அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஏட்டின் விதிப்படி
(திருக்கடவூர்)
முருகா!
உயிர் பிரிந்ததும் இந்த
உடம்பானது
லொடுக்கு என விழும்போது
வந்து அருள்வாய்
தாத்த
தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின்
விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி
ஏற்கு
மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ......
முடல்பேணிப்
பூட்டு
சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை யோபொதி சோறென ......
கழுகாகம்
போற்றி
நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ......
புரிவாயே
வீட்டி
லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில்
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ......
வனமேபோய்
வேற்றுமை
யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன் ......
மருகோனே
கோட்டை
யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா
கூற்று
மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
ஏட்டின்
விதிப்படியே கொடு, மாபுர
வீட்டில் அடைத்து, இசைவே கசை மூணதில்
ஏற்றி அடித்திடவே, கடல் ஓடம் ...... அதுஎன ஏகி,
ஏற்கும்
எனப் பொருளாசை பெணாசை, கொ-
ளா, து எனத் திரியா, பரியா தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் ...... உடல்பேணி,
பூட்டு
சரப்பளியே, மதனாம் என
ஆட்டி, அசைத்து இயலே திரி நாளையில்,
பூத்த மலக் குகையோ? பொதி சோறுஎன ......கழு,
காகம்
போற்றி,
நமக்கு இரையாம் எனவே கொள
நாட்டி, லொடுக்கு எனவே விழு போதினில்,
பூட்டு பணிப் பத மா மயிலா! அருள் ......
புரிவாயே.
வீட்டில்
அடைத்து எரியே இடு பாதகன்,
நாட்டை விடுத்திடவே பல சூதினில்
வீழ்த்த விதிப்படியே, குரு காவலர் ......
வனமேபோய்,
வேற்றுமை
உற்று உருவோடு இயல் நாளது
பார்த்து முடித்திடவே, ஒரு பாரத
மேல் புனைவித்த மகாவிர மாயவன் ......
மருகோனே!
கோட்டை
அழித்த சுரார் பதி கோ என,
மூட்டி எரித்த பராபர! சேகர!
கோத்த மணிக் கதிரே நிகர் ஆகிய ......
வடிவேலா!
கூற்று
மரித்திடவே உதை, பார்வதி-
யார்க்கும் இனித்த பெண் ஆகிய மான்மகள்
கோட்டு முலைக்கு அதிபா! கடவூர்உறை
..பெருமாளே.
பதவுரை
வீட்டில் அடைத்து
எரியே இடு பாதகன் --- அரக்கு மாளிகையில் பஞ்சபாண்டவர்களை இருக்கச் செய்து, தீயை மூட்டிய பாதகனாகிய
துரியோதனன்,
நாட்டை விடுத்திடவே ---
தமது
நாட்டை விட்டுப் போகும்படி
பல சூதினில் வீழ்த்த --- பல
சூதாட்டங்களில் பாண்டவர்களை தோற்கடிக்கவும்,
விதிப் படியே குரு
காவலர் வனமே போய் --- விதித்தபடியே குருகுலத்துக் காவலர்களான பாண்டவர்கள்
காட்டுக்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தும்,
வேற்றுமை உற்று உருவோடு
இயல் நாளது பார்த்து முடித்திடவே --- பிறகு மாறுவேடம் பூண்டு கரந்துறை
வாழ்வை ஓராண்டு காலம் முடிந்த நாளைப் பார்த்து, தமக்கு விதித்த வனவாசம்,
அஞ்ஞாதவாசம் ஆகியவைகளை முடித்து,
ஒரு பாரத மேல்
புனைவித்த மகா விர மாயவன் மருகோனே --- ஒப்பற்ற பாரதப் போரை உருவாக்கி வைத்த பெருவீரன்
ஆகிய திருமாலின் திருமருகரே!
கோட்டை அழித்து --- அரண்களை
அழித்து,
அசுரர் பதி கோ என --- அசுரர்களின்
தலைவனான சூரபதுமன் கோ என்று அலறிட
மூட்டி எரித்த பராபர --- அவனுடைய நகரத்தைத்
தீ மூளும்படி செய்து அழித்த மேலான பரம்பொருளே!
சேகர --- சிறந்தவரே!
கோத்த மணிக் கதிரே
நிகராகிய வடிவேலா --- கோக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியை நிகர்த்த கூரிய வேலாயுதத்தை
உடையவரே!
கூற்று மரித்திடவே
உதை பார்வதியார்க்கும் --- இயமன் மடிந்து போகும்படியாகத்
தனது இடது திருவடியால் உதைத்த பார்வதி தேவியார்க்கும்
இனித்த பெ(ண்)ணாகிய ---
இனிய
பெண்ணானவளும்,
மான் மகள் கோட்டு முலைக்கு அதிபா --- மானின்
வழிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியின் மலை போன்ற முலைகளுக்கு அதிபரே!
கடவூர் உறை பெருமாளே --- திருக்கடவூரில்
வீற்றிருக்கும் பெயருமையில் மிக்கவரே!
ஏட்டின் விதிப்படியே கொடு
--- பிரமன் எழுதிய விதியின்படிக்கு,
மாபுர வீட்டில் அடைத்து --- இந்த
உயிரைக் கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து,
இசைவே --- பொருந்தும்
வகையில்,
கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே --- சவுக்குப் போன்ற, சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த,
கடல் ஓடம் அது என ஏகி --- கடலில் படகு
ஓடுவது போலத் தட்டுத் தடுமாறி வாழ்ந்து,
ஏற்கும் எனப் பொருள்
ஆசை பெண் ஆசை கொளா --- பொருந்துவது என நினைத்து பெண்ணாசை, பொன்னாசை கொண்டு,
து என திரியா --- பிறர் இகழும்படியாகத்
திரிந்து
பரியா --- வருந்தி,
தவம் ஏற்றி இருப்பிடமே
அறியாமலும்
--- தவத்தைப் புரிந்து, மனம் அமைந்து இருப்பது பற்றி அறியாமலும்,
உடல் பேணி --- இந்த உடலை விரும்பிப்
பேணி,
மதனாம் என பூட்டு
சரப்பளியே ---
மன்மதன் என்னும்படி வைரம் பதித்த மாலை கழுத்தில் விளங்க,
ஆட்டி அசைத்து இயலே
திரி நாளையில்
--- செருக்கால் உடலை ஆட்டியும் அசைத்தும் இப்படியே திரியும் காலத்தில்,
பூத்த மலக் குகையோ --- மலம் நிறைந்த
குகையோ,
பொதி சோறோ என --- சோற்றுப் பொதியோ என்று,
கழு காகம் போற்றி --- கழுகுகளும்
காகங்களும் விரும்பி,
நமக்கு இரையாம் எனவே கொள நாட்டி --- நமக்கு
நல்ல இரை கிடைத்தது என்று கொள்ளும்படியாக இந்த உடலை வைத்து,
லொடுக்கு எனவே விழு
போதினில்
--- பூமியில் லொடுக்கு என இறந்து போகும் அந்த நேரத்தில்
பூட்டு பணி பத
மாமயிலா
--- காலில் சுற்றிய பாம்போடு உள்ள மயில் வாகனத்தை உடையவரே!
அருள் புரிவாயே --- திருவருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
அரக்கு மாளிகையில் பஞ்சபாண்டவர்களை
இருக்கச் செய்து, தீயை மூட்டிய பாதகனாகிய
துரியோதனன், தமது நாட்டை விட்டுப் போகும்படி பல சூதாட்டங்களில் பாண்டவர்களை தோற்கடிக்கவும், விதித்தபடியே குருகுலத்துக்
காவலர்களான பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தும்,பிறகு மாறுவேடம் பூண்டு கரந்துறை வாழ்வை
ஓராண்டு காலம் முடிந்த நாளைப் பார்த்து, தமக்கு விதித்த வனவாசம், அஞ்ஞாதவாசம்
ஆகியவைகளை முடித்து,
ஒப்பற்ற
பாரதப் போரை உருவாக்கி வைத்த பெருவீரன் ஆகிய திருமாலின் திருமருகரே!
அரணை அழித்து, அசுரர்களின் தலைவனான சூரபதுமன் கோ என்று அலறிட, அவனுடைய நகரத்தைத் தீ மூளும்படி செய்து அழித்த மேலான பரம்பொருளே!
சிறந்தவரே!
கோக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியை நிகர்த்த
கூரிய வேலாயுதத்தை உடையவரே!
இயமன் மடிந்து போகும்படியாகத் தனது இடது
திருவடியால் உதைத்த பார்வதி தேவியார்க்கும் இனிய பெண்ணானவளும், மானின்
வழிற்றில் உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியின் மலை போன்ற முலைகளுக்கு அதிபரே!
திருக்கடவூரில்
வீற்றிருக்கும் பெயருமையில் மிக்கவரே!
பிரமன் எழுதிய விதியின்படிக்கு, இந்த
உயிரைக் கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து, பொருந்தும் வகையில், சவுக்குப் போலப் பின்னப்பட்டு உள்ள, சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த, கடலில் படகு ஓடுவது போலத் தட்டுத் தடுமாறி வாழ்ந்து, பொருந்துவது என நினைத்து பெண்ணாசை, பொன்னாசை
கொண்டு, பிறர் இகழும்படியாகத் திரிந்து வருந்தி, தவத்தைப்
புரிந்து, மனம் அமைந்து இருப்பது பற்றி அறியாமலும், இந்த உடலை விரும்பிப் பேணி, மன்மதன் என்னும்படி வைரம் பதித்த மாலை
கழுத்தில் விளங்க, செருக்கால் உடலை ஆட்டியும் அசைத்தும் இப்படியே திரியும்
காலத்தில், மலம் நிறைந்த
குகையோ, சோற்றுப் பொதியோ என்று கழுகுகளும் காகங்களும் விரும்பி, நமக்கு நல்ல இரை
கிடைத்தது என்று கொள்ளும்படியாக இந்த உடலை வைத்து, பூமியில்
லொடுக்கு என இறந்து போகும் அந்த நேரத்தில், காலில் சுற்றிய பாம்போடு உள்ள மயில்
வாகனத்தை உடையவரே! திருவருள் புரியவேண்டும்.
