
மறைக்காட்டார், வலிவலத்தார், வாய்மூர் மேயார்,
         வாழ்கொளி புத்தூரார், மாகா ளத்தார்,
கறைக்காட்டுங் கண்டனார், காபா லிய்யார்,
         கற்குடியார், விற்குடியார், கானப் பேரார்,
பறைக்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப்
         பழையனூர் ஆலங்காட்டு அடிகள், பண்டுஓர்
மிறைக்காட்டும் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ, நீலகண்டராய், மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து , மறைக்காடு , வலிவலம் , வாய்மூர் , வாழ்கொளிபுத்தூர் , உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , கற்குடி , விற்குடி , கானப்பேர் இவற்றில் தங்கி வீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 8
அஞ்சைக் களத்துஉள்ளார், ஐயாற்று உள்ளார்,
         ஆரூரார், பேரூரார், அழுந்தூர் உள்ளார்,
தஞ்சைத் தளிக்குளத்தார், தக்க ளூரார்,
         சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்,
நஞ்சைத் தமக்குஅமுதா வுண்ட நம்பர்,
         நாகேச் சரத்துஉள்ளார், நாரை யூரார்,
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய் , அஞ்சைக்களம் , ஐயாறு , ஆரூர் , பேரூர் , அழுந்தூர் , தஞ்சைத் தளிக்குளம் , தக்களூர் , சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி , நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி , வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 9
கொண்டல்உள்ளார், கொண்டீச் சரத்தின் உள்ளார்,
         கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்,
தண்டலையார், தலையாலங் காட்டில் உள்ளார்,
         தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்,தாம்
வண்டலொடு மணல்கொணரும் பொன்னி நன்னீர்
         வலஞ்சுழியார், வைகலின்மேல் மாடத்து உள்ளார்,
வெண்தலைகைக் கொண்ட விகிர்த வேடர்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய , உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார் , கொண்டல் , கொண்டீச்சரம் , கோவலூர் வீரட்டம் , சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு , தலைச்சங்காடு , காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி , வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.


பாடல் எண் : 10
அரிச்சந் திரத்துஉள்ளார், அம்பர் உள்ளார்,
         அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்,
புரிச்சந்தி ரத்துஉள்ளார், போகத்து உள்ளார்,
         பொருப்புஅரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச்சந்தி வேட்கும் இடத்தார், ஏம
         கூடத்தார், பாடத்தேன் இசைஆர் கீதர்,
விரிச்சஅங்கை எரிக்கொண்டுஅங்கு ஆடும் வேடர்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :திருமால் பிரமன் , இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய் , உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய் , இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய் , மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய் , தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய் , உள்ளங் கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான் , அரிச்சந்திரம் , அம்பர்மாகாளம் , புரிச்சந்திரம் , ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .


பாடல் எண் : 11
புன்கூரார், புறம்பயத்தார், புத்தூர் உள்ளார்,
         பூவணத்தார், புலிவலத்தார், வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை எடுக்கல் உற்றான்
         தலைகளொடு மலைகள்அன்ன தாளுந் தோளும்
பொன்கூரும் கழல்அடிஓர் விரலால் ஊன்றிப்
         பொருப்புஅதன்கீழ் நெரித்துஅருள்செய் புவன நாதர்,
மின்கூரும் சடைமுடியார், விடையின் பாகர்,
         வீழி மிழலையே மேவி னாரே.

         பொழிப்புரை :ஒளிவீசும் சடைமுடி உடையவராய் , காளையை வாகனமாக உடையவராய் , வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர் , புன்கூர் , புறம் பயம் , புத்தூர் , பூவணம் , புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார் .

                                             திருச்சிற்றம்பலம்

6. 052     திருவீழிமிழலை             திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கண்ணவன்காண், கண்ஒளி சேர் காட்சியான் காண்,
         கந்திருவம் பாட்டுஇசையில் காட்டு கின்ற
பண்ணவன்காண், பண்ணவற்றின் திறல் ஆனான்காண்,
         பழம்ஆகிச் சுவைஆகிப் பயக்கின் றான்காண்,
மண்அவன்காண், தீஅவன்காண், நீர் ஆனான்காண்,
         வந்துஅலைக்கும் மாருதன்காண், மழைமேகம் சேர்
விண்ணவன்காண், விண்ணவர்க்கு மேல்ஆனான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய குளிர்ந்த வீழிமிழலையில் உள்ள பெருமான் , கண்ணாய் கண்ணினது ஒளிசேர்தலால் உண்டாகும் காணுதல் தொழிலாய்ப் பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துக் காட்டப்படுகின்ற பண்ணாய், அப்பண்களின் உட்பிரிவுகளாய்ப் பழமாய்ச் சுவையாய்ப் பயன்தருகின்றவனாய், மண், நீர், தீ எல்லாவற்றையும் அசைக்கும் காற்று, நீர் உட்கொண்ட மேகம் சேரும் வானம் என்ற ஐம்பூதங்களாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய் உள்ளான் .


பாடல் எண் : 2
ஆலைப் படுகரும்பின் சாறு போல
         அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்,
சீலம் உடைஅடியார் சிந்தை யான்காண்,
         திரிபுரமூன்று எரிபடுத்த சிலையி னான்காண்,
பாலினொடு தயிர்நறுநெய் ஆடி னான்காண்,
         பண்டரங்க வேடன்காண், பலிதேர் வான்காண்,
வேலை விடம்உண்ட மிடற்றி னான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்ணிழி தண் வீழிமிழலையான் ஆலையினின்றும் ஒழுகுகின்ற கரும்பின் சாறு போலத் தித்திக்கும் திருவைந்தெழுத்தைத் தனக்குப் பெயராக உடையவனாய் , நற்பண்புடைய அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவனாய் , வானில் திரியும் மும் மதில்களையும் தீக்கு இரையாக்கிய வில்லை உடையவனாய் , பால் , தயிர் , நெய் இவற்றால் அபிடேகிக்கப்படுபவனாய் , பண்டரங்கக் கூத்தாடுபவனாய் , சாம்பலை உடல் முழுதும் பூசியவடிவினனாய்ப் பிச்சை எடுப்பவனாய் , கடல் விடம் உண்டதால் நீலகண்டனாய் உள்ளான் .


பாடல் எண் : 3
தண்மையொடு வெம்மைதான் ஆயி னான்காண்,
         சக்கரம்புட் பாகற்கு அருள்செய் தான்காண்,
கண்ணும்ஒரு மூன்றுஉடைய காபாலிகாண்,
         காமன்உடல் வேவித்த கண்ணி னான்காண்,
எண்ணில்சமண் தீர்த்துஎன்னை ஆட்கொண் டான்காண்,
         இருவர்க்கு எரியாய் அருளி னான்காண்,
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய் , மூன்று கண்களை உடையவனாய் , காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனாய் , என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனாய் , பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான் .


