அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அமுதினை மெத்த (மயிலாடுதுறை)
முருகா!
தேவரீரது திருவடியைப்
பாடி வழிபட்டு உய்ய அருள்.
தனதன
தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை
மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிழிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ......
விதழாராய்
அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ......
மயல்தீரக்
குமுதம்
விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக்
குவடிள
கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ......
அருள்வாயே
வமிசமி
குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ......
மதியாமே
மறுவறு
கற்பிற் சிறந்த சீதையை
விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன்
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ......
மருகோனே
எமதும
லத்தைக் களைந்து பாடென
அருளவ தற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ......முருகோனே
எழில்வளை
மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அமுதினை
மெத்தச் சொரிந்து, மாவினது
இனிய பழத்தைப் பிழிந்து, பால் நறவு
அதனொடு தித்தித்து அகண்டு அளாவிய .....இதழாராய்,
அழகிய பொன்தட்டில் நொண்டு, வேடையின்
வரு பசியர்க்கு உற்ற அன்பினால் உண
அருள்பவர் ஒத்து, தளர்ந்த காமுகர் ......
மயல்தீரக்
குமுதம்
விளர்க்க, தடம் குலாவிய
நிலவு எழு முத்தைப் புனைந்த, பாரிய,
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபார,
குவடு
இளகக் கட்டி, உந்தி மேல்விழும்
அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை,
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுஉற
....அருள்வாயே!
வமிசம்
மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும்
மறுகிட, வுக்ரக் கொடும்பை ஆன புன்
மதிகொடு அழித்திட்டு இடும்பை ராவணன் .....மதியாமே
மறுஅறு
கற்பில் சிறந்த சீதையை
விதனம் விளைக்க, குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன்
.....மருகோனே!
எமது
மலத்தைக் களைந்து பாடு என
அருள, அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறுஅருள்
....முருகோனே!
எழில்வளை
மிக்கத் தவழ்ந்து உலாவிய
பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணைஇலி ரத்னச் சிகண்டியூர் உறை ......
பெருமாளே.
பதவுரை
வமிசம் மிகுத்து --- தன் குலத்தினர்
பெருகி வாழ,
ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட --- உலகம்
எல்லாம் வருந்தும்படியாக,
உக்ரக் கொடும்பை ஆன புன் மதி கொடு
அழித்திட்டு இடும்பை ராவணன் --- மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான
புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த இராவணன்
மதியாமே --- மதிக்காமல்,
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம்
விளைக்க --- குற்றம் அற்ற கற்பினில் மேம்பட்ட சீதையைக் கவர்ந்து சென்று
அவளுக்குத் துன்பம் விளைவிக்க,
குரங்கினால் அவன் வமிசம் அறுத்திட்டு
இலங்கு மாயவன் மருகோனே --- குரங்குகளின் துணையோடு அவனுடைய குலத்தை அறுத்து
விளங்கிய இராமபிரான் ஆகிய திருமாலின் திருமருகரே!
எமது மலத்தைக் களைந்து --- அடியேனது
ஆணவ மலத்தை நீக்கி,
பாடு என அருள --- தேவரீரைப் பாடுமாறு
அருள் புரிய,
அதற்குப் புகழ்ந்து பாடிய இயல் கவி
மெச்சிட்டு --- அந்த அருளைப் புகழ்ந்து தேவரீர் மீது பாடிய பாடல்களை விரும்பி,
உயர்ந்த பேறு அருள் முருகோனே ---
மேலான வீடுபேற்றினை அருளிய முருகப் பெருமானே!
எழில் வளை --- அழகு மிக்க சங்குகள்,
மிக்கத் தவழ்ந்து உலாவிய பொ(ன்)னி நதி
தெற்கில் திகழ்ந்து மேவிய இணை இலி --- மிகுதியாகத் தவழ்ந்து உலவுகின்ற காவிரி
ஆற்றின் தென்கரையில் எழுந்தருளி உள்ள இணையற்றவரே!
