அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
படிபுனல் நெருப்பு
(திருவிடைக்கழி)
முருகா!
தேவரீரது பழ அடியார் திருக்கூட்டத்தில்
அடியேனைச் சேர்த்தருளி,
திருவடி இன்பத்தை அருள்வாய்.
தனனதன
தத்தனத் தனனதன தத்தனத்
தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ
ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு
பயில்பிணிகள்
மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும்
உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன்
உழலுமது
கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே
கொடியவொரு
குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா
குமரசம
ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே
தடவிகட
மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் ...... துறையோனே
தருமருவு
மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
படி, புனல், நெருப்பு, அடல் பவனம், வெளி, பொய்க்கருப்
பவம் உறை, அவத்தை, முக் ...... குணம், நீடு
பயில்பிணிகள், மச்சை, சுக்கிலம், உதிரம், அத்தி, மெய்ப்
பசி படு நிணச் சடக் ...... குடில்பேணும்
உடல்
அது பொறுத்து அறக் கடைபெறு பிறப்பினுக்கு
உணர்வு உடைய சித்தம் அற்ற ...... அடிநாயேன்
உழலும்
அது கற்பு அல, கழல் இணை எனக்கு அளித்து
உனது தமர் ஒக்க வைத்து ...... அருள்வாயே.
கொடிய
ஒரு குக்குடக் கொடிய! வடிவில் புனக்
கொடி படர் புயக்கிரிக் ...... கதிர்வேலா!
குமர!
சமரச் சினக்கும் அரவு அணி அத்தன் மெய்க்
குமர! மகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே!
தட
விகட மத்தகத் தட வரையர் அத்தர் அத்த!
அடல் அனுச! வித்தகத் ...... துறையோனே!
தரு
மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியைத்
தரு திரு இடைக்கழிப் ...... பெருமாளே.
பதவுரை
கொடிய ஒரு குக்குடக் கொடிய
--- கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவரே!
வடிவில் புனக் கொடி படர் புயக் கிரிக்
கதிர்வேலா --- அழகான
தினைப்புனத்து உள்ள வள்ளிநாயகியாகிய கொடி படரும் மலைகள் ஆகிய திருத்தோள்களை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதரே!
குமர --- குமாரக் கடவுளே!
சமரச் சினக்கும் அரவு அணி அத்தன்
மெய்க்குமர --- எதிர்த்தால் சீறிப் பாயும் பாம்பை அணியும் தலைவராகிய சிவபரம்பொருளின்
மெய்ப் புதல்வரே!
மகிழ் முத்தமிழ்ப்
புலவோனே
--- முத்தமிழில் மகிழும் வித்தகரே!
தட விகட மத்தகத்
தடவரையர் அத்தர் அத்த --- அகன்ற அழகிய மத்தகத்தை உடைய, பெரிய மலை போன்ற உருவத்தினை
உடையவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்குத் தந்தை
ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!
அடல் அனுச --- மூத்த
பிள்ளையாரின் வலிமை மிக்க தம்பியே!
வித்தகத் துறையோனே --- ஞான நிலையில்
விளங்குபவரே!
தரு மருவும் --- மரங்கள்
நிறைந்துள்ளதும்,
எத் தலத்தரும் மருவ --- உலகின் எந்தத்
தலத்தில் உள்ளோரும் விரும்பி வந்து அடைய
முத்தியைத் தரு --- முத்தியைத்
தரும் திருத்தலமுமாகிய
திருவிடைக்கழிப்
பெருமாளே
--- திருவிடைக்கழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
படி புனல் நெருப்பு
அடல் பவனம் வெளி --- மண், நீர், தீ, வலிமை கொண்ட வளி, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்கள்,
பொய்க் கருப் பவம் ---
நிலையில்லாத
கருவிலே கூடும் பிறப்பு,
உறை அவத்தை --- அதில் படும் அவத்தை நிலைகள்,
முக் குணம் --- சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள்,
நீடு பயில் பிணிகள் --- வெகு காலமாய்க்
கூடிவரும் நோய்கள்,
மச்சை சுக்கிலம்
உதிரம் அத்தி
--- மூளை, சுக்கிலம், இரத்தம், எலும்பு,
மெய்ப் பசி --- உடலில் தோன்றும் பசி,
படுநிணச் சடக் குடில்பேணும் --- உள்ளிருக்கும்
மாமிசம் ஆகிய இவை யாவும் கூடிய அறிவற்ற சிறு குடிசையாகிய உடம்பைப் பெரிதெனப் போற்றி
உடல் அது பொறுத்து --- இந்த உடம்பைத்
தாங்கி இருந்து,
அறக் கடைபெறு பிறப்பினுக்கு ---
எல்லாம் அற்ற பின்பும் பெறுவதான மிகக் கீழான இந்தப் பிறவியிலே
உணர்வு உடைய சித்தம் அற்று --- நல்லுணர்வு
பொருந்திய சித்தம் இல்லாமல்,
அடி நாயேன் --- நாயினும் கடையான நான்
உழலும் அது கற்பு அல --- அலைந்து திரிவது
உயிருக்கு உறுதி தருவது ஆகாது.
கழல் இணை எனக்கு
அளித்து
--- வீரக் கழல் அணிந்த தேவரீரது திருவடிகளை எனக்கு அளித்து,
உனது தமர் ஒக்க வைத்து
அருள்வாயே
--- உமது அடியார் திருக்கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிவாயாக.
பொழிப்புரை
கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான
சேவலைக் கொடியாக உடையவரே!
அழகான தினைப்புனத்து உள்ள வள்ளிநாயகியாகிய கொடி படரும் மலைகள் ஆகிய திருத்தோள்களை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதரே!
குமாரக் கடவுளே!
எதிர்த்தால் சீறிப் பாயும் பாம்பை
அணியும் தலைவராகிய சிவபரம்பொருளின் மெய்ப் புதல்வரே!
முத்தமிழில் மகிழும் வித்தகரே!
அகன்ற அழகிய மத்தகத்தை உடைய, பெரிய மலை போன்ற உருவத்தினை
உடையவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்குத் தந்தை
ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!
மூத்த பிள்ளையாரின் வலிமை மிக்க தம்பியே!
ஞான நிலையில் விளங்குபவரே!
மரங்கள் நிறைந்துள்ளதும், உலகின் எந்தத் தலத்தில் உள்ளோரும்
விரும்பி வந்து அடைய, முத்தியைத் தரும் திருத்தலமுமாகிய
திருவிடைக்கழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
மண், நீர், தீ, வலிமை கொண்ட வளி, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்கள். நிலையில்லாத
கருவிலே கூடும் பிறப்பு. அதில் படும் அவத்தை நிலைகள். சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள். வெகு
காலமாய்க் கூடிவரும் நோய்கள்.
