இராமேச்சுரம் --- 0990. வால வயதாகி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வாலவயதாகி (இராமேசுரம்)

 

முருகா! 

அவமே அழியாமல் அருள் புரிவீர்.

 

தானதன தானதன தானதன தானதன

     தானதன தானதன தானதன தானதன

     தானதன தானதன தானதன தானதன ...... தனதான.

 

வாலவய தாகியழ காகிமத னாகிபணி

     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்

     வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி

 

வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்

     வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை

     மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ......சிலநாள்போய்த்

 

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு

     கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி

     சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்

 

சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு

     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்

     சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ

 

நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை

     யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென

     நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே

 

நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத

     லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி

     ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா

 

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்

     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு

     மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக

 

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை

     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ

     யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வாலவயது ஆகிஅழகு ஆகிமதன் ஆகிபணி

     வாணிபமொடு ஆடிமருள் ஆடிவிளை யாடிவிழல்

     வாழ்வு சதம் ஆகிவலு ஆகிமட கூடமொடு ...... பொருள்தேடி,

 

வாச புழுகோடுமலரோடுமனம் ஆகிமகிழ்

     வாசனைகள் ஆதி இடல் ஆகிமயல் ஆகிவிலை

     மாதர்களை மேவிஅவர் ஆசை தனிலே சுழல,......சிலநாள்போய்த்

 

தோல் திரைகள் ஆகிநரை ஆகிகுருடு ஆகிஇரு

     கால்கள் தடுமாறிசெவி மாறிபசு பாசபதி

     சூழ்கதிகள் மாறிசுகம் மாறிதடி யோடு திரி ...... உறுநாளில்,

 

சூலை,சொறி,ஈளை,வலி,வாதமொடு,நீரிழிவு,

     சோகைகளமாலைசுரமோடுபிணி,தூறு இருமல்,

     சூழல்உற,மூலகசுமாலம் என நாறிஉடல் ...... அழிவேனோ?

 

நாலுமுகன் ஆதிஅரி ஓம் எனஅதாரம் உரை-

     -யாத பிரமாவை விழ மோதிபொருள் ஓதுக என,

     நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம்இடும் ...... இளையோனே!

 

நாறுஇதழி வேணிசிவ ரூப கலியாணிமுதல்

     ஈண மகவு ஆனை மகிழ் தோழ! வன மீதுசெறி

     ஞான குறமாதைதின காவில் மண மேவுபுகழ் ...... மயில்வீரா!

 

ஓலம்இடு தாடகை,சுவாகுவளர் ஏழுமரம்,

     வாலியொடு,நீலி,பகனோடு ஒரு விராதன்எழும்

     ஓத கடலோடுவிறல் ராவண குழாம் அமரில் ...... பொடியாக,

 

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு,நேமி,வளை

     பாணி,திருமார்பன்ரி கேசன் மருகா! எனவெ

     ஓதமறை ராமெசுரம் மேவு குமரா! அமரர் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            நாலுமுகன் ஆதிஅரி ஓம் என--- நான்கு முகங்களை உடைய பிரமதேவர்வேதத்தை ஓதத் தொடங்கியபோது முதலில், "அரி ஓம்" என்று கூற,

 

            பொருள் ஓதுக என--- "பொருள் கூறக் கடவாய்" என்று தேவரீர் கேட்க,

 

            அதாரம் உரையாத பிரமாவை விழ மோதி --- ஆதாரம் சொல்ல முடியாது விழித்த பிரமதேவரைகீழே விழுந்து உருளுமாறு மோதி,

 

            நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே ---  அவனுடைய நான்கு முகங்களுடன் சிகையானது பொடி படுமாறு குட்டிய இளம்பூரணரே!

 

            நாறு இதழி வேணி --- நறுமணம் வீசும் கொன்றை மாலை தரித்த கூந்தலை உடையவரும்,

 

            சிவ ரூப கலியாணி--- மங்கல வடிவுடைய நித்யகலியாணியும் ஆகிய உமாதேவியார்,

 

            முதல் ஈண மகவு ஆனை மகிழ் தோழ--- முதலில் பெற்ற பிள்ளையாகிய விநாயகர் மகிழ்கின்ற தோழரே!

 

            வனம் மீது செறி ஞான குறமாதை--- காட்டில் பொருந்தி வாழ்கின்ற,ஞானசொரூபியாகிய வள்ளியம்மையாரை 

 

            தினைகாவில் மணமேவு புகழ் மயில்வீரா--- தினைப்புனத்தில் திருமணம் புரிந்துகொண்டபுகழ் மிகுந்த மயில்மீது எழுந்தருளி வரும் வீரரே!

