039. இறைமாட்சி --- 01. படைகுடி கூழ்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 39 -- இறைமாட்சி

 

     பொருட்பாலில்இல்லறத்தின் வழியில் பொருந்துவன ஆகிய பொருள் மற்றும் இன்பம் என்னும் இரண்டில்இம்மைப் பயனும்,மறுமைப் பயனும் தருவதாகிய பொருளைச் சொல்லுகின்றார் நாயனார். பொருளை அடைவதற்கு ஊழ் முதற்காரணம் ஆதலின்அதனைச் சொல்லினார். அப் பொருளானது தனக்குத் துணைக் காரணம் ஆகிய அரச நீதியுள் அடங்கும். அரச நீதி என்பது,உயிர்களைக் காவல் புரியும் முறைமையைக் குறிக்கும். அந்த முறைமையை அரசு இயல்அங்க இயல்ஒழிபு இயல் என்னும் மூன்று பிரிவினுள் அடக்கிமுதற்கண் அரசியல் பற்றி "இறைமாட்சி" என்னும் அதிகாரம் தொடங்கி, "இடுக்கண் அழியாமை" முடிய இருபத்தைந்து அதிகாரங்களால் சொல்லத் தொடங்கிமுதலில் இறைமாட்சி சொல்லுகின்றார்.

 

     அரசியல் என்பது அரசனது தன்மையைச் சொல்லுதல்.

 

     அங்க இயல் என்பது அரசனுக்கு அங்கமாய் உள்ள அமைச்சர் முதலியவர்களது தன்மையைச் சொல்லுதல்.

 

     ஒழிபு இயல் என்பதுமேற்குறித்த இரு இயல்களிலும் அடங்காதவற்றைச் சொல்லுதல்.

 

     இறைமாட்சி என்பதுஅரசனுடைய நற்செய்கைகளும்நற்குணங்களும். உலகத்தைக் காக்கும் கடவுள் போல் இருந்து உலகத்தைக் காப்பதால்அரசனை, "இறை" என்றார்.

 

     மனுதரும சாத்திரத்தில்"இந்திரன்வாயுசூரியன்அக்கினிவருணன்சந்திரன்குபேரன் என்னும் இவர்களின் அம்சங்களினாலேயே அரசன் உண்டாக்கப்பட்டான். எனவேஅவன் மக்கள் யாவரினும் அதிக காந்தி உள்ளவனாயும்அதிக வீரியம் உள்ளவனாயும் இருக்கின்றான்" என்று கூறப்பட்டுள்ளது.

 

"திருஉடை மன்னரைக் காணில்,

     திருமாலைக் கண்டேனே என்னும்,

உருஉடை வண்ணங்கள் காணில்,

     உலகு அளந்தான் என்று துள்ளும்,

கருஉடைத் தே இல்கள் எல்லாம்,

     கடல்வண்ணன் கோயிலே என்னும்,

வெருவிலும் வீழ்விலும் ஓவாக்

     கண்ணன் கழல்கள் விரும்புமே".

 

என்று நம்மாழ்வாரும் பாடி இருத்தல் காண்க.

 

இதன் பொழிப்புரை ---

 

     செல்வத்தை உடைய அரசர்களைக் கண்டால், ‘திருமகள் கேள்வனாகிய திருமாலைக் கண்டேன்,’ என்பாள்அழகு பொருந்திய வடிவங்களைக் கண்டால், ‘உலகத்தை எல்லாம் அளந்த திரிவிக்கிரமன்என்று துள்ளுவாள்படிமங்களையுடைய கோயில்கள் எல்லாம் கடல் போன்ற நிறத்தையுடைய திருமால் கோயில்களே’ என்பாள்தெளிவுடையளாய்ப் பந்துக்களுக்கு அஞ்சின காலத்திலும் மயங்கின காலத்திலும் இடைவிடாமல் கண்ணபிரானுடைய திருவடிகளையே விரும்பாநின்றாள்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "படையும்நல்ல குடிமக்களும்உணவுப் பொருள்கள்நல்ல அமைச்சுநல்ல நட்புபாதுகாப்பான அரணும் ஆகிய ஆறும் உடையவன் மன்னருள் ஆண்சிங்கம் போன்றவன்" என்கின்றார் நாயனார்.