பாடல் எண் : 4
காதுஇசைந்த சங்கக் குழையி னான்காண்,
         கனக மலைஅனைய காட்சி யான்காண்,
மாதுஇசைந்த மாதவமும் சோதித் தான்காண்,
         வல்ஏன வெள்எயிற்று ஆபரணத் தான்காண்,
ஆதியன்காண், அண்டத்துக்கு அப்பா லான்காண்,
         ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்,
வேதியன்காண், வேதவிதி காட்டி னான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழி தண் வீழிமிழலையான் காதில் சங்கக் குழை அணிந்தவனாய்ப் பொன்மலைபோன்ற உருவத்தானாய்ப் பார்வதியின் மேம்பட்ட தவத்தைச் சோதித்தவனாய் , வலிய பன்றியின் வெள்ளிய கொம்பினை அணியாக அணிந்தவனாய் , எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாய் , அண்டங்களையும் கடந்து பரந்தவனாய் , ஐந்தலைப்பாம்பினைத் தன் வில்லுக்கு நாணாகக் கொண்டவனாய், வேதம் ஓதுபவனாய், வேத நெறியை உலகிற்கு உபதேசித்தவனாய் உள்ளான் .


பாடல் எண் : 5
நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்,
         நித்தமண வாளன்என நிற்கின் றான்காண்,
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்,
         காலன்உயிர் காலால் கழிவித் தான்காண்,
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்,
         செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தி னான்காண்,
வெய்ய கனல்விளையாட்டு ஆடி னான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழி தண்வீழிமிழலையான் நெய் , பால் , இளநீர் இவற்றால் அபிடேகிக்கப்பட்டவனாய் , நித்திய கல்யாணனாகக் காட்சி வழங்குகின்றவனாய் , கைகளில் மழுவும் மானும் ஏந்தியவனாய்க் காலன் உயிரைத் தன் காலால் போக்கியவனாய்ச் சிவந்த அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய்ச் செஞ்சடைமேல் வெண்பிறையைச் சேர்த்தியவனாய் , சூடான தீயில் கூத்தாடுபவனாய் உள்ளான் .


பாடல் எண் : 6
கண்துஞ்சும் கருநெடுமால் ஆழி வேண்டிக்
         கண்இடந்து சூட்டக்கண்டு அருளு வான்காண்,
வண்டுஉண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
         வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்,
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்,
         பரமன்காண், பரமேட்டி ஆயி னான்காண்,
வெண்திங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழிதண் வீழிமிழலையான் எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் திருமால் தனக்குச் சக்கராயுதம் வேண்டுமென்று செந்தாமரை போன்ற தன் கண் ஒன்றனைக் குறைந்த மலராகக் கொண்டு அருச்சித்த அதனைக்கண்டு அவனுக்குச் சக்கரம் அருளியவனாய் , வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை , வன்னி , ஊமத்தை என்னும் இவற்றை ஆகாய கங்கையோடு சடையில் மறைத்த பெரியதேவனாய் , பண்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய் , மேம்பட்டவனாய் , உயர்ந்த இடத்தில் இருப்பவனாய்ப் பிறையைப் பாம்போடு சடையில் வைத்தவனாய் , அடியார் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றான் .


பாடல் எண் : 7
கல்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
         கருமாலுக்கு அருள்செய்த கருணை யான்காண்,
வில்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்,
         வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்,
தற்பரமாம் தற்பரமாய் நிற்கின் றான்காண்,
         சதாசிவன்காண் தன்ஒப்பார் இல்லா தான்காண்,
வெற்புஅரையன் பாவை விருப்பு உளான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழிதண் வீழிமிழலையான் மலைபோல விளங்கிய தோள்களை உடைய சலந்தரன் என்ற அசுரனுடைய உடலைப்பிளந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கிய கருணையாளனாய் , வில் விளங்கும் தோளை உடைய அருச்சுனன் வலிமையைக் குறையச் செய்து வேடுவனாய் அவனோடு போர் செய்து தன் போர்த் திறமையைக் காட்டியவனாய் , மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருளாய் இருக்கின்றவனாய்ச் சதாசிவனாய் , ஒப்பற்றவனாய் , பார்வதியைத் தானும் விரும்பி அவளால் விரும்பப்படுபவனாய் இருப்பவனாவான் .


பாடல் எண் : 8
மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்
         விருப்புஇலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன்காண், புத்தன் மறவாது ஓடி
         எறிசல்லி புதுமலர்கள் ஆக்கி னான்காண்,
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை,
         உலகுஅனைத்தும் ஒளித்துஅளித்திட் டுஉய்யச் செய்யும்
வித்தகன்காண், வித்தகர்தாம் விரும்பி ஏத்தும்
         விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :ஞானிகள் விரும்பிப்போற்றும் விண்இழிதண் வீழிமிழலையான் உண்மையான தவத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு உள் பொருளாய் விளங்குபவனாய்த் தன் இடத்து விருப்பம் இல்லாத இரும்புபோன்ற கடிய மனத்தவர்களுக்குத் தன் உருவத்தைக் காட்டாது மறைந்தே இருப்பவனாய், சாக்கியநாயனார் மறவாமல் இடும் சிறுகற்களைப் புதிய மலர்களாக ஏற்பவனாய், தன்னைத் தியானித்தவர்களை உயர்கதிக்கண் செலுத்துபவனாய், உலகங்களை அழித்துப் படைத்துக் காக்கும் திறல் உடையோனாய் உள்ளான்.


பாடல் எண் : 9
சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்,
         தக்கனையும் முனிந்துஎச்சன் தலைகொண் டான்காண்,
இந்திரனைத் தோள்முரிவித்து அருள்செய் தான்காண்,
         ஈசன்காண், நேசன்காண், நினைவோர்க்கு எல்லாம்
மந்திரமும் மறைப்பொருளும் ஆயி னான்காண்,
         மாலொடுஅயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழிதண்வீழிமிழலையான் தக்கன் வேள்வியில் சந்திரனைத் திருவடியால் தேய்த்துத் தக்கனை வெகுண்டு எச்சன் தலையை நீக்கி இந்திரனுடைய தோள்களை ஒடித்துப்பின் அவர்களுக்கு அருள் செய்தவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , தன்னை விருப்போடு நினைப்பவர்களுக்கு அன்பனாய் , மந்திரமும் வேதப்பொருளும் ஆயினானாய்ப் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவனாய் உள்ளான் .


பாடல் எண் : 10
ஈங்கைப்பேர் ஈமவனத்து இருக்கின் றான்காண்,
         எம்மான்காண், கைம்மாவின் உரிபோர்த் தான்காண்,
ஓங்குமலைக்கு அரையன்தன் பாவை யோடும்
         ஓர்உருவாய் நின்றான்காண், ஓங்கா ரன்காண்,
கோங்குமலர்க்கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்,
         கொல்ஏறு வெல்கொடி மேல் கூட்டினான் காண்,
வேங்கைவரிப் புலித்தோல்மேல் ஆடை யான்காண்,
         விண்இழி தண்வீழி மிழலை யானே.