 

            ஓலம் இடு தாடகை,சுவாகு,வளர் ஏழு மரம்--- ஓலமிடுகின்ற தாடகையும்சுபாகுவும்வளர்ந்துள்ள ஏழு மரங்களும்

 

            வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன்--- வாலியுடன்,துஷ்டையாகிய சாயாக்கிரகியும்,  பகாசுரனும்விராதனும்,

 

            எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக---  பொங்கி எழும் ஓசையுடன் கூடிய கடலுடன்வலிமை மிக்க இராவணாதி அசுரர்களும் போர்க்களத்தில் மாண்டு பொடி படுமாறு,

 

            ஓகை தழல் வாளி விடு--- உவகையுடன் நெருப்பைக் கக்குகின்ற கணைகளை விட்ட 

 

            மூரி தநு நேமி வளை பாணி--- சக்கரம்சங்கம் என்னும் ஆயுதங்களைத் தாங்கிய திருக்கரங்களை உடையவரும்,

 

            திரு மார்பன்--- இலக்குமி தேவியை திருமார்பில் தரித்தவரும் ஆகிய,

 

           அரி கேசன் மருகா எனவே ஓத மறை --- விஷ்ணுமூர்த்தியின் திருமருகரே என்று வேதங்கள் புகழ,

 

            ராமெசுரம் மேவும் குமரா --- இராமேச்சுரத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் குமாரக்கடவுளே!

 

            அமரர் பெருமாளே--- தேவர்கள் போற்றும் பெருமை மிகுந்தவரே!

 

            வால வயதாகி அழகாகி மதனாகி--- வாலிப வயதை அடைந்துநன்றாக அழகு செய்துகொண்டுமன்மதனைப் போல் ஆகியும்,

 

            பணி வாணிபமோடு ஆடி--- பற்பலவாறு ஆபரணங்களை மாறிமாறி புனைந்துஅதுவே வியாபாரம் ஆகியும்,

 

             மருளாடி விளையாடி--- அறிவு மயக்கம் கொண்டு ஆடி வீணான ஆடல்களைச் செய்தும்,

 

            விழல் வாழ்வு சதம் ஆகி--- பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதியும்,

 

             வலுவாகி--- அதிலேயே மனம் உறுதிபெற்று,

 

              மட கூடமோடு பொருள் தேடி--- மாட கூடங்களுடன் செல்வத்தைத் தேடிச் சேகரித்து,

 

            வாச புழுகோடு மலரோடு மனமாகி--- நறுமணம் வீசும் புனுகுடன்இதழ்களோடு கூடிய மலர்மாலைகளோடு மனம் வைத்து,

 

            மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி--- மகிழ்ச்சியைத் தரும் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய்,

 

            மயலாகி--- காம மயக்கத்தைக் கொண்டு

 

            விலைமாதர்களை மேவி  ---பொது மகளிரை விரும்பி 

 

            அவர் ஆசை தனிலே சுழல--- அவர்களுடைய மோகத்திலே சுழன்றும்

 

            சில நாள் போய்--- சில நாள்கள் கழிந்து,

 

            தோல் திரைகள் ஆகி---  உடலில் தோல் சுருங்கலுற்றும்,

 

            நரையாகி ---  மயிர் நரைத்தும்,

 

           குருடாகி--- கண்கள் பார்வை ஒளி மழுங்கியும்,

 

            இரு கால்கள் தடுமாறி --- இரண்டு கால்களும் தடுமாற்றத்தை அடைந்தும்,

 

            செவி மாறி---காதுகள் செவிடு பட்டும்,

 

            பசு பாச பதி சூழ் கதிகள் மாறி--- உயிர்தளைகடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளை அறியாது,

 

            சுகம் மாறி---  சுகம் மாறுதலை அடைந்தும்,

 

            தடியோடு திரி உறு நாளில்--- கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில்,

 

            சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு--- சூலை நோய்சொறி நோய்கோழைஇழுப்புவலிவாதம்நீரிழிவு,

 

            சோகை,களமாலை,சுரமோடு,பிணி தூறு இருமல் ---இரத்தம் இன்மையால் வரும் சோகைகண்டமாலைகாய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல் முதலிய நோய்கள்,

 

            சூழல் உற--- இவை எல்லாம் அடியேனைச் சூழ்ந்து போரிட,

 

            மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ--- பழமையாகிய அழுகிய அசுத்தப் பொருள் என்று பழிக்கநாற்றம் உள்ளவனாகிஅடியேன் வீணே அழியக் கடவேனோ?

