பொது --- 1004. தோடு மென்குழை

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தோடு மென்குழை (பொது)

 

முருகா! 

அடியேனை ஆண்டு அருள்வாய்.

 

 

தான தந்தன தானா தானன

     தான தந்தன தானா தானன

          தான தந்தன தானா தானன ...... தனதானா

 

 

தோடு மென்குழை யூடே போரிடு

     வாணெ டுங்கயல் போலே யாருயிர்

          சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ....விழிமானார்

 

சூத கந்தனி லேமா லாயவர்

     ஓது மன்றறி யாதே யூழ்வினை

          சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே

 

ஆடு வெம்பண காகோ தாசன

     மூறு கண்டிட மேல்வீழ் தோகையி

          லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே

 

ஆரு நின்றரு ளாலே தாடொழ

     ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற

          ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே

 

ஓடு வெங்கதி ரோடே சோமனு

     மூழி யண்டமும் லோகா லோகமு

          மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண

 

ஊழி டம்புயன் வேலா வாலய

     மூடு தங்கிய மாலா ராதர

          வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா

 

வேடு கொண்டுள வேடா வேடைய

     வேழ வெம்புலி போலே வேடர்கள்

          மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்

 

மேக மென்குழ லாய்நீ கேளினி

     வேறு தஞ்சமு நீயே யாமென

          வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தோடு மென்குழை ஊடே போர் இடு

     வாள் நெடும் கயல் போலே, ஆர்உயிர்

          சூறை கொண்டிடு வேல் போலே, தொடர் ......விழிமானார்,

 

சூதகம் தனிலே மால் ஆய்,அவர்

     ஓதும் அன்று அறியாதே, ஊழ்வினை

          சூழும் வெம் துயராலே தான் உயிர் ...... சுழலாதே,

 

ஆடு வெம்பண காகோத அசனம்

     ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில்

          ஆரும் வண் குமரஈசா! ஆறுஇரு ...... புயவேளே!

 

ஆரும் நின்று அருளாலே தாள் தொழ

     ஆண்மை தந்து அருள் வாழ்வே! தாழ்வு அற

          ஆதி தந்தவ! நாயேன் வாழ்வு உற ...... அருள்வாயே.

 

ஓடு வெங்கதி ரோடே சோமனும்,

     ஊழி அண்டமும், லோகா லோகமும்,

          ஊரும் அந்தர நானா தேவரும் ...... அடிபேண,

 

ஊழிடு அம்புயன், வேலா வாலயம்

     ஊடு தங்கிய மாலார், ஆதரவு

          ஓத, வெண்திரை சூர்மார்பு ஊடுஉற ...... விடும்வேலா!

 

வேடு கொண்டு உள வேடா! வேடைய

     வேழ வெம்புலி போலே வேடர்கள்

          மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்,

 

"மேகம் என் குழலாய்! நீ கேள்,இனி

     வேறு தஞ்சமும் நீயே ஆம்" என

          வேளை கொண்ட பிரானே வானவர் ...... பெருமாளே.

 

பதவுரை

 

      ஓடு(ம்) வெம் கதிரோடே--- நாளும் ஓடுகின்ற வெம்மையான கதிர்களை உடைய சூரியனோடு,

 

     சோமனும் --- சந்திரனும்,

 

     ஊழி அண்டமும் --- உழிக் காலத்திலும் அழியாத அண்டங்களும்,

 

     லோகா லோகமும் --- பல உலகங்களும்,

 

     ஊரும் அந்தர நானா தேவரும் அடி பேண --- விண்ணுலகில் உலவுகின்ற பலவகையான தேவர்களும் உமது திருவடியைத் துதித்து வழிபட,

 

      ஊழ் இடு அம்புயன் --- ஊழின்படிக்கு அவவரைப் படைக்கின்ற பிரமதேவனும்,

 

     வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் --- கடலின் ஊடே பள்ளி கொண்டுள்ள திருமால் ஆனவரும்,

 

     ஆதரவு ஓத--- உமது ஆதரவே வேண்டி இருக்க,

 

     வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா --- வெண்மையான அலைகள் வீசுகின்ற கடலில் எழுந்த சூரபதுமனுடைய மார்பை ஊடுருவிச் செல்லும்படி வேலை விடுத்து அருளியவரே!