         பொழிப்புரை :விண்இழிதண் வீழிமிழலையான் இண்டங் கொடிகள் அடர்ந்த சுடுகாட்டில் இருப்பவனாய் , எங்கள் தலைவனாய் , யானைத்தோலைப் போர்த்தியவனாய்ப் பார்வதியோடு ஒரே உருவமாய் நின்றவனாய் , ஓங்காரவடிவினனாய் , கோங்கு கொன்றை ஆகிய மாலையை உடையவனாய்க் காளை எழுதிய கொடியை உடையவனாய் , வேங்கைத்தோலை மேலாடையாகக் கொண்டவனாய் உள்ளான்.

                                             திருச்சிற்றம்பலம்6. 053     திருவீழிமிழலை        திருத்தாண்டகம்
                                              திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மான்ஏறு கரம்உடைய வரதர் போலும்,
         மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்,
கான்ஏறு கரிகதற உரித்தார் போலும்,
         கட்டங்கம் கொடிதுடிகைக் கொண்டார் போலும்,
தேன்ஏறு திருஇதழித் தாரார் போலும்,
         திருவீழி மிழலைஅமர் செல்வர் போலும்,
ஆன்ஏறு அதுஏறும் அழகர் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :திருவீழிமிழலையில் அமர்ந்த செல்வராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் கையில் மானை ஏந்தி வரம் கொடுப்பவராய், பெரிய மலையின் இருபகுதிகளையும் வில்லாகுமாறு வளைத்தவராய், காட்டில் உலவும் யானை கதறுமாறு அதன் தோலை உரித்தவராய்க் கட்டங்கப்படை உடுக்கை இவற்றைக் கைகளில் கொண்டவராய், தேன் பொருந்திய கொன்றைப் பூ மாலையை அணிந்தவராய், காளையை இவரும் அழகராய்க் காட்சி வழங்குகிறார்.


பாடல் எண் : 2
சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
         சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்,
நமனைஒரு கால்குறைத்த நாதர் போலும்,
         நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்,
குமரனையும் மகனாக உடையார் போலும்,
         குளிர்வீழி மிழலைஅமர் குழகர் போலும்,
அமரர்கள்பின் அமுதுஉணநஞ்சு உண்டார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :குளிர்ந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கும் இளையவராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் தம்மோடு போரிடவந்த சலந்தரன் என்ற அசுரனைச் சக்கரத்தால் பிளந்த திறமை உடையவராய், நமனை ஒரு காலால் உதைத்து அழித்தவராய், திருமாலை இடப்பாகத்துக் கொண்டவராய், முருகனையும் மகனாக உடையவராய்த் தேவர்கள் பிறகு அமுதம் உண்ணுமாறு முன்னர் அவர்களை அழிக்க வந்த நஞ்சினை உண்டவராவார்.


பாடல் எண் : 3
நீறுஅணிந்த திருமேனி நிமலர் போலும்,
         நேமிநெடு மாற்குஅருளிச் செய்தார் போலும்,
ஏறுஅணிந்த கொடிஉடைஎம் இறைவர் போலும்,
         எயில்மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்,
வேறுஅணிந்த கோலம்உடை வேடர் போலும்,
         வியன்வீழி மிழலைஉறை விகிர்தர் போலும்,
ஆறுஅணிந்த சடாமகுடத்து அழகர் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :வியன் வீழிமிழலை உறை விகிர்தராய் அடியேனை அடிமையாகக் கொண்ட அடிகள் திருமேனியில் நீறு அணிந்த தூயோராய்த் திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கியவராய், காளை எழுதிய கொடியை உடைய என் தலைவராய், நெருப்பாகிய அம்பினால் மூன்று மதில்களையும் எய்தவராய், உலகியலுக்கு வேறாகக் கொண்ட வடிவுடைய வேடராய்ச் சடைமுடியில் கங்கையை அணிந்த அழகராய்க் காட்சி வழங்குகிறார்.


பாடல் எண் : 4
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்,
         கயாசுரனை அவனால்கொல் வித்தார் போலும்,
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்,
         திசைமுகன்தன் சிரம்ஒன்று சிதைத்தார் போலும்,
மெய்வேள்வி மூர்த்திதலை அறுத்தார் போலும்,
         வியன்வீழி மிழலைஇடம் கொண்டார் போலும்,
ஐவேள்வி ஆறுஅங்கம் ஆனார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்.


பாடல் எண் : 5
துன்னத்தின் கோவணம்ஒன்று உடையார் போலும்,
         சுடர்மூன்றும் சோதியுமாய்த் தூயார் போலும்,
பொன்ஒத்த திருமேனிப் புனிதர் போலும்,
         பூதகணம் புடைசூழ வருவார் போலும்,
மின்ஒத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்,
         வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்,
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :பரந்த வீழிமிழலையைச் சேர்ந்த தூயோராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கீளோடு இணைக்கப்பட்ட கோவணம் ஒன்று உடையாராய், மூன்று சுடர்களும் அவற்றின் ஒளியுமாகிய தூயவராய், பொன்னார் மேனிப் புனிதராய், பூதகணம் தம்மைச் சுற்றி வரத் தாம் வருபவராய், மின்னலை ஒத்து ஒளிவீசும் சிவந்த சடையில் பிறை சூடியவராய், அன்னத்தை வாகனமாக உடைய பிரமனுடைய மண்டையோட்டினை ஏந்திய தலைவராய் உள்ளார்.


பாடல் எண் : 6
மாலாலும் அறிவுஅரிய வரதர் போலும்,
         மறவாதார் பிறப்புஅறுக்க வல்லார் போலும்,
நால்ஆய மறைக்குஇறைவர் ஆனார் போலும்,
         நாமஎழுத்து அஞ்சுஆய நம்பர் போலும்,
வேல்ஆர்கை வீரியைமுன் படைத்தார் போலும்,
         வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்,
ஆலாலம் மிடற்றுஅடக்கி அளித்தார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :வியன் வீழிமிழலை அமர்ந்த விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் திருமாலாலும் அறிய முடியாதவராய், வரம் அருளுபவராய், தம்மை மறவாதவர் பிறவிப்பிணியைப் போக்க வல்லவராய், நான்கு வேதங்களுக்கும் தலைவராய், அஞ்செழுத்தாகிய பெயரை உடையவராய், நம்மால் விரும்பப்படுபவராய், கையில் வேலை ஏந்திய காளியைத் தாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காகப் படைத்தவராய், விடத்தைத்தம் கழுத்தில் அடக்கித் தேவர்களைப் பாதுகாத்தவராவர்.


பாடல் எண் : 7
பஞ்சுஅடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்,
         பைந்நாகம் அரைக்குஅசைத்த பரமர் போலும்,
மஞ்சுஅடுத்த மணிநீல கண்டர் போலும்,
         வடகயிலை மலைஉடைய மணாளர் போலும்,
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண்டு அணிந்தார் போலும்,
         திருவீழி மிழலைஅமர் சிவனார் போலும்,
அஞ்சுஅடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும்,
         அடியேனை ஆள்ஆடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :திருவீழிமிழலை அமர்ந்த சிவனாராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்டவராய், காளமேகம் போன்ற அழகிய நீலகண்டராய், வடகயிலைத்தலைவராய், செஞ்சடையில் வெண்பிறை சூடியவராய், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் அடியவர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவராய் உள்ளார்.