ரத்னச் சிகண்டி ஊர் உறை பெருமாளே --- ஒளிமயமான
மயில் ஆடுகின்ற துறை என்னும் ஊரில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
அமுதினை மெத்தச் சொரிந்து ---
அமுதத்ததை நிரம்பு ஊற்றி,
மாவினது இனிய பழத்தைப் பிழிந்து ---
அதில் இனிய மாம்பழத்தைப் பிழிந்து,
பால் நறவு அதனொடு --- பாலும், தேனும்
ஆகியவற்றோடு,
தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் --- இனிக்கின்ற
கற்கண்டையும் கலந்தது போன்ற இனிமையான வாயிதழ்களை உடையவர்களாய்,
அழகிய பொன் தட்டில் நொண்டு ---
அழகிய பொன் தட்டில் முகந்து,
வேடையின் வரு பசியார்க்கு --- உணவு
வேட்கை கொண்டு வருகின்ற பசி உள்ளவர்களுக்கு,
உற்ற அன்பினால் உணவு அருள்பவர் ஒத்து
--- அவர்கள் மேல் வைத்த அன்பினால், பசி தீர உணவு தருபவர்களைப் போல, (தமது காம இன்பத்தைத்
தந்து),
தளர்ந்த காமுகர் மயல் தீர --- காம
உணர்வால் உள்ளம் தளர்ந்த காமுகர்களின் மயக்கமானது தீரும்படி,
குமுதம் விளர்க்க --- வாய் வெளுக்க,
தடம் குலாவிய --- பரந்து உள்ள,
நிலவு எழு முத்தைப் புனைந்த --- ஒளி
வீசும் முத்துமாலைகளைப் புனைந்த,
பாரிய --- பருத்து,
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தனபாரக்
குவடு இளகக் கட்டி --- திரண்டு மிக்கெழுந்து உள்ள, அழகிய மலைபோன்று உள்ள
மார்பகங்கள் இளகுமாறு இறுக அணைத்து,
உந்தி மேல் விழும் --- உந்திச்
சுழியில் விழுகின்ற
அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை ---
விலைமாதர்களாகிய அவர்களின் மீது உண்டான காம உணர்வில் முழுகி அழிந்த பாவியாகிய
அடியேனை,
குரை கழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வு உற
அருள்வாயே --- ஒலிக்கின்ற
வீரக்கழல் அணிந்த தேவரீருடைய திருவடியையே பற்றாகப் பற்றிப் புகழ்ந்து பாடிப்
பணிந்து, நல் வாழ்வினை அடைய அருள் புரிவீராக.
பொழிப்புரை
தன் குலத்தினர் பெருகி வாழ, உலகம் எல்லாம் வருந்தும்படியாக, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான
புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த இராவணன் மதிக்காமல், குற்றம் அற்ற
கற்பினில் மேம்பட்ட சீதையைக் கவர்ந்து சென்று அவளுக்குத் துன்பம் விளைவிக்க, குரங்குகளின் துணையோடு
அவனுடைய குலத்தை அறுத்து விளங்கிய இராமபிரான் ஆகிய திருமாலின் திருமருகரே!
அடியேனது ஆணவ மலத்தை நீக்கி, தேவரீரைப் பாடுமாறு அருள் புரிய, அந்த அருளைப் புகழ்ந்து தேவரீர் மீது
பாடிய பாடல்களை விரும்பி, மேலான வீடுபேற்றினை அருளிய
முருகப் பெருமானே!
அழகு மிக்க சங்குகள், மிகுதியாகத் தவழ்ந்து உலவுகின்ற காவிரி ஆற்றின் தென்கரையில்
எழுந்தருளி உள்ள இணையற்றவரே!
ஒளிமயமான மயில் ஆடுகின்ற துறை என்னும் ஊரில்
எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
அமுதத்ததை நிரம்ப ஊற்றி, அதில் இனிய மாம்பழத்தைப் பிழிந்து, பாலும், தேனும் ஆகியவற்றோடு, இனிக்கின்ற கற்கண்டையும் கலந்தது போன்ற
இனிமையான வாயிதழ்களை உடையவர்களாய்,
அழகிய
பொன் தட்டில் முகந்து, உணவு வேட்கை கொண்டு வருகின்ற பசி உள்ளவர்களுக்கு, அவர்கள் மேல் வைத்த அன்பினால், பசி தீர
உணவு தருபவர்களைப் போல, தமது காம இன்பத்தைத்
தந்து, காம உணர்வால் உள்ளம் தளர்ந்த காமுகர்களின் மயக்கமானது தீரும்படி,வாய்
வெளுக்க, பரந்து உள்ள, ஒளி வீசும் முத்துமாலைகளைப் புனைந்த, பருத்து, திரண்டு
மிக்கெழுந்து உள்ள, அழகிய மலைபோன்று உள்ள மார்பகங்கள் இளகுமாறு இறுக அணைத்து, உந்திச் சுழியில் விழுகின்ற விலைமாதர்களாகிய அவர்களின் மீது உண்டான
காம உணர்வில் முழுகி அழிந்த பாவியாகிய அடியேனை, ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த தேவரீருடைய
திருவடியையே பற்றாகப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பணிந்து, நல் வாழ்வினை அடைய அருள் புரிவீராக.