 

      வேடு கொண்டு(ள்)ள வேடா --- வேடன் வடிவம் கொண்டவரே!

 

     வேடைய வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு(ம்)--- கொடுமை வாய்ந்த புலியைப் போன்று உள்ள வேடர்கள் வாழுகின்,

 

     திண்புன(ம்) மீதே மாதொடு மிக மாலாய்--- வளம் மிக்க தினைப்புனத்தில் இருந்த வள்ளியம்மையிடம் மிக்க காம மயக்கம் கொண்டவராய்ச் சென்று,

 

      மேகம் என் குழலாய் நீ கேள் --- "மேகம் ஒத்த கூந்தலை உடையவளே! நீ கேட்பாயாக"

 

     இனி வேறு தஞ்சமு(ம்) நீயே ஆம் என --- "உன்னைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை,நீயே எனக்குப் புகல்" என்று சொல்லி,

 

     வேளை கொண்ட பிரானே --- சமயம் பார்த்துஎண்ணி வந்த கருமத்தை முடித்துக் கொண்ட தலைவரே!

 

     வானவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

      தோடு மென் குழை ஊடே போரிடு --- காதுகளில் உள்ள தோடுகளோடும்குண்டலங்களோடும் போர் புரிகின்ற,

 

     வாள் நெடும் கயல் போலே --- ஒளி பொருந்திய நீண்ட மீனைப் போல விளங்கி,

 

     ஆருயிர் சூறை கொண்டிடு வேல்போலே --- உயிரைக் குடிக்கின்ற வேலைப் போலவும் விளங்கி,

 

     தொடர் விழி மானார் --- பாய்கின்ற கண்களை உடைய விலைமாதர்களின்,

 

      சூதகம் தனிலே மாலாய் --- வஞ்சகச் செயல்களில் மனம் மயங்கி,

 

     அவர் ஓதும் அன்று அறியாதே --- அவர்கள் சொல்லுகின்ற சொற்களின் உண்மையை அன்று அறியாது இருந்து

 

     ஊழ்வினை சூழும் வெம்துயராலே தான் உயிர் சுழலாதே --- என்னைச் சூர்ந்துள்ள ஊழின் காரணமாய் விளைகின்ற கொடிய துன்பத்தால் உயிர் துன்பம் அடையாமல்,

 

      ஆடு வெம் பண காகோதம் அசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் ஆரும் --- ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பை உண்பதற்காக அதன்மேல் விழுகின்ற மயிலின் மீது இவர்ந்து விளங்கும்,

 

     வண் குமர ஈசா--- வண்மையை உடைய குமாரக் கடவுளே!

 

     ஆறு இரு புய வேளே --- பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

 

     ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ--- யாரும் உனது திருவருள் சித்திக்கதிருவடியில் விழுந்து வணங்கித் துதிக்க,

 

     ஆண்மை தந்து அருள் வாழ்வே --- அவர்க்கு வல்லமையைத் தந்து அருள் புரிகின்றவரே!

 

     தாழ்வு அற --- உலக உயிர்கள் தமது இழிநிலையில் இருந்து உய்தி பெ,

 

     ஆதி தந்தவ --- சிவபரம்பொருளால் அவதரித்தவரே!

 

     நாயேன் வாழ்வு உற அருள்வாயே --- நாயேன் நல்வாழ்வு பெற அருள் புரிவாயாக.