பாடல் எண் : 8
குண்டரொடு பிரித்துஎனைஆட் கொண்டார் போலும்,
         குடமூக்கில் இடம்ஆக்கிக் கொண்டார் போலும்,
புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்,
         புள்அரசைக் கொன்றுஉயிர்பின் கொடுத்தார் போலும்,
வெண்தலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்,
         வியன்வீழி மிழலைநகர் உடையார் போலும்,
அண்டத்துப் புறத்துஅப்பால் ஆனார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :வியன் வீழிமிழலை நகருடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் சமணரிடமிருந்து அடியேனை ஆட்கொண்டவராய், குடந்தையில் உறைபவராய், அடியவர்கள் உள்ளத் தாமரையை ஆசனமாகக் கொண்டவராய், கருடனைக் கொன்று பின் அவனை உயிர்ப்பித்தவராய், வெள்ளிய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் விகிர்தராய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவராய் உள்ளார்.


பாடல் எண் : 9
முத்துஅனைய முகிழ்முறுவல் உடையார் போலும்,
         மொய்பவளக் கொடிஅனைய சடையார் போலும்,
எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியார் போலும்,
         இருநான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்,
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்,
         வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்,
அத்தனொடும் அம்மைஎனக்கு ஆனார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :வியன்வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை அடிமைகொண்ட அடிகள் முத்துப்போன்ற சிறிதே அரும்புகின்ற நகைப்பினையும், செறிந்த பவளக்கொடிபோன்ற சடையினையும் உடையவராய், சிறிதளவு, தம்பால் பக்தி உடையவருக்கும் இனியராய், அட்டமூர்த்த உருவினராய், நண்பனாகிய குபேரனிடம் விருப்பு உடையவராய், அடியேனுக்குத் தந்தையும் தாயும் ஆவார்.


பாடல் எண் : 10
கரிஉரிசெய்து உமைவெருவக் கண்டார் போலும்,
         கங்கையையும் செஞ்சடைமேல் கரந்தார் போலும்,
எரியதுஒரு கைத்தரித்த இறைவர் போலும்,
         ஏனத்தின் கூன்எயிறு பூண்டார் போலும்,
விரிகதிரோர் இருவரைமுன் வெகுண்டார் போலும்,
         வியன்வீழி மிழலைஅமர் விமலர் போலும்,
அரிபிரமர் துதிசெயநின்று அளித்தார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :பரந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கிய தூயராய், அடியேனை ஆளுடைய அடிகள், பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கங்கையையும் சிவந்த சடையில் மறைத்து, அக்கினி தேவனுடைய ஒரு கையை நீக்கிய தலைவராய்ப் பன்றியின் கூரிய பல்லை அணிகலனாகப் பூண்டு, சந்திரன் சூரியன் என்ற இருவரையும் தக்கன் வேள்விக்களத்தில் வெகுண்டு ஒறுத்துத் திருமாலும் பிரமனும் தம்மைத் தோத்திரிக்க அவர்களுக்கு அருள் செய்தவர்.


பாடல் எண் : 11
கயிலாய மலைஎடுத்தான் கதறி வீழக்
         கால்விரலால் அடர்த்துஅருளிச் செய்தார் போலும்,
குயில்ஆரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
         கூத்துஆட வல்ல குழகர் போலும்,
வெயில்ஆய சோதிவிளக்கு ஆனார் போலும்,
         வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்,
அயில்ஆரும் மூவிலைவேல் படையார் போலும்,
         அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.

         பொழிப்புரை :வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் கதறிக்கொண்டு விழுமாறு அவனைக் கால் விரலால் நசுக்கிப்பின் அவனுக்கு அருள் செய்தவராய், குயில்போன்ற இனிய சொற்களை உடைய உமையம்மை மனம் குளிர்ந்து காணுமாறு கூத்தாடுதலில் வல்ல இளையராய்ப் பகலவன்போல ஏனைய ஒளிகளைத் தாழ்த்தித் தாம் ஒளி வீசுபவராய்க் கூர்மையான முத்தலைச் சூலப்படையுடையவராய் இருக்கின்றார்.

                                             திருச்சிற்றம்பலம்

5. 012    திருவீழிமிழலை         திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கரைந்து கைதொழு வாரையும் காதலன்,
வரைந்து வைதுஎழு வாரையும் வாடலன்,
நிரந்த பாரிடத் தோடுஅவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

         பொழிப்புரை : மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன் ; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான் . இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே. (வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன் , அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி .)
  
 
பாடல் எண் : 2
ஏற்று வெல்கொடி ஈசன்தன் ஆதிரை
நாற்றம் சூடுவர், நல்நறும் திங்களார்,
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம்கொள் வீழி மிழலையே.

         பொழிப்புரை : பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில், தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர் ; மிக நல்லமதியைச் சூடுவோராகவும் உளர் . சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் ( அணிந்து ) நாற்றம் சூடுவர் ( நறுமலர் அணிவர் ) என்றுரைப்பினும் அமையும் .


பாடல் எண் : 3
புனைபொன் சூலத்தன், போர்விடை ஊர்தியான்,
வினைவெல் நாகத்தன், வெண்மழு வாளினான்,
நினைய நின்றவன் ஈசன்ஐ யேஎனா,
வினை இலார்தொழும் வீழி மிழலையே.

         பொழிப்புரை : சூலம் உடையவனும் , விடை ஊர்தியனும் , வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும் , வெண்மழு வாள் உடையவனும் , அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும் , இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே .


பாடல் எண் : 4
மாடத்து ஆடு மனத்துடன் வைத்தவர்,
கோடத் தார், குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார், பழிப் பார்,பழிப்பு அல்லதுஓர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.

         பொழிப்புரை : முதல்வனை மாடத்தும் ( விமானத்தும் ), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும் , வேத கோஷம் செய்யும் பிரமனும் , குருக்ஷேத்திரத்தார் பலரும் ( பாண்டவர் ), வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும் , பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும் , தொழும் ( பதி ) திருவீழி மிழலையே .


பாடல் எண் : 5
எடுத்த வெல்கொடி ஏறுஉடை யான்தமர்,
உடுப்பர் கோவணம், உண்பது பிச்சையே,
கெடுப்பது ஆவது கீழ்நின்ற வல்வினை,
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.

         பொழிப்புரை : உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவபிரானின் அடியவர்கள் , கோவணமே உடுப்பது ; பிச்சை உணவே உண்பது ; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது ; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே .


பாடல் எண் : 6
குழலை யாழ்மொழி யார்இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்,
தழலை நீர்மடிக் கொள்ளன்மின், சாற்றினோம்
மிழலை யான்அடி சாரவிண் ஆள்வரே.