 

பொழிப்புரை

 

            நான்கு முகங்களை உடைய பிரமதேவர்வேதத்தை ஓதத் தொடங்கியபோது முதலில்"அரி ஓம்" என்று கூறபொருள் கூறக்கடவாய் என்று தேவரீர் கேட்கஆதாரம் சொல்ல முடியாது விழித்த பிரமதேவரைகீழே விழுந்து உருளுமாறு மோதிஅவனுடைய நான்கு முகங்களுடன் சிகையானது பொடி படுமாறு குட்டிய இளம்பூரணரே!

 

             நறுமணம் வீசும் கொன்றை மாலை தரித்த கூந்தலை உடையவரும்,  மங்கல வடிவுடைய நித்யகலியாணியும் ஆகிய உமாதேவியார்முதலில் பெற்ற பிள்ளையாகிய விநாயகர் மகிழ்கின்ற தோழரே!

 

            காட்டில் பொருந்தி வாழ்கின்றஞானசொரூபியாகிய வள்ளியம்மையாரை தினைப்புனத்தில் திருமணம் புரிந்துகொண்டபுகழ் மிகுந்த மயில்மீது எழுந்தருளி வரும் வீரரே!

 

            ஓலமிடுகின்ற தாடகையும்சுபாகுவும்வளர்ந்துள்ள ஏழு மரங்களும்வாலியுடன்துஷ்டையாகிய சாயாக்கிரகியும்,  பகாசுரனும்விராதனும்,  பொங்கி எழும் ஓசையுடன் கூடிய கடலுடன்வலிமை மிக்க இராவணாதி அசுரர்களும் போர்க்களத்தில் மாண்டு பொடி படுமாறுஉவகையுடன் நெருப்பைக் கக்குகின்ற கணைகளை விட்ட சக்கரம்சங்கம் என்னும் ஆயுதங்களைத் தாங்கிய திருக்கரங்களை உடையவரும்இலக்குமி தேவியை திருமார்பில் தரித்தவரும் ஆகியவிஷ்ணுமூர்த்தியின் திருமருகரே என்று வேதங்கள் புகழ,இராமேச்சுரத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் குமாரக்கடவுளே!

 

            தேவர்கள் போற்றும் பெருமை மிகுந்தவரே!

 

            வாலிப வயதை அடைந்துநன்றாக அழகு செய்துகொண்டுமன்மதனைப் போல் ஆகியும்பற்பலவாறு ஆபரணங்களை மாறிமாறி புனைந்துஅதுவே வியாபாரம் ஆகியும்மயக்கத்தில் ஆடி வீணான ஆடல்களைச் செய்தும்பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதியும்அதிலேயே மனம் உறுதிபெற்றுமாட கூடங்களுடன் செல்வத்தைத் தேடிச் சேகரித்துநறுமணம் வீசும் புனுகுடன்இதழ்களோடு கூடிய மலர்மாலைகளோடு மனம் வைத்துமகிழ்ச்சியைத் தரும் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய்காம மயக்கத்தைக்கொண்டுபொதுமகளிரை விரும்பி அவர்களுடைய மோகத்திலே சுழன்றும்சில நாள்கள் கழிந்து,  உடலில் தோல் சுருங்கலுற்றும்மயிர் நரைத்தும்கண்கள் பார்வை ஒளி மழுங்கியும்இரண்டு கால்களும் தடுமாற்றத்தை அடைந்தும்காதுகள் செவிடு பட்டும்உயிர்தளைகடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளை அறியாதுசுகம் மாறுதலை அடைந்தும்கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில்,சூலை நோய்சொறி நோய்கோழைஇழுப்புவலிவாதம்நீரிழிவுஇரத்தமின்மையால் வரும் சோகைகண்டமாலைகாய்ச்சல் இவைகளுடன் கக்குவான் இருமல் முதலிய நோய்கள் எல்லாம் அடியேனைச் சூழ்ந்து போரிடபழமையாகிய அழுகிய அசுத்தப் பொருள் என்று பழிக்கநாற்றம் உள்ளவனாகிஅடியேன் வீணே அழியக் கடவேனோ?

 

 

விரிவுரை

 

வாலவயதாகிஅழகாகி ---

 

மனிதன் பதினாறு ஆண்டினை எய்தும்போதுஅவன் தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு இங்கும் அங்குமாகத் திரிகின்றான். பதினாறு வயது ஒரு பெரிய சிக்கலான காலம். அந்தப் பருவந்தான் மனிதன் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம். பதினாறு வயது வந்தவுடன் சன்மார்க்கத்தில் சென்றாலும் செல்வான். திரும்பி துன்மார்க்கத்தில் சென்றாலும் செல்வான். அப் பருவத்தில் அவன் தலைநிற்கின்ற நிலைநடைஉடைசொல் முதலியன எல்லாம் மாறுபாடு அடையும்.

