040. கல்வி --- 08. ஒருமைக்கண் தாம்கற்ற

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "எடுத்த ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வியானதுஅவனுக்கு இனி எடுக்கின்ற பிறவிகள்தோறும் உதவுகின்ற வலிமையை உடையது" என்கின்றார் நாயனார்.

 

     கல்வியானதுஇருவினைகளைப் போலஉயிரினிடத்தில் பொருந்திஅந்த உயிர் சென்ற இடம் எல்லாம் செல்லும். எனவேஒரு பிறவியில் கற்ற கல்வியானதுஎடுக்கின்ற பிறவிகள் தோறும் வந்து காவலாக அமையும் என்றார்.

 

 

திருக்குறளைக் காண்போம்...

 

ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.         

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஒருவற்கு--- ஒருவனுக்கு

 

     தான் ஒருமைக்கண் கற்ற கல்வி--- தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி

 

     எழுமையும் ஏமாப்பு உடைத்து--- எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.

 

     (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்துஎன்றார். எழுமை - மேலே கூறப்பட்டது (குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)

 

     இத் திருக்குளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சிவகீதை முற்கேட்டார் சென்றுசென்று சென்மித்து

அவர் பார்த்தனுக்கு அருளும் ஆற்றால் --- புவனத்து

ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.    

 

            சிவபெருமான் திருமாலுக்கு உபதேசித்த கீதை சிவகீதை.  அதை முன் கேட்ட திருமால்,  பல பிறவிகளிலும் பிறந்து,  கிருஷ்ணாவதாரத்தில் அர்ச்சுனனுக்கு உபதேசித்தது பகவத்கீதை. 

                                                                        

     அடுத்துஇத் திருக்குளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

மல்லல் வியாகரண மாருதி கற்கக் கருதி

எல்லவன்பின் போந்தான், இரங்கேசா! - நல்ல

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.         

 

இதன் பொருள் ---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! மல்லல் --- பெரியவியாகரணம் --- இலக்கணத்தைமாருதி --- அநுமான்கற்கக் கருதி --- வாசிக்க விரும்பிஎல்லவன் பின் போந்தான் --- சூரியன் பின்னே திரிந்தான், (ஆகையால்இது) ஒருமைக்கண் --- பெறதற்கரிய சிறந்ததொரு மானிடப் பிறவியில்தான் கற்ற கல்வி --- தான் படித்த படிப்பானதுஒருவற்கு --- ஒருவனுக்குஎழுமையும் --- இனி வரும் எழு பிறவியிலும்ஏமாப்பு உடைத்து --- உதவுதலை உடையதாகும் (என்பதை விளக்குகின்றது).

 

       கருத்துரை--- கல்வியைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறில்லை. கல்வியே கருந்தனம்.

 

       விளக்கவுரை--- பஞ்சாசதகோடி பூமண்டலங்களுக்கும் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் ஓயாமல் ஒளியும் சூடும் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் சூரிய பகவான். அப்பேர்ப்பட்டவனிடத்தில் இலக்கணம் படிக்க விரும்பினார் வாயு குமாரராகிய அநுமார். கொஞ்சமேனும் ஒழிவில்லாத ஆசானிடத்தில் கல்வி கற்பதென்றால் சாதாரண காரியம் அன்று.  கல்வியை விரும்பிஅக் கருமமே கண்ணாயிருந்த அநுமார்ஆசானுக்கு உகந்தபடி அமைந்து நடந்துஇரவி வியாகரணம் என்னும் இலக்கண நூலை ஐயந்திரிபு அறப் பயின்று தேறினார்.  மாணவனது நுண்ணறிவு,ஆசானாகிய சூரியற்கே அதிசயம் விளைத்தது. ஆகையால்அவன் அனுமாரை வாழ்த்தி வரம் கொடுத்து அனுப்பினான். திருவிளக்கில் ஒரு விளக்கு ஏற்றினால்அதிலிருந்து அநேகம் பெரு விளக்குகள் ஏற்றிக் கொள்ளுவதுபோலஇரவி வியாகரணச் சூரிய விளக்கிலிருந்து கொளுத்தின அனுமார் விளக்குப் பிறகு அநேகம் பெரு விளக்குகளைக் கொளுத்தினபடிபலர்க்கும் அதை அனுமார் உபதேசித்துப் பரப்பினார். அதனால்அவர் பேரும் புகழும் இன்பமுற்று விளங்கினார். இன்றளவும் அவர் வியாகரண தர்க்க நூல்களில் வல்லவர் என்பது உலகப் பிரசித்தம். ஒரு பிறப்பில் கற்ற கல்விஎழு பிறப்பிலும் உலவுதலை உடையது என்பது இதனால் விளங்குவது காண்க.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

                                                                                                

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வு இனிதே;

வித்துக்குற்று உண்ணா விழுப்பம் மிகஇனிதே;

பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்குடைய

கற்றலில் காழ் இனியது இல்.     ---  இனியவை நாற்பது

 

இதன் பொருள் ---

 

     பத்துக் கொடுத்தும் --- பத்துப்பொருள் கொடுத்தாயினும்பதி இருந்து --- உள்ளூரிலிருந்துவாழ்வு --- வாழ்தல்இனிது --- இனிதுவித்து --- விதைக்கு என வைத்த தானியத்தைகுற்று உண்ணா --- குற்றியுண்ணாதவிழுப்பம் --- சீர்மைமி கவினிது ---- மிகவும் இனியதுபற்பல நாளும் --- பற்பல நாட்களும்பழுது இன்றி --- பழுது படாதுபாங்கு உடைய --- நன்மையுடைய நூல்களைகற்றலின் --- கற்பதைப் போலகாழ் இனியது --- மிக இனியதுஇல் --- (வேறொரு செய்கை )இல்லை.

 

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் --- ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்புறங்கடை நல்இசையும் நாட்டும் --- உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் --- நேரக் கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை --- ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...