பழையன கழிதலும், புதியன புகுதலும்

                                                பழையன கழிதலும்புதியன புகுதலும்

-----

 

     சைவசித்தாந்தம் குறித்து விளக்கும் ஞானநூல்கள், "மெய்கண்ட சாத்திரம்" எனப்படும். இரண்டுவயதில் இறையருளால் மெய்ஞ்ஞானம் விளங்கப் பெற்ற மெய்கண்டதேவரால்பன்னிரண்டு சிறிய சூத்திரங்களால் அருளப் பெற்றது "சிவஞானபோதம்" என்னும் சைவசித்தாந்த சாத்திரம். இதனோடுமற்ற அருளாளர்களால் அருளப் பெற்ற சாத்திரங்கள் பதின்மூன்றையும் உள்ளடக்கிபதினான்கு அருள்நூல்களைக் கொண்டவையே, "மெய்கண்ட சாத்திரம்" எனப்படுபவை. மெய்ப்பொருளைக் கண்ட சாத்திரங்கள். மெய்ப்பொருளைக் காணுகின்றோர் ஓதி உணரும் சாத்திரங்கள். மெய்ப்பொருளைக் காண விழைவோர் ஓதி உணரவேண்டிய சாத்திரங்கள் என்று முக்காலத்திற்கும் கொள்ளப்படும்.

 

     இவற்றில்தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவராக இருந்த உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் பாடிய நூல்கள் எட்டு ஆகும். அவை, "சித்தாந்த அட்டகம்" எனப்படும். சித்தாந்த அட்டகத்தில் ஒன்று, "சிவப்பிரகாசம்" என்பது. இந்த நூலின் அவையடக்கப் பாடலாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.  

 

"தொன்மையவாம் எனும்எவையும் நன்றுஆகா,இன்று

தோன்றியநூல் எனும்எவையும் தீதுஆகா,துணிந்த

நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்,

நவைஆகாது எனஉண்மை நயந்திடுவர்,நடுவாம்

தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்,

தவறுநலம் பொருளின்கண் சார்வுஆராய்ந்து அறிதல்

இன்மையினார் பலர்புகழில் ஏத்துவார்,ஏதிலர்உற்று

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்குஎன ஒன்றுஇலரே.  

 

இதன் பொழிப்புரை---

 

     பழமையான நூல்கள் யாவையும் நல்லவை ஆகா. இப்போதுதான் தோன்றிய நூல்கள் என்பதனால் அவற்றைத் தீது என்று ஒதுக்குதலும் கூடாது. ஒரு மாணிக்க மணியானது அணிகலனில் பொதியப்பட்டு இருக்கும்பொழுது,நல்லவர்கள் மாணிக்கமணியின் சிறப்பினை நோக்கி,கட்டுமானத்தில் குறையிருந்தாலும் கூட அதனால் ஏதும் குற்றமில்லை என்பதை உணர்ந்து அந்த அணிகலனை விரும்புவர்.\

 

     இடைப்பட்ட தன்மை உடையவர்கள் அணிகலனின் பழமையையும் அதன் அழகினையும் கருதி,அதனை ஆராய்ந்து அணிந்து கொள்ளுவர். 

 

     கடைப்பட்டவர்கள் மணியின் சிறப்போ குற்றமோ அல்லது அதனில் பொருந்தி இருக்கும் அணிகலனின் அழகோஅழகு இன்மையோ என்று எவற்றையும் ஆராய்ந்து அறிதற்குத் தகுதியற்றவர்கள். ஆகையினால் பலரும் அதனைப் புகழ்ந்தால் தாமும் அதனைப் புகழ்வர். அல்லது பலரும் அதனை இகழ்ந்தால் தாமும் அதனை இகழ்வர். இத்தகையவர்கள் தமக்கென ஓர் அறிவுடையவர் அல்லர்.

 

     பழமையான நூல்கள் யாவும் உயர்ந்தன என்ற கொள்கை தவறு. அவற்றுள் சில ஒதுக்கத் தக்கனவாகவும் இருக்கலாம். புதிதாகத் தோன்றிய நூல்கள் என்பதனாலேயே அவை யாவும் குறைவுடையன என்ற பொருளில் ஒதுக்கத்தக்கன வல்ல. இக் கருத்தைக் கூறுவதன் மூலம் பழமையான நூல்கள் பல இருக்கப் புதிதாக ஒருநூல் எழுதுவானேன் என்று கேட்போர்க்கும்புதியநூல் என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்துடையோர்க்கும் பதில் சொல்லுகிறார் ஆசிரியர்.

 

     மாணிக்கக் கற்கள் அவற்றின் குற்றம் குறைவு அற்ற தன்மையை வைத்தே மதிப்பிடப் பெறுதல் வேண்டும். அவற்றை இழைத்துச் செய்த நகைகள் பழமையானதாக இருக்கலாம். அல்லது புதுமையானதாகவும் இருக்கலாம். உயர்ந்தோர்கள் மாணிக்கத்தின் குற்றமற்ற தன்மை கருதியே அதனை விரும்பி அணிவர். இடைப்பட்டவர்கள் மாணிக்கத்தின் தன்மையையும் அதனைப் பதித்துள்ள நகையையும் அவற்றின் பழமையையும் ஆராய்ந்து அணிந்து கொள்வர். கடைப்பட்டவர்கள்,மணியையும் அணிகலனையும் பற்றித் தெளிந்த அறிவில்லாதவர்கள். ஆகையினால் பலர் கூடிப் புகழ்ந்தால் தாமும் புகழ்வர். பலர்கூடி இகழ்ந்தால் தாமும் இகழ்வர். ஏனெனில் இவர்கள் தமக்கென ஓர் அறிவு இல்லாதவர்.

 

     பழமையான நூல்கள் பல உள்ளன. நீதிநூல்கள் ஆகட்டும்அருள் நூல்கள் ஆகட்டும். அவற்றை அருளிச் செய்தவர்கள் அனைவரும்மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்தவர்களே. அவர்கள் அருளிச் செய்த நூல்களை ஓதித் தெளிந்தால்மெய்ப்பொருளை ஒருவன் உணரலாம். ஆயிரக் கணக்கான பாடல்கள் பழமையான நூல்களில் பல்லாண்டுகளாக உள்ளன. அவற்றை ஓதித் தெளிதல் வேண்டும்.

 

     இந்த உண்மையைத் தெளியாதுஇக்காலத்தார் பலரும்

ஒருவகைச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகின்றனர். அது பகுத்தறிவு என்றும் சொல்கின்றனர். அதாவதுதெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதுபோல்தமிழுக்குப் பழைய தமிழ் எனப் பெயரிட்டுஅதில் சில மாற்றங்கள் செய்து புதிய தமிழ் உருவாக்கவேண்டும் என்பது அவரது கருத்து. 

 

இதற்கு,

 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே"

 

என்னும் நன்னூல் சூத்திரத்தைத் துணையாகக் கொள்கின்றனர். இது நன்னூலில் வரும் சூத்திரம்தானா என்று அறியாதவர்களும் உண்டு. அவர்களும் இது குறித்துப் பேசுகின்றனர்.

 

     ஆனால், "பழைய காலைத் தூர்க்காதேபுதிய காலை விடாதேஎன்னும் பழமொழியும் உண்டு என்பதை  அவர்கள் நினைவில் கொள்வதில்லை. பழமையில் இருந்துதான் புதுமை தோன்றும் என்பதையும் அவர்கள் மறந்து விடுகின்றனர். 

 

     பழையன கழிதலும் புதியன புகுதலும் சரிதான். ஆனால் பழையனவற்றைக் கழித்து,புதியன புகுத்தல் கூடாது. 

 

     "பழையன கழிதலும்புதியன புகுதலும்

      வழு அ(ல்)லகால வகையினானே" 

 

      (வழு - குற்றம்) என்றால்புதிய பொருள்களும்புதிய சொற்களும்புதிய பழக்க வழக்கங்களும் ஒருபுறம் இடம் பெறதேவையற்றுப் போன பொருள்களும்அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும்பழக்க வழக்கங்களும் காலப் போக்கில் ஒருபுறம் வழக்கற்றுப் போதலும் நிகழும். அதைக் குற்றமாகக் கொள்ளுதல் கூடாது.

 

     இதற்கு இன்னொரு நுட்பமான உட்பொருளும் உண்டு. உயிர்களுக்குப் பழமையானவை ஆசைபாசம். முதலியன. ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்கள். காமகுரோதஉலோபமோகமதமாச்சரியங்கள் என்னும் உட்பகைகள். உட்பகை என்றால் நட்புப் போல இருந்துநல்லன அல்லாதவற்றைச் செய்வது. இவற்றை வடநூலார் "அரிஷ்ட வர்க்கம்" என்பர். இவைபிறவிகள் தோறும் உயிரைத் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பவை.

 

     உயிர்கள் தமது தொடக்க நிலையில்அருளியலை நாடாது உலகியலையே நிலை என நினைத்து உழன்று,துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அனுபவம் ஏற ஏறஉலகியல் நிலையில் இருந்து,கொஞ்சம் கொஞ்சமாக அருள் நிலைக்குத் திரும்பும். அப்போது உலகியலில் உவர்ப்புத் தோன்றும். அருளியலில் நாட்டம் உண்டாகும். அந்த நிலையில் உயிர்க்குப் பிறவிகள் தோறும் பழக்கமாக இருந்து வந்த ஆசைபாசம் முதலியவை கழிந்து ஒழியும். பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனாக உள்ள இறைவன்உள்ளிருந்து அருள் புரிவான். இதனை, "உய்யஎன் எள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா!" என்றது மணிவாசகம்.

 

     எனவேகாலப் போக்கில் உயிருக்குப் பிறவிகள் தோறும் வழக்கமாக உள்ள குற்றங்கள் அகலுவதும்புதுமையான அனுபவ ஞானம் உதிப்பதும் இயல்பாக நிகழும். பழமையானவை நீங்கிபுதுமையானவை பொலிவது வழு இல்லாமல் நிகழக் கூடியதே. புதிய பொருள்களும்புதிய சொற்களும்புதிய பழக்க வழக்கங்களும் ஒருபுறம் இடம் பெற,தேவையற்றுப் போன பொருள்களும்அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும்பழக்க வழக்கங்களும் ஒருபுறம் வழக்கற்றுப் போதலும் நிகழும். இது உலகியலுக்கும் பொருந்தும். அருளியலுக்கும் பொருந்தும்.

 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே"

 

என்னும் சூத்திரம் ஏன் உண்டானது என்பதற்கு நன்னூல் ஆசிரியரே கூறியுள்ளார். 

 

     பழையன கழிதலும் --- முற்காலத்துள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து இல்லாது போதலும்புதியன புகுதலும் --- முற்காலத்து இல்லாத சில பிற்காலத்து இலக்கணம் ஆதலும் வழு அல --- குற்றம் அல்ல. கால வகையினான் --- கால வேற்றுமை அது என்பதால்..

 

     இது நன்னூலுக்குப் புறனடையாகச் சொல்லப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். புறனடை என்றால்ஒரு சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளுக்குப் பொருள் காண்போமானால் அது வரம்பு இன்றி விரிந்துகொண்டே செல்லும். பொருளை உணர்ச்சியால்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் தோன்றியது எப்படி என்பதை சொல்லும்போது தெரியாது. உணரும்போதுதான் தெரியும். ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே குறிப்பிடுவதற்காகநன்னூல் ஆசிரியர் இவ்வாறு கூறினார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

     உதாரணமாககுதிரை என்னும் சொல்லுக்குபரிகயிறு முறுக்கும் கருவிதாங்குகின்ற சட்டம்ஊர்க்குருவி என்று பொருள்கள் உண்டு. இவற்றில் கயிறு முறுக்கும் கருவிதாங்குகின்ற சட்டம் ஆகியவை காலப்போக்கில் வழக்கு ஒழிந்து போனவை. காரணம்அந்தக் கருவிகள் இப்போது காணக் கிடைக்காது. நெசவாளர்களைக் கேட்டால்குதிரை என்றால் என்ன என்று சொல்லுவார்கள். இப்போதுஅதைக் காண்பது இப்போது அரிதாகிவிட்டது. நெசவாளர் குடும்பத்தில் இப்போது உள்ளவர்க்கே அது விளங்காது. குதிரை என்று இப்போது சொன்னால்அது ஒரு விலங்கு என்றுதான் தெரியும். இப்படி சில சொற்கள் வழக்கு ஒழிந்து போவதும்புதிய கருவிகள் புதிய சொற்களோடு உருவாவதும் இயல்பு.

 

     பழையவை என்றால் பழித்துப் பேசிபுறம் தள்ளக் கூடாது. புதியன என்பதற்காக அவற்றையும் பழித்துப் பேசிப் புறம் தள்ளக் கூடாது. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...