         பொழிப்புரை : குழலையும் , யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும் , உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே ! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர்; பன்முறையினும் சாற்றினோம், மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம் .


பாடல் எண் : 7
தீரன், தீத்திர ளன், சடைத் தங்கிய
நீரன், ஆடிய நீற்றன்,வண்டு ஆர்கொன்றைத்
தாரன், மாலையன், தண்நறும் கண்ணியன்,
வீரன் வீழி மிழலை விகிர்தனே.

         பொழிப்புரை : அறிஞனும் , தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும் , சடைத் தங்கிய கங்கையனும் , ஆடிய திருநீற்றனும் , வண்டார்ந்த கொன்றைத்தாரும் , குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும் , புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலை யிலுள்ள விகிர்தனே .


பாடல் எண் : 8
எரியின் ஆர்இறை யார், இடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதுஓர்
பெரிய னார், தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழும் வீழி மிழலையே.

         பொழிப்புரை : எரியைக்கையால் ஏந்தியவரும் , யாங்கணும் தங்கி நிற்போரும் , நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ( மகாதேவனும்) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும் .


பாடல் எண் : 9
நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி,
காண்டு சேவடி மேலொர் கனைகழல்,
வேண்டு வார்அவர் வீதி புகுந்திலர்,
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.

         பொழிப்புரை : நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும் , சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு , வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர் ; இதுவோ அவர்தம் அருள் !


பாடல் எண் : 10
பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை ஆர்அழல் அந்தணர் ஆகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.

         பொழிப்புரை : மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப் பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம் . மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து .


பாடல் எண் : 11
மழலை ஏற்று மணாளன், திருமலை
சுழல ஆர்த்துஎடுத் தான்முடி தோள்இறக்
கழல்கொள் காலின் திருவிரல் ஊன்றலும்
மிழலை யான்அடி வாழ்கஎன விட்டதே.

         பொழிப்புரை : இளமையான ஆனேறுடைய உமை மணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும் , அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன் . அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன் .

                                             திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், திருநன்னிலத்துப் பெருங்கோயிலை வணங்கி, நடைக்காவணம், நடைப்பாவடை, மணித்தோரணம் முதலியவற்றால் அந்தணர்கள் எதிர்கொள்ள, திருவீழிமிழலை யடைந்து, வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12 ஏயர்கோன். புரா. 59) இதில் திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் பெருமான் படிக்காசு வழங்கியதைக் குறித்திருத்தல் அறியத்தக்கது.

பெரிய புராணப் பாடல் எண் : 56
பலநாள் அமர்வார், பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய்,
சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச் சென்றுஎய்தி,
வலமா வந்து, கோயிலின்உள் வணங்கி, மகிழ்ந்து பாடினார்,
தலம்ஆர் கின்ற தண்ணியல்வெம் மையினான் என்னும் தமிழ்மாலை.

         பொழிப்புரை : பல நாள்கள் திருவாரூரில் இவ்வாறு இருந்தருளிய நம்பிகள், பெருமானின் திருவருளால் அங்கிருந்து, பெருமலையான மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரத்தை எரியச் செய்த வீரராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருநன்னிலப் பதியை அடைந்து, அக்கோயிலை வலம் கொண்டு, உட்புகுந்து, பெருமானை வணங்கி மகிழ்ந்து, `தண்ணியல் வெம்மையினான்' எனத் தொடங்கும் தமிழ் மாலையைப்
பாடினார்.

பெ. பு. பாடல் எண் : 57
பாடி அங்கு வைகியபின், பரமர் வீழி மிழலையினில்,
நீடு மறையான் மேம்பட்ட அந்த ணாளர் நிறைந்துஈண்டி,
நாடு மகிழ அவ்வளவும் நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகம்நிரை மல்கமணித்தோ ரணம் நிரைத்து.

         பொழிப்புரை : பாடி, அத்திருப்பதியில் தங்கியிருந்த பின், திருவீழிமிழலை என்னும் திருப்பதியில் வாழும் நீடிய மறைவழி ஒழுகிடும் அந்தணர்கள் திரண்டு வந்து நாடெல்லாம் மகிழத் திருவீழிமிழலையிலிருந்து திருநன்னிலம் வரையுள்ள வழி எங்கும், நிலத்தில் நீள விரிக்கின்ற பாவாடையிட்டு, வழியின் இருமருங்கும் கதலி, வாழை, கமுகு ஆகியவைகளை நிரை நிரையாக விளங்க நாட்டி, அங்காங்கே அழகிய தோரண முகப்புகளும் நிரைத்து,


பெ. பு. பாடல் எண் : 58
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார், மற்றுஅவரும்
சிந்தை மலர்ந்து திருவீழி மிழலை இறைஞ்சி, சேண்விசும்பின்
முந்தை இழிந்த மொய்ஒளிசேர் கோயில் தன்னை முன்வணங்கி,
பந்தம் அறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.

         பொழிப்புரை : திருநன்னிலம் வந்து, நம்பிகளை எதிர்கொண்டு அழைத்து, தமது திருவீழிமிழலையை அடைந்தார்கள். அதுபொழுது அப்பெருமகனாரும் தமது சிந்தை மலர்ந்து, திருவீழிமிழலை என்னும் திருப்பதியை வணங்கி, மிக உயர்ந்த வானினின்றும் முன்பொருகால் இறங்கி வந்த மிக்க வியத்தகு ஒளியையுடைய கோயிலை முன்னாக வணங்கிப், பாசக்கட்டினை அறுத்திடும் பெருமானின் திருவடிகளைப் பரவிப் பணிவாராய்,


பெ. பு. பாடல் எண் : 59
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத் தோனும் பரவ அரிய
விடங்கன், விண்ணோர் பெருமானை, விரவும் புளகம் உடன்பரவி,
"அடங்கல் வீழி கொண்டு இருந்தீர், அடியேனுக்கும் அருளும்"எனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்.

         பொழிப்புரை : படங்கொண்ட பாம்பில் துயில்கின்ற திருமாலும், செந்தாமரை மலரில் இருந்திடும் அயனும் வணங்கிடற்கு அரியனாய, தேவர்கட்கும் தேவனாய பெருமானை, உடம்பெல்லாம் மயிர் முகிழ்க்க வணங்கி, `அழகில் அடங்காத திருவீழிமிழலையில் கோயில் கொண்டிருந்தீர்! உம் அடியேனுக்கும் அருளும்\' என மிகவும் பொருள் விரிந்த செஞ்சொல்லின் தமிழ் மாலையைச் சாத்தி அங்கு இருந்தருளுகின்ற நாள்களில்,

         இப்பொருண்மை அமைந்த பதிகம் `நம்பினார்க்கு அருள் செய்யும்' (தி.7 ப.88) என்னும் தொடக்கமுடைய சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.
இப்பதிகப் பாடல்தொறும் `வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே' என வரும் தொடர் அமைந்துள்ளது. வீழியில், சம்பந்தருக்கும், அப்பர் பெருமானுக்கும் பஞ்சம் தீரும் வரை ஒரு பெருந்தொகை தந்து, துயர்கூர் வறுமை தொலைக்குமாறு அருளியிருக்கலாம். அவ்வாறன்றி நித்தமும் ஒரு காசு நல்கியமைக்குரிய காரணத்தைத் சுந்தரர் நயமாக அருளும் பதிகம் இதுவாம். `திருமிழலையிருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்' என்பது இப்பதிகத்து வரும் எட்டாவது பாடலாகும்.