 

     படை என்றது நால்வகைச் சேனைகளை.குடி என்றது நாட்டில் வாழ்கின்ற மக்களை.கூழ் என்றது தனம் தானியம் முதலிய செல்வங்களை.அமைச்சு என்றது அறிவு மாண்பு உடைய அமைச்சர்களை. அமைச்சர்களை "மாண்புமிகு" என்று சொல்வதன் கருத்து இதுவே.நட்பு என்றது உரிமையான உறவினங்களை.அரண் என்றது மதில்அகழிமலை முதலிய நிலைகளை.   

 

     இவ்விதம் கூறிய ஆறு அங்கங்களுள் ஒன்று இல்லாத வழியும்அரசனுடைய நீதியாகிய இறைமாட்சி என்பது மாட்சிமைப்படாது. 

 

     ஓர் உடலுக்குகைகால் முதலிய உறுப்புக்கள் சிறப்பாக வாய்த்திருக்க வேண்டுவது போலபடை முதலிய இந்த ஆறும் அரசுக்கு ஆதரவாய் அமைந்துஉறுதி தோய்ந்து நிற்பதால்இவை அங்கம் எனப்பட்டன.

 

     ஏறு --- ஏற்றம் உடையது. இங்கு ஆண்சிங்கத்தைக் குறித்தது.

 

     ஆண்சிங்கம் "மிருகேந்திரன்"எனப்படும். அரசன்"நரேந்திரன்"ஆவான்.

 

     இராமனைக் கம்பர்"சிங்க ஏறு அனைய வீரன்"என்பார். மன்னனைச் சிங்க ஏறு என வருணிப்பது இந்நாட்டு இலக்கியங்களின் வழக்கம்.

     

"படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ன

உடைய அரசியல் ஆறு என உரைப்பர்".

 

என்பது பிங்கலந்தை.

 

திருக்குறளைக் காண்போம்...

 

படைகுடி கூழ் அமைச்சுநட்பு அரண் ஆறும் 

உடையான் அரசருள் ஏறு.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான்--- படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்

 

     அரசருள் ஏறு--- அரசருள் ஏறு போல்வான்.

            

      (ஈண்டுக் 'குடிஎன்றதுஅதனை உடைய நாட்டினை. கூழ் என்றதுஅதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு நாடுஅரண்பொருள்படை நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்உடையான் என்றதனால்அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்எனப்பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறுஎன்பது உபசார வழக்கு. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம்இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

கண்பதுமப் பெண்ணரசோடு அரசில் கதித்தபுல்லைக்
குள் பெருமானைக் கொண்டாடில்,படைகுடி கூழ் அமைச்சு
நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு எனத்தன்
பெட்பு எளியோனும் பெறும்பார் அரசு பெருக்கம் உற்றே.

 

இதன் பொழிப்புரை --- 

 

     தாமரைமலரைப் போன்ற திருக்கண்களை உடைய திருமகளோடு கூடி,அரசாட்சியில் சிறப்புற்று,  திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமானைக் கொண்டாடினால்படையும்நல்ல குடிமக்களும்உணவுப் பொருள்களளும்நல்ல அமைச்சும்நல்ல நட்பும்பாதுகாப்பான அரணும் ஆகிய ஆறும் உடைய மன்னருள் ஆண்சிங்கம் போன்றவன் என்று சொல்லும்படியாக எளியவன் கூடஉலகை ஆளும் மன்னனாகப் பெருமை பெற்று வாழ்வான்.

 

     கண்பதுமப் பெண் --- தாமரை மலரைப் போன்ற கண்களையுடைய திருமகள். அரசில் கதித்த --- அரசாட்சியில் சிறப்புற்ற. பெட்பு --- பெருமை.

 

     இறைவனைப் போற்றி வழிபடுபவர் அரசபோகத்தில் திளைத்து இருப்பர் என்பது பின் வரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரத்தாலும் விளங்கும்....

 

முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய

பரசு அமர் படை உடையீரே!

பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார்

அரசர்கள் உலகில் ஆவாரே.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....

 

தாழும் செயல் இன்று ஒருமன்னவன் தாங்க வேண்டும்

கூழும் குடியும் முதல்ஆயின கொள்கைத் தேனும்

சூழும் படைமன் னவன்தோள் இணைக் காவல் இன்றி

வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார். --- பெரியபுராணம்.

 

இதன் பொழிப்புரை ---

 

      உலகில் ஒழுக்கம் கெட்டுகுடிகள் தாழ்வாகிய செயல்களைச் செய்யாதவாறுஅக்குடிகளைக் கண்காணிக்க ஓர் அரசன் வேண்டும். காரணம்விளைவின் பெருக்கமும் குடிகளின் சிறப்பும் முதலாயின சிறந்திருக்கின்ற நாடாயினும் நீதியை நிலைநாட்ட ஒரு பெரும் படையையுடைய அரசனுடைய தோளிணைகளின் காவல் இருந்தாலன்றி இவ்வுலகம் நல்வாழ்வு பெறும் தகைமைடையது அன்று என்று சொன்னார்கள்.

  

கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ

ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்

கடைமணிபோல் திண்ணியான் காப்பும்இம் மூன்றும்

படைவேந்தன் பற்று விடல்.       --- திரிகடுகம்.

 

இதன் பதவுரை ---

 

     கோல் அஞ்சி வாழும் குடியும் --- (தன்) செங்கோலைப் பயந்துவாழ்கின்ற குடியும்குடிதழீஇ ஆலம் வீழ்போலும் அமைச்சனும் --- குடிகளைத் தழுவிஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,)  மந்திரியும்வேலின் கடைமணி போல் திண்ணியான் காப்பும் --- வேலினிடத்துப் பூண்போலத் திட்பம் உடையவனதுகாவலும்இ மூன்றும் படை வேந்தன் பற்றுவிடல் --- ஆகிய இம் மூன்றும்படையையுடைய அரசன்பற்றுவிடாது ஒழுகுக.

 

            அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும்குடிகளை ஓம்புவதில் சூழ்கண்ணாக விளங்கும் அமைச்சனையும்,குடியை நீங்காதபடி உறுதியாகக் காக்குந் தொழிலையும் அரசன் கைவிடலாகாது என்பது.

 

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்

எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்து அமைந்த

எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்

மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.  ---  திரிகடுகம்.

 

இதன் பதவுரை ---

 

     பத்திமை சான்ற படையும் --- (தம்மேல்) அன்பு நிறைந்த சேனையும்பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா எயில் அரணும் --- பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும் எவ்வளவும் பயப்பட வேண்டாத மதிலோடு கூடிய கோட்டையும்வைத்து அமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் --- வைக்கப்பட்டு நிறைந்துள்ளஎண்ணப்புகின் முற்றுப் பெறாத சிறப்பாகிய பொருள் வைப்பும்;

இ மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு --- ஆகிய இம்மூன்றும் பூமியை ஆளுகின்றஅரசர்க்குஉறுப்புக்களாம்.

 

            படையும்மதிலரணும்மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் என்பது.

 

            படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்க்கு உறுப்பு என்று திருவள்ளுவர் கூறியிருக்கவும், இவர் படை அரண் செல்வம் ஆகிய மூன்றை மட்டும் குறித்தது அமைச்சையும் நட்பையும் படையுள்ளும்நாட்டை அரணுள்ளும் அடக்கியதனால் என்க. எயில்ர அண் என்றது, மற்றை மலை நீர் காடு அரண்களையும் கருதியதாம். 

  

உரைசெயும் அறத்தின் ஆற்றால்

     ஒருகுடை நிழல்கீழ் முந்நீர்த்

தரை முழுது ஆளவேண்டின்,

     தகைபெறும் அமைச்சு நாடு

புரைஅறும் அரணே மிக்க

     பொருள் படை நட்பு என்று ஆறும்

வரைசெயப் படாத யாக்கை 

     உறுப்பு என மதித்துக் கோடி.--- விநாயக புராணம்.

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...