மூளை, சுக்கிலம், இரத்தம், எலும்பு ஆகிய தாதுக்கள். உடலில் தோன்றும் பசி. உள்ளிருக்கும் மாமிசம் ஆகிய இவை யாவும்
கூடிய அறிவற்ற சிறு குடிசையாகிய உடம்பைப் பெரிதெனப் போற்றி, இந்த உடம்பைத் தாங்கி இருந்து, எல்லாம்
அற்ற பின்பும் மீளவும் பெறுவதான மிகக் கீழான இந்தப் பிறவியிலே நல்லுணர்வு பொருந்திய
சித்தம் இல்லாமல், நாயினும் கடையான நான் இதிலேயே பொருந்தி இருந்து, அலைந்து திரிவது
உயிருக்கு உறுதி தருவது ஆகாது. வீரக் கழல் அணிந்த தேவரீரது திருவடிகளை எனக்கு
அளித்து, உமது அடியார் திருக்கூட்டத்தில்
என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிவாயாக.
விரிவுரை
படி
புனல் நெருப்பு அடல் பவனம் வெளி ---
ஒருவனால்
செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை
இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருள் எல்லாம்
பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு. நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம்
பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள்
அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தான் என்பது புலனாகும். நாம் வாழுகின்ற
இப்பெரிய நிலவுலகமே மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின்
சேர்க்கையால் உருவானது. எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.
உலகில்
எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன.
அப்பகுதிகள் எல்லாம் சேர்ந்த காரியப் பொருள் தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த
சடப்பொருள்கள் அனைத்தையும் இரண்டு வகையுள் அடக்கி விடலாம். பல்வேறு பிறவிகளாகக்
காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் என்பன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப்
பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர்
முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம்
இரண்டாம் வகையில் அடங்கிவிடும்.
முதல்
வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இருவகைப்படுத்திக்
கூறலாம் தானே. எனவே முன்னர் கூறிய இருவகையை இப்படி மூவகைப்படுத்திக் கூறலாம்.
அதாவது ஆண் உடம்பு பெண்ணுடம்பு,
அவையல்லாத
பிற சடப் பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி
விடும்.
காரியப்
பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப்
பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன்
மூலப் பொருள். மூலப் பொருளை முதற்காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை எல்லாம்
நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற்காரணம்
எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன.
அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம்
தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப்
பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள். காரியமாகிய உலகுக்கும் ஒரு
முதற் காரணம் இருத்தல் வேண்டும். அம்முதற் காரணமாகிய மூலப் பொருளே மாயை என்பது.
பூதாதி
அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன்
பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள்
தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி
அகங்காரம் எனப்பட்டது. இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில்
தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே
பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான
பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம், மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப்
பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.
தன்மாத்திரை
என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். அதனளவில் நிற்றல் என்றால் என்ன? பின்வருமாறு அதனை விளக்கலாம். ஓசையை
நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை
என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை
உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை
என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது
வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு
வகையால் உணர்கின்றோம். அல்லாமல் அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம்
உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே,
தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப்
புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை.
ஏனையவையும் இவ்வாறே.
ஓசை
முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை
உண்டு. அதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில்
நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும்.
சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும்.
அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன்
மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.
ஓசை
முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும்
அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின்
குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும்.
தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை
செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும்
குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும்
அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும்.
தன்மாத்திரைகள், பூதங்களும்
முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள்
அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.
தன்மாத்திரைகளிலிருந்து
பூதங்கள் தோன்றும் எனக் கண்டோம். அப்பூதங்கள் தோன்றும் முறையைக் காண்போம். சத்தம்
முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும்.
சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும்.
ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். இரசத்திலிருந்து நீர் தோன்றும்.
கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.
காரணத்தின்
தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப்
பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக்
கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின்
குணமாய் நிற்கும். ஒளி நெருப்பின்
குணமாய் நிற்கும். சுவை நீரின் குணமாய்
நிற்கும். நாற்றம் நிலத்தின்
குணமாய் நிற்கும்.
தன்மாத்திரைகளைப்
பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அதாவது, சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய்
நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய்
நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும்
உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும்
உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும்
உடையதாய் நிற்கும்.
காரணங்களாகிய
தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும்,
இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம். ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய
பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும்.
அதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே
உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு
குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை,
ஊறு
ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை
உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை
மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப்
பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை
பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.
பூதங்கள்
இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
தொழிலையும் உடையது. பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகையான
எண்ணற்ற பொருள்களும். பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய
இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாய் இருத்தல் தெளிவு. இவற்றிற்கு எல்லாம்
முதற்காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம்.
தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய
உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி
மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு
அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற
முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும்
தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின்
உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை.
வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது
பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய
தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.
தத்துவம்
என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய்
நின்று உதவுவதே தத்துவம் ஆகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய
பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக்
கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும்
பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு கருவியாய் நின்று உதவுகின்றன.
தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய்
அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை
இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும்.
தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன.
தத்துவங்களின்
கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும்
அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம்.
அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை.
பல்வேறு
வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின்
புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை
தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.
பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.
பிருதிவி
என்னும் மண்ணின் கூறு
|
5
|
எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு
|
அப்பு
என்னும் நீரின் கூறு
|
5
|
சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சுரோணிதம்
|
தேயு
என்னும் தீயின் கூறு
|
5
|
இருதயத்தில்
வெப்பம், வயிற்றில் பசித் தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம்
|
வாயுவின்
கூறு
|
10
|
உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள்
|
ஆகாயத்தின்
கூறு
|
10
|
அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள்
|
ஞானேந்திரியங்களின்
விடயங்கள்
|
5
|
சத்தம்
என்னும் ஓசை,
பரிசம்
என்னும் ஊறு,
ரூபம்
என்னும் ஒளி,
ரசம்
என்னும் சுவை,
கந்தம்
என்னும் நாற்றம்.
|
கன்மேந்திரியங்களின்
விடயங்கள்
|
5
|
வசனம்
(பேச்சு), கமனம் (நடை), தானம் (கொடை), விசர்க்கம் (போக்கு), ஆனந்தம் (இன்பம்)
|
அகங்காரத்தின்
கூறு
|
3
|
தைசதம், வைகாரியம், பூதாதி
|
மனத்தின்
கூறு
|
5
|
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் (மாற்சரியம் குரோதத்துள்
அடங்கும்)
|
குணத்தின்
கூறு
|
3
|
சத்துவம், இராசதம், தாமதம்
|
வாக்கு
|
4
|
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி
|
இவ்வாறு
பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக
நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும்.
முதற்காரணமாகிய
பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன
போகங்களும் முக்குணமயமாய் இருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குண வயப்பட்டு
இன்ப துன்ப மயக்க உணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டால்
உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும்
தன்மையுடைய ஒரு பெண்மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை
மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது
என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப்
போக சாதனமும், போக்கியமுமாய்
அமைகின்றன.
இதுகாறும் நாம் விரிவாக அறிந்த
செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். உலகுக்கு முதற்காரணம் மாயை. அது
சுத்த மாயை, அசுத்த மாயை என்
இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய்
இருப்பது இப்பிரகிருதியே ஆகும்.
