ஊசியின் கண்ணில் உலகத்தைப் பார்த்தது

                                                 ஊசியின் கண்ணில் உலகத்தைப் பார்த்தது

-----

 

     இது ஒரு வழக்கு மொழி. வறட்டுப் பிடிவாதம் பிடித்தவர்கள்அகண்ட நூலறிவோடு நுண்ணறிவும் இல்லாதவர்கள்தமக்கு எல்லாம் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வர். தமக்கு என்ன தெரியுமோதெரிந்ததோஅதுவே உண்மை என்று வாதிடுபவர்களைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது.

 

      சமயங்களுக்கு இடையில் பூசல். சமயங்களுக்குள் கொள்கைப் பூசல். அவரவர் தாம் கருதியதே சரி என்று கொண்டாடிதமக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டதால்சமயங்களில் உட்பிரிவுகள் தோன்றின. சமயப் பூசல்களால்மனிதகுலம் இதுவரையில் பட்டபாடு சொல்லிமுடியாது. சமயக் கருத்தையும்கடவுள் உண்மையையும் தெளிந்து கொள்ளாத சமயிகளால் உண்டான இந்த ஊறு,இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளது.

 

     இதற்கு ஒரு கதையைச் சொல்வது உண்டு. சில குருடர்கள் (அல்லது இருட்டில் சில மனிதர்கள்) ஒரு யானையைத் தடவிப் பார்க்கிறார்கள். தங்கள் கைகளால் தடவி,யானை எப்படி இருக்கின்றது என்று உணர முயலுகின்றார்கள். ஒவ்வொருவரும் யானையின் வெவேறு உறுப்புகளைத் தமது கைகளால் தடவுகிறார்கள். தும்பிக்கையைத் தடவியவர்யானை மரத்தைப் போன்று உள்ளது என்கின்றார். காலைத் தொட்டுப் பார்த்தவர்கள்யானை தூண் போன்று உள்ளது என்கின்றனர். காதுகளைத் தடவியவர்கள்யானை முறத்தைப் போன்று உள்ளது என்கின்றனர்.அதன் வாலினைத் தடவிய ஒருவர்,கயிறு போன்று உள்ளது என்கின்றார். வயிற்றைத் தடவியவர் சுவர் போன்று உள்ளது என்றார்.யானையைப் பற்றிய கருத்து வேறுபாடு முற்றி அவர்களிடையே சண்டை மூளுகிறது. அவரவர் சொன்னது அவரவர் அளவில் உண்மைதான். என்றாலும்அவர்களில் யாரும் உண்மைப் பொருளை அறிந்திருக்கவில்லை.

 

     புறக்கண் குருடாய் இருந்தவர்கள்புறத்திலே உள்ள யானையைத் தத்தமது கைகளால் தடவிப் பார்த்துஎப்படி உணர்ந்தனரோஅப்படியே சாதித்துத் தம்முள் பிணங்கினர். அவ்வாறேஅறிவுக் குருடு உள்ளவர்கள்அவரவரது சமய நூல்களையாவது எழுத்துப் பிழை அறக் கற்றுதெளிந்த அறிவினைப் பெற்று இருப்பதோடுபிற சமயங்களின் உண்மைகளையும் கேட்டாவது அறிந்து இருத்தல் வேண்டும். இப்பட அகண்ட அறிவு இல்லாமலேயேதாம் உணர்ந்ததே உண்மை என்று சாதித்துக் கொண்டுபிணக்கையும்அவரவர் சமயத்துக்குள்ளும் பூசலையும்சமயங்களுக்கிடையில் பூசலையும் உண்டாக்கிசண்டை இட்டும்வாதப் போர் புரிந்தும் வருகின்றனர்.

 

     சமயப் பூசலையும்சமயங்களுக்குள் பூசலையும் வளர்த்துக் கொண்டு திரிகின்ற இவர்களைப் பார்த்துபின்வருமாறு வள்ளல்பெருமான் பாடுகின்றார்.

 

"எய்வகைச்சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

     எடுத்து உரைத்தே,எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று,

கைவகையே கதறுகின்றீர்! தெய்வம் ஒன்று என்று அறியீர்!

     கரிபிடித்துக் கலகம் இட்ட பெரியரினும் பெரியீர்!

ஐவகைய பூதவுடம்பு அழிந்திடில் என் புரிவீர்?

     அழி உடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்!

உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

     உற்றதுவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே".