சுந்தரர் திருப்பதகம்

7. 088    திருவீழிமிழலை                  பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
         நான்ம றைக்குஇடம் ஆய வேள்வியுள்
செம்பொ னேர்மடவார் அணி
         பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழுது ஏத்த மாமலை
         யாளொ டும்உட னே உறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி
         யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்றவரே, செம் பொன்னால் இயன்ற பாவைபோலும் மகளிர் அழகுபெற்று விளங்குகின்ற திருமிழலையுள், நீர் உயர்ந்த மலைமகளோடு உடனாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை, அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர் .


பாடல் எண் : 2
விடங்கொள் மாமிடற்றீர்,வெள் ளைச்சுருள்
         ஒன்றுஇட்டு விட்ட காதி னீர்,என்று
திடங்கொள் சிந்தையினார் கலி
         காக்கும் திருமிழலை,
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
         வந்து இழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடி
         யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : ` நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவரே , வெண்மையான சங்கக் குழை ஒன்றினை இட்டுத் தூங்கவிட்ட காதினை உடையவரே ` என்று போற்றி , உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள் , உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை , உம்பொருட்டு மண்மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர்,


பாடல் எண் : 3
ஊனை உற்றுஉயிர் ஆயி னீர்,ஒளிமூன்று மாய்த்தெளி
         நீரோடு ஆன்அஞ்சின்
தேனை ஆட்டுஉகந்தீர், செழு
         மாடத் திருமிழலை
மானை மேவிய கையி னீர்,மழு வேந்தி னீர்,மங்கை
         பாகத் தீர், விண்ணில்
ஆன வீழிகொண்டீர், அடி
         யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : உடம்பைப் பொருந்திய உயிரானவரே , ` ஞாயிறு , திங்கள் , தீ ` என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே ` தெளிவாகிய நீரோடு ஆனஞ்சினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே , மானைப் பொருந்திய கையை யுடையவரே , மழுவை ஏந்தியவரே , மலைமகள் பாகத்தை உடையவரே , வளவிய மாடங்களையுடைய திருமிழலை யில் , வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ,


பாடல் எண் : 4
பந்தம் வீடுஇவை பண்ணி னீர்,படிறீர், 
         மதிப்பிதிர்க் கண்ணி யீர்,என்று
சிந்தைசெய்து இருக்கும் செங்கை யாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
         ஆட மால்அயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : ` உயிர்களுக்கு , ` பந்தம் ` வீடு ` என்னும் இரண்டையும் அமைத்தவரே , அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே , நிலாத் துண்டமாகிய கண்ணியைச் சூடியவரே ,` என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை யுடையவர்களது திருமிழலையுள் , நாள்தோறும் வானுலகத்தில் உள்ள நாடக மகளிர்கள் வந்து நடனம் ஆடவும் , திருமாலும் பிரமனும் துதிக்கவும் , அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் .


பாடல் எண் : 5
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
         ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திருமிழலைப்
பரிசி னால்அடி போற்றும் பத்தர்கள்
         பாடி ஆடப் பரிந்து நல்கினீர்,
அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல் , மலையாகிய வில்லை ஏந்தி நின்று , மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே , நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் , அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள் , அரிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட , மனம் இரங்கி , அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .


பாடல் எண் : 6
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
         ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்,
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசும் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
         நேசத்தால் உமைப் பூசிக் கும்இடம்
அறிந்து, வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : மரங்கள் நெருங்கிய பூஞ்சோலைகள் , தம்மிடத்து வருவோர்க்குத் தேன் துளிகளை வழங்குகின்ற திருமிழலையுள் , நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , தந்தையது தாளை எறிந்த சண்டேசுர நாயனார் , தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக , உம்மை வழிபட்ட அடியவர் பலர்க்கு உயர்கதியைத் தந்தருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் ,


பாடல் எண் : 7
பணிந்த பார்த்தன் பகீர தன்பல
         பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறும் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும்
         அந்தி வான்இடு பூச்சி றப்பவை
அணிந்து, வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள் , சினம் தவிர்ந்த அந்தணர்கள் , காலை , நடுப்பகல் இவற்றிலும் , அந்திக் காலத்திலும் உயர்வாக இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்துகொண்டு , வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உம்மை வணங்கிய அருச்சுனன் , பகீரதன் , பல அடியவர் , சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் பண்ணினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .


பாடல் எண் : 8
பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
         பற்றிப் பாத்துஉணும் சுற்றம் ஆயினீர்,
தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடு இசைகேட்கும்
         இச்சை யால், காசு நித்தல் நல்கினீர்,
அருந்தண் வீழிகொண்டீர், அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : மிக்க பூத கணங்களை , ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே , ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள் , அரிய , குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே , நீர் , இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால் , அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள் செய்யீர் .


பாடல் எண் : 9
தூய நீர்அமுது ஆய வாறுஅது
         சொல்லுக என்றுஉமை கேட்கச் சொல்லினீர்,
தீ அறாக்குலையார் செழு மாடத் திருமிழலை
மேய நீர்பலி ஏற்றது என்என்று
         விண்ணப் பஞ்செய் பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர், அடி யேற்கும் அருளுதிரே

         பொழிப்புரை : ` தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது , வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள் விரும்பி வீற்றிருக்கின்ற நீர் , ` பிச்சை எடுப்பது என் ` என்று வினாவு வோர்க்கு மெய்ப்பொருளாய் விளங்குகின்ற , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , ` உமக்குத் தூய்மை யாகிய நீரே அமுத மாயினவாற்றினைச் சொல்லுக ` என்று உமையவள் கேட்க , அதனைச் சொல்லியருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .


பாடல் எண் : 10
வேத வேதியர் வேத நீதியது
         ஓது வார்விரி நீர்மி ழலையுள்
ஆதி வீழிகொண்டீர், அடி யேற்கும் அருளுகஎன்று
நாத கீதம்வண்டு ஓது வார்பொழில்
         நாவல் ஊரன்வன் தொண்டன் நல்தமிழ்
பாதம் ஓதவல்லார் பர னோடு கூடுவரே

         பொழிப்புரை : ` வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும் , வேதத்தின் பொருளை விளக்குபவர்களும் வாழ்கின்ற , பரந்த நீரையுடைய திருமிழலையுள் , பழைதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ` என்று பாடிய , இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப்பாடல்களை . அப்பெருமான் திருவடிக்கீழ் நின்றுபாட வல்லவர் , அவனோடு இரண்டறக் கலப்பர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சேந்தனார் அருளிச் செய்த
திருவிசைப்பா

9. 05  திருவீழிமிழலை                    பண் - பஞ்சமம்
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஏகநா யகனை, இமையவர்க்கு அரசை,
         என்உயிர்க்கு அமுதினை, எதிர்இல்
போகநா யகனை, புயல்வணற்கு அருளிப்
         பொன்நெடும் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை, மிகுதிரு வீழி
         மிழலைவிண் இழிசெழுங் கோயில்
யோகநா யகனைஅன்றி,மற்று ஒன்றும்
         உண்டுஎன உணர்கிலேன் யானே.