பிரகிருதியில்
இருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும்.
பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.
எனவே, இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால்
ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது.
நிலைபேறு இல்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது.
ஐந்துவகை
ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற
குமிழி என நிற்கின்றது என்ன, நான்
அறியாத காலம் எல்லாம்
புந்திமகிழ்
உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே
போந்தநெறி என்று இருந்தேன்,
பூராயம்
ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை
போனவழி தெரியவில்லை,
எந்தநிலை
பேசினும் இணங்கவிலை, அல்லால்
இறப்பொடு பிறப்பை உள்ளே
எண்ணினால், நெஞ்சு அது பகீர் எனும், துயில் உறாது
இருவிழியும், இரவுபகலாய்ச்
செந்தழலின்
மெழுகு ஆனது அங்கம், இவை என்கொலோ?
சித்தாந்த முத்திமுதலே!
சிரகிரி
விளங்கவரு தட்சிணா மூர்த்தியே!
சின்மய ஆனந்தகுருவே. --- தாயுமானவர்.
ககனமும், அநிலமும், அனல், புனல், நிலம், அமை
கள்ளப் புலால் ...... கிருமிவீடு,
கனல்
எழ மொழி தரு சினம் என, மதமிகு
கள்வைத்த தோல்பை ...... சுமவாதே,
யுக
இறுதிகளிலும் இறுதி இல் ஒருபொருள்
உள்ளக் கண் நோக்கும் ...... அறிவுஊறி,
ஒளி
திகழ் அருஉரு எனும் மறை இறுதியில்
உள்ள அத்தை நோக்க ...... அருள்வாயே. ---
திருப்புகழ்.
பொய்யான
உடம்பை மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி
சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில்
கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர். இது பரிதாபத்திற்கு
உரியது.
காடுவெட்டி
நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப்
போயினபின் எதுபுரிவீர்? எங்கே
குடியிருப்பீர்? ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே
பாடுபட்டீர்!
பயன்அறியீர்! பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்!
பட்டதெலாம் போதும். இது பரமர் வரு தருணம்.
ஈடுகட்டி
வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.
எண்மைஉரைத்தேன் அலன், நான் உண்மை உரைத்தேனே.
ஆற்றுவெள்ளம்
வருவதன்முன் அணைபோட அறியீர்,
அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,
கூற்று
வருங்கால் அதனுக்கு எது புரிவீர்,
ஐயோ!
கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,
வேற்று
உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,
வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,
சாற்று
உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம்இது, சத்தியம், சிற்சத்தியைச் சார்வதற்கே.
பொய்
விளக்கப் புகுன்றீர், போது கழிக்கின்றீர்,
புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,
ஐவிளக்கு
மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,
கைவிளக்குப்
பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,
மெய்விளக்கும்
எனது தந்தை வருகின்ற தருணம்
மேவியது, இங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.
என்று
உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்
பொய்க்கூடு
கொண்டு புலம்புவனோ, எம்இறைவர்
மெய்க்கூடு
சென்று விளம்பிவா பைங்கிளியே. --- தாயுமானவர்.
பொய்க்
கருப் பவம் ---
பொய்
என்பது நிலையில்லாமையைக் குறிக்கும்.
நிலையானது
உண்மை.
நிலையில்லாதது
பொய்.
பவம்
- பிறப்பு.
கருவில்
உருவாகி வரும் பிறப்பு நிலையில்லாதது.
தோன்றி
அழியும் தன்மையை உடையது.
உறை
அவத்தை
---
அவத்தை
என்னும் தமிழ்ச் சொலு வடமொழியில் அவஸ்தை எனப்படும்.
அவத்தை
என்னும் சொல்லுக்கு நிலைகள் என்று பொருள்.
உயிர் அனுபவிக்கும் நிலைகள் ஐந்து.
கடவுளைப்
போல உயிரும் அநாதியானது. அதாவது அழிவில்லாதது
என்பது பொருள். கடவுள் இல்லையென்று மறுப்பவர்கள்
உயிர் இல்லை என்று உறுதியாக மறுப்பதில்லை.
எனவே
உயிர் உள்பொருள் ஆகும். இதனைப் பசு என்ற சொல்லால் குறிப்பர். பசு என்பது கட்டுப்பட்டிருப்பது
என்ற பொருளைத்தரும். வீட்டுத் தொழுவத்தில்
பசு எவ்வாறு கயிற்றால் கட்டப்படுகிறதோ
அதுபோலப்
பாசம் என்ற மலங்களால் கட்டப்படுவதால் உயிர், பசு என
அழைக்கப்படுகிறது. உயிர் என்பது எது என்ற கேள்வியைச் சித்தாந்தம்
கேள்வியாகக் கேட்டு, இறுதியில் உயிர் என்பது உணர்தல்
தன்மைத்து என்ற முடிவைக் கூறுகிறது. சிறிது விளக்கமாகச்
சொன்னால் உயிரானது தானே அறிந்தும் அறிவித்தும் நிற்பதுமாகிய கடவுளும் அன்று; அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று. அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருளாகும். அறிவே வடிவாகிய கடவுள் சித்துப்
பொருள் என்றும், அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள் அசித்து என்றும் கூறப்படும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகிய உயிர் சதசித்து என்று கூறப்படும்.
உயிர்கள்
எண்ணற்றவை ஆகும். அவை யாராலும் படைக்கப்பட்டதும்
இல்லை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை, அழிவும்
இல்லை. தானே உணர்கின்ற ஆற்றல் இல்லாதது. அறிவிக்க
அறியும் அறிவுடையதால் சிற்றறிவு என்றும் கூறப்படும். இவ்வுயிரைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று குறிப்பிடுவதும் உண்டு.
உயிரின்
நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர். அவத்தை
என்ற சொல்லுக்கு நிலை என்பது பொருள். இந்த நிலைகளைக்
"காரண அவத்தை" என்றும்,
"காரிய
அவத்தை" என்றும் இருவகையாகக் கூறுவர்.
காரண அவத்தை மூன்று
வகைப்படும்.
அவை கீழ்வருமாறு கூறப்படுகின்றன.
(1)
கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவல அவத்தை எனப்படும்.
(2)
சகல அவத்தை : மாயையினால் உடம்பைப் பெற்று, உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தையாகும்.
(3)
சுத்த அவத்தை : பல்வேறு பிறப்புக்களை எடுத்துப் படிப்படியாக
முக்திப் பேற்றை அடைந்து, இறைவனின் திருவருளுக்கு
உரியதாகும் நிலை சுத்த அவத்தை
எனப்படும்.
இம்மூன்று
நிலைகளில் உயிரானது நிற்பது கூறப்படுவதால்
காரண
அவத்தை ஆயிற்று.
