040. கல்வி --- 07. யாதானும் நாடாமால்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "கற்றவனுக்குத் தனது நாடும்,தனது ஊருமே அல்லாமல்,எந்த நாடும்,எந்த ஊரும் தனது நாடும்ஊரும் போன்றவையே ஆகும். அப்படி இருக்கஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாமல் வாழ்நாளைக் கழிக்கின்றது என்ன நினைந்து?" என்று வினவுகின்றார் நாயனார்.

 

     சாகும் வரையிலும் கூகல்வியை ஒருவன் பயிலாது இருப்பது பெருமைக்கு உரியது அல்ல. கல்வி கரை இல என்றதால்கல்வி கற்கத் தொடங்கிய ஒருவன்இது போதும் என்று அமையாதுதனது வாழ்நாள் இறுதி வரையிலும் கற்றலை விடாது மேற்கொள்ளவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

 

திருக்குறளைக் காண்போம்...

 

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்என் ஒருவன்

சாம்துணையும் கல்லாத வாறு.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     யாதானும் நாடுஆம் ஊர்ஆம் --- கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றியாதானும் ஒரு நாடும் நாடாம்யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்

 

     ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் --- இங்ஙனமாயின்ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?

 

             (உயிரோடு சேறலின், 'சாம்துணையும்என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லைஅதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபெரிய புராணத்துள் வரும் காரி நாயனார் வரலாற்றை வைத்துகுமார பாரதி என்பார்"திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் பாடிய பாடல்...

 

பாரில் மூவேந்தர் பரிசில் உதவப் பாடிக்

காரியார் ஆலயங்கள் கட்டினார்,--- ஓர்இடமோ

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.   

 

இதன் பொருள் ---

 

       காரிநாயனார் அவதரித்த தலம் திருக்கடவூர் ஆகும். அவர் தமிழ்மொழியிலே மிக வல்லவர். அவர் சொல் விளங்கிப் பொருள் மறைந்து கிடக்கும்படி தமது பெயரினாலே தமிழ்க்கோவை பாடினார். தமிழ்நாட்டு மூவேந்தரிடமும் சென்றார். அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விளங்க விரித்து உரைத்தார். அவர்கள் மகிழ்ந்து தந்த திரவியங்களைப் பெற்றுசிவாலயங்கள் பலவற்றைக் கட்டினார். அடியார்களுக்கு வேண்டு பொருள்களைக் கொடுத்தார். திருக்கயிலாய மலையை மறவாத கருத்து உடையவரானார். சிவகீர்த்தியை உலகமெங்கும் நிலைநிறுத்தினார். சிவபெருமானது திருவருளைப் பெற்றார். மனம்போல உடம்பும் திருக்கயிலாய மலையை அடையப் பெற்றார்.  

 

       கற்றவனுக்கு தன் நாடும் தன் ஊருமே அன்றி யாதானும் ஓர் ஊரும் ஊராம். இங்ஙனமாயின் ஒருவன் தான் இருக்கின்ற அளவும் கல்லாது கழிக்கின்றது என்ன கருதி?  ஆகலின்கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை. அதனையே எப்பொழுதும் செய்க

எனத் திருவள்ளுவ நாயனார் அருளினார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

                                                                                                

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல்,என் அறியலன் கொல்,

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே,அதனால்

காவினெம் கலனே,சுருக்கினெம் கலப்பை,

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே,

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.   --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     விரைந்து செல்லும் குதிரைகளை உடைய குரிசில் ஆகிய நெடுமான் அஞ்சிதனது தகுதியை அறியாதவனா?இல்லைஎனது தரத்தை உணராதவனா?அறிவும் புகழும் உடையவர்கள் இறந்து போனதால்இவ்வுலகம் வறுமையுற்றுப் போகவில்லை. எனவேநாங்கள் இசைக் கருவிகளை எடுத்துக் கொண்டுமூட்டை முடிச்சுகளோடு வெளியேறுகின்றோம். மரங்களை அழித்துப் பல பொருட்களைச் செய்யும் தச்சு வேலை செய்பவன் பெற்ற பிள்ளைகளுக்குகாட்டுக்குள் சென்றால் வெட்டிவேலை செய்வதற்கு மரங்கள் கிடைக்காமல் போகாது. அது போலஎங்களுக்கும் எந்த்த் திசையில்எந்த ஊருக்குஎந்த நாட்டுக்குச் சென்றாலும் சோறு கிடைக்காமல் போகாது.

 

 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை --- அந்நாடு

வேற்று நாடு ஆகா,தமவே ஆம்,ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல்.   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     ஆற்றவும் கற்றார் அறிவுடையார் --- மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார்அஃது உடையார் நால் திசையும் செல்லாத நாடு இல்லை --- அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகள் இல்லைஅந்நாடு வேற்று நாடாகா --- அந்த நாடுகள் அயல் நாடுகள் ஆகாதமவே ஆம் --- அவ் அறிவுடையோர் நாடுகளே ஆம்ஆயினால் --- அங்ஙனமானால்ஆற்று உணா வேண்டுவது இல் --- வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டு செல்ல வேண்டியதில்லை.

 

            கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

 

            'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்'. ஆதலால் அறிவு உடைய ஒருவன் செல்லுகின்ற இடந்தோறும் அங்கு உள்ளோர்களால் வரவேற்கப்பட்டு வேண்டிய நலனை அடைவான். ஆதலால்,  அவனுக்கு வழியிடை கட்டுச்சோறு வேண்டுவது இல்லை. 

 

     கற்கலான நூல்களை மிகுதியாகக் கற்றவர்களையே அறிவுடையார் என்றார்.

 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் --- மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.    ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     மன்னனும் --- அரசனையும்மாசு அறக் கற்றோனும் --- கசடு அறக் கற்ற புலவனையும்சீர் தூக்கின் --- ஆராய்ந்து பார்த்தால்மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் --- அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்பு உடையவன் ஆவன்மன்னற்கு --- அரசனுக்குதன் தேசம் அல்லால் --- தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்),சிறப்பு இல்லை --- சிறப்பு இல்லையாகும்;கற்றோற்கு --- புலவனுக்கோ எனில்சென்ற இடம் எல்லாம் சிறப்பு --- அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் --- ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்புறங்கடை நல்இசையும் நாட்டும் --- உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் --- நேரக் கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை --- ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...