         பொழிப்புரை : எல்லா உலகங்களுக்கும் ஒரே தலைவனாய், தேவர் களுக்கு அரசனாய், அடியேனுடைய உயிரைத் தளிர்க்கச் செய்யும் அமுதமாய், ஒப்பில்லாத இன்பம் நல்கும் தலைவனாய், கார்மேக நிறத்தினனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கி, அவனைப் பொன்மயமான பல்லக்குப் போல வாகனமாகக்கொண்டு செலுத்திய, மேகம் போலக் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு உதவும் தலை வனாய், மேம்பட்ட திருவீழிமிழலையிலே தேவருலகிலிருந்து இறங்கி வந்து நிலவுலகில் நிலையாகத் தங்கியுள்ள மேம்பட்ட கோயிலில் முத்தியை வழங்கும் தலைவனாய் உள்ள சிவபெருமானை அன்றி மற்றொரு பரம்பொருள் உள்ளது என்பதனை நான் அறிகின்றேன் அல்லேன்.


பாடல் எண் : 2
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை,
         கரையிலாக் கருணைமா கடலை,
மற்றவர் அறியா மாணிக்க மலையை,
         மதிப்பவர் மனமணி விளக்கை,
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனை,
         திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு, உள்ளம்
         குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

         பொழிப்புரை : கற்றவர்களால் அக் கல்வியின் பயனாக அடைந்து அநுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனி போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத செந்நிற மாணிக்கமணியால் ஆகிய மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஒளி வீசுபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே திருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் பலகாலும் தரிசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி பெற்றன.


பாடல் எண் : 3
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த
         மருந்தை, என் மாறுஇலா மணியை,
பண்டுஅலர் அயன்மாற்கு அரிதுமாய், அடியார்க்கு
         எளியதுஓர் பவளமால் வரையை,
விண்டுஅலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
         திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டல்அம் கண்டத்து எம்குரு மணியைக்
         குறுக,வல் வினைகுறு காவே.

         பொழிப்புரை : வட்டமான ஞாயிற்றின் ஒளியை வழிபடுதலை விடுத்து அதன் உட்பொருளாய் என்னால் வழிபடப்பட்ட சிவப்பொரு ளாகிய அமுதமாய், என் ஒப்பற்ற மாணிக்கமாய், முற்காலத்தில் தம் முயற்சியால் அறிய முற்பட்ட தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கு அரியனாய், அடியவர்களுக்கு எளியனாய் இருக்கும் பெரியபவளமலை போல்வானாய், முறுக்கு அவிழ்ந்து மலரும் பூக்களிலிருந்து வெளிப்படும் தேன் பரந்து பெருக்கெடுக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும் கார்மேகம் போன்ற கரியகழுத்தை உடைய எம் மேம்பட்ட குருமணியை அணுகினால் கொடிய வினைகளின் தாக்குதல்கள் நம்மை அணுகமாட்டா.


பாடல் எண் : 4
தன்அடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
         சசிகுலா மவுலியை, தானே
என்இடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
         எழுஞ்செழுஞ் சுடரினை, அருள்சேர்
மின்நெடுங் கடலுள் வெள்ளத்தை, வீழி
         மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்அடிக்கு அடிமை புக்கு,இனிப் போக
         விடுவனோ, பூண்டுகொண் டேனே.

         பொழிப்புரை : தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறை விளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில் அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மேல் மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற அரிய திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?


பாடல் எண் : 5
இத்தெய்வ நெறிநன்று என்றுஇருள் மாயப்
         பிறப்புஅறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
         புராணசிந் தாமணி, வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
         மிழலைவிண் இழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியல் சிவம்அலாது, அவமும்
         அறிவரோ அறிவுஉடை யோரே.

         பொழிப்புரை : `இந்தத் தெய்வத்தை வழிபடும் வழி நல்வழி` என்று உட்கொண்டு அஞ்ஞானமும் வஞ்சனையும் கூடிய பிறவிப் பிணி யிலிருந்து தாமே தம்மைக் காத்து கொள்ள இயலாத இந்திர சாலம் போன்று விரைவில் அழியும், நிலைபேறில்லாத தெய்வங்களைப் பரம் பொருளாகக் கருதி வழிபடும் வழியிலே அடியேன் ஈடுபடாத வகையில் அருள்புரிந்த, வேண்டியவர்க்கு வேண்டியன நல்கும் சிந்தாமணியாய், ஆதிபுராதனனாய் உள்ள சிவபெருமான் அமைத்து வைத்த உண்மையான தெய்வநெறியில் வாழும் நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களின் திருவீழிமிழலையில், தேவருலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த செழுமையான கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவ பெருமானை விடுத்து, அறிவுடையார்கள் பயனில்லாத பிறபொருள்களைப் பொருளாக நினைப்பாரோ?


பாடல் எண் : 6
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து,
         ஐவரோடு அழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்து,எனை ஆண்ட
         புனிதனை, வனிதைபா கனை,எண்
திக்குஎலாம் குலவும் புகழ்த்திரு வீழி
         மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்அடிக் கமலப்
         பொடிஅணிந்து அடிமைபூண் டேனே.
        
         பொழிப்புரை : உண்மையில்லாத பொய்த்தோற்றமாகிய கனவைப் போன்று நிலைபேறில்லாத உலகியல் செல்வங்களைப் பெறும் வழிகளையே ஆராய்ந்து, ஐம்புல இன்பத்தில் ஈடுபட்டு அடியேன் வாழ்க்கை வீணாகாதபடி காப்பாற்றி அடியேனை ஆட்கொண்ட தூயோனாய்ப் பார்வதிபாகனாய் எட்டுத்திக்குக்களிலும் தன்புகழ் பரவிய திருவீழிமிழலை எம்பெருமானுடைய திருவடி நிழலின் கீழ்ப் பொருந்தியிருப்பவர்களுடைய பொலிவுடைய திருவடித் தாமரைகள் தோய்ந்த அடிப்பொடியினை அணிந்து அவ்வடியவர் களுக்குத் தொண்டு செய்வதனை மேற்கொண்டேன்.


பாடல் எண் : 7
கங்கைநீர் அரிசில் கரைஇரு மருங்கும்
         கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
         மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
         நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத்து என்அரு மருந்தை,
         வருந்திநான் மறப்பனோ இனியே.

         பொழிப்புரை : இருபக்கங்களிலும் பூக்கள் மணம் கமழும் சோலை களைக் கொண்டதாய்க் கங்கை போன்ற தூயநீரைஉடைய அரிசில் ஆற்றங் கரையில் வயல்வளம் உடையதாய்ச் சந்திரனைத் தொடும் படியான மிகஉயர்ந்த மேல்மாடிகள் நிறைந்த பேரில்லங்களை மிகுதி யாக உடைய மேம்பட்ட திருவீழிமிழலையில் உகந்தருளியிருக்கும், சிறந்த செல்வமாகத் தானாகவே தோன்றிய குண பூரணனாய், தன் பேரொளியே வடிவெடுத்தாற் போன்ற பார்வதி பாகனாய் உள்ள என் கிட்டுதற்கரிய அமுதத்தை, இனிமேல் மறந்து வருந்துவேனோ?


பாடல் எண் : 8
ஆயிரம் கமலம், ஞாயிறு ஆயிரம்முக்
         கண்முக கரசர ணத்தோன்,
பாய்இருங் கங்கை பனிநிலாக் கரந்த
         படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேய்இருந் தோளி உமைமண வாளன்
         விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
         போற்றுவார் புரந்தரா திகளே.

         பொழிப்புரை : ஆயிரம் கதிரவர்கள் ஒன்று கூடினாற்போல முக் கண்களின் ஒளியை உடையவனாய், ஆயிரம் தாமரைபோன்று முகமும் கைகளும் பாதங்களும் அழகாக உடையவனாய், பரவின பெரிய கங்கையும் குளிர்ந்த பிறையும் மறையவைத்த பரவிய சடை ஒளிவிடும் அழகிய திருமுடியை உடையவனாய், மூங்கில் போன்ற பெரிய தோள்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெரு மான் உகந்தருளியிருக்கும் திருவீழிமிழலை என்ற திருத்தலத்தைச் சூழ்ந்த சோலைகளிடையே தங்கி, அங்கு இருந்தவாறே, கோயிலை அடையாது சிவபெருமானைப் போற்றித் துதிக்கின்ற அடியவர் களுடைய திருவடிகளை இந்திரன் முதலியோர் போற்றி வழிபடுவர்.


பாடல் எண் : 9
எண்ணில்பல் கோடி சேவடி, முடிகள்
         எண்ணில்பல் கோடி,திண் தோள்கள்
எண்ணில்பல் கோடி, திருவுரு நாமம்
         ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி, எல்லைக்குஅப் பாலாய்
         நின்றுஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர், ஏர் வீழி
         இவர்நம்மை ஆள்உடை யாரே.

         பொழிப்புரை : எண்ணிக்கையைக் கடந்த பலகோடிக் கணக்கான சிவந்த பாதங்களையும், பலமுடிகளையும், பல வலிய தோள்களை யும், பலகோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களை யும், அழகிய முக்கண்கள் பொருந்திய முகங்களையும் செயல்களையும் கொண்டு அளவின் எல்லைக்கு அப்பாற்பட்டவராய் நின்று, அந்தணர் ஐந்நூற்றுவர் துதித்து வழிபடுகின்ற எண்ணற்ற பலகோடி நற்பண்புகளை உடையவர் அழகிய திருவீழிமிழலையை உகந்தருளியிருக்கும் பெருமானார். இவர் நம்மை அடியவராகக் கொள்ளும் இன்னருள் உடையவர்.


பாடல் எண் : 10
தக்கன், வெங்கதிரோன், சலந்தரன், பிரமன்,
         சந்திரன், இந்திரன், எச்சன்,
மிக்கநெஞ்சு அரக்கன், புரம், கரி, கருடன்,
         மறலி, வேள், இவர்மிகை செகுத்தோன்;
திக்குஎலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
         மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குஇருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
         பொடிஅணிந்து அடிமைபூண் டேனே.

         பொழிப்புரை : தக்கன், வெப்பமான கதிர்களைஉடைய சூரியன், சலந்தரன் என்ற அசுரன், பிரமன், சந்திரன், இந்திரன், தக்கன் செய்த வேள்வித் தலைவன், வலிய நெஞ்சினை உடைய இராவணன், திரிபுரம், தாருகவன முனிவர்கள் விடுத்தயானை, கருடன், இயமன், மன்மதன் ஆகிய இவர்களுடைய எல்லை கடந்த செருக்கை அழித்த வனாய், எண்திசைகளிலும் நிறைந்த புகழையுடைய திருவீழிமிழலைப் பெருமானுடைய அடியவர்களுடைய பொலிவை உடைய திருவடித் தாமரைகள் படிந்த பொடியைத் தலையில்சூடி அவர்களுக்கு அடியவனானேன்.


பாடல் எண் : 11
உளங்கொள மதுரக் கதிர்விரித்து உயிர்மேல்
         அருள்சொரி தரும்உமா பதியை,
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
         மழவிடை மேல்வரு வானை,
விளங்குஒளி வீழி மிழலைவேந் தே,என்று
         ஆந்தனைச் சேந்தன்தா தையை,யான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ, அடியேன்
         கைக்கொண்ட கனககற் பகமே.

         பொழிப்புரை : மனத்தில் பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற பார்வதியின் கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது இவர்ந்து வரு பவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?


பாடல் எண் : 12
பாடுஅலங் காரப் பரிசில்காசு அருளிப்
         பழுத்தசெந் தமிழ்மலர் சூடி,
நீடுஅலங் காரத்து எம்பெரு மக்கள்
         நெஞ்சின்உள் நிறைந்துநின் றானை,
வேடுஅலங் காரக் கோலத்துஇன் ஆமுதை,
         திருவீழி மிழலையூர் ஆளும்
கேடுஇல்அம் கீர்த்திக் கனககற் பகத்தைக்
         கெழுமுதற்கு எவ்விடத் தேனே.

         பொழிப்புரை : பாடப்படுகின்ற அணிகள் நிறைந்த பாடல்களுக்குப் பரிசிலாகப் பொற்காசுகளை வழங்கி மேம்பட்ட செந்தமிழ்ப் பாமாலைகளாகிய மலர்களைச் சூடி, எம்பெருமக்களாகிய தேவார முதலிகள் உள்ளத்திலே நீடித்து நிற்கும் அலங்காரத்துடன் நிறைந்து நின்றவனாய், அருச்சுனனுக்கு அருளுவதற்காக அழகிய வேட்டுவக் கோலம் பூண்ட அமுதமாய், திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும், என்றும் அழிதலில்லாத புகழைஉடைய பொன்நிறக் கற்பகம் போல்பவனாகிய எம்பெருமானை அடைவதற்கு அடியேன் எந்த விதத்தகுதியையும் உடையேன் அல்லேன். எம்பெருமான் அடியேனுடைய தகுதியை நோக்காது தன்னுடைய காரணம் பற்றாக் கருணையாலேயே அடியேனுக்கு அருள் செய்துள்ளான்.
                                             திருச்சிற்றம்பலம்.No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...