 

அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்றி

அதிவிதமதாய் வளர்ந்து          பதினாறாய்........

 

இச்சீர் பயிற்ற வயதுஎட்டோடும் எட்டுவர

வாலக்குணங்கல் பயில் கோலப்பெதும்பையர்களுடன்உறவாகி.........

அழகுபெறு நடைஅடைய கிறுதுபடு மொழிபழகி

ஆவிஆய ஓர் தேவிமாருமாய்.....

 

என்ற திருப்புகழ் அடிகளையும்கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

 

பணி வாணிபமொடு ஆடி ---

 

பணி வாணிபம் --- நகை வியாபாரம். இளமைப் பருவத்தின் தன்மையால் இது நிகழும். ஒரு ஆபரணத்தைச் செய்து அணிந்து கொள்வான். மீண்டும் சில தினங்கள் கழித்துஅதனை அழித்துவேறு மாதிரியில் செய்து புனைவான். இவ்வண்ணமே மாற்றி மாற்றிச் செய்வதும்விற்பதும்வாங்குவதுமாக இருப்பான்.

 

மருளாடி விளையாடி ---

 

பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணுவது மருள்மயக்கவுணர்ச்சி. நடையல்லாதவற்றை நடையாகவும்அழகில்லாத ஒன்றை அழகியதாகவும்சுகமல்லாததனை சுகமாகவும்இகழ்ச்சியைப் புகழ்ச்சியாகவும் மாறுபட மயங்கி அறிவது. விளக்கைக் கனி என விட்டில் பூச்சி நினைப்பது போலும்தூண்டில் முள்ளின் முனையில் உள்ள உணவை அமிர்தமாக மீன் நினைப்பது போலவும்கானல் நீரை நீர் என மான் நினைப்பது போலவும் என்று அறிக.

 

பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு.              ---  திருக்குறள்.

 

அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி

விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்

பன்மீன் போலவும்,

மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்,

ஆசையாம் பரிசத்து யானை போலவும்,

ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்,

வீசிய மணத்தின் வண்டு போலவும்,

உறுவது உணராது செறுவுழிச் சேர்ந்தனை...    --- கோயில் நான்மணி மாலை.

                      

வாழ்வு சதமாகி ---

 

செல்வமும்இளமையும்வாழ்வும் நிலைபேறு இல்லாதவை.  தோன்றி மறைபவை. "நீர்மேல் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கைநில்லாது செல்வம்”, "தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே" என்பார் அருணகிரிநாதர்.

 

நீரில் குமிழி இளமைநிறை செல்வம்

நீரில் சுருட்டு நெடுந்திரைகள், – நீரில்

எழுத்தாகும் யாக்கைநமரங்காள்என்னே

வழுத்தாது எம்பிரான் மன்று.           ---  குமரகுருபரர்.

 

மட கூடமொடு பொருள் தேடி ---

 

வாழ்வுக்கு வேண்டியன என்று கருதப்படுபவை வீடு,வாசல்மாடுகன்றுஉடைஉணவுபொருள் முதலியன.  இவைகளைப் பலப்பல திசைகளில் சென்று தேடி அலைவது.

 

திக்கோடு திக்குவரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி...    ---  (இத்தாரணி) திருப்புகழ்.

                                                                                             

தோலொடு மூடிய கூரையை நம்பிப்

பாவையர் தோதக லீலைநி ரம்பிச்

சூழ்பொருள் தேடிட ஓடிவ ருந்திப்       புதிதான

 

தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்

கோவை உலாமடல் கூறி அழுந்தித்

தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்கு    அலமாரும்

 

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்

கோளனை மானம் இலாஅழி நெஞ்சக்

காதக லோபவ்ரு தாவனை நிந்தைப்         புலையேனை...    ---  (தோலொடு) திருப்புகழ்.

                                  

     "மாடகூடம்" என்பது சந்தத்தை நோக்கி, "மடகூடம்" என்று குறுகியது.

 

வாச புழுகோடு …...      …....   சிலநாள் போய் ---

 

பரிமள மிகுந்த பொருள்களை அணிந்துகொண்டு,பொதுமாதர்களது வலைப்பட்டுஆசை வயத்தன் ஆகிமனம் போன போக்கில் திரிந்துஇரவு பகல் என்று அறியாமல் திரிந்து சிலர் அலைவர். அதனால் விலைமதிக்க முடியாத மாணிக்கம் போன்ற வாழ்நாள் வறிதே கழிந்துவிடுகின்றது.

 

வீணே நாள்போய் விடாமல் ஆறாறு மீதில்

ஞானோபதேசம் அருள்வாயே...         --– (மாலாசை) திருப்புகழ்.

 

தோல் திரைகள் ஆகி --- --- திரியுறுநாளில்---

 

மன்மதனைப் போல் திரிந்த மனிதன் இப்போது தளர்ந்த வயதில் தேவாங்கு போல் காட்சி தருகின்றான். இருண்டு பளபள என்று இருந்த தலைமயிர்பஞ்சுக் காடாகி விடுகின்றது. மினுமினுப்பாக இருந்த சரீரம்வாழை சருகுபோல் திரைத்து விகாரமாகி விடுகின்றது. கூர்மையான பார்வை உடைய கண்கள் ஒளிகெட்டு இருண்டு விடுகின்றது. துள்ளித் துள்ளி நடந்த கால்கள் தள்ளாடித் தடுமாறித் தவிக்கின்றன. மேல்மாடியில் காற்றோட்டமான அறையிலேஅழகிய மஞ்சத்தின் மீதுபலவகையான ஓவியங்களை அமைத்துநிலைக் கண்ணாடிகளை வைத்து அநேக அலங்காரங்களுடன் இன்புற்று வாழ்ந்த சுகம் போய்விடுகின்றது. தெருத் திண்ணையிலே கிழிந்த பாயில்வறட்டியும்சாம்பலும்கோலும்குடுவையும்அழுக்கேறிய கந்தல் தலையணையும்குளிருக்கென்று கட்டிய கிழிந்த கோணியுமாக கிழவர் இப்போது துன்புறுகின்றார்.

 

"தடியோடு திரிதரு நாள்" என்றார் அடிகளார். முதுமை வந்தால்ஊன்றிக் கொள்ளுகின்ற தடியோடு மனிதனுக்குமூன்று கால்கள்.

 

"காசு ஆசைச் செயலாலே சொக்கு இடு

     விஞ்சையர்,கொஞ்சிடுவார்,இளங்குயில்

போலே நல் தெரு ஊடு ஆடி,துயல்

     தொங்கல் நெகிழ்ந்துடையே துவண்டிட,

கால் தாவிசதியோடே சித்திரம்

     என்ப நடம் புரிவார்டல் செயல் ...... மிஞ்சல் ஆகி,

சீர் ஆடிசில நாள்போய்,மெய்த் திரை

     வந்து கலந்துயிரோட வங்கமொடு

ஊடாடி,பல நோயோடுதடி

     கொண்டு குரங்கு எனவே நடந்து",

 

எனத் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார் பாடியுள்ளது காண்க.

 

சூலைசொறி ….     …. சூழலுற---

 

முதுமைப் பருவத்தில் சூலை ஈளை இருமல் நீரிழிவு வாதம் முதலிய நோய்களும் வந்து சூழ்ந்துகொள்ளும். முன்னே பலப்பல நண்பர்கள் சூழ்ந்து இருப்பர். இப்போது அவர்களில் ஒருவரும் நெருங்கமாட்டார்கள். அதற்கு நேராக பலப்பல பிணிகள் வந்து சூழ்ந்து உபசரிக்கும்.

 

கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ ---

 

கசுமாலம் --- அழுகியது. அழுக்கு நீர் நிறைந்த தொட்டிகளில் பல அசுத்தப் பொருள்கள் கிடந்து அழுகிபொறுக்க முடியாத துர்வாடை வீசும். அதற்குக் கசமாலம் என்று பேர். அதுபோல் இந்த உடம்பு அழுகிநாறிபுழுத்துசீழும் உதிரமும் வடிந்துஈக்களும் எறும்புகளும் மொய்த்துஅருகில் ஒருவரும் நெருங்காவண்ணம் நாறிமுடிவில் அழிந்துபடும்.

 

அவ்வாறு அழியாமல் நல்வினைப் பயனால் பெற்ற உடம்பை நல்வழியில் பேணி உடம்புக்குள் உறையும் உத்தமனைக் காண முயலுதல் வேண்டும்.

 

நாலுமுகன் ஆதி "அரிஓம்" என ---

 

ஆதாரம் என்னும் சொல் சந்தத்தை நோக்கி, "அதாரம்ஈ என வந்தது.

 

பிரமதேவர் சிவ வழிபாட்டின் பொருட்டுதிருக்கயிலாய மலைக்குச் சென்றனர். ஆங்கு ஒருபுறம் இலக்கத்தொன்பான் வீரர்கட்கு இடையில் விளங்கும் இளம்பூரணராகிய முருகப்பெருமானைக் கண்டும் காணாதவர் போல்பொய்யொழுக்கமாகச் சென்றார். எம்பிரான்அவரை வீரவாகு தேவரை விட்டு அழைப்பித்து, "யார் நீ?" என வினவினார். பிரமதேவர் "வேதன்" என்றார். முருகர், "வேதன் நீ ஆகின் உனக்கு வேதம் வருமோ?" என்றார். பிரமதேவர், "வரும்" என்றார். முருகர், "வருமானால் படி" என்றார். பிரமதேவர், வேதம் ஓதத் தொடங்கிதொடக்கத்தில் கூறும் மரபுப்படி, "அரிஓம்" என்றார். முருகவேள், "நிறுத்து. முதலில் கூறிய பிரணவத்தின் பொருள் யாது" என்று வினவினார். அயன் அப்பொருள் அறியமாட்டானாய் விழித்தனன். வெள்கினன். திகைத்தனன். ஓம் என்னும் மந்திரத்தை ஒரு முகமாக உடைய எம்பெருமான் நகைத்தனன். "முதல் எழுத்திற்குப் பொருள் அறியாத மூடனாகிய நீசிருட்டித் தொழில் செய்வது எவ்வாறு பொருந்தும்உன் அகந்தை இருந்தவாறு என்னே?” என்று கூறிநான்கு தலைகளிலும்  பன்னிரு கரங்களால் நன்கு குட்டி அருளினர்.

 

…        …                    …        …                    படைப்போன்

அகந்தை உரைப்ப,” மறை ஆதி எழுத்து ஒன்று

உகந்த பிரணவத்தின் உண்மை -  புகன்றிலையால்,

சிட்டித்தொழில் அதனைச் செய்வதுஎங்ஙன்" என்று,           முன்னம்

குட்டிச் சிறைஇருத்தும் கோமானே!          --- கந்தர் கலிவெண்பா.

  

அரனுக்கு உற்றது ...... புகல்வோனே
         
அயனைக் குட்டிய ...... பெருமாளே.  ---  (பரவைக்கு) திருப்புகழ்.

 

"சிகை தூளிபட" என்றதனையும் நோக்குக. சிகை துகள் படுமானால்அந்தக் குட்டுஎத்துணை வேகமாக விழுந்திருக்கும் என்பதனை உய்த்துணர்க.

 

குட்டினார் என்று கூறாமல், "தாளமிடும் இளையோனே" என்று நயமாகக் கூறுவார். ஏன்குட்டுப்பட்டவர் மூவரில் ஒருவர். படைப்புத் தொழில் புரிபவர். பெரிய மனிதர் குற்றம் புரிந்து தண்டனை அடைந்தாலும் கீழுள்ளவர் அதனை நேர்முகமாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறுவது இன்றைக்கும் உள்ள உலகியற்கை.  ஆதலின், "தாளமிடும்" என்று அழகாக உரைக்கின்றார்.

 

ஞான குறமாது---

 

வள்ளியம்மை ஞானாம்பிகை. அத் தாய் புரிந்தது மெய்ஞ்ஞானப் பயிர். ஞானத்தை ஞானபண்டிதன் விரும்புவான்.

 

சுந்தஞான மென்குற மாது

தன்திரு மார்பில் அணைவோனே...

 

என்பார் பிறிதொரு திருப்பகழில்.

 

ஞானகுறமாதைமுருகப் பெருமான் காவில் மணம் புரிந்ததுகந்தபுராணம் கூறுமாறு காண்க.

 

பொள்ளெ னத்தினைப் புனத்திற் பாங்கிபோய்

வள்ளி தன்பதம் வணங்கி மானவேற்

பிள்ளை காதலும் பிறவுஞ் செப்பியே

உள்ளந் தேற்றியே ஒருப்ப டுத்தினாள்.

 

இளைய மங்கையை இகுளை ஏனலின்

விளைத ரும்புனம் மெல்ல நீங்கியே

அளவில் மஞ்ஞைகள் அகவும் மாதவிக்

குளிர்பொ தும்பரிற் கொண்டு போயினாள். 

 

பற்றின் மிக்கதோர் பாவை இவ்வரை

சுற்றி யேகிநீ சூடுங் கோடல்கள்

குற்று வந்துநின் குழற்கு நல்குவன்

நிற்றி ஈண்டு என நிறுவிப் போயினாள். .