விரிவுரை
ஏட்டின்
விதிப்படியே கொடு, மாபுர வீட்டில் அடைத்து ---
ஏடு
- பிரமன் எழுதிய ஏடு.
புரம்
- உடல்.
பிரமன்
விதித்தபடி, இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்கு ஏற்ற உடலில் உயிரானது புகுத்தப்படுகின்றது.
நல்லனவும்
தீயனவுமாக செய்யப்பெறும் கன்மங்கள் "ஆகாமியம்" என்ற பெயரால் வழங்கும். பின்
அவை சூக்குமமாய் மறைந்து நிலைபெற்று நிற்கும்பொழுது "சஞ்சிதம்" என்ற பெயரைப் பெறும். இச்சூக்கும கன்மங்கள்
பின்னர் இன்பதுன்பங்களாய் வந்து பயன்தரும் பொழுது "பிராரத்தம்" என்ற பெயர் பெறும். இந்த மூவகை நிலைபற்றி
காண்போம்.
"ஆகாமியம்"
எதிர்வினை, வருவினை மேல்வினை என்ற
பெயர்களாலும், "சஞ்சிதம்"
அபூர்வம், பழவினை, தொல்வினை, கிடைவினை என்ற பெயர்களாலும், "பிராரத்தம்" ஊழ்வினை, நுகர்வினை என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும்.
ஆகாமிய
வினை பிராரத்தமாய்ப் பக்குவப்படும்வரை சஞ்சிதமாய்க் கிடக்கும். இவற்றுள் பக்குவப்பட்டவை
பிராரத்த மாய் வரும். வினை தன் பயனைத் தான் தருவதற்குரிய எல்லாச் சூழ்நிலைகளும் வாய்க்கப்
பெறுவதே பக்குவப்படுதல் என்பதாகும். வினை அச்சூழ்நிலைகளைத்
தரும் பயன் சாதி, ஆயு, போகம் என்ற மூன்றாக நடைபெறும்.
சாதி
என்பது பிறக்கும் இனம். சாதியினை 'வருணாசிரமம் முறையில்
கொண்டாலும் கொள்ளலாம். இக் காலத்தில் கூறப்பெறும் முற்போக்கு அடைந்த இனம், தாழ்த்தப் பட்ட இனம் முதலாகச் சொல்லப்பெறுவனவற்றைக்
கொண்டாலும் கொள்ளலாம். இன்றைய நிலையில் உலகமளாவிய பார்வையைச் செலுத்தினால் எந்த நாட்டிலும்
எந்த வகையிலேனும் எவையேனும் சில பிரிவுகள் இருந்தே வருதலைக் காண முடிகின்றது. யார்
என்ன முயற்சி செய்தாலும் வினையின் பயனாக அவை இருந்தே தீரும்.
யார்
எங்கே எந்த வகையான முயற்சிகள் செய்யினும் வினையின் பயனான சாதிப்பிரிவு ஏதேனும் ஒரு
வடிவத்தில் மக்களிடையே இருந்துதான் தீரும். இன்னும் இங்குச் சாதி என்பதை படைப்பு விசேடமாகக்
கொண்டாலும் கொள்ளலாம். படைப்பு ஒருவகையாகக் காணப்பெறாது. மாணிக்கவாசகப் பெருமான் கூறியது
போல், புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய்...தாவர
சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து' என்று
பல்வேறு வகையாகக் காணப்பெறுவதையே சிறப்பாகக் குறிக்கின்றது. இந்த வகையில் ஒவ்வோர் இனத்திலும்
புல் பிரிவுகள் காணப்பெறுகின்றன. இவையெல்லாம் வினையினால் ஆவனவே என்பதை ஈண்டு உளங்கொள்ளலாம்.
ஆயு
என்பது ஆயுள் வாழ்நாளைக் குறிப்பது. நீண்ட வாழ்நாள், குறுகிய வாழ்நாள் என்பனவும் வினையின் பயனேயாகும்.
போகம்:
போகம் என்பது ஒவ்வோர் உயிரும்
அநுபவிக்கும் இன்பதுன்பங்களாகும். வினை செயற்படுங்கால் இவை எல்லாம் நடைபெறும் என்பது
அறியப்படும். வாழ்க்கையில் எத்தனையோ இன்பதுன்ப நிகழ்ச்சிகளைச் சந்திக்க நேரிடலாம்.
அவற்றையெல்லாம் சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருவள்ளுவப் பெருமானின் அறவுரையும்
ஒருவகையில் இதுபற்றி எழுந்ததே ஆகும்.
பிராரத்த
கன்மம் பயன்தருங்கால் தான் நேரே நின்று தாராது. எவையேனும் சிலவற்றை வாயிலாகக் கொண்டே
தரும். அவ்வாயில்கள் பற்றிப் பிராரத்தம் 'ஆதியான்மிகம். ஆதி பெளதிகம், ஆதிதைவிகம்' என்று மூன்றாகப் பேசப்படும்.
இவற்றுள்
தன்னாலேனும் பிற உயிர்களாலேனும் வருவன ஆதியான்மிகம். மிதிவண்டி, அது போன்ற ஊர்திகளிலிருந்து வீழ்தல், குளியலறையில் வழுக்கி வீழ்தல் போன்றவை தன்னால்
வருவன அரவு தீண்டுதல் மாடு முட்டுதல், நாய்
கடித்தல் போன்றவை பிற உயிர்களால் வருபவை. அடுத்து, நிலநடுக்கம், பெருமழை, பெருவெள்ளம், பெருவறட்சி, இடி வீழ்தல், தீமிகுதல், சூறாவளி அடித்தல்.
பூதச்
செயல்களால் வருவன ஆதிபெளதிகம். பேய், பூதம், தீய தெய்வங்கள், இயமன் முதலிய தேவர் பகுதியால் வருவன ஆதிதைவிகம்.
மேலும் சிலகருத்துகள் வினையைப்பற்றி மேலும் சில கருத்துகளை அறிந்து கொள்ளல் இன்றியமையாதது.
சஞ்சிதமாய்க் கிடக்கும் வினைகள் பிராரத்தமாய் வரும் பொழுது முன்செய்த முறையில்தான்
வரும் என்பதில்லை. முன் செய்தது பின்னும், பின்செய்தது முன்னுமாக வருதலும் உண்டு. அதற்குக்
காரணம் அவற்றின் வன்மை மென்மைகளே ஆகும். மிகப்பெரிய புண்ணியமும் மிகப்பெரிய பாவமும்
செய்த பிறவியிலேயே பிராரத்தமாய் வந்து பயன் தரும். "குற்றொருவரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம் சொற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் மெய்ம்மையே"
என்ற சுந்தரர் தேவாரப் பாடல் வரிகள் இங்கு நினைக்கத்தக்கது. இக்கருத்தினையே திருவள்ளுவரும், "பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் " என்று குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். பாவத்திற்கு
இவ்வாறு கூறவே புண்ணியமும் அவ்வாறே செயற்படும் என்பதைக் கூறவேண்டுவதில்லை. மற்றும், வினைகள் தாம் செய்யப்பெற்ற முறையிலன்றி முன்பின்னாக
பின்முன்னாக வருவது அவ்வவ்வினையின் தன்மைக்கேற்ப நிகழ்வதேயாகும்.
இறைவன்
கருணை உயிர்களால் இயற்றப்பெறும் வினைகள் தம் பயனைத் தாமே சென்று உயிர்கட்குத் தரும்
எனச் சமணரும் மீமாம்சகரும் கூறுவர். அவருள் மீமாம்சகர் கருமமே பிரம்மம் எனக் கூறுதலால்
கர்மப் பிரம்மாவாதிகள் எனப்படுவர். தாருகவனத்து முனிவர்கள் இக்கொள்கை யுடையவராய் இருந்தமை
பற்றியே சிவபெருமான் அவர்கள் முன் பிட்சாடன மூர்த்தியாய்ச் சென்று அவர்களைத் திருந்தச்
செய்தார் என்று புராணம் கூறும். உயிர்களால் இயற்றப்படும் வினை அறிவுடையதன்று. அது அறிவில்லாத
சடம். ஆதலின் அதனால் தன்னைச் சார்ந்தவனைச் சென்று பற்ற இயலாது. அது எங்கோ ஓரிடத்தில்
என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஓர் உடம்பு கொண்டு செய்யப்படுகின்றது. செய்யப்பெற்ற செயல்
அப்பொழுது நிகழ்ந்து அழிந்து விடுகின்றது. ஆதலால் அது பின்னர் என்றாவது, எங்காவது, எந்த உடம்பிலாவது, பயன்தர இயலாது. அதனால் இறைவனே அவரவர் செய்யும்
வினையை, நடு நின்று, அவ்வவ்வினைக்குரிய பயனை உரிய காலத்தில் உரிய இடத்தில் உரிய உடம்பில்
கூட்டுவிப்பான். இதற்குக் காரணம் இறைவன் அவர் வினையைச் செய்வதும் ஆருயிர்கள் மீதுள்ள
அளவற்ற கருணையே ஆகும்.
இதனைச்
சித்தாந்த முறையில் மேலும் தெளிவாக்கலாம். உயிர்கட்கு வினைப்பயனை ஊட்டுவித்தற்குக்
காரணம் அவற்றைப் பிணித்துள்ள ஆணவமலத்தைப் போக்குதல் வேண்டும் என்னும் திருவுள்ளக் கருத்தே
ஆகும். உயிர்கள் எல்லாவற்றிற்கும் இறைவனே முதல்வன் என்பதை மறந்து, எல்லாவற்றிற்கும் தாங்களே
முதல்வர் என்று எண்ணும் செருக்கினால் செய்யப்பெறம் செயல்களே வினை எனப்படுவன என்பதையும், இம்மறதியும் செருக்கும் ஆணவமல மறைப்பினால்
வருவன என்பதையும் அறிதல் வேண்டும். வினையை உயிர்கள் தவறாமல் அநுபவிக்க அநுபவிக்க, அவை
தம் அறியாமை நீங்கி இறைவனை அறியும் அறிவைப் பெறும். இறைவன் வினைப் பயனை ஊட்டுவித்தல்
மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்தல் போன்றது. ஆணவமலம் உயிர்கட்கு உள்ள நோய் ஆகும்.
அதற்கு மருந்தாய் உள்ளவை வினைப்பயன்கள். மருந்துகளில்
சில இனிக்கும். சில கசக்கும். நல்வினைப்
பயனாகிய இன்பம் இனிப்பான மருந்தை உண்பது போன்றது. தீவினைப் பயனாகிய துன்பம் கசப்பான மருந்தை
உண்பது போன்றது. இன்னும் சில வேளைகளில் அறுத்துக் கீறிச் சுட்டுச் செய்யும் சிகிச்சைகளும்
நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படு கின்றன. இங்ஙனமே மிகப்பெரிய துன்பங்களையும் மிகப்
பெரிய பயனாக இறைவன் ஊட்டுவிப்பான். ஆருயிர்கள் இவற்றைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
இசைவே
---
பொருந்தும்
வகையில், இசைவாக.
கசை
மூணு அதில் ஏற்றி அடித்திடவே ---
சவுக்கு
அல்லது சாட்டையானது மூன்று புரியாகப் பின்னப்பட்டு இருக்கும். அதுபோல, சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகள்
வீணாதண்டம் என்னும் முதுகுத் தண்டின் ஊடே பின்னிப் பிணைந்து செல்லும்.
கடல்
ஓடம் அது என ஏகி ---
பிறவியாகிய
கடலில், ஓடுகின்ற மரக்கலம் போன்றவை உயிர்கள் எடுக்கும் உடல்கள்.
காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும்
பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த
நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக்
குறித்தார் எனக் கொள்ளலாம்.
செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள்
வருதலின், பிறவியேப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.
"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"
என்றார் மணிவாசகப் பெருமான்.
கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக்
கடல் என்றார். 'பிறவிப்
பெருங்கடல்' என்றார்
திருவள்ளுவ நாயனாரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயல்
காற்று, கலக்கத்தைச்
செய்யும், மகளிரின்
தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல் காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன்
என்றார்.
தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தைக் கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார்.
'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய்
அஞ்செழுத்து' என்றார்
சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப்
பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார்.
இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டும்
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட
மாருதச்
சுழல்வந்து வந்து அடிப்ப,
சோராத ஆசையாம் கான் ஆறு
வான்நதி
சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான
வங்கமும்
கைவிட்டு, மதிமயங்கி,
கள்ள வங்கக் காலர் வருவர்
என்று அஞ்சியே
கண் அருவி காட்டும் எளியேன்,
செப்பரிய முத்தியாம் கரை
சேரவும் கருணை
செய்வையோ? சத்து ஆகி, என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான
தெய்வமே!
தேசோ மயானந்தமே!
என்றார் தாயுமான அடிகளார்.
"துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், அப்பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே."
என்றருளினார் அப்பர் பெருமான்.
அறிவு இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல் எயில் உடுத்த தில்லை காவல!
வமபு அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள் எனும் நலத்தார் பூட்டி,
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
என்று கோயில் நான்மணிமாலையில்
அருளினார் பட்டினத்து அடிகள்.
ஏற்கும்
எனப் பொருள் ஆசை பெணாசை கொளா ---
"பெண்ணாசை"
என்பது "பெணாசை" எனக் குறுகி வந்தது. பொருள் ஆசை, பெண்ணாசை என்னும்
இரண்டையும் குறிக்கவே, உபலக்கணத்தால், மண்ணாசையையும் கொள்ள வேண்டும்.
ஆணவமல
மறைப்பினால், ஏற்று வந்த உடம்பையே பொருளாக எண்ணி உயிரானது மயங்கும். ஆசை
வயப்பட்டது உயிர். ஆதலால், இருக்க இடம் வேண்டும் என்று மண்ணினை மீது ஆசையும்,
உடம்பைப் பேணவேண்டும் என்னும் ஆசையால் பொன்னின் மீது ஆசையும், சுகிக்க வேண்டும்
என்னும் ஆசையால் பெண்ணாசையும் கொண்டு மேலும் மயக்கத்தை அடைந்து வருந்தும். நான்
எனது என்னும் செருக்கு இதனால் மிகுந்து இருக்கும். அது அற்றால் துன்பம் அறும்.
இன்பம் உறும்.
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று
ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலை பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாசங்களில்
அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.
பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள்
மனதில் எழும்.
1. உள்ள பொருளில்
வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.
2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.
3. பிறர் பொருளை
விரும்பி நிற்பது ஆசையாகும்.
4. எத்தனை வந்தாலும்
திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை
என்று பெயர்.
எந்தப்
பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.
பற்றுஅற்ற
கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று
நிலையாமை
காணப் படும். --- திருக்குறள்.
‘அற்றது பற்றெனில்
உற்றது வீடு’ --- திருவாய்மொழி
உள்ளது
போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர்
துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.
அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்
பிறப்பு ஈனும் வித்து. --- திருக்குறள்.
அவா
இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது
மேல்மேல் வரும். --- திருக்குறள்.
அவா
என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி
இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.
இன்பம்
இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள்
துன்பம் கெடின். --- திருக்குறள்.
பிறர்
பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.
பிறருடைய
மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால்
மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது
பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.
உலகமெல்லாம்
கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை
செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து
ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.
கொடும்
கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது
சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற
உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால்
புண்ணியம்” என்றான்.
கேட்டவன்
வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது
சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.
‘ஐயா! குதிரையில்
செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன்.
அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.
குதிரை
மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.
நடப்பவன்
மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து, “ஐயா! தங்கள் தரும
குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையையும்
கொடுங்கள்” என்றான்.
குதிரை
மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும்
சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.
“நான் அடிக்கிறேன். நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.
“இவ்வாறு கேட்டு
அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும்.
செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக்
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது
கேட்டேன். நீர் குதிரையைக்
கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி
அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.
ஆசைக்குஓர்
அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே
இனும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும்
வேளையில், பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே
போதும், நான் நான்எனக்
குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக்
கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்,
பார்க்கும்இடம்
எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
ஆசைச்
சுழல் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப்
புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. --- தாயுமானார்.
ஆசைஎனும்
பெருங் காற்று ஊ டுஇலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம்
வரும், இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கு ஆன
நேசமும்
நல் வாசமும் போய், புலனாய்இல்
கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசு
பழுத்து அருள் பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?
--- தாயுமானார்.
“பேராசை எனும் பிணியில்
பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ” ---
கந்தரநுபூதி
கடவுளுக்கும்
நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன்
ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு
தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.
சங்கிலி
பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால்
அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி
மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது
சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.
யாதனின்
யாதனின் நீங்கியான், நோதல்
அதனின்
அதனின் இலன். --- திருக்குறள்.
“ஆசா நிகளம் துகள் ஆயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே” --- கந்தரநுபூதி
ஆசையால்
கோபமும், கோபத்தால் மயக்கமும்
வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும்
நீங்கினல்தான் பிறவி நீங்கும்.
“காமம் வெகுளி மயக்கம்
இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” ---
திருக்குறள்.
வாட்டி
எனைச் சூழ்ந்த வினை, ஆசைய முஆசை, அனல்
மூட்டி உலைக் காய்ந்த மழுவாம் என விகாசமொடு
மாட்டி எனைப் பாய்ந்து, கடவோடு, அடமொடு ஆடி விடு .....விஞ்சையாலே
வாய்த்த
மலர்ச் சாந்து புழுகு, ஆன பனி நீர்களொடு
காற்று வரத் தாங்குவன, மார்பில் அணி ஆரமொடு
வாய்க்கும் எனப் பூண்டு அழகதாக பவிசோடு மகிழ்
.....வன்பு கூரத்
தீட்டு
விழிக் காந்தி, மடவார்களுடன் ஆடி, வலை
பூட்டிவிடப் போந்து, பிணியோடு வலி வாதம் என
சேர்த்துவிடப் பேர்ந்து, வினை மூடி, அடியேனும் உனது ......அன்பு இலாமல்,
தேட்டம்
உறத் தேர்ந்தும் அமிர்தாம் எனவெ ஏகி, நமன்
ஓட்டிவிடக் காய்ந்து, வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டுவரக் காண்டு, நலி காலன் அணுகா, நின் அருள்......அன்பு தாராய்.
---
திருப்புகழ்.
து
என திரியா ---
தூ
எனப் பிறர் இகழும்படியாகத் திரிந்து
பரியா
---
வருந்தி,
தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் ---
பிறப்பால்
உண்டான அவம் தீரவேண்டுமானால், தவத்தைப் புரிய வேண்டும். தவத்தைப் புரிந்தால்
மனமானது அடங்கி இருக்கும்.
தவமாவது
இல்லறத்தில் வழுவாது வாழுகின்ற ஒருவன், தனது உலக அனுபவங்களால் தனக்கு உற்ற
துன்பங்களைத் தானே அனுபவித்தலும், பிற உயிர்க்குத் தன்னால் ஒரு துன்பமுமி நேராமல்
காத்தலும் ஆகும். ஒருவன் மன உறுதியுடன் இருந்தால் அன்றி, தனக்கு உற்ற துன்பத்தைத்
தானே அனுபவித்தல் கூடாது. அறிவு மயக்கத்தால், தான் முன் புரிந்த வினையால் துன்பம்
வந்தது என்று அறியாமல், பிறரால் தனக்குத் துன்பம் வந்ததாக. எண்ணி, அதைக் களையப்
பிறருக்குத் துன்பம் விளைக்கத் துணியும். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்னும் துருக்குறள் வாய்மையையும், "தீதும்
நன்றும் பிறர் தர வாரா" என்னும் ஆப்த வாக்கியத்தையும் ஓதி உணர்ந்து அறிவு
விளக்கம் பெறவேண்டும்.
மன
உறுதி உடையவனுக்குப் புலனடக்கம் வேண்டும். புலனடக்கும் உடையவனே, பிற உயிர்க்குத்
துன்பம் விளைக்காமல் இருக்குவும், தனக்கு வந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவும்
அறிவான்.
"உற்ற
நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே
தவத்திற்கு உரு"
என்றார்
திருவள்ளுவ நாயனார்.
"சிவத்தைப்
பேணில் தவத்திற்கு அழகு" என்றார் ஔவைப் பிராட்டியார்.
எனவே,
தவநிலையில் நின்றால் சிவனருளைப் பெறலாம் என்பது தெளிவாகும்.
இதனையே,
அருணகிரிதாநப் பெருமான்,
தடுங்கோள்
மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்
இடுங்கோள்,
இருந்தபடி இருங்கோள், எழு பாரும் உய்யக்
கொடும்
கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும்
கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.
என்னும்
கந்தர் அலங்காரப் பாடலில் காட்டி அருளினார்.
உடல்
பேணி ---
தவத்தைப்
பேணுவதை விடுத்து, இந்த உடலை விரும்பிப் பேணுவது அறியாமையால் வந்த்து.
மதனாம்
என பூட்டு சரப்பளியே ஆட்டி அசைத்து இயலே திரி நாளையில் ---
மதன்
- மன்மதன்.
சரப்பளி
- வயிரம் பதித்த கழுத்து அணி.
மன்மதன்
என்னும்படி வைரம் பதித்த மாலை கழுத்தில் விளங்க,
செருக்கால் உடலை ஆட்டியும் அசைத்தும் இப்படியே திரியும் காலத்தில் ஒருநாள் இந்த உடம்பினை உயிர் போகும். அப்போது இந்த உடம்பு சடமாய் விழுந்து விடும்.
செருக்கால் உடலை ஆட்டியும் அசைத்தும் இப்படியே திரியும் காலத்தில் ஒருநாள் இந்த உடம்பினை உயிர் போகும். அப்போது இந்த உடம்பு சடமாய் விழுந்து விடும்.
பூத்த
மலக் குகையோ, பொதி சோறோ என, கழு காகம் போற்றி நமக்கு இரையாம் எனவே கொள
நாட்டி
---
பூத்த
- விரிந்த.
மலம்
பொதிந்து விரிந்து உள்ளது போல் இந்த உடம்பு பிணநிலையில் பருத்து இருக்கும்.
சோற்றினைப்
பொதிந்து வைத்தது போல் பிண உடம்பு இருக்கும்.
இந்த
உடம்பினைக் கண்டு, இது நமக்கு நல்ல இரை ஆகும் என்று காக்கைகளும், கழுகுகளும் வந்து
சூழும்.
சதமில்லாத
பொய்யுடலை மெய்யென்று எண்ணி இப்புலால் உடம்பை ஓம்புதற்கே வாழ்நாளை எல்லாம் செலவழிப்பர்.
சிலர் அருமையாக வீடுகட்டி சுண்ணாம்பு அடித்து வர்ணம் தடவி, தூண்களுக்கு உரைபோட்டு அழகு படுத்துவர்.
இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியும் செலுத்துவார்கள்.
ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி,
எட்டுக்கால்
பூச்சி கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன.
இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியாது. அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம்.
இந்த உடம்பில் வாழும் புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும்
இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி
இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியதென்று உன்னி இருக்கின்றன.
நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன; நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது.
இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை நாம் எழுந்தவுடன் சிவநாம்ம்ம
கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம். இந்த
அறிவீனத்தை அடிகாளர் அறிவுறுத்துகின்றார்.
எரி
எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும், இந்த மண்ணும்
சரி
எனக்கு என்னும், பருந்தோ எனக்கு எனும், தான் புசிக்க
நரி
எனக்கு என்னும், புன் நாய் எனக்கு எனும், இந்நாறுஉடலைப்
பிரியமுடன்
வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே. --- பட்டினத்தார்.
காட்டிலே இயல் நாட்டிலே பயில்
வீட்டிலே உல ...... கங்கள் ஏசக்
காக்கை
நாய்நரி பேய்க் குழாம் உண
யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ.. --- (ஏட்டிலே)
திருப்புகழ்.
லொடுக்கு
எனவே விழு போதினில் ---
சற்றும்
எதிர்பாராத வகையில் இந்த உடம்பானது "லொடுக்கு" என்று விழுந்து சாயும்
என்கின்றார் அடிகளார்.
"லொடுக்கு"
என்னும் வழக்குச் சொல் அடிகளாரால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
வீட்டில்
அடைத்து எரியே இடு பாதகன் ---
பாண்டவர்கள் அரக்கு
மாளிகை சென்று மீண்ட வரலாறு
துரியோதனனுடைய
தூண்டுதலினால் அரச சபையில் வெவ்வேறு சமயங்களில் சிலர் வந்து, காசித் தலத்தின்
பெருமையையும், கங்கை நதியின் அருமையையும், விசவநாதரது காட்சியையும் கூறினார்கள்.
இவற்றைக் கேட்ட பாண்டவர்களுக்கு காசித் தலத்தைத் தரிசிக்கவேண்டும் என்னும் ஆவல்
மேலிட்டது.
துரியோதனன்
திருதராட்டிரனைச் சந்தித்து, "அப்பா, நீர் நாளை மிகவும் தந்திரமாக ஐவரையும்
காசி போகுமாறு செய்து விடுங்கள். அசுவத்தாமாவுக்கு என் மீது பிரியம். அவர் என்னை
விட்டு அகலார். மைந்தனை விடுத்து துரோணர் அகல மாட்டார். மைத்துனரை விட்டு கிருரபர்
போகமாட்டார். துரோண கிருபரை விட்டு பீஷ்மர் நீங்கமாட்டார். விதுரர் உன்னை விட்டு
அகலார். மந்திரிகளை நான் பொருள் கொடுத்துச் சரிக்கட்டி விடுகின்றேன்"
என்றான்.
மறுநாள்,
திருதராட்டிரன் அரசவையில் பாண்டுவைப் புகழ்ந்து பேசி அவனுக்காக அழுவதுபோல்
நடித்தான். தருமரையும் அவரது தம்பிகளையும் அழைத்து, "வாரணாவதம் சிறந்த தலம்.
அங்கு இப்போது பெரிய விழா நிகழ இருக்கின்றது. நீங்கள் விரும்புவீர்களானால், சில
காலம் காசியில் தங்கி இருந்து, என் அருமைத் தம்பி பாண்டுவைக் குறித்து, பிதிர்க்
காரியம் புரிந்தும், தானதருமங்களைப் புரிந்தும், விழாவைச் சேவித்தும், பின்னர்
இங்கு வாருங்கள்" என்றான்.
தருமர்
தந்தையின் கட்டளைப்படி, தம்பியருடனும், தாயுடனும் வாரணாவதம் போகப் புறப்பட்டார்.
விதுரர் ஒருவருக்குத் தான் தெரியும் இந்த வஞ்சனை நாடகம்.
புரோசனன்
என்ற மந்திரியை துரியோதனன் நிதிகளைத் தந்து வசம் செய்து, பாண்டவர்களைக்
கொல்லும்படி தக்க படையுடன் உடன் போகுமாறு செய்தான்.
பாண்டவர்கள்
புறப்பட்டுப் போகும்போது, நகரத்து மக்கள் வருந்தி உடன் சென்றார்கள். தருமர்
எல்லோரையும் வணங்கி விடை பெற்றார்.
விதுரர்,
கூட்டத்தில் அந்த இரகசியத்தைச் சொல்லமாட்டாமல் திகைத்தார். ஒருவாறு தருமரைப்
பார்த்து, "மகனே! காடுகளை அழிப்பதும், குளிரைப் போக்குவதும் ஆன ஒன்று
வளைக்குள் நுழையும் எலியை அழிக்காது. எச்சரிக்கை முக்கியமானது. இரவில்
நட்சத்திரங்கள் வழி காட்டும். உறக்கம் உள்ளவன் அழிவான்" என்றார்.
எல்லோரித்திலும்
விடை பெற்ற தருமர் போகும்போது குந்திதேவி, "மகனே! உன் சிறிய பிதா கூறிய
சொற்களின் பொருள் என்ன?" என்று
கேட்டாள்.
"எதிரில்
ஏதோ வாபத்து வரப்போகின்றது. நெருப்பு பயம் விளையப் போகின்றது. நாம் இரவில்
நடக்கவேண்டி வரும் என்ற குறிப்புகள் தெரிகின்றன. அதனைப் பிறகு நான் நன்கு தெரிந்து
சொல்லுகின்றேன்" என்றார்.
பாண்டவர்களை
வாரணாவதத்து மக்கள் பெரும் சிறப்புடன் வரவேற்று உபசரித்தார்கள். ஐவரும் கங்கையில்
முழுகி, விசுவநாதரை வணங்கித் தங்கினார்கள். பத்து நாட்கள் சென்ற பின், புரோசனன், நூதனமாகப் புதுக்கி உள்ள
"மங்கள கிரகம்" என்னும் அந்த அமங்கள மாளிகையில் அவர்களைக்
குடியேற்றினான்.
தருமர்
தனிமையில் தம்பியரையும் தாயையும் பார்த்து, "இது வீடு அல்ல. மெழுகினாலும்,
சணலாலும், எண்ணெயாலும் நம்மை எரிப்பதற்குப் புதுக்கியது. புரோசனன் கும்பிடுகிற
கையில் ஆயுதம் ஒடுங்கி உள்ளது. நாம் இந்த வீட்டில் தூங்கினால் எரிந்து போவோம்.
உணவைக் காக்கைகளைக்கு வைத்துச் சோதித்தபின் உண்ணவேண்டும். நாம் புரோசனனிடம்
விழிப்பாக இருக்கவேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்தக் கூடாது" என்றார்.
பகல்
முழுவதும் வேட்டை ஆடுவார்கள். இரவு முழுவதும் நீதி விசாரணை புரிவார்கள். சிர இரவு
அகண்ட பஜனை செய்வார்கள்.
ஒருநாள்
கனகன் பீமனைத் தனிமையில் சந்தித்து, அரக்கு மாளிகையின் தன்மைகளைக் கூறி,
"நான் விதுரருடைய ஆள். தங்கள் படுக்கை வீட்டில் ஒரு சுங்கம் வைத்து உள்ளேன்.
அது நகரைத் தாண்டிச் செல்லும். கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று தீ வைப்பார்கள்.
நீங்கள் சுரங்கம் வழியை சென்று பிழையுங்கள். இது விதுரருடைய கட்டளை" என்றான்.
வீமன் அவனுக்கு வெகுமதி தந்து அனுப்பினான்.
இப்படிப்
பாண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் புரோசனனை ஏமாற்றிக் கொண்டு,
தங்கள் கருத்தைப் பிறர் தெரியாவண்ணம் வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு ஓராண்டு
வாழ்ந்தார்கள். புரோசனன் பாண்வர்கள் தன்னை நம்பி இருப்பதாகவே கருதினான்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வந்தது. அன்று இரவு எரித்து விடவேண்டும் என்று முடிவு
செய்தான்.
குந்திதேவி
அன்று இரவு அன்னதானம் செய்தாள். இரவு அதிகம் ஆனவுடன் எல்லோரும் குந்தியிடம்
விடைபெற்றுச் சென்றார்கள். புரோசனனுடைய ஏவலினால், ஒரு வேடச்சி கெட்ட எண்ணத்துடன்,
குந்திக்கு நண்பாகப் பழகினாள். அன்று அந்த வேடச்சி தேன் கனி கிழங்கு இவைகளை
எடுத்துக் கொண்டு தன் ஐந்து புதல்வர்களுடன் வந்தாள். காலம் பார்த்து நஞ்சு இடக்
கருதியவள், குந்தி கொடுத்த அன்னத்தை உண்டு, மதுபானமும் செய்து மயங்கி ஒருபுறம்
அயர்ந்து உறங்கிவிட்டார்கள் அந்த அறுவரும். புரோசனனும் ஒருபுறம் காலதேவதையால்
தூண்டப்பட்டு கண் அயர்ந்து தூங்கிவிட்டான்.
நடு
இரவு. எங்கும் அமைதி. கனகன் சொன்னதை உடன் பிறந்தார்கட்கும் தாய்க்கும் பீமன்
சொல்லி, தன் படுக்கை வீட்டில், தன் கட்டிலின் கீழ் அமைந்திருந்த சுரங்கத்தின்
வழியே குந்தி தேவியையும், தருமர் முதலிய நான்கு துணைவர்களையும் போகச் செய்தான். அவர்களை
அனுப்பிவிட்டு, தீயை எடுத்து அந்த வீட்டில் வைத்தான். அது குபீர் என்று பற்றியது.
சணல், நெய்யில் நனைந்த விறகு, மெழுகு இவைகள் யாவும் கொழுந்து விட்டு எரியலாயிற்று.
பீமசேனன் சுரங்கத்தில் நுழைந்து ஓடினான். உறக்கம் இன்மையாலும் அச்சத்தாலும்
நடக்கும் ஆற்றல் இல்லாத தாயாரை முதுகிலும், தருமரையும் தனஞ்செயனையும் தோள்களிலும்,
இரட்டையரை இருகரங்களிலும் எடுத்துக் கொண்டு காற்றின் மகனாகிய ஆற்றல் மிகுந்த பீமன்
விரைந்து ஓடினான்.
அந்தச்
சுரங்கம் காசிநகரைக் கடந்து, கங்கைக் கரை வரை சென்றது. அங்கு அறுவரும் மேலே
வந்தார்கள். அப்போது செம்படவன் விளக்கைக் கையில் வைத்துகொண்டு, பாண்டவரிடம் வந்து
கும்பிட்டான்.
"ஐயன்மீர்,
நான் விதுரரால் அனுப்பப்பட்டு இங்கு வந்தேன். 'காடுகளை எரிப்பபதும், குளிரைப்
போக்குவதுமான ஒன்று வளைக்குள் வாழும் எலியை ஆழிக்காது' என்று அவர் உங்களிடம் கூறிய
வார்த்தைகளை அடையாளமாகக் கூறினேன். என்ன் நம்புங்கள். இதோ உயர்ந்த படகு ஆயத்தமாக வைத்திருக்கின்றேன்.
தாமிதக்காமல் ஏறுங்கள். உங்கள் சிறிய பிதா சில காலம் உங்களை மறைந்து வாழுமாறு
கட்டளை இட்டு இருக்கின்றார்" என்றான்.
அந்தப்
பெரிய கப்பலில் ஏறி, கங்கையைக் கடந்தார்கள். "ஜய ஜய" என்று மங்கள வசனம்
கூறி, அந்த செம்படவன் விதுரருடைய ஆசியைக் கூறி "சுகமே போய் வாருங்கள்"
என்று கூறி நின்றான்.
தங்களுக்கு
நேர்ந்த ஆபத்தை எண்ணியும், பசி தாகத்தால் களைத்தும் மனம் வருந்திய பாண்டவர்கள்
தெற்கு நோக்கி நடந்தார்கள். நடக்க முடியாத பொழுதெல்லாம் பீமசேனன் அவர்கள் ஐவரையும்
வெகு சுலபமாகச் சுமந்து யாரும் தங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற பயத்தால்
ஓடினான். வழியில் ஒரு மரம் நின்றால், அதனைக் காலால் உதைத்துச் சாய்த்துச்
செல்வான்.
அரக்கு
மாளிகை கொழுந்து விட்டு விண்ணளவாக மண்டி பற்றி எரிகின்ற போது, வாரணாதத்து தமக்கள்
கண் விழித்து, அதைச் சுற்றி நின்று மிக்க துயரம் அடைந்தார்கள்.
உத்தமமான
பிள்ளைகள் பாண்டவர்கள். இவர்களை எரிப்பதற்காகவே இந்த வீடு துரியோதனனால்
கட்டப்பட்டது போலும். பாவி மந்திரி புரோசனன் வஞ்சனைக்காரன். திருதராட்டிரனுக்கும்
இது தெரிந்துதான் இந்தக் கொடுமை செய்யப்பட்டது. அந்தோ! குந்தி கொடுத்து
வைக்காதவள். கணவனை இழந்தாள். மக்களுடன் தீயில் அகால மரணம் அடைந்தாள். பீஷ்மரும்,
துரோணரும், கிருபரும் இதனை அறியவில்லையா? வேடச்சியைக் குந்தியின் சரீரம் என்றும்,
அவள் புதல்வர்கள் ஐவரது உடல்களைப் பாண்டவர்களின் சரீரம் என்றும் கருதி
வாய்விட்டுக் கதறி அழுதார்கள். தீ அணைகின்ற போது சுரங்க வேலை செய்த கனகன்
விதுரருடைய ஏற்பாட்டின்படி அங்கு கூட்டத்தில் கலந்து சுங்கத்தை மற்றவர் அறியவண்ணம்
மண்ணைத் தள்ளி மறைத்துவிட்டான். பாண்டவர்கள் எரிந்து போன செய்தியை
திருதராட்டிரனுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
திருதராட்டிரன்
எல்லோருடனும் விரைந்து வாரணாவதம் போனான். கோடைக்காலத்தில் குளம் அடியில்
குளிர்ந்தும், மேலே வெதுவெதுப்பாகவும் இருக்கும். அதுபோல், பாவி திருதராட்டிரன்
மேலே துக்கப்படுபவனைப் போல் நடித்து அழுதான். ஆனால் உள்ளுக்குள் அவனுக்கு உவகை.
"என் புதல்வர்களே! இனி எப்போது உங்களை அடைப் போகின்றேன். ஐயோ! என் தம்பியின்
தவப்புதல்வர்களே!" என்று கூவி அழுதான். "விதுரா! பாண்டவர்களையும்
குந்தியையும் கருதி என்ன என்ன தானதருமங்கள் செய்தால் நல்லதோ, அத்தனையும்
செய்" என்றான்.
எல்லோரும்
ஒற்றை ஆடையை உடுத்து நின்று எரிந்த எலும்புகளை உண்மையிலேயே பாண்டவர்களுடையது என்று
எண்ணி அழுதார்கள்.
துரோணர்
ஒருபுறம் அந்த எலும்புக் கூடுகளைக் கண்டு, "அர்ச்சுனா! நீ எரிந்தாய் என்பதை
என்னால் நம்ப முடியவில்லையே. குழந்தாய்! வீடு தீப்பிடித்தவுடன் வருண மந்திரத்தை
வுச்சரித்தால் அது நனைந்து இருக்குமே. உறங்கியபடியால் உணர்வற்று எரிந்து போனாயோ?
நீ என்னிலும் பெரிய வில்லாளியாக விளங்கினாயே! இரவு பகலாக நீ கற்ற கலைகள் உன்னுடன்
எரிந்தனவே! உத்தமமான மாணவன் நீ. அடக்கமே ஓர் உருவாகிய உன்னை இனி எப்பிறப்பில்
காண்பேன்!" என்று கூறி அழுதார்.
பீஷ்மர்
உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தும், பாண்டவர்களுடைய பிரிவு என்ற ஈட்டி, அவருடைய
உள்ளத்தைப் பிளந்தது. கண்ணீர் விட்டுக் கதறினார். "தந்தையை இழந்த தனயர்களே!
அம்மா மருமகளே! நீ மக்களுடன் மாண்டு போனாயே. பழுக்கும் தருவயில் மரம் காற்றில்
முறிந்து விழுந்தது போல், தருமா! நீ நல்ல பருவத்தில் மாண்டாயே! உனது தருமம்
உன்னைக் காக்கவில்லையா? பீமா! இந்தக் குலத்துக்கு நீ வயிரத் தூண் போல் நின்றாயே!
உன்னைக் கண்டு கண் களித்தேனே! நீ முயன்றால் முடியாதது ஒன்று உளதோ? இந்த அக்கினியை
அணைக்க உன்னால் முடியவில்லையா? அர்ச்சுனா! உன் மந்தர சத்தி மறந்து விட்டதா? ஒரு
துரும்பை நீ வருண மந்திரம் சொல்லி
விடுத்தால் இத் தீ அணையுமே? தாய் தந்தை இருவர்களையும் பிரிந்த நகுல சகதேவர்களே!
பரதவம்சத்து விளக்குளான நீங்கள் அணைந்துவிட்டீர்களே! உலகமே இருண்டு விட்டதே. என்
இருதயம் வெடிக்கின்றதே. ஆ! குழந்தைகளே! இப்படி விதிவரும் என்று நான் கனவிலும்
கருதவில்லையே. இதை என்னால் நம்ப முடியவில்லையே. உண்மையில் நீங்கள் மாண்டு
போனீர்களா?" என்று வாய்
விட்டுக் கூறிப் புலம்பி அழுதார்.
விதுரர்
மட்டும் அதிகம் அழவில்லை. அவர் ஒருவர்தான் உண்மை அறிந்தவர். அவர் இரகசியமாக பீஷ்மரிடம்
வந்து "பாண்டவர் இறக்கவில்லை" என்று கூறி, "அவர்கட்கு
எள்ளும் தண்ணீரும் விடவேண்டாம்" என்றார்.
விதுரருடைய சொல்லைக் கேட்டு, பீஷ்மர் கவலை தீர்ந்தார்.
துரியோதனன், "அண்ணா தருமா!
தம்பிமார்களே!" என்று கதறி அழுது, வேடர்களின் எலும்புகளைக் கொண்டு போய்
கங்கையில் சேர்த்து, கிரியைகளைச் செய்தான். புரோசனன் மாண்டதை அறிந்து மகிழ்ந்தான்.
சில அறிஞர்கள் பாண்டவர்கள் மரணம் அடைந்து இருக்கமாட்டார்கள் என்று ஊகித்தனர்.
சாதாரண மக்கள் வருந்தினார்கள்.
துரியோதனன், "எனது முற்சி பயன்
பெற்றது. இனி நமக்கு அச்சம் இல்லை. இந்து அரசு நம்முடையது தான். அறிவினால் நாம்
முன்னேற்றம் அடைந்தோம்" என்று எண்ணி உள்ளம் உவந்து எல்லோருடனும் அத்தினாபுரம்
சேர்ந்து கவலை இன்றி வாழ்ந்தான்.
பீமன்
நடக்கும்போது அந்தக் கானகமே அசைந்தது. கருட பகவானும் காற்றுக் கடவுளும் ஒன்று
சேர்ந்து போவது போன்ற கடும் வேகத்தில் சென்றான். மரங்கள் செடி கொடிகள் முறிந்து
முறிந்து விழுந்தன. வழியில் பல காட்டாறுகளைப் பீமன் ஐவர்களையும் சுமந்துகொண்டு
தெப்பம்போல் நீந்திக் கடந்தான். இதுவரை அவர்கள் இருபத்து நான்கு யோசனை தூரம் (ஒரு
யோசனை எட்டு மைல். ஒரு மைல் 1.60 கி.மீ.) கடந்தார்கள்.
பசிதாகத்தால்
வாடிய குந்திதேவி, "மகனே! பீமா! நீ
என்னை உனது முதுகில் சுமந்தாலும், உனது வேகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல்
மூர்ச்சை வருகின்றது. இனி ஒரு அடி கூட வைக்கவேண்டாம். துரியோதனாதியர்க்கு ஏன்
அஞ்சி இப்படிப் போகவேண்டும்? உன்னை வெல்லக் கூடியவர்கள் இந்த உலகில் இல்லை.
எனக்கு உறக்கம் வருகின்றது. என்னைப் படுக்க வை" என்று கூறி அழுதாள்.
அங்கே
விசாலமான ஒரு ஆலமரம். அதன் நிழலில் அவர்கள் தங்கினார்கள். குந்தியும் தருமரும்
"தண்ணீர் வேண்டும்" என்றார்கள். "நீங்கள் இங்கே இருங்கள். நீர்ப்
பறவைகளின் ஒலி கேட்கின்றது. நான் போய் தீர்த்தம் கொணர்வேன்" என்று பீமன்
தண்ணீரை நாடிச் சென்றான்.
தாமரைத்
தடாகத்தைக் கண்டான். களைப்பு நீங்க நீராடினான். தண்ணீர் பருகினான். தாமரை இலைகளைத்
தொன்னையாகத் தைத்து, அவற்றிலும் உத்தரிய ஆடையிலும் நீர் கொணர்ந்தான்.
மரத்தடியில்
பயங்கரமான கானகத்தில் களைப்பின் மிகுதியினால் குந்தியும் பாண்டவர்களும் அயர்ந்து
உறங்கிக் கிடந்தார்கள்.
பீமன்
அவர்கள் உறங்கும் பரிதாபத்தைக் கண்டான். "இவர்கள் அரண்மனையில் உயர்ந்த
பஞ்சணையில் படுத்து இருந்தார்களே! இன்று இத்தரையில் விரிப்பும் இன்றி அநாதைகளைப்
போல் தூங்குகின்ற இந்தத் துயரத்தைக் காண நான் என்ன பாவம் செய்தேனோ? அம்மா! உனக்கு
இந்த அவல நிலை வந்ததே! வசுதேவருடைய உடன் பிறந்த சகோதரி, பாண்டுமா தேவி. எங்கள்
அன்னை. விலை உயர்ந்த தங்கக் கட்டிலில் படுத்து இருந்த இம்மாதரசி மரத்தடியில் கொடிய
விலங்குகள் நிறைந்த காட்டில் வெறுந்தரையில் படுத்திருக்கின்றாளே! பாவம். என் உடன்
பிறந்தார்களின் பெருமையை அளவிட முடியுமா? பெருமை மிகுந்த அருமைத் துணைவர்கள்
வெறுமையான புழுதியில் படுத்து உறங்குகின்ற பாவத்தைப் பார்த்த இக் கண்களைப்
பிடுங்கி எறிய வேண்டாமா? அதர்மவான் துரியோதனன் சுகப்பட, நாம்
துன்பப்படுகின்றோம். விதுரரால் உய்வு பெற்றோம்"
"கொடியவனே!
துரியோதனா! நாங்கள் மாண்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டு இருப்பாய். என் தமையனார்
எனக்கு அனுமதி தராமையால் நீ உன் உறவினருடன் வாழ்கின்றாய். பாதகனே! என் அண்ணன்
அனுமதி தந்தால் இப்போதே உன்னை உன் சுற்றத்தாருடன் இயமனுடைய வீட்டுக்கு அனுப்பி
விடுவேன். எலிகளை அடித்துக் கொல்வது போல் என் தண்டாயுதத்தால் உன் மண்டையை
உடைத்துக் கொல்லுவேன். பொறுமை உள்ள தமையனார் உத்தரவு இல்லாமல் நான் என்ன செய்ய
முடியும்?"
என்று
கூறிக் கொண்டான்.
அவனுடைய
கண்களில் நீர் முத்து முத்தாய்ப் பெருகியது. மறுபடியும் சூடான பெருமூச்சு வந்தது.
கைகளைப் பிசைந்துகொண்டான். "கொடிய வனம். அச்சம் நிறைந்த காட்டில் அச்சம்
இன்றி இவர்கள் உறங்குகின்றார்கள். விலங்குகளும் அரக்கர்களும் வாழும் வனம்.
இவர்களுக்குத் தீங்கு வரக்கூடாது" என்று எண்ணி, இடையில் கரத்தை வைத்து
எட்டுத் திசைகளையும் நோக்கி விழிப்புடன் காவல் புரிந்த கொண்டு நின்றான்.
நாட்டை
விடுத்திடவே பல சூதினில் வீழ்த்த, விதிப் படியே குரு காவலர் வனமே போய், வேற்றுமை
உற்று உருவோடு இயல் நாள் அது பார்த்து முடித்திடவே, ஒரு பாரத மேல் புனைவித்த மகா
விர மாயவன் மருகோனே ---
பாண்டவர்களைச்
சூதாட வைத்து,
பணயமாக
நாட்டையும் பிறவற்றையும் கவர்ந்து, அவர்களை நாட்டை விட்டு, காட்டிற்குப் பன்னிரண்டு
ஆண்டுகள் போய் வாசம் புரியவும், அது முடிந்த பிறகு ஓராண்டுக் காலம் அஞ்ஞாதவாசம் என்னும்
வேற்று உருவில் வாழ்ந்து வருமாறு புரிந்தான் துரியோதனன். அவ்வாறே பாண்டவர்கள் வனவாசத்தையும், அஞ்ஞாதவாசத்தையும்
முடித்த நிலையில், கண்ணன் பாண்டவர்களின் கருத்தை அறிந்து, துரோயதனனிடம் பாண்டவர்களுக்குத்
தூது சென்றார். விதுரரை ஆயுதம் எடுக்காமல் படிக்கு உபாயம் செய்தார். இறுதியில் துட்டர்களை
நிக்கிரகம் செய்து, சிட்டர்களுக்கு அனுக்கிரகம் புரிய பாரதப் போரை உருவாக்கினார்.
ஆயுதம்
ஏந்தாமல், பாண்டவர்களுக்குத்
துணைவனாக இருந்து, பார்த்தனுக்குச் சாரதியாக இருந்து பாரதப் போரை நடத்தி முடித்தவர்
கண்ணபிரான்.
தரும
வீம அருச்சுன நகுல
சகாதே வர்க்குப் ...... புகல் ஆகிச்
சமர
பூமியில் விக்ரம வளைகொடு
நாள்ஓர் பத்து எட் ...... டினில் ஆளும்
குரு
மகீதலம் உட்பட, உளம் அது
கோடாமல் சத் ...... ரியர் மாள,
குலவு
தேர்கடவு அச்சுதன் மருக!
குமாரா! கச்சிப் ...... பெருமாளே. --- (கருமமான) திருப்புகழ்.
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர்
வென்றிட, சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட, ...... அயலேபோய்ப்
பண்டையில்
விதியை நினையாப் பனி-
ரண்டு உடை வருட முறையா, பல
பண்புடன் மறைவின் முறையால், திரு ...... வருளாலே
வஞ்சனை
நழுவி நிரைமீட்சியில்
முந்து தமுடைய மனைவாழ்க்கையின்
வந்தபின், உரிமை அது கேட்டிட, ...... இசையாநாள்,
மண்கொள
விசையன் விடு தேர்ப்பரி
உந்தினன் மருக! வயலூர்க் குக!
வஞ்சியில்
அமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
--- (சஞ்சல சரித)
திருப்புகழ்.
திருதராட்டிரன்
உதவு நூற்றுவர்
சேண் நாடு ஆள்வான், நாள் ஓர் மூவா ...... றினில் வீழ,
திலக
பார்த்தனுமு உலகு காத்து அருள்
சீர் ஆமாறே தேர்ஊர் கோமான் ...... மருகோனே!
குருதி
வேல்கர! நிருத ராக்ஷத
கோபா! நீபா! கூதாளா! மா ...... மயில்வீரா!
குலிச
பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே! தேவே! வேளே! வானோர் ......
பெருமாளே.
--- (பருதியாய்) திருப்புகழ்.
சூது பொரு தருமன் நாடு தோற்று, இரு
ஆறு வருஷம் வன வாசம் ஏற்று, இயல்
தோகை உடனுமெ விராட ராச்சியம் ...... உறைநாளில்,
சூறை
நிரை கொடு, அவர் ஏக மீட்டு, எதிர்
ஆளும் உரிமை தருமாறு கேட்டு, ஒரு
தூது செல, அடுவல் ஆண்மை தாக்குவன், ......எனமீள,
வாது
சமர் திருத ரான ராட்டிர
ராஜ குமரர், துரியோதன னால், பிறர்
மாள, நிருபரொடு சேனை தூள்பட, ...... வரி சாப
வாகை
விஜயன் அடல் வாசி பூட்டிய
தேரை முடுகு நெடுமால், பராக்ரம
மாயன் மருக! அமர் நாடர் பார்த்திப ......
பெருமாளே.
---
(மோதுமறலி) திருப்புகழ்.
கூற்று
மரித்திடவே உதை பார்வதியார் ---
மார்க்கண்டேயருக்காக
இயமன் மடிந்து போகும்படியாகத் தனது இடது திருவடியால் சிவபெருமான் உதைத்தார். "கூற்றினை மோதிய பத சத்தினி" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்பகழில்.
கடவூர்
உறை பெருமாளே ---
மக்கள்
வழக்கில் "திருக்கடையூர்" என்று சொல்லப்படுகின்ற, "திருக்கடவூர்" என்பது சோழ நாட்டு, காவிரித் தென்கரைத்
திருத்தலம்.
மயிலாடுதுறை
- தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் (இரயில் மார்க்கமும் இதுவே. திருக்கடையூர்
நிலையத்திலிருந்து 1 கி. மீ. தொலைவில்)
இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
இறைவர்
: அமிர்தகடேசுவரர், அமிர்தலிங்கேசுவரர்
இறைவியார்
: அபிராமி
தல
மரம் : வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை.
மூவர்
முதலிகள் வழிபட்டு, திருப்பதிகங்களை
அருளிய திருத்தலம்.
திருமால் முதலிய
தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து
வைத்தமையால், 'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு
உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.
மார்க்கண்டேயருக்காக
இறைவன் எமனை உதைத் தருளிய தலம். பிரமனுக்கு உபதேசம் செய்த இடம்.
மார்க்கண்டேயர்
கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு.
இதனால் இத்தலத்திற்கு 'பிஞ்சிலராண்யம் ' என்றும் பெயர். (தற்போது தலமரம் இதுவே.
ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர்.)
அட்ட
வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.
திருக்கடவூர்
வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன
இத்தலத்தின் வேறு பெயர்கள்.
உள்ளம்
உருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து -
அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.
அன்னை
அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல
பதி. இங்குள்ள
காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான
தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.
சுவாமிக்கு நாள்தோறும்
அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி
தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின்
இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.
மிருகண்டு
முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு
ஆகும். பூமிதேவி அருள் பெற்ற தலம். பூமிதேவி
பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும்
பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா)
எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற
(எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு
(மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
கன்றிய
காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம்
நடைபெறுகின்றன. கார்த்திகை
சோமவார 1008 சங்காபிஷேகம்
சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.
இப்பதியில் அவதரித்த குங்குலியக் கலய
நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக்
குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில் சாய்ந்து யாராலும்
நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக
நிமிர்த்தியவர்.
அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருக்கடவூர்.
குருபூசை நாள் : ஆவணி - மூலம்
குங்குலியக் கலய
நாயனார் வரலாறு
திருக்கடவூர்
சோழ நாட்டிலுள்ள ஒரு தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் அமிர்தகடேசுவரர்
என்ற திருநாமம் கொண்டு நம்மை உய்விக்கிறார். பால் மணம் மாறாத பாலகன்
மார்க்கண்டேயனின் அன்பு அணைப்பிலே கட்டுப்பட்ட பெருமான் காலனைக் காலால் உதைத்து
காலசம்மார மூர்த்தியாக வெளிப்பட்ட தலம் இதுவே.
இத்தகைய
புராணப் பெருமைமிக்க தலத்தில் வேதியர்கள் பலர் வாழ்ந்தனர் அவர்களுள் கலயனாரும்
ஒருவர் இவர் கங்கை அணிந்த மாதொருபாகன்
திருவடியை இடையறாது வணங்கும் நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். தூய
உள்ளமும், நல்லநெறியும் சிறந்த
பக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற கலயனார், திருக்கோயிலுக்கு
குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை, தவறாது
பக்தியோடு செய்து வந்தார்.
எம்பெருமானுக்குத்
தூய மணம் கமழும் குங்கிலியத் தூபமிடும் தொண்டினைச் செய்ததால் இவர் குங்குலியக்
கலயர் என்று பெயர் பெற்றார். கலயனார் குடும்பத்தில் வறுமை தாண்டவம் புரிந்தது.
வறுமையையும் ஒரு பெருமையாகக் கொண்டு சற்றும் மனம் தளராது திருத்தொண்டினை மட்டும்
இடைவிடாது சிறப்பாகவே செய்து வந்தார் கலயனார். வறுமை நாளுக்கு நாள் வளரத்
தொடங்கியது. நிலங்களை விற்றார். வீட்டில் உள்ள அசையும் அசையாத பொருட்களை விற்றார்.
பசியினால் சுற்றமும் மக்களும் மனைவியும் பெரிதும் துன்புற்றார்கள் . இரு நாட்களாக
உணவில்லாமல் வாடினர் கலயனார் தமது வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொண்டாரே தவிர
குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை மட்டும் நிறுத்தவில்லை.
வறுமையின்
நிலை கண்டு குடும்பத்தலைவி மனம் வருந்தி தமது திருமாங்கலியத்தைக் கழற்றிக்
கணவரிடம் தந்து, அதனை விற்று, நெல் வாங்கி வருமாறு கூறினார்.
திருமாங்கல்யத்தைப்
பெற்று அதை விற்று நெல் வாங்கும் பொருட்டு புறப்பட்டார். அந்த சமயம் எதிரில் ஒரு
வணிகன் ஒப்பில்லாக் குங்குலியப்
பொதியினைக் கொண்டு வந்தான் நாயனார் அவனிடம் இது என்ன பொதி ? என்று வினவினார். அவன் இது குங்குலியம்
என்றான் அது கேட்ட கலயனார் அகமும் முகமும் மலர்ந்தார் .
இறைவனின்
திருவருளை என்னென்பது! கையிலே பொன்னையும் கொடுத்து, எதிரில் குங்குலியத்தையும் அல்லவா
அனுப்பி வைத்திருக்கிறார். இந்த பாக்கியம் உலகில் வேறு யாருக்குமே கிட்டாது.
எம்பெருமானின் திருவுள்ளம் இந்த ஏழைக்காக இரங்கியதை என்னென்பது என்று எண்ணி
மகிழ்ந்தார் கலயனார். களிப்புடன் வணிகனை அணுகி, இந்த பொன்னை எடுத்துக் கொண்டு, குங்கிலியப் பொதியைக் கொடு என்றார்.
கலயனார், தாலியை வணிகனிடம் கொடுக்க
மகிழ்ச்சியோடு வணிகனும் குங்குலியப் பொதியை அவரிடம் கொடுத்தான்.
உடனே
கலயனார், குங்குலியப்பொதியோடு
விரைந்து கோயிலுக்கு சென்று குங்குலிய மூட்டையைச் சேர்த்துச் சிந்தை மகிழ்ந்தார்.
இறைவனின் திருநாமத்தைப் போற்றியவாறு மனைவி மக்களையும் மறந்து எம்பிரானை நினைந்து
அயரா அன்புடன் வழிபாடு செய்து அங்கேயே தங்கிவிட்டார்.
கங்கையைச்
சடையிலே தரித்த சிவபெருமானின் திருவருளின்படி குபேரன் கலயனாரது திருமாளிகை
முழுவதும் நெல்லும், நவமணியும், பொன்னும், பட்டும் அளவிட முடியாத அளவிற்கு
குவித்து வைத்தனன். இறைவன் களைத்து துயிலும் கலயனாருடைய மனைவியாரின் கனவில்
எழுந்தருளி தமது திருவருளால் செல்வம் நிறைந்த தன்மையை உணர்த்தியருளினார். கலயனார் மனைவி துயிலெழுந்து வீட்டில் பொன்னும், மணியும், நெல்லும், குவிந்து கிடப்பது கண்டு திருவருளை
வியந்து போற்றினார். விடியற்காலை நேரமாதலால் குளித்து முழுகி கணவனாருக்கு உணவைப்
பக்குவம் செய்யத் தொடங்கினாள்.
கலயனார்பால்,
காலனைச் செற்ற கண்ணுதற் கடவுள் எழுந்தருளி, "அன்பனே! உன்னுடைய இல்லத்திற்குச் சென்று, பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு பசி
தீர்ந்து மகிழ்வாயாக" என்று திருவாய் மலர்ந்தார். குங்கிலியக் கலயனார்
மகிழ்ச்சி பொங்க தமது திருமனைக்கு ஓடோடி
வந்தார்.
இல்லத்தில்
இருநிதிக் குவியல்கள் சேர்ந்த செல்வம் கண்டார் . திருமாங்கல்யத்துடன் திகழும்
மனைவியை நோக்கி, "எப்படி
இதெல்லாம்" என்று வினவ அம்மையார் தொழுது, "எம்பெருமான் அருளினால் வந்தது"
என்றார். நாயனார், "எம்மையும் ஒரு
பொருட்டாக ஆட்கொண்ட எந்தை ஈசனின் திருவருள் தான் என்னே?" என்று தலைமேல் கை கூப்பி வணங்கினார்.
பின் பலகாலும் நாயனாரும் அவர்தம் மனைவியாரும் அடியார்க்கு அமுது செய்வித்து
திருத்தொண்டாற்றி வருவாராயினர்
திருப்பனந்தாள்
என்னும் திருத்தலத்திலே, பாரே வியக்கும்
அளவிற்கு ஒரு சம்பவத்தை இறைவர் ஏற்படுத்தினார். திருப்பனந்தாள் கோயிலில்
எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தாள் தாடகை என்னும்
பெண்ணொருத்தி. இறைவழிபாடு முடிந்த பிறகு
இறைவனுக்கு மாலையை அணிவிக்கும் சமயத்தில் அம்மங்கை நல்லாளின் ஆடை சற்று
நெகிழ்ந்தது.
ஆடையை
இரண்டு முழங்கைகளினாலும் இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனுக்கு மாலையைப் போட முயன்ற அப்பெண்
மாலையை அணிவிக்க முடியாமல் தவிக்க இறைவன், அப்பெண்ணுக்காக இரங்கிச் சற்றுச்
சாய்ந்து கொடுக்க தாடகையும் மாலையணிவித்து, மகிழ்வோடு சென்றாள். அது முதல் அங்கு
சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.
இந்நிலையில், திருப்பனந்தாள் ஆலயத்தில்
சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன்.
பூங்கச்சினை சுற்றி அதன் முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான்.
திருமேனி நிமிரவில்லை. அன்பின் மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து
கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான்.
இச்செய்தி குங்குலியக் கலயனார் கேட்டார் இறைவனுக்குத் திருத்தொண்டு புரிந்து வரும்
குங்குலியக் கலயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோயிலை
அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப்
புகையினால் சந்நிதியைத் தூபமிட்டார் .
கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த
கயிற்றின் ஒரு பக்கத்தை எம்பெருமான்
திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத்
தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். கயிறு இறுகி உயிர் போகும் என்று கவலைப்பட வில்லை நாயனார்! இறைவனுக்கு இச்சிறு
தொண்டினைச் செய்ய முடியாத இந்த உயிர் இருந்தாலென்ன? பிரிந்தாலென்ன? என்ற முடிவோடு தமது முழுப் பலம் கொண்டு
இழுத்தார். இறைவனைக் கயிற்றால்,
தன்
கழுத்தோடு கலயனார் பிணைத்து இழுத்த செயல் எம்பெருமானுக்குத் தம்மைப் பக்தி எனும்
கயிற்றால் கட்டி இழுப்பது போல் இருந்தது.
அன்புக்
கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார்.
கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது. எம்பெருமான்
திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால்
கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது.
குங்குலியக் கலயனாரின் பக்தியையும்,
இறைவனைக்
கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர்.
சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, "ஐயனே! உங்கள் அன்பின் திறத்தினை
என்னென்பது ! திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் மலரடியை அன்புமிக்க அடியார்கள்
அல்லாது வேறு யாரால் அடைய முடியும் ? உம்மால்
யாமும் எம் குடிமக்களும் உய்ந்தோம்
உலகிற்கே உய்வு தங்களால்தான் ஏற்பட்டது" என்றார். அரசன்
திருப்பணிகளும், திருவிழாக்களும்
நடத்தினான். அரசன் கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான். பின் மன
நிறைவோடு தன்னகர் அடைந்தான்.
கலயனார்
அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார்.
முன்போல் ஆலய வழிபாட்டை செய்யலானார்.
திருக்கடவூர்க்கு
எழுந்தருளிய சீர்காழிப் பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமானையும், திருநாவுக்கரசு நாயனாரையும் அடியார்
குழாங்களையும் அன்பின் மிகுதியினால் எதிர்
கொண்டு அழைத்து, வணங்கி, தமது திருமனைக்கு புகுத்தி அருசுவை
உண்டியும் படைத்து குருவருளும் திருவருளும் ஒருங்கே பெற்றார்.
காலனையும்
காமனையும் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்குத் தொண்டு பல புரிந்து, காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக்
கலயனார், இறுதியில் இறைவன்
திருவடி நீழலை இணைந்த பேரின்ப வாழ்வைப் பெற்றார்.
காரி
நாயனாரும்
இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள்
செய்து, தொண்டாற்றி
முத்தியடைந்த பதி.
அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருக்கடவூர்.
குருபூசை நாள் : மாசி - பூராடம்.
காரி நாயனார் வரலாறு
மறையோர்
வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண்தமிழில் துறைகளின் பயன்
தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித்
தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர்.
அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.
அவர்கள்
தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார்.
எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ்
செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும்
மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன்
வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.
குங்குலியக்கலய
நாயனார், காரி நாயனார்
ஆகியோரது திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.
அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில்
தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.
கருத்துரை
முருகா! உயிர் பிரிந்ததும்
இந்த உடம்பானது லொடுக்கு என விழும்போது வந்து அருள்வாய்
No comments:
Post a Comment