039. இறைமாட்சி --- 06. காட்சிக்கு எளியன்

                                                                          திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 039 --- இறைமாட்சி

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனானவன்தன்னிடம் முறைவேண்டி வந்தவர்க்கும்குறைவேண்டி வந்தவர்க்கும் காணுதற்கு எளியவனாகவும்கடும்சொல் கூறாதவனுமாக இருந்தால்அவனது நாடு,எல்லா உலகங்களிலும் உயர்த்திப் போற்றப் பெறும்" என்கின்றார் நாயனார்.

 

     முறைவேண்டி வந்தவர்வலியவரால் துன்பம் அடைந்தவர். குறைவேண்டி வந்தவர்தரித்திரம் அடைந்து யாசித்து வந்தவர். தன்னைக் காண வந்தவர் யாவரும் எளிதில் காணுமாறுஅரசாட்சி மண்டபத்தில்,அந்தணர் சான்றோர் முதலானவர்களோடு இருத்தல். கேள்வியிலும்தொழிலிலும் கடுமையான சொற்களைக் கூறாமல் இருக்கவேண்டும். மன்னனை உயர்த்திச் சொல்லுதலாவதுஇவன் காக்கின்ற நாடு,பசிபிணிபகை முதலாயினவை இல்லாதுயாவர்க்கும் இன்பம் தருவதாக உள்ளதால்சுவர்க்கத்திலும் மேலானது என்று புகழப் பெறும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

காட்சிக்கு எளியன்கடும் சொல்லன் அல்லனேல்,

மீக்கூறும் மன்னன் நிலம்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     காட்சிக்கு எளியன்--- முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய்

 

     கடுஞ்சொல்லன் அல்லனேல்--- யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். 

 

     மன்னன் நிலம் மீக்கூறும்--- அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம்.  

            

            (முறை வேண்டினார்வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார்வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது,பேர் அத்தாணிக் கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவேமன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசிபிணிபகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்றுஎன்றல். 'உலகம்என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இறைஎளி நின்று யார்க்கும் இனிய சொல்லாலே

மதுரை மதுரை என்பார் மாந்தர்,--- அதுஅன்றோ

காட்சிக்கு எளியன்கடும் சொல்லன் அல்லனேல்,

மீக்கூறும் மன்னன் நிலம்.   

 

            இறை --- சோமசுந்தரக் கடவுளின் அவதாரமாகிய சுந்தரபாண்டியர்,  எளி நின்று --- முறை வேண்டினார்க்கும்குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியராக நின்று காட்சி அளித்து. மாந்தர் மதுரையை இனிமையானது எனப் புகழ்வதற்குக் காரணம் சுந்தரமாறனாருடைய செங்கோன்மையே என்பது கருத்து.    

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க....

 

மனு அறம் உவந்து தன் வழிச்செல நடத்தும்

புனிதன் மலயத்துவசன் வென்றிபுனை பூணான்

கனியமுதம் அன்ன கருணைக்கு உறையுள்,காட்சிக்கு

இனியன் வடசொல்கடல் தமிழ்க்கடல் இகந்தோன்.  ---  தி.வி.புராணம், தடாதகை. அவ. படலம்.

 

இதன் பதவுரை ---

 

     மலயத்துவசன் - அம் மலயத்துவசன் என்பான்மனு அறம் உவந்து தன்வழி செல நடத்தும் புனிதன் --- மனுதருமமானது மகிழந்து தனது வழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்வென்றி புனை பூணான் --- வெற்றியையே தான் அணியும் பூணாக உடையவன்கனி அமுதம்அன்ன --- சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும்கருணைக்கு உறையுள் --- அருளுக்குத் தங்குமிடமானவன்காட்சிக்கு இனியன் ---(முறை வேண்டினாருக்கும் குறை வேண்டினாருக்கும்) காண்டற்கு எளியனாய் இன்முகத்தை உடையவன்வடசொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன் --- வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலை கண்டு கடந்தவன்.

 

     மனு தருமமும் தனது செங்கோலின் வழிப்பட ஆட்சி நடத்தும் என இவனது நீதியின் மேன்மை கூறினார்வழிச்செல என்பதற்கு அதற்குரிய வழியில் நடக்க என்றுரைத்தலுமாம். வென்றியாகிய பூண் உயிர்கள் பசியும் பிணியுமின்றி வாழுமாறு செய்தலால் ‘அமுதம் அன்ன கருணை’ என்றார். காட்சிக்கு எளியனாதலும் கடுஞ்சொல்லன் அல்லனாதலும் அடங்க ‘இனியன்’ என்றார்;

 

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்

மீக்கூறு மன்ன னிலம்"

 

என்பது தமிழ்மறை. 

 

     வடசொல் கடல்,  தமிழ்க்கடல் --- கடல்போல் அளவிடப் படாதனவாகிய இருமொழிகளையும் முற்றவும் கற்றவன் என்றார்.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...