விரிவுரை
அமுதினை
மெத்தச் சொரிந்து, மாவினது இனிய பழத்தைப் பிழிந்து, பால் நறவு அதனொடு, தித்தித்த
கண்டு அளாவிய இதழாராய் ---
"பால் அன ஆரமுது, கண்டு தேன் அன இதழ் ஊறல்"
என்றும், "பட்சம்
மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழ் ஊறல் எச்சில் அளிப்பவர்" என்றும், "தேனில் பாகொடு கனி
அமுது ஊறித் தேறிய மொழிமாதர்" என்றும்
அடிகளார் பிற இடங்களில் அருளியது காண்க.
இனிமையாகவும், மென்மையாகவும் பேசும் இயல்பை உடைவயர்கள் பெண்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார்
திருவள்ளுவ நாயனார். பால் சுவை மிக்கது. தேனும் சுவை மிக்கது. இரண்டுமே நன்மை
பயப்பவை. பாலும் தேனும் கலந்த போது, அந்தக் கலவையின் சுவையானது இன்னது என்று
அறியலாகாத இனியதொரு சுவையை உடையது. அதுபோல இன்னது என்று அறிய முடியாத இன்பம்
தருகின்ற இனிய மொழியை உடையவள் ஆகிய தலைவியின் காதல் சிறப்பை உரைத்தது இத்
திருக்குறள். பணிவுடைய சொல் என்பதால், பணிமொழி என்று நாயனார் காட்டிய நயத்தையும் எண்ணுக. இது பெண்மக்களின்
இயல்பு.
பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.
--- திருக்குறள்.
விலைமாதர்களின் இதழூறலை காமுகர் பால் என்றும் அரிய அமுதம் என்றும், கற்கண்டு என்றும், தேன் என்றும் கூறி மகிழ்வர்.
தம்பால் வரும் ஆடவரை மயக்குவதே தொழிலாக உடையதால், இனிமையாகவும் மென்மையாகவும் பேசுவதில் தேர்ந்தவர்கள் விலைமாதர்கள்.
இதழூறலைப் பற்றி, இத் திருப்புகழில் அடிகளார், அமுதத்தினை மிகவும் விட்டு,
அதில் மாம்பழச் சாற்றினைக் கலந்து, பாலையும், தேனையும் கூட்டி, இனிய கற்கண்டையும்
விரவியது போன்ற இனுமையைத் தருகின்ற இதழூறல் என்று காட்டி இருப்பது காண்க.
இனிமைக்குச் சிறப்புச் சேர்க்க இவ்வாறு கூறினார்.
இறையின்பமானது எப்படி இனிக்கும் என்பதை,
தனித்தனி
முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,
தனித்த
நறும் தேன் பெய்து, பசும்பாலும் தேங்கின்
தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,
இனித்த
நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,
அனித்தம்
அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
அடிமலர்க்கு என்சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!
வள்ளல்
பெருமான் திருவருட்பாவில் காட்டி உள்ளார்.
எதிரும் புலவன் வில்லிதொழ
எந்தை உனக்குஅந் தாதிசொல்லி
ஏழைப்புலவர் செவிக்குருத்தோடு
எறியும் கருவி பறித்தெரிந்த,
அதிரும் கடல்சூழ் பெரும்புவியில்
அறிந்தார் அறியார்
இரண்டுமில்லார்,
ஆரும் எனைப்போல் உனைத் துதிக்க
அளித்த, அருண கிரிநாதன்
உதிரும் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து, தேனை வடித்து
ஊற்றி, அமுதின் உடன்கூட்டி,
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரம் கனிந்த திருபுகழ்ப்பா
மாலை புனைந்தான் வருகவே!
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே!
எனத் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல் காட்டி இருப்பதும் காண்க.
இறையருள் வயப்பட்டோர்க்கு உண்டாகும்
இன்பத்தை இப் பாடல்கள் உணர்த்தி நின்றன. இந்த இன்பம் மேன்மையை அளிக்கும்.
ஆனால், காமவயப்பட்டோர்க்கு விலைமாதர் தரும் அதரமானமானது எப்படித்
தித்திக்கும் என்பதை இப் பாடலில் அடிகளார் காட்டினார். விலைமாதர் தரும் இன்பம்
கேட்டினை அளிக்கும்.
தளர்ந்த
காமுகர் மயல் தீர ,அழகிய பொன் தட்டில் சொண்டு, வேடையின் வரு பசியார்க்கு, உற்ற
அன்பினால் உணவு அருள்பவர் ஒத்து ---
நொண்டு
- முகந்து,
வேடை
- வேட்கை.
பகுத்து
உண்டு பல்லுயிர் ஓம்பும் வள்ளன்மை உடையவர், தாம் உண்ணும் முன்பு பசித்து வந்தோர்
யாராயினும் இன்முகத்தோடு வரவேற்று, உபசரித்து, உண்ண உணவும், பிறவும் அளித்து,
அவர்க்கு விடை கொடுத்து, பின்னும் விருந்தினர் வருகையை எதிர்நோக்கி இருப்பர்.
விருந்தினரை உபசரித்த பின்பு மிஞ்சி உள்ள உணவையே தாம் புசிப்பர். "மிச்சில்
மிசைவான்" என்றும், "செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்திருப்பான்" என்றும் திருவள்ளுவ நாயனார் அருளி இருத்தல் காண்க.
பிற
உயிர்களின் துன்பத்தைத் தனதாக எண்ணி, ஒல்லும் வகையால் உதவுவதே அறிவுடைமையும்,
அன்புடைமையும் ஆகும் என்பதால், எல்லா உயிர்க்கும் தண்ணளி பூண்டு இருப்பது மனித
யாக்கையைப் பெற்றதால் ஆன பயன் ஆகும்.
அப்படி,
மிகுந்த அன்பு உடையவர் பசியோடு வந்தோர்க்கு, பொன் தட்டில் வைத்து உணவு அளித்துப்
பசியினைத் தீர்ப்பது போல, விலைமாதர்கள் காம
வேட்கையோடு வருபவர்கள்பால் மிகுந்த அன்பு உடையவர்கள் போலத் தம்மைக் காட்டிக்
கொண்டு, காமப் பசி தீர, தமது உடலின்பத்தை
வழங்குவார்கள் என்கின்றார் அடிகளார்.
குமுதம்
விளர்க்க
---
குமுதம்
- செவ்வாம்பல் மலர்.
காம
இன்பத்தில் திளைப்பவர்க்கு செவ்வாய் வெளுக்கும். வெண்மையான கண்கள் சிவக்கும்.
தடம்
குலாவிய நிலவு எழு முத்தைப் புனைந்த, பாரிய, குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தனபாரக்
குவடு இளகக் கட்டி, உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவி ---
தடம்
- பரந்து உள்ள,
"எய்த்து
இடை வருந்த எழ்ந்து புடை பரந்து" என்னும் திருவாசக வரிகளால் அறியலாம்.
நிலவு
- குளிர்ந்த ஒளி.
நவமணிகளில்
முத்து ஒளி பொருந்தி இருப்பதோடு, அணிபவர்க்குக் குளிர்ச்சியையும் தரக்கூடிது.
தனபாரக்
குவடு - மலை போல் உயர்ந்து விளங்கும் முலைகள்.
முலைகள்
மலை என்றால், உந்திச் சுழியானது மடு ஆகும்.
"உந்தி
என்கின்ற மடு விழுவேனை" என்று அடிகளார் பிறிதோரிடத்தில் கூறி இருப்பது அறிக.
“அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும் ---(பழிப்பர்) திருப்புகழ்.
“பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி யிடைவிழு பஞ்ச பாதகன் என்று
சேர்வேன். --- உரைதரு (திருப்புகழ்)
“அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்” --- திருவருட்பா.
ஆழமாகிய பெரிய மடுவின்கண் வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம்
கரையேறுதல் முடியாதோ, அங்ஙனமே, மாதர்
உந்தி என்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் வடிவேல் பரமனது தண்டையணி வெண்டையங்
கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி அம்
மடுவினின்றும் உய்ந்து முத்தி என்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர
முடியாது.
கடத்தில் குறத்தி பிரான் அருளாற் கலங்காத சித்தத்
திடத்தில் புணை என யான் கடந்தேன்,சித்ர மாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ்வாயில் பணையில் உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.
என அடிகளார் கந்தர் அலங்காரப் பாடலில் அருளி இருப்பது அறிக.
வமிசம்
மிகுத்து, ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட, உக்ரக் கொடும்பை ஆன புன் மதி கொடு
அழித்திட்டு இடும்பை ராவணன் ---
தனது
அரக்கர் குலம் வாழ, தனது கீழான அறிவால்
அனைத்து உலகங்களையும் துன்புறுத்தி வந்தவன் இராவணன்
மதியாமே,
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க, குரங்கினால் அவன் வமிசம்
அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே ---
அந்த
இராவணன் தனது சகோதரியின் போதனைகளைக் கேட்டு, இராமபிரானது அருமையையும், அவரது
தேவியாகிய சீதாபிராட்டியின் பெருமைகளையும் சிறிதும் மதிக்காமல், குற்றம் சிறிதும்
அற்ற கற்பில் மேம்பட்டு விளங்கிய சீதாதேவியைக் கவர்ந்து சென்று, தனது
இருப்பிடமாகிய இலங்காபுரியில் அசோகவனத்தில் வைத்துக் கொடுமை புரிந்தான். இராம்பிரான் குரங்குச் சேனைகளின் துணையோடு
கடலில் அணை கட்டி, இலங்காபுரிக்குச் சென்று, இராவணனையும், அவனது குலத்தையும்
அழித்து, சீதாதேவியை மீட்டு, விபீஷணருக்கு முடிசூட்டி அருளினார்.
மூக்கு
அறை மட்டை, மகா பல காரணி,
சூர்ப்பநகை, படு மூளி, உதாசனி,
மூர்க்க குலத்தி, விபீஷணர் சோதரி, ...... முழுமோடி,
மூத்த
அரக்கன் இராவணனோடு இயல்பு
ஏற்றி விட, கமலாலய சீதையை,
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு, ......முகிலேபோய்,
மாக்
கன சித்திர கோபுர நீள் படை
வீட்டில் இருத்திய நாள், அவன் வேர்அற
மார்க்கம் முடித்த விலாளிகள் நாயகன்
......மருகோனே!
--- திருத்தணிகைத்
திருப்புகழ்.
சானகி
கற்புத் தனைச் சுட, தன்
அசோக வனத்தில் சிறைப் படுத்திய
தானை அரக்கர் குலத்தர் அத்தனை ...... வரும் மாள,
சாலை
மரத்துப் புறத்து ஒளித்து, அடல்
வாலி உரத்தில் சரத்தை விட்டு, ஒரு
தாரை தனைச் சுக்ரிவற்கு அளித்தவன்
....மருகோனே!
--- திருவருணைத்
திருப்புகழ்.
பால்
அன மீது மன் நான்முக செம்பொன்
பாலனை, மோது அபராதன! பண்டு அப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுஉற்று ....அமராடிப்
பாவி
இராவணனார் தலை சிந்தி,
சீரிய வீடணர் வாழ்வு உற, மன்றல்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு.....இனியோனே!
--- திருச்செந்தூர்த்
திருப்புகழ்.
நிகரில்
வஞ்சக மாரீச ஆதிகள்,
தசமுகன் படை கோடா கோடிய,
நிருதரும் பட ஓர் ஏவு ஏவியெ ...... அடுபோர்செய்
நெடியன், அங்கு அனுமானோடே எழு-
பது வெளம் கவி சேனா சேவித,
நிருபன் அம்பரர் கோமான் ராகவன் ......
மருகோனே!
--- திருவலஞ்சுழித்
திருப்புகழ்.
எமது
மலத்தைக் களைந்து பாடு என அருள ---
மலம்
என்பது உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள மூலமலம் ஆகிய ஆணவமலத்தைக் குறிக்கும்.