 

இதன் பொருள் ---

 

     மனத் தளர்வை உண்டுபண்ணுகின்ற மதங்களையும் பொய்யைப் புனைந்து உரைக்கும் சாத்திரங்களையும் எடுத்துச் சொல்லி,இது எங்களுடைய தெய்வம்இது எங்களுடைய தெய்வம்என்று பலமுறையும் ஒப்பனையா,கீழான உரைகளையே வகுத்துப் பேசுகின்றவர்களே! தெய்வம் ஒன்றே என்பதை நீங்கள் அறியாது இருக்கின்றீர்கள் யானையைக் கண்டு அதன் கையையும் காலையும் கையால் தடவிப் பார்த்து,இதுவே யானை என்று கலகம் புரிந்த பெரிய மூடர்களிலும் மூடர்களாக இருக்கின்றீர்கள் நிலம் நீர் முதலிய ஐவகைப் பூதங்களில் பரிணாமமாகிய உங்கள் உடம்பு இறந்து அழிந்து விட்டால் என்ன செய்வீர்கள்.அழிந்து கெடும் உங்கள் உடம்பை அழியா உடம்பாக ஆக்கும் வகை தெரியாது. நீங்கள் உய்தி பெறும் பொருட்டு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் வந்துவிட்டதுஆதலால் எம்பால் வருவீர்களாகவந்து இன்ப நிலை பெறுவீர்களாக. எ.று.

 

"உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் 

     உருஅருவினர் ஆயும்

ஒருவரே உளார் கடவுள்கண்டு அறிமினோ,

     உலகு உளீர்! உணர்வு இன்றி,

இருவராம் என்றும்,மூவரே ஆம் என்றும்,

     இயலும் ஐவர்கள் என்றும்,

எருவராய் உரைத்து உழல்வது என்?உடற்கு உயிர் 

     இரண்டு மூன்று எனல் ஆமே".

 

எனவும் சமயவாதிகளைப் பார்த்து வினவுகின்றார்.

 

இதன் பொருள் ---

 

     பிரமன் முதலிய உருவு உடையவர்கள் ஆகியும்நாதம் விந்து முதலிய அருவுருவினர் ஆகியும்சதாசிவன் ஆகிய உருவருவினர் ஆகியும் கடவுள் ஒருவரே உள்ளார். இதனை அறிந்து கொள்வீராகமெய்யுணர்வு இல்லாமல் இருவராம் என்றும்மூவராம் என்றும்இயலுகின்ற ஐவர்கள் என்றும் வீணர்கள் ஆகிய நீங்கள் உரைத்து வருந்துவது எதற்காக உடலுக்கு உயிர் இரண்டு என்றும் மூன்று என்றும் சொல்லுதல் தகுமா?

 

     ஓர் உடலுக்கு ஓர் உயிர்தான் இருக்கமுடியும். இரண்டு அல்லது அதற்கு  மேற்பட்ட உயிர்கள் இருக்கமுடியுமாமுடியாது. அதுபோலவேஇறைவன் ஒருவன் தான். அவன் பலவேறு திருமேனிகளைத் தரித்துக் கொள்ளும் பேராற்றல் படைத்தவன்.

 

"அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,

                   ஆனந்த பூர்த்தியாகி,

            அருளொடு நிறைந்தது எதுதன்அருள் வெளிக்குளே

                     அகிலாண்ட கோடியெல்லாம்

 

தங்கும் படிக்குஇச்சை வைத்துஉயிர்க்கு உயிராய்த்

                   தழைத்ததுஎதுமனவாக்கினில்

            தட்டாமல் நின்றதுஎதுசமய கோடிகள் எ(ல்)லாம்

                     தம்தெய்வம் எம்தெய்வம் என்று

 

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?

                     எங்கணும் பெருவழக்காய்

            யாதினும் வல்ல ஒரு சித்தாகிஇன்பமாய்

                     என்றைக்கும் உள்ளதுஎதுமேல்

 

கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎதுஅது

                    கருத்திற்கு இசைந்ததுஅதுவே

            கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்

                    கருதி அஞ்சலி செய்குவாம்".

 

      இது தாயுமான அடிகளார் அருளிய பாடல். எல்லாப் பொருள்களிலும்எங்கும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற பரம்பொருளின் தன்மைகளை இந்தப் பாடலில் விரித்துக் கூறுகின்றார்.

 

      இதன் பொருள் ---

 

      வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள்தொலைவில் உள்ளவைநிலவுலகம்கீழுலகம் ஆகிய அண்மையில் உள்ளவை என்று சுட்டிக் கூறி அறியமுடியாதபடிஎவ்விடத்திலும் பேரொளியாய்முழுநிறை இன்பமாகிதனது அறிவு ஆற்றலொடு பிரிப்பு இல்லாமல் நிறைவாய் உள்ளது எந்தப் பொருளோதன்னுடைய அருள் வெளியிலேஎல்லா உலகங்களும்நிலைக்குமாறு பெருங்கருணை வைத்துஉயிருக்குள் உணர்வாகி விரிந்து இருப்பது எந்தப் பொருளோ?மனத்தால் நினைப்பற்கும்வாயால் சொல்வற்கும் எட்டாமல் நிலைபெற்று உள்ளது எந்தப் பொருளோபல்வேறு சமயங்களும் எம்முடைய தெய்வம்எம்முடைய தெய்வம் என்றுஎவ்விடங்களிலும் எப்போதும் விடாது நின்று வழக்கிடும்படியாக அவரவர் கற்பித்துக் கொண்ட தெய்வமாக நின்றது எந்தப் பொருளோஇம்முறையாக எவ்விடத்தும்முடிவு பெறாத பெரிய வழக்காகிஎத்தொழிலும் வல்லதும்தானே தனக்கு நிகராய் விளங்குகின்ற ஒப்பற்ற  பேரறிவுப் பொருளாகபேரின்பப் பெருவடிவாகஎக்காலத்தும் ஒன்றாய்மாறா இயல்பாய் இருப்பது எந்தப் பொருளோபின்னும்,இரவு பகல் அல்லாது (நினைப்பு மறப்புஇன்பம் துன்பம்பிறப்பு இறப்பு என்ற எல்லா நிலைகளையும் கடந்து) நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருளோஅந்தப் பொருளே எல்லாருடைய கருத்திற்கும் இசைவாக உள்ளது. ஆதலால் அப் பரம்பொருளையேகாணப்பட்ட பூதங்களும்பூதத் தொடர்புகளாகவும்மௌன வடிவமான வெளியீடாகவும் தியானித்து நாம் கைகூப்பி வணங்குவாம்.

 

       பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று,அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போலபரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்துஅந்த உணர்விலேயே திளைத்துநுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாகஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME) ரூபம் (FORM) இல்லாத கடவுளைஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காகசமய நெறிகள் வகுக்கப்பட்டன. 

 

       அவ்வாறு வகுக்கப்பட்டஅறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாதுசமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள்அவரவர் உணர்ந்தபடியேசமய நெறிகளில் நல்லது இதுதீயது இது என்றுசொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து,"குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

       சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்றுகடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்றுபிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

 

      எல்லாச் சமயங்களும்மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாதுஅவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டுமருண்டு வாதித்துப் பிணங்குவோர்மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உளஎன்றார்.

 

       அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோபிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால்இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோஅதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்னகுரைத்தல் தான். பேதையின் இயல்பு என்னதான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,"சமயவாதிகள் தத்தம் மதங்களேஅமைவதாக அரற்றி மலைந்தனர்"என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள்பூசலிடுவார்கள்பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

 

      சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவுஅறிவுஞானம்அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

      இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணிமாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோஅந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

 

      கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்குஅவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவுநாளை பொய்யாகலாம்மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

 

"பித்தர்குணம் அதுபோலஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

என வரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

     எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும். இகழ்தல் கூடாது. "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

     இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,"பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம்புகுந்து கலந்திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்கங்குகரை காணாத கடலே!" என்று பாடினார்.

 

      முன்னர் குறிப்பிட்டது போலசமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயேஅவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதேசமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதைஅருணகிரிநாதப் பெருமானும்,  

"கலகல கல எனகண்ட பேரொடு சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் ஆங்காங்கே காட்டி உள்ளார்.

 

     கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள்உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்துதன் செயல் ஏதும் இன்றிசிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கிஅறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள்ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்துதடுமாறும்

கவலைக் கெடுத்துகழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

      பொய்யான சமயங்களும்ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்துதடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி,  தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றிநாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

     அருளாளர்கள் அனைவரும்அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்துதிருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல்சமயக் கருத்துக்களைத் தெளியாமல்உயர்வு தாழ்வு கற்பித்துஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

       ஒரு சமயத்தைச் சார்ந்தவர்பிற சமயத்தாரை இகழ்ந்துபரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும்பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால்இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதைகம்பர் காட்டுமாறு காண்போம்.

 

        மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான்,தனது தம்பியோடும்விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில்இராமனின் தோளைக் கண்டவர்கள்அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவ்வாறே திருவடிகளைக் கண்டோரும்திருக்கைகளைக் கண்டோரும் உள்ளனர்.ஓர் உறுப்பின் அழகில் மயங்கிய பெண்களுக்குமற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்ததுஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக் கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது. 

 

       சமயவாதிகள் யாரும்நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போலமிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை என்று கவியின் கூற்றாகம்பர் பாடிய பாடல் ஒன்று....

 

"தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்".

 

இதன் பொருள் ---

 

        (மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோளிகளின்  அழகைக் கண்டவர்கள் அவ்வழகை முற்றும் கண்டு,களித்து முடியாமையால்பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால் அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற இராமனது திருவடிகளைப் பார்த்தவர்கள் வேறு பார்க்காது அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே பிறவற்றை நோக்காது அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவேவாள் போன்ற ஒளி பொருந்தியகண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினைமுழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. தமக்குத்தாமே ஒவ்வொரு முறையினைக் கொண்ட சமயங்கள்பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காதுதமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் அப் பெருமானின் உறுப்புக்கள் பலவற்றையும் நோக்காதுஅவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின்அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 

 

       சார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மைகளையே முழுதும் அறியாமல்தான் அறிந்ததே அறிவு என்று கொண்டுதான் சார்ந்திருக்கும் சமயத்தாரோடு பிணங்குவதும்பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...