 

கோற்றொடி இகுளைதன் குறிப்பி னால்வகை

சாற்றினள் அகன்றிடத் தையல் நிற்றலும்

ஆற்றவும் மகிழ்சிறந்து ஆறு மாமுகன்

தோற்றினன் எதிர்ந்தனன் தொன்மை போலவே.

 

வடுத்துணை நிகர்விழி வள்ளி எம்பிரான்

அடித்துணை வணங்கலும்,அவளை அங்கையால்

எடுத்தனன்,புல்லினன்,இன்பம் எய்தினான்,

சுடர்த்தொடி கேட்டிஎன்று இதனைச் சொல்லினான். .

 

ஓலம் இடு தாடகை,சுவாகு,வளர் ஏழு மரம்வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன்எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக ஓகை தழல் வாளி விடு மூரி தநு நேமி வளை பாணிதிரு மார்பன்--- 

 

தாடகையும்சுபாகுவும்வளர்ந்துள்ள ஏழு மரங்களும்வாலியுடன்துஷ்டையாகிய சாயாக்கிரகியும்,  பகாசுரனும்விராதனும்பொங்கி எழும் ஓசையுடன் கூடிய கடலுடன்வலிமை மிக்க இராவணாதி அசுரர்களும் போர்க்களத்தில் பாண்டு போனதை அடிகளார் இங்குக் குறிக்கின்றார்.

 

சுகேது என்ற யட்சனுடைய தவத்தால் ஆயிரம் யானை பலத்துடன் பிறந்தவள் தாடகை. சுந்தன் என்ற யட்சன் தாடகையை மணந்தான். சுபாகு,மாரீசன் என்ற புதல்வர்கள் பிறந்தார்கள்.

 

தாடகையின் கணவனான சுந்தன் அகத்தியர் ஆச்சிரமத்தில் இருந்த பூ மரங்களை அழித்தான். அகத்தியருடைய பார்வையால் அழிந்தான். அதனால் வெகுண்ட தாடகையும் அவளுடாய இரு புதல்வர்களும் கல்லும் மண்ணும் வீசி அகத்தியரை எதிர்த்தார்கள். நீங்கள் அசுரர்களாகக் கடவது என்று அகத்தியர் சாபம் இட்டார். பிறப்பால் யட்சர்களாகிய இவர்கள்சாபத்தால் அசுரர்களாக ஆனார்கள். அதனால்மிகுந்த தீமைகளைப் புரிந்து திரிந்தார்கள். சதா விசுவாமித்திரருக்குக் கொடுமை செய்தார்கள்.  இராமர் தாடகையைக் கொன்று யாகத்துக்கு உதவி புரிந்தார்.

 

சொல் ஒக்கும் கடிய வேகச்

   சுடு சரம்,கரிய செம்மல்,

அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்

   விடுதலும்வயிரக் குன்றக்

கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,

   அப்புறம் கழன்று,கல்லாப்

புல்லார்க்கு நல்லோர் சொன்ன

   பொருள் எனப் போயிற்று அன்றே!     --கம்பர்                                                                 

 

ஸ்ரீராமர்தாடைகையை வதைத்ததோடுசுபாகுவையும்வதைத்தும்மாரீசனைக் கடலில் வீழ்த்தியும் வேள்விக் காவல் செய்துமுடித்துக் கொடுத்தார்.

 

எண்ணுதற்கு,ஆக்க,அரிதுஇரண்டு-மூன்று நாள்

விண்ணவர்க்கு ஆக்கி முனிவன் வேள்வியை.

மண்ணினைக் காக்கின்றமன்னன் மைந்தர்கள்.

கண்ணினைக் காக்கின்றஇமையின் காத்தனர்.   --- கம்பர்

 

பாதலம் வரை வேர் பாய்ந்துமீதலம் வரை ஓங்கி உயர்ந்துஏழு கோணங்களில் நின்ற வயிரம் பெற்ற மரங்கள். இந்த ஆச்சா மரங்களை அவற்றின் உடல் நடுங்கும்படியாக ஒரே பாணத்தால் பிளந்து அழித்தார் இராமபிரான்.சமானம் இல்லாத பேராற்றல் படைத்தவன் வாலி. கடல் கடைந்த அவ்வலிய வாலியின் உடல் கடைந்தது இராமருடைய கணை.

 

தென் கடற்கரையில் இராமர் தர்ப்ப சயனத்தில் படுத்துக் கடலில் அணைக் கட்டிக் கடக்கும் பொருட்டு வருணனை வழி வேண்டினார். ஏழுநாள் இவ்வாறு வருணனை வேண்டியும் அவன் வராமையால் சினந்து அக்கினிக் கணையை விடுத்து கடலை நடுங்க வைத்தார்.