 

பொழிப்புரை

 

     நாளும் ஓடுகின்ற வெம்மையான கதிர்களை உடைய சூரியனோடுசந்திரனும்உழிக் காலத்திலும் அழியாத அண்டங்களும்பல உலகங்களும்விண்ணுலகில் உலவுகின்ற பலவகையான தேவர்களும் உமது திருவடியைத் துதித்து வழிபட,ஊழின்படிக்கு அவவரைப் படைக்கின்ற பிரமதேவனும்கடலின் ஊடே பள்ளி கொண்டுள்ள திருமால் ஆனவரும்உமது ஆதரவே வேண்டி இருக்க, வெண்மையான அலைகள் வீசுகின்ற கடலில் எழுந்த சூரபதுமனுடைய மார்பை ஊடுருவிச் செல்லும்படி வேலை விடுத்து அருளியவரே!

 

      வேட வடிவம் கொண்டவரே!

 

     கொடுமை வாய்ந்த புலியைப் போன்று உள்ள வேடர்கள் வாழுகின்,வளம் மிக்க தினைப்புனத்தில் இருந்த வள்ளியம்மையிடம் மிக்க காம மயக்கம் கொண்டவராய்ச் சென்று,

"மேகம் ஒத்த கூந்தலை உடையவளே! நீ கேட்பாயாக. உன்னைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லைநீயே எனக்குப் புகல்" என்று சொல்லி,சமயம் பார்த்துஎண்ணி வந்த கருமத்தை முடித்துக் கொண்ட தலைவரே!

 

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

      ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பை உண்பதற்காக அதன்மேல் விழுகின்ற மயிலின் மீது இவர்ந்து விளங்கும்,வண்மையை உடைய குமாரக் கடவுளே!

 

     பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

 

     யாரும் உனது திருவருள் சித்திக்கதிருவடியில் விழுந்து வணங்கித் துதிக்க,அவர்க்கு வல்லமையைத் தந்து அருள் புரிகின்றவரே!

 

     உலக உயிர்கள் தமது இழிநிலையில் இருந்து உய்தி பெசிவபரம்பொருளால் அவதரித்தவரே!

 

     காதுகளில் உள்ள தோடுகளோடும்,  குண்டலங்களோடும் போர் புரிகின்ற ஒளி பொருந்திய நீண்ட மீனைப் போலவும், உயிரைக் குடிக்கின்ற வேலைப் போலவும் விளங்கிப் பாய்கின்ற கண்களை உடைய விலைமாதர்களின்வஞ்சகச் செயல்களில் மனம் மயங்கிஅவர்கள் சொல்லுகின்ற சொற்களின் உண்மையை அன்று அறியாது இருந்துஎன்னைச் சூர்ந்துள்ள ஊழின் காரணமாய் விளைகின்ற கொடிய துன்பத்தால் உயிர் துன்பம் அடையாமல், நாயேன் நல்வாழ்வு பெற அருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

தோடு மென் குழை ஊடே போரிடுவாள் நெடும் கயல் போலே ஆருயிர் சூறை கொண்டிடு வேல்போலே தொடர் விழி மானார் ---

 

காதளவு ஓடிய நீண்ட கண்கள் எனப்படும். 

 

வாள் --- ஒளி.

 

வாளைப் போல இருந்துஆடவரின் உயிரை ஈர்கின்றன விலைமாதரின் கண்கள்.

 

வெல்லும் தொழிலை உடையது வேல் எனப்பட்டது. ஆடவரின் மனதைக் கவர்ந்து வெல்லுகின்ற தொழிலை உடையன விலைமாதரின் கண்கள்.

 

சூதகம் தனிலே மாலாய்--- 

 

சூதகம் என்பதற்குஅழுக்கு என்று பொருள்.

 

சூது+அகம் = சூதகம். சூது என்பதை வஞ்சனை என்று கொண்டுவஞ்சக மனதை உடையவர்கள் என்று கொள்ளலாம்..

 

ஆடு வெம் பண காகோதம் அசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் ஆரும்--- 

 

பணம் --- பாம்புப் படம்.