ஆணவத்தை வல்லிருள் என்பர். இருளில் உதவும் விளங்காதது போல், ஆணவம் இருந்தால் அறிவு
விளங்காது. ஆணவம் அறிவை மறைக்கும். அதனால் உயிர் அறிவானது விளக்கம் பெறாமல்,
அஞ்ஞானத்திலேயே இருந்து துன்பம் உறும். உலக இருளைக் கதிரவன் ஒளி போக்குவது போல்,
ஆன்ம இருளை ஆண்டவன் அருள் ஒளியே போக்கும். இறைவன் கருணையால் ஆன்மாவின் ஆணவமலமானது
வலி குன்றிப் போகும். அது நேர்ந்தால் ஆன்மா, இறைவனே கதி என்று அவனைப் பாடிப்
பரவுவதே தொழிலாக இருக்கும்.
இறைவன்
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அருள் புரிந்து, "மண்மேல் நம்மைச் சொல் தமழ்
பாடுக" என்றார். அவர் பாடி அருளிய திருப்பதிகத்தைச் செவி மடுத்த இறைவர்,
"இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்று அருளினார்.
நினைத்தாலே
முத்தி அளிக்குந் திருவருணையில் நம் அருணகிரிப் பெருமான் முன் குமாரக்கடவுள்
தோன்றி “முத்தைத் தரு” என்று அடியெடுத்துத் தந்து மறைய, அத் திருப்புகழொன்று மட்டும் பாடிச்
சிவயோகத்தது இருந்து, முருகப் பெருமானை
வழிபட்டுக் கொண்டு இருந்தார்.
"உன்
புகழே பாடி நான் இனி உய்ந்திட, வீண் நாள் படாது அருள் புரிவாய்" என்று
வடிவேல் அண்ணலை வேண்டினார். "காயமும் நாவும் நெஞ்சும் ஒரு வழியாக அன்பு காயம்
விடாமல் உன்தன் நீடிய தாள் நினைந்து காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாய்"
என்றும் வேண்டினார். "உயர் திருப்புகழ் செப்பு" என அருள் புரிந்தார் எம்பெருமான்.
முருகவேள்
அசரீரியாக “நம் வயலூருக்கு வா” என்றருள் புரிய, அருணகிரியார் வயலூர் போய் ஆண்டவனைப்
பணிந்து, திருப்புகழைப் பாடும்
முறைமையை வினவ, கந்தவேள் இன்ன
இன்னவைகளை வைத்துப் பாடு என்று பணிக்க,
உடனே அருணகிரியார் வயலூரில் எழுந்தருளியுள்ள பொய்யா கணபதி சந்நிதியில் நின்று, “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழைப்
பாடிய பின் தனக்கு முருகவேள் கூறிய அனுக்கிரகத்தை மறவேன் என்று திருப்புகழைப்
பாடினார்.
பக்கரை, விசித்ர மணி, பொன் கலணை இட்டநடை,
பட்சி-எனும் உக்ரதுர ...... கமும், நீபப்
பக்குவ
மலர்த் தொடையும், அக்குவடு பட்டு ஒழிய,
பட்டு உருவ விட்டு அருள் கை ......
வடிவேலும்,
திக்கு
அது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு
சிற்றடியும், முற்றிய பன் ...... இருதோளும்,
செய்ப்பதியும்
வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை ...... மறவேனே.
அதற்குப்
புகழ்ந்து பாடிய இயல் கவி மெச்சிட்டு, உயர்ந்த பேறு அருள் முருகோனே ---
அருணை
அடிகளார் முருகவேளைப் புகழ்ந்து அளவற்ற திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். கந்தர்
அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல்விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அநுபூதி ஆகிய
அருட்பாமாலைகளை இறைவனுக்குச் சாத்தினார்.
"விரித்து
அருணகிரிநாதன் உரைத்த தமிழ் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே" என்று அடிகளார்
பாடி இருப்பதே அகச் சான்று.
அவர்
பாடிய கவிகளை மெச்சி, பெருமான் அவருக்கு உயர்ந்த வீடுபேற்றினை அருள் புரிந்தார்.
எழில்
வளை மிக்கத் தவழ்ந்து உலாவிய பொ(ன்)னி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய இணை இலி ---
வளை
- சங்கு.
"பொன்னி"
என்னும் சொல் "பொனி" என இடைக் குறைந்து வந்தது.
காவிரி
நதியின் தென்கரையில் மயிலாடுதுறை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஒப்பற்ற
பரம்பொருள் முருகவேள்.
அவ்வ
திசையாரும் அடியாரும் உளர்
ஆக அருள் செய்து, அவர்கள் மேல்
எவ்வம்
அற வைகலும் இரங்கி, எரி
ஆடும் எமது ஈசன்இடமாம்,
"கவ்வையொடு
காவிரி கலந்துவரு
தென்கரை நிரந்து கமழ் பூ
மவ்வலொடு
மாதவி மயங்கி மண
நாறும் மயிலாடுதுறையே".
என்னும்
திருஞானசம்பந்தர் தேவாரத்தால் காவிரியின் தென்கரையில் உள்ள வளம் மிக்க திருத்தலம் மயிலாடுதுறை
என்பது விளங்கும்.
ரத்னச்
சிகண்டி ஊர் உறை பெருமாளே ---
சிகண்டி
- மயில்.
சிகண்டியூர்
- மாயிலாடுதுறை.
ஒளிமயமான
மயில் ஆடுகின்ற துறை ஆகிய திருத்தலம் மயிலாடுதுறை. இது சோழ நாட்டு,
காவிரித் தென்கரைத் திருத்தலம்.
சென்னை
- இராமேசுவரம் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். தமிழ் நாட்டின் பல
நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில்
மயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இறைவர்
: மயூரநாதர்.
இறைவியார் : அபயாம்பிகை
தல
மரம் : மா, வன்னி.
தீர்த்தம் : பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்.
திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப்
பெற்ற அருமையான திருத்தலம்.
காவிரிக்
கரையில் உள்ள 6 திருத்தலங்கள்
காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும்.
மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும்
இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவத்திருத்தலம் ஆகும். "ஆயிரம் ஆனாலும்
மாயூரம் ஆகுமா?" என்னும் முதுமொழியே இதன் சிறப்பை விளக்கும்.
பிரம்ம
தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை
பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது. அம்பாள் பார்வதி, மயில் உருவில் சிவபெருமானை
பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவத்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும்.
மற்றொன்று தொண்டை நாட்டுச் சிவத்தலமான திருமயிலை ஆகும்.
காவிரிக்கரையில்
ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்தாள்
அன்னை. மயில் உருவம் பெற்று
சிவபெருமானை வெகுகாலம் வழிபட்டாள்.
மயில்
வடிவத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது.
ஒருமுறை
கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர்
வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரசுவதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை
படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி
அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா என்னும் ஐப்பசி
மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள்
நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள
காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்)
மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி
மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில்
முதல் 29 நாட்களில் நீராட
முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில்
நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும்
என்பது நம்பிக்கை.
மறுநாள்
கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று
கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன்
மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள்
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால்
மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன்
முறையிட்டதால், இறைவன் அவனுக்கு
ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும்
நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன்
முழுக்கு" என்கின்றனர்.
துலா
மாதத்தின் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர்
உறுதியுடன் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே
வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில்
தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை
சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம்
நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில்
மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம்
இருக்கிறது.
நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன்
முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி
உள்ளது. தம்பதியரை இலிங்கத்தில் ஐக்கியமாக்கி முத்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி "அனைத்து தெய்வங்களையும்
வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன்
கிடைக்கும்" என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.
இத்தலத்திலுள்ள
முருகன் சந்நிதி (குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது. பிராகாரத்தில்
இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது.
மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோயில்
உள்ளது.
இத்தலத்தில்
முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர்
இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
குமரக்கட்டளை
மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில்
ஆறுமுகனும் எழுந்தருளி உள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு
முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளி உள்ளார். வடபுறம் உள்ள அம்மன்
சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி
காட்சி தருகிறாள்.
இத்
திருத்தலத்து அம்பிகை மீது "அபயாம்பிகை சதகம்" என்னும் ஒரு நூல் உள்ளது.
கருத்துரை
முருகா! தேவரீரது திருவடியைப்
பாடி வழிபட்டு உய்ய அருள்.
No comments:
Post a Comment