 

அரக்கர் குலத் தலைவன் ஆகிய இராவணனுடைய குலத்தையும் அவனைச் சார்ந்த அரக்கருகள் அனைவரையும் சார்ந்த கோ என்று அலறும்படியாஇலங்கை நகருள் தீக் கடவுள் எழுந்து தீப்பற்றி எரியச் செய்தார் அநுமன்.

 

இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள்

     இல் எங்கணும் இலங்கு என ...... முறை ஓதி,

 

இடுங்கனல்,குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட,

     எழுந்தருள் முகுந்தன்நன் ...... மருகோனே!  --- (தலங்களில்) திருப்புகழ்.

                           

 

பத்துத்தலை தத்தக் கணை-தொடு

     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதுஒரு

          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவுஆகப்

பத்தற்கு இரதத்தைக் கடவிய

     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

          பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே.. --- (முத்தைத்தரு) திருப்புகழ்.

                                         

வடிவுடைய மானும், இகல் கரனும், திகழ்

     எழுவகை மராமரமும், நிகர் ஒன்றும்இல்

     வலிய திறல் வாலி உரமும், நெடுங்கடல் .... அவைஏழும்

மற நிருதர் சேனை முழுதும் இலங்கைமன்

     வகை இரவி போலும் மணியும், அலங்க்ருத

     மணிமவுலி ஆன ஒருபதும், விஞ்சு இரு- ...... பதுதோளும்

 

அடைவலமும் மாள விடு சர அம்புஉடை

     தசரத குமார, ரகுகுல புங்கவன்,

     அருள்புனை முராரி மருக!....                              --- (விடமும் வடிவேலும்) திருப்புகழ்.

 

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில்,

     என விரகு குலையாத மாதாவும் நேர் ஓத,

     இசையும் மொழி தவறாமலே ஏகி, மாமாதும், ......இளையோனும்,

இனிமையொடு வரும் மாய மாரீச மான் ஆவி

     குலையவரு கர தூஷணா வீரர் போர்மாள,

     இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே, வாலி ......உயிர்சீறி,

அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி

     அடைசெய்து, அணை தனில் ஏறி, மாபாவி ஊர்மேவி,

          அவுணர்கிளை கெடநூறி, ஆலால மாகோப ......நிருதஈசன்

அருணமணி திகழ்பார வீராகரா மோலி

     ஒருபதும் ஒர் கணை வீழவே மோது போராளி,

     அடல்மருக! குமரேச! மேலாய வானோர்கள் ......பெருமாளே.

                                                                                         --- (குனகிஒரு) திருப்புகழ்.

 

இராமேச்சுரம்---

 

     ஸ்ரீராமர் இராவணனை வைத்துத் திரும்பியபோதுசிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட புனிதமான திருத்தலம்.

 

இறைவர்: இராமநாதர்

இறைவியார்  : மலைவளர்காதலிபர்வதவர்த்தினி

 

தீர்த்தம்       : அக்னி தீர்த்தம்(கடல்)இராம,  இலட்சுமண,தனுஷ்கோடி முதலான தீர்த்தங்கள்.

 

            திருஞானசம்பந்த்ப் பெருமானும்அப்பர் பெருமானும் பாடி வழிபட்ட திருத்தலம்.

 

            இந்த திருத்தலம் இராமேசுவரம் தீவில் உள்ளது. சென்னை,மதுரைதிருச்சி ஆகிய இடங்களில் இருந்து இரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரைதிருச்சியில் இருந்து இருக்கிறது

 

            இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேசுவரம் என்ற பாடல் பெற்ற திருத்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோயில்களில் இராமேசுவரமும் ஒன்றாகும். இராமேசுவரம் கோயிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும்அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதிதர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேசுவரம் ஒரு முக்கிய தலம் ஆகக் கருத்தப்படுகிறது. மூர்த்திதலம்தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலம்.

 

            இந்தியாவில் உள்ள 12ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேசுவரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம்கிழக்கே ஜகந்நாதம்மேற்கே துவாரகநாதம்தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்றுஅயோத்திக்குத் திரும்பும் வழியில்இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேசுவரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும்சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேசுவரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேசுவரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேசுவரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள்பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவேஇராமேசுவரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.

 

     இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேசுவரம் தலம் வந்தபிறகுஇராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து,அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிட்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிட்டை செய்து தனது பூசையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிட்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிட்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிட்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

 

            அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிட்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

 

கருத்துரை

 

 

முருகா! அவமே அழியாமல் அருள் புரிவீர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...