அடுத்து, காரிய அவத்தை என்பது உயிர் செயல்படும் நிலையைக்
கூறுவதாகும். செயல்படுவது கேவலம் முதலிய மூன்றிலும்
நிகழும். அவ்வாறு செயல்படும் பொழுது ஒவ்வொரு நிலையிலும்
ஐந்தாகச் செயல்படும். எனவே கேவலம் முதலிய மூன்றிலும்
ஐந்து செயல்நிலைகள் அமைந்து பதினைந்து காரிய அவத்தைகள்
ஆகின்றன. பொதுவான ஐந்து காரிய அவத்தைகள் கீழ்வருமாறு
:
1)
நனவு : இது வடமொழியில் சாக்கிரம் என்ற சொல்லப்படும். இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
2)
கனவு : சொப்பனம் என்று கூறப்படும். இந்நிலையில்
கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
3)
உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
4)
பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும். இந்நிலையில்
உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
5)
உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும். இந்நிலையில்
உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
கேவல
நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை
என்பர்.
சுத்த நிலையில் செயல்படும் பொழுது மேலாலவத்தை
என்பர்.
சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை
என்பர்.
இவ்வாறு
கடவுளைப் போல அநாதியாய்த் தோன்றி என்றும்
உள்பொருளாகி எண்ணற்றவைகளாய் விளங்கி, சார்ந்ததன் வண்ணமாகி, உணர்த்த உணரும் தன்மை உடையதாய், மூன்று நிலைகளில் நின்று, ஐந்துவகை நிலையில் செயல்படுவது உயிராகும்.
அளவில்லாத
உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உயிரின்
அடிப்படைநிலை பாசங்களோடு விளங்குவதாகும். அப்பாசங்கள்
மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பன.
இம்மூன்று பாசங்களோடு சேர்ந்திருப்பதைக் கொண்டு உயிர்கள்
மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. ஆணவத்தோடு மட்டும் நிற்கும் பொழுது விஞ்ஞானகலர் என்று
அழைக்கப் படும். ஆணவம், கன்மம் என்ற இரண்டோடு நிற்கும்பொழுது பிரளயாகரர் என்று அழைக்கப்படும். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களோடு நிற்கும் பொழுது சகலர் என்று அழைக்கப்படும். இவ்வாறு மூன்று வகைப்பட்ட உயிர்கள் இன்ப, துன்ப, பிறப்பு, இறப்புகளுக்கு ஆட்பட்டு உழல்வது செயற்கைநிலை
என்று கூறப்படும். இறைவனின்
அருளுக்கு ஆட்பட்டு மாறாத பேரின்பத்தைப் பெறுதல்
இயற்கைநிலை எனப்படும்.
முக்
குணம்
---
பிரகிருதி
மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத்
தன் உள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்பு நிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும்
சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி
நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது
பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில்
அது மூலப்பகுதி எனப்படும்.
பிரகிருதி
மாயையிலிருந்து ஆன்ம தத்துவங்கள்
இருபத்துநான்கும், அந்தக்கரணங்கள் நான்கும்
தோன்றும்.
பிரகிருதியில்
இருந்து உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக்
கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அவ்வகக்கருவிகள்.
அவை தோன்றும் முறையைப் பார்ப்போம்.
சித்தம்
முக்குணங்களும்
வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள்
சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை
வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு
அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும்
சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே
சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய்
அமையும்.
புத்தி
முக்குணங்களும்
சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில்
சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். இங்கே ஒன்றைச்
சொல்ல வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப்
பரிணாமம் அடைகிறது என்பது கருத்தாகும். பரிணாமாவது மாற்றம் இதுபற்றி ஓர் ஐயம் எழக்கூடும்.
அதாவது குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும் எனப் பார்த்தோம். இப்பொழுது கூறியபடி
குணதத்துவம் புத்தியாய்ப் பரிணமிக்கும் என்றால் அவ்வாறு புத்தியாய்ப் பரிணமித்த பின்பு
அக்குணதத்துவம் தன்நிலையில் நின்று தனக்குரிய செயலை எப்படிச் செய்யும்? இதற்குரிய விடையைக் காண்போம்.
பரிணாமத்தில்
இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம்
எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத்தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம்
ஏகதேச பரிணாமம் எனப்படும்.
பிரகிருதியிலிருந்து
காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அல்ல. வெண்ணெயில் புழுத் தோன்றுவது
போல ஏகதேச பரிணாமமே. ஆகையால் ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப்
பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே
நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப்
பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை.
இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.
முக்குணங்களும்
அறவே தோன்றாத நிலையைப் பார்த்தோம். அதுவே பிரகிருதி.
முக்குணங்களும்
சமமாய்த் தோன்றிய நிலையைப் பார்த்தோம். அதுவே குண தத்துவம்.
அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை
குறைந்தும் உள்ள நிலையைப் பார்த்தோம். அதுவே புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களிலெல்லாம்
இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும். ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவிற் கொள்ள
வேண்டும். இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்
இராசத குணம் வன்மை. செயலூக்கம்,
கொடுமை
முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்,
தாமத
குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும். சாத்துவிக
குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும். குண
தத்துவத்தில் புத்தி தோன்றும் என அறிந்தோம். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் இஃது
இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத்
தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடையதாய் இருத்தல் நோக்குதற்கு
உரியது.
அகங்காரம்
புத்தி
தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக்கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும்
ஏனை இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். யான் இதனை அறிவேன். யான் இதனைச் செய்வேன்.
யான் இதனை நுகர்வேன் என்றாற் போல எச்செயலிலும் ஆன்மா முனைத்து எழுவதற்கு இவ்வகங்காரமே
கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்கு உடையதாய்
இருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித்தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய்
நிற்கிறது.
அகங்காரம்
குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன. சாத்துவிக குணக் கூறு
தைசத அகங்காரம் என்றும், இராசத குணக்கூறு வைகாரிக
அகங்காரம் என்றும், தாமத குணக்கூறு பூதாதி
அகங்காரம் என்றும் பெயர் பெறும்.
மனம்
அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும்
முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றும். இவ்வந்தக்கரணம் புறத்தே உள்ள பொருளைச்
சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றனோடு இம்மனமும் சேர, அந்தக்கரணம் நான்கு ஆயினது.
நீடு
பயில் பிணிகள்
---
பிணி
- பிணிப்பதால் நோய் என்பது பிணி எனப்பட்டது.
நோய்
- துன்பம்.
உலகிலே
உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று
உள. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி
உய்ந்தவர் மிகச் சிலரே. அந்த நோய்களின் பேர் யாது? அதனைத் தடுக்க உலகினர் புரியும்
செயல்கள் எவை? அவைகளை விலக்கச்
செய்யவேண்டியவை எவை?
எல்லா
உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசி, காமம், பிறவி என அறிக.
பசி
உடம்பைப் பற்றியது.
காமம்
உள்ளத்தைப் பற்றியது.
பிறவி
உயிரைப் பற்றியது.
பசி
நோய்
---
பசிநோய்
செய்யும் கொடுமைகள் தாம் எத்தனை ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்ல உரையில் அடங்கா.
பசி
நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள்தாம் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத்
தாங்காமல் உணவை என்ன என்ன உருவில் உட்செலுத்துகின்றனர். பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து
போகுமாம். மானம், குலம், கல்வி, வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது
பசிப்பிணியால்.
மானம்
குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப்
பறந்து போம். --- நல்வழி.
பசி
நோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன? பசி நோய் மிக்கபோது
கண்ணொளி மங்குகின்றது. கரசரணாதிகள் தடுமாறுகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம்
செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில்
மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை
விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர்.
சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.
பசி
நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத்
தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது
எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள். அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.
எட்டரும்
பொருளே, திருச்சிற்றம்பலத்தே
இலகிய இறைவனே, உலகில்
பட்டினி
உற்றார் பசித்தனர் களையால்
பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய
பிறரால் கேட்டபோது எல்லாம்
உளம் பகீர்என நடுக்குற்றேன்
இட்ட
உவ்வுலகில் பசிஎனில் எந்தாய்
என்உளம் நடுங்குவது இயல்பே. ---
திருவருட்பா.
பசி
நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள்.
பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி"
என்றார்.
அற்றார்
அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான்
பொருள் வைப்புஉழி. --- திருக்குறள்.
பசியைப்
பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும்.
ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.
ஆற்றுவார்
ஆற்றல் பசியாற்றல், அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின்.
என்று
அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.
இத்தகைய
பொல்லாத பசியை முருகவேளுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி உரைத்து
மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர் அருணகிரிநாதர்...
குகனெ
குருபரனே என நெஞ்சில்
புகழ அருள்கொடு நாவினில் இன்பக்
குமுளி சிவ அமுது ஊறுக உந்திப் ......
பசியாறி.... --- திருப்புகழ்.
யாவராலும்
மாற்றமுடியாத பிறவிப்பிணியை மாற்றும் மருந்து திருவேலிறைவன் திருநாமங்கள் என அறிக.
காம
நோய் ---
இக்
காம நோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள
எண்பத்து நான்கு நூறாயிர யோனிபோதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. ஆனை மேல்
பவனி வரும் இந்திரன், இதனால் பூனையாகிப்
பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான். இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும்
விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான். கலைகளை ஆய்ந்தாரும், பகைவரைக் காய்ந்தாரும் காமநோயால்
வீந்தார்கள். இதன் வலிமைதான் என்னே?
முடி
துறந்தான் ஒருவன். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர்
பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக
உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாது, புன் மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல்
மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.
உடம்பினால்
ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழ்
உத்தமனைக்
காணும் பொருட்டு என்பதனை அறியாமல்,
உடம்பையும்
பாழ்படுத்துகின்றனர். காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான்.
காகாசுரன் கண்ணிழந்தான்.
இந்
நோயை அறவே அகற்றினார் உளரோ? உளர்.
வீடுமரும், அநுமரும், குமரகுருபரரும், சிவப்பிரகாசரும் என்க.
அருணகிரிநாதர்
இக் காமநோயைக் கடிந்தனர். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய
திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என உணர்க.
கடத்தில்
குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்
திடத்தில்
புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்
படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்
தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. --- கந்தர் அலங்காரம்.
பிறவிப்
பிணி
---
இந்த
நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை
பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம்
நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில்
நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.
எண்ணிலாத
நெடுங்காலம்
எண்ணிலாத பலபிறவி
எடுத்தே
இளைத்து இங்கு அவைநீங்கி
இம்மானிடத்தில் வந்து உதித்து,
மண்ணில்
வாழ்க்கை மெய்யாக
மயங்கி உழன்றால்அடியேன்உன்
மாறாக்
கருணை தரும்பாத
வனசத் துணைஎன்று அடைவேனோ
கண்ணின்
மணியே உயிர்க் கனியே
கருணைப் பயுலே சுகக் கடலே
கச்சித்
தாய் உச்சியை மோந்து
கண்ணோடு அணைக்கும் திருத்தாளா
புண்ணியோர்
எண்ணிய கரும்பே
பொழிமும் மதவாரண முகத்தோன்
பொற்புஆர்
துணையே அற்புதனே
போரூர் முருகப் பெருமாளே. --- திருப்போரூர்ச்
சந்நிதி முறை.
பிறப்பு
என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள்
காண்பது அறிவு.
என்பது
பொய்யாமொழி. செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது
எது? அதுதான் முருகனுடைய
திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும், அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள்.
"பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய்”. "செத்துப் பிறக்கின்ற
தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளை உன்னி உணர்க.
அநுபவ
சித்த பவக்கடலில் புகாது, எனை
வினவி
எடுத்து அருள் வைத்தகழல் க்ருபாகரன்...--- பூதவேதாள வகுப்பு.
உறவுமுறை
மனைவிமகவு எனும்அலையில் எனதுஇதய
உருவுடைய
மலினபவ சலராசி எறவிடும் உறுபுணையும்....--- சீர்பாத வகுப்பு.
பலகாலும்
உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துஉடன் வாழ ...... அருள்வேளே,
பதியான
திருத்தணி மேவு சிவலோகம் எனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே. --- (நிலையாத) திருப்புகழ்.
எனவே, முருகவேளின் திருநாமத் துதியினால்
உடல்பிணியாகிய பசியையும், திருவடித்
தியானத்தினால் உள்ளப் பிணியாகிய காமப் பிணியையும், திருவடி தியானத்தினால் உயிர்ப் பிணி
ஆகிய பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.
மச்சை
சுக்கிலம் உதிரம் அத்தி மெய்ப் பசி படுநிணச் சடக் குடில்பேணும் உடல் அது பொறுத்து, அறக் கடைபெறு
பிறப்பினுக்கு உணர்வு உடைய சித்தம் அற்று, அடி நாயேன் உழலும் அது கற்பு அல ---
மூளை, சுக்கிலம், இரத்தம், எலும்பு முதலாகிய தாதுக்களால் ஆன இந்த உடம்பு. பசியால் இது
வாடும். பசி நோய் குறித்து மேலே பார்த்தோம்.
இந்த
உடம்பு எந்நேரமும் அழிந்து போக உள்ள நிலையில்லாத குடிசை போன்றது. இந்த உடம்பைப்
பேணுவதையே மிகவும் விரும்பி, இரையையே தேடி உழன்று, இறையைத் தேடும் சித்தம்
அற்று,
மீண்டும்
மீண்டும் பிறந்து இறந்து உழலுகின்ற நிலையானது உயிருக்கு உறுதியேத் தருவது அல்ல.
எனவே,
அந்த
புத்தியை மாற்றவேண்டும்.
கழல்
இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே ---
தமர்
- உறவினர்.
இறைவனுக்கு
உறவு ஆனவர், அவனிடத்துப் பொய்யாத
பத்தியைச் செய்து, அவனது திருடியை
அடைந்தவர் ஆவர்.
"பத்தி
செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்" இறைவன் என்றார் மணிவாசகப் பெருமான்.
அடியார்கள், தம்
மொழி உயிர் அறிவு உணர்வு என்ற அனைத்தையும் முருகன் திருவடியில் மலர்களைப் போல்
அர்ச்சித்து விடுவார்கள்.
கண்ணில்லா பசு பசுமந்தையில் சேர்ந்தவுடன் சுற்றியுள்ள மாடுகளுடன் உரர்ய்ந்து
ஊர் புகுமாப் போல், ஞானக்
கண்ணில்லாத நாம் அடியவர் குழாத்துள் கூடிவிடுவோமாயின், அடியவர் சேர்க்கை நம்மை முக்தி உலகில் சேர்க்கும் என உணர்க.
சூரில் கிரியில் கதிர் வேல்எறிந்தவன் தொண்டாகுழாம்
சாரில் கதியின்றி வேறுஇல்லை காண், தண்டு தாவடிபோய்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி எனறுஅறி யாதபாவி நெடுநெஞ்சமே. ---
கந்தரலங்காரம்.
“துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டுகண்டாய்” --- தாயுமானார்.
"பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்" --- அபிராமி பட்டர்.
பத்தி
செய்வது பலவிதம் ஆகும். திருத்தல யாத்திரை, தீர்த்த யாத்திரை சென்று வருவதையும் குறிக்கும். அருள் நூல்களையும் நீதி
நூல்களையும் ஓதி மெய்யறிவு பெறுவதும் வேண்டும். அது குருமுகமாக அமைவதே சிறந்தது.
சற்குருவின் பெருமையைத் திருமந்திரம் கூறுமாறு காண்க...
தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு,
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து, தத்துவ அதீதத்துச் சார் சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.
இப் பாடலின் பொழிப்புரை : சற்குருவே
தன்னை அடைந்த மாணாக்கர்க்குத் திருவருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனை அடைந்த
மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை
அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு
வார்த்தையாலும், திருவடி
சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்து விடுவான்.
எனவே, சற்குருவின் பெருமை அவரது செயலால் விளங்கும்
என்பதும், அது வெற்று வேடத்தால் மட்டுமே விளங்காது
என்பதும் அறியப்படும்.
தவிர வைத்தான் வினை, தன் அடியார் கோள்
தவிர, வைத்தான் சிரத்தோடு தன் பாதம்,
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்,
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
இப் பாடலின் பொழிப்புரை : (சற்குரு)
தன் அடியார் வினை நீங்கவும், ஒன்பது கோள்களின் தீங்கு நீங்கவும், யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு
பொருந்துமாறு வைத்தருளினான்.
எனவே, சற்குரு
ஒருவனுக்கு இறையருளால் வாய்க்கவேண்டும். அதற்காகத்தான், தீர்த்த யாத்திரையும், தலயாத்திரையும் மேற்கொள்ளுவது. "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு வார்த்தை
சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்னும் தாயுமான அடிகளின் அருள்
வாக்கு உணரத்தக்கது.
குருமுகமாக இருந்து அருள் நூல்களையும், நீதி நூல்களையும் ஓதித் தெளியவேண்டும். ஓதுவது என்பது ஒழியாமல்
நிகழவேண்டும்.
"ஓதுவது ஒழியேல்" என்ற ஔவையார் திருவாக்கின்படி, அறநூல்களை ஓயாது ஓதுதல் வேண்டும். அங்ஙனம்
ஓதுங்கால் குற்றமற ஓதுதல் வேண்டும். குற்றம் என்பது என்னை?
ஐயம், திரிபு, மயக்கம் என குற்றங்கள் மூன்று என உணர்க.
பொருளினிடத்தில் உண்டா, இல்லையா என்று ஐயுறுதல், ஒன்றை ஒன்றாக மாறுபட அறிதல், உண்மை அறியாமல் மயங்குதல். இந்தக் குற்றங்கள் கடிந்து கற்றல் வேண்டும்.
இதனையே, திருவள்ளுவர், "கற்க. கசடுஅறக் கற்க. கற்பவை கற்க. கற்றபின்
அதற்குத் தக நிற்க" என்று கூறுகின்றார்.
கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
ஓதுவதன் பயன் ஒழுக்கமுடைமை என்று உணர்க.
ஒழுக்கமில்லாதார் ஓதியும் பயனில்லை என உணர்க.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ---
உலகநீதி.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.---
கொன்றைவேந்தன்.
ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை.. --- கொன்றைவேந்தன்.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். --- கொன்றைவேந்தன்.
கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை. --- முதுமொழிக் காஞ்சி.
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
பேருரை கண்டு அறியாது தலைச்சுமை
ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,
ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்
பொருள் சுமந்த அறிவிலோனும்,
காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
கழுதைக்குஒப் பாவர் தாமே. ---
தண்டலையார் சதகம்.
ஓதுகின்ற நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுரணமி, அமாவாசை, பிரதமை.
எனவே மாதத்தில் எட்டு நாள்கள் ஓதக் கூடாது.
அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா
வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை. ---
ஔவையார்.
ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும், தான்அடங்காப்
பேதையில் பேதையர் இல். --- திருக்குறள்.
கொலை, களவு முதலிய
பெரும் பாதகங்களை ஒருவன் செய்யாது ஒழுகுதல் நன்னெறி ஆகும். அதுவே அறமும் ஆகும்
என்பதால், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்"
என்றார் திருவள்ளுவ நாயனார். மனமாசு அற்று உயிர்கள் பால் கருணை பூண்டவர்கள், உலகமக்கள் எக்காலத்திலும் இன்புற்றிருக்க எண்ணுவார்கள். "எல்லா
உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே"
எனாறர் தாயுமானார்.
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவை உட்பகை என்பர் பெரியோர்.
உள்ளத்தில் மறைந்து உள்ள இந்தப் பகைகள் ஆன்ம லாபத்தைக் கெடுத்து, உயிரைப் பிறவிக் குழியில் வீழ்த்துவன.
அடியவர் உள்ளத்தே ஆண்டவன் குடிகொண்டு இருப்பான். எனவே, அடியாரை வழிபட்டால் ஆண்டவனையே வழிபட்டதாகும். அடியார் வழிபாடு மிகுந்த
நன்மையை அளிக்கும். அடியார்க்கு அடியாரையும் வழிபடலாம் என்பதால், "அடியார்க்கு அடியேன்" என்றும் "அடியார் அடியார்க்கும்
அடியேன்" என்றும் திருத்தொண்டத் தொகை அறிவுறுத்துகின்றது.
பின் வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க...
மிடிஇட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம் எனவும்
மெய் எலாம் உள் உடைந்து,
வீறிட்ட செல்வர்தம் தலைவாயில்
வாசமாய்
வேதனைகள் உற, வேதனும்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான், பாவிநான்
தொடர்இட்ட தொழில்கள்
எல்லாம்
துண்டிட்ட சாண் கும்பியின்
பொருட்டு ஆயது, உன்
தொண்டர்பணி செய்வது என்றோ?
அடிஇட்ட செந்தமிழின் அருமை இட்டு ஆரூரில்
அரிவை ஓர் பரவைவாயில்
அம்மட்டும் அடிஇட்டு நடை நடந்து
அருள் அடிகள்
அடிஈது முடிஈது என
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே!
வளமருவு தேவைஅரசே!
வரைராசனுக்கு இருகண் மணியாய்
உதித்த, மலை
வளர்காத
லிப்பெண்உமையே. --- தாயுமானார்.
பூரணி,
புராதனி,
சுமங்கலை,
சுதந்தரி,
புராந்தகி, த்ரியம்பகி, எழில்
புங்கவி, விளங்கு சிவசங்கரி, சகஸ்ரதள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி,
மனாதீத நாயகி,
குணாதீத
நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியர்
நாமமே
நான் உச்சரிக் கவசமோ?
ஆர் அணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ,
அகிலாண்ட கோடிஈன்ற
அன்னையே! பின்னையும் கன்னி என
மறைபேசும்
ஆனந்த ரூபமயிலே!
வார் அணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவைஅரசே!
வரைராசனுக்கு இருகண் மணியாய்
உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. ---
தாயுமானார்.
பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்து இரப்
பார்முகம் பார்த்து இரங்கும்
பண்பும், நின்
திருவடிக்கு அன்பும், நிறை
ஆயுளும்,
பதியும், நல்நிதியும், உணர்வும்,
சீர்கொண்ட நிறையும், உள்பொறையும், மெய்ப்புகழும், நோய்த்
தீமைஒரு சற்றும் அணுகாத்
திறமும்,மெய்த்
திடமும், நல்இடமும், நின்அடியர் புகழ்
செப்புகின்றோர் அடைவர்காண்;
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும், மயிலும், ஒரு
கோழிஅம் கொடியும், விண்ணோர்
கோமான்தன் மகளும்,ஒரு மாமான்தன் மகளும்,மால்
கொண்டநின் கோலம் மறவேன்,
தார்கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே! --- திருவருட்பா
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ?
வானைஒரு மான் தாவுமோ?
வலிஉள்ள புலியை ஓர் எலிசீறுமோ? பெரிய
மலையை ஓர்ஈ சிறகினால்
துன்புற அசைக்குமோ? வச்சிரத் தூண்ஒரு
துரும்பினால் துண்டம் ஆமோ?
சூரியனை இருள் வந்து சூழுமோ? காற்றில் மழை
தோயுமோ? இல்லை, அதுபோல்
அன்புஉடைய நின்அடியர் பொன் அடியை உன்னும் அவர்
அடிமலர் முடிக்கு அணிந்தோர்க்கு,
அவலம் உறுமோ? காமம்
வெகுளி உறுமோ? மனத்து
அற்பமும் விகற்பம் உறுமோ?
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே! --- திருவருட்பா.
கொடிய
ஒரு குக்குடக் கொடிய ---
கொடுமை
வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவர் முருகப் பெருமான்.
சேவல்
கொடியானது நிக்கிரகம் அனுக்கிரகம் என்னும் இரு அருட்செயல்களைப் புரியவல்லது.
நிக்கிரகம்
செய்வதால் கொடுமை வாய்ந்தது என்றார்.
அனுக்கிரகம்
புரிவதால் ஒப்பற்றது என்றார்.
பின்வரும்
சேவல் விருத்தப் பாடல் இதனைத் தெளிவாக்கும்.
"உலகில்அனு
தினமும்வரும் அடியவர்கள் இடர்அகல,
உரிய பரகதி தெரியவே,
உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும்,
இருள்கள் மிடி கெட அருளியே,
கலகம் இடும் அலகை குறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினம் உற வரில், அவைகளைக்
கண்ணைப் பிடுங்கி, உடல் தன்னைப் பிளந்து, சிற
கைக்கொட்டி நின்று ஆடுமாம்,
மலைகள்நெறு நெறுநெறென, அலைகள் சுவறிட,அசுரர்
மடிய, அயில் கடவுமுருகன்
மகுடவட கிரிஅலைய, மலையும் முலை வனிதைகுற
வரிசையின மகள்அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவவிரகில்
சிரமிசையில் வெகுசினமொடு அடி உதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே. --- சேவல் விருத்தம்.
உரிய பரகதி தெரியவே,
உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும்,
இருள்கள் மிடி கெட அருளியே,
கலகம் இடும் அலகை குறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினம் உற வரில், அவைகளைக்
கண்ணைப் பிடுங்கி, உடல் தன்னைப் பிளந்து, சிற
கைக்கொட்டி நின்று ஆடுமாம்,
மலைகள்நெறு நெறுநெறென, அலைகள் சுவறிட,அசுரர்
மடிய, அயில் கடவுமுருகன்
மகுடவட கிரிஅலைய, மலையும் முலை வனிதைகுற
வரிசையின மகள்அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவவிரகில்
சிரமிசையில் வெகுசினமொடு அடி உதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே. --- சேவல் விருத்தம்.
இந்தப்
பூவுலகில், முருகப் பெருமானின்
அடியவர்களுக்கு, நாள்தோனும் உண்டாகும் இடர்கள் நீங்கும்படியும், அவர்கள் அடைய வேண்டிய இலட்சியமாகிய பரகதியை உதவவும், படத்தில் இரத்தினத்தைத் தாங்கி
இருக்கும் நாகங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழிந்து ஒழியவும், அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து
ஒழியும்படி, அருள் செய்யவும், தொல்லைகள் செய்துவரும், பேய்களும் குட்டிச் சாத்தான்களும், கொடிய பாம்புகள் மிகுந்த பலத்துடன், பெரும் துன்பத்தை தர வந்தால், அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும் அவற்றின் உடல்களைப்
பிளந்தும், தனது சிறகுகளைக்
அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடுகின்ற அது, உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும், கடல் வற்றி வறண்டு போகவும், அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும், வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமான், சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி எதிர்த்து போர் செய்கின்ற, தன பாரங்களை உடைய பெண்ணாகிய, புகழ் மிக்க வேடர் குலத்தில்
பிறந்த வள்ளிப் பிராட்டியையும், கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய
தேவயானை அம்மையையும், அணைத்திருக்கும்
பன்னிரு திருப்புயங்களை உடையவன். விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன், பிரம தேவன் அஞ்சும்படி, அவனது தலையில், மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய, ஆறுமுகப் பரம்பொருளின் கொடியில் அமர்ந்துள்ள
சேவலே தான்.
வடிவில்
புனக் கொடி படர் புயக் கிரிக் கதிர்வேலா ---
பெண்களைக்
கொம்பு என்றும் கொடி என்றும் கூறுவர் புலவர்கள்.
அழகான
கொடி ஒன்று குன்றில் படர்ந்து உள்ளது.
வள்ளிக்
கொடி, முருகப் பெருமானின் மலை
போன்ற பன்னிரு திருத்தோள்களில் படர்ந்து உள்ளது என்கின்றார் அடிகளார்.
மகிழ்
முத்தமிழ்ப் புலவோனே ---
"முத்தமிழ்
விநோத" என்றார் அடிகளார் திருச்செங்கோட்டுத் திருப்புகழில்.
"ஞான
முத்தமிழ் தேனே" என்றார் பொதுத் திருப்புகழில்.
"மதித்த
முத்தமிழில் பெரியோனே" என்றார் பிறிதொரு திருப்புகழில்.
முருகப்பெருமான்
தமிழில் அளவற்ற அன்புள்ளவர் தமிழிலேயே பொழுது போக்குகின்றவர்.
"முத்தமிழ் வித்வ விநோதா
கீதா”
--- (மைக்குழ)
திருப்புகழ்.
"அதிமதுர
சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்" --- வேடிச்சிகாவலன்
வகுப்பு
"மீனவனும்
மிக்கபுல வோரும்உறை பொற்பலகை
மீதுஅமர்
தமிழ்த்ரய விநோதக் காரனும்" --- திருவேளைக்காரன்
வகுப்பு.
தட
விகட மத்தகத் தடவரையர் அத்தர் அத்த ---
அகன்ற
அழகிய மத்தகத்தை உடைய, பெரிய மலை போன்ற உருவத்தினை
உடையவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்குத் தந்தை
ஆகிய சிவபரம்பொருளின் குருநாதராக விளங்கியவர் முருகப் பெருமான்.
அடல்
அனுச
---
அடல்
- வல்லமை.
அனுசன்
- பின் பிறந்தோன்.
வித்தகத்
துறையோனே
---
வித்தகம்
- அறிவு, ஞானம்.
ஞான
நிலையில் விளங்குபவன் இறைவன்.
முத்தி
நெறியில் நான்கு துறைகள் உள்ளன. அவை சரியை என்னும் தாதமார்க்கம், கிரியை என்னும் சற்புத்திர மார்க்கம், யோகம் என்னும்
தாதமார்க்கம்,
ஞானம்
என்னும் சன்மார்க்கம் ஆகும். சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று துறைகளையும்
கடந்தால் இறைவன் திருவருளால் வாய்ப்பது ஞானம் ஆகும். இந்த ஞானத்தைப் பெற்றே இறைவன்
திருவடியை அடைய முடியும்.
இம்முறைகளையே
திருமந்திரம் தெளிவு படுத்துகின்றது. இம் மார்க்கங்களின் இலக்கணம்...
தாசமார்க்கம் ---
எளியநல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
சற்புத்திர
மார்க்கம்---
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசுஅற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீர்சுத்தி
செய்தல்மற்று
ஆசுஅற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
சகமார்க்கம்
---
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
சன்மார்க்கம்
---
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து,
ஒசியாத உண்மைச் சொரூபோ தயத்துஉற்று,
அசைவானது இல்லாமை ஆனசன் மார்க்கமே.
இதை
அரும்பு, மலர், காய், கனி ஆகியவற்றிற்கு ஒப்பிடுகின்றார்
தாயுமானார்.
விரும்பும்
சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர்
காய்கனிபோல் அன்றோ பராபரமே.
காய்
முற்றிக் கனியாவது போல், யோக சாதனையில் சித்தி
பெற்றோர்க்கே ஞானத்தில் இச்சை உண்டாகும். விட்ட குறையால், சில பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தின்கண்
இச்சை எழுமாயின், அவர்கள் முற்பிறப்பில்
யோக அனுட்டிப்பில் சித்தி பெற்றவர்களே ஆம்.
யோகியர்க்கே
ஞானம் ஒழுங்காம்பேர் அன்பான
தாகியரும்
யோகமுன்னே சார்ந்தோர் பராபரமே. --- தாயுமானார்.
இந்
நான்கு நிலையில் நின்றோர் முறையே பெறுமுத்திகள் நான்கு. அவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம். சாரூபம் பெற்றார் அங்கிருந்தே மேலும் தவம்
செய்து சாயுச்சியம் பெறுவர்.
சன்மார்க்கம்
சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம்
நால் அவைதாம் ஞானம் யோகம்
நல்கிரியா சரியைஎன நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க
முத்திகள்சா லோக்கிய சா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர்
விதமாம்
முன்மார்க்க
ஞானத்தால் எய்தும் முத்தி
முடிவு என்பர்; மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்
தாதமார்க்
கம் சாற்றில், சங்கரன்தன் கோயில்
தலம் அலகுஇட்டு, இலகுதிரு மெழுக்கும் சாத்தி
போதுகளும்
கொய்து பூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி
தீதுஇல்
திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து திருவேடங்கண்டால் அடியேன்
செய்வது
யாது? பணியீர்! என்று பணிந்து, அவர்தம் பணியும்
இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்.
புத்திரமார்க்
கம்புகலின், புதியவிரைப் போது
புகைஒளிமஞ் சனம் அமுது முதல்கொண்டு
ஐந்து
சுத்திசெய்துஆ
சனம், மூர்த்தி மூர்த்தி
மானாம்
சோதியையும் பாவித்துஆ வாகித்து சுத்த
பத்தியினால்
அருச்சித்து பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும்
இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர், நினையுங் காலே.
சகமார்க்கம்
புலன் ஒடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம்அறிந்து
அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அங்கு
அணைந்துபோய் மேல்ஏறி அலர்மதிமண்
டலத்தின்
முகமார்க்க
அமுதுஉடலம் முட்டத் தேக்கி
முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக
வினைகள்
உகமார்க்க
அட்டாங்க யோக முற்றும்
உழத்தல், உழந் தவர்சிவன் தன் உருவத்தைப் பெறுவர்.
சன்மார்க்கம்
சகலகலை புராணம் வேதம்
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும்
உணர்ந்து
பன்மார்க்கப்
பொருள் பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக்
காட்டும்
நன்மார்க்க
ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச்
சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமைஉடையோர் சிவனைப் பெறுவர் காணே.
--- சிவஞானசித்தியார்.
எத்
தலத்தரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழிப் பெருமாளே ---
உலகின்
எந்தத் தலத்தில் உள்ளோரும் விரும்பி வந்து அடைய
முத்தியைத்
தரும் திருத்தலமாகிய திருவிடைக்கழியில் திருக்கோயில் கொண்டு
எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.
மயிலாடுதுறையிலிருந்து
தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி"
திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள
திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.
இறைவர்
: காமேசுவரர்.
இறைவியார்
: காமேசுவரி.
தல
மரம் : குரா, மகிழம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.
தெய்வயானை
அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி
கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
அம்பாள்
தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
மூலத்தானத்தில்
பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க
மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி
விமானங்களில், முருகனுடைய விமானம்
சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம்
சற்று தாழவும் உள்ளது.
சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம்
முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின்
துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய்
இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
முருகப்
பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
சேந்தனார்
முத்தி பெற்ற தலம். திருமுறைகளில்
இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
இத்தலத்தில்
இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள்
குரா மரம் முருகப் பெருமானுக்கும்,
மகிழ
மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். திருத்தல மரமாகிய
"குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று
கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில்
நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அமர்ந்து பலரும் தியானம்
செய்கின்றனர்.
முருகப்
பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து
தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
சண்டேசுவர
மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும்
முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.
கருத்துரை
முருகா! தேவரீரது பழ அடியார்
திருக்கூட்டத்தில் அடியேனைச் சேர்த்தருளி, திருவடி இன்பத்தை அருள்வாய்.