 

காகோதம் --- பாம்பு.

 

அசனம் --- உணவு.

 

தோகை --- தோகையினை உடைய மயிலைக் குறித்தது.

 

ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ ஆண்மை தந்து அருள் வாழ்வே--- 

 

ஆண்மை -- வல்லமை,வெற்றிவாய்மை. "வீடும் வேண்டா விறல்" என்று தெய்வச் சேக்கிழார் அருளினார். இறைவனைத் தொழுவதில் தலைப்பட்டவர்கள்வேறு எதையும் வேண்டாத வல்லமை உடையவர்கள்.

 

ஓடு(ம்) வெம் கதிரோடே--- 

 

வெம்மையான கதிர்களை உடைய சூரியன் நாளும் ஓடுகின்றான்.

 

"ஓடுகின்றனன் கதிரவன்அவன் பிர் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்" என்பது வள்ளல்பெருமான் வாக்கு.

 

ஊரும் அந்தர நானா தேவரும் அடி பேண --- 

 

அந்தரம் --- விண்ணுலகம். 

 

வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார்--- 

 

வேலாவலயம் --- கடல். 

 

திருப்பாற்கடலில் நடுவில் பள்ளி கொண்ட திருமால்.

 

வேடு கொண்டு(ள்)ள வேடா --- 

 

வள்ளியம்மையை ஆட்கொள்ள வேட வடிவம் கொண்டு வந்தார் முருகப் பெருமான்.

 

நெருங்கு மால் கொண்டு,

அடவியில் வடிவு கரந்து போய்ரு

     குறமகள் பிறகு திரிந்த காமுக     !--- திருவண்ணாமலை திருப்புகழ்.

 

காலில் கட்டிய கழலன்,கச்சினன்,

மாலைத் தோளினன்,வரிவில் வாளியன்,

நீலக் குஞ்சியன்,நெடியன்,வேட்டுவக்

கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான். --- கந்தபுராணம்..

 

 

வேடைய வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு(ம்)--- 

 

வேடை --- வெப்பம்.  கொடுமை.

 

கொடுமை வாய்ந்த புலியைப் போன்றவர்கள் வள்ளிமலையில் வாழ்ந்திருந்த வேடர்கள்.

 

திண்புன(ம்) மீதே மாதொடு மிக மாலாய் மேகம் என் குழலாய் நீ கேள்இனி வேறு தஞ்சமு(ம்) நீயே ஆம் என வேளை கொண்ட பிரானே--- 

 

திண்புனம் --- வளம் மிக்க தினைப்புனம்.

 

மாதொ --- வள்ளியம்மையார்.

 

மால் --- மயக்கம்.

 

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில்திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே,மேல்பாடி என்னும் ஊரின் அருகில்காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும்பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன்,தனக்கு ஆண்மக்கள் இருந்தும்,பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்திஅடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுகவள்ளலை வழிபட்டுகுறி கேட்டும்வெறி ஆட்டு அயர்ந்தும்,பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

 

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும்திருமகள் மானாகவும்உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர்சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்துஅம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான்சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்றுதெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்றுஉறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

 

ஆங்கு ஒருசார்,கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லிமுன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறுஅந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்துஇங்கும் அங்கும் உலாவிஉடல் நொந்துபுன்செய் நிலத்தில் புகுந்துவேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும்மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது,குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

 

அதே சமயத்தில்,ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால்வேட்டுவ மன்னனாகிய நம்பிதன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்றுஅக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டுஉள்ளமும் ஊனும் உருகிஓசை வந்த வழியே போய்திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்துதன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்துகுழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய்சிறு குடிலில் புகுந்துகுழந்தையைத் தொட்டிலில் இட்டு,முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடிவள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால்குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால்அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டிவேட்டுவர் குடிலில் தவழ்ந்தும்தளர்நடை இட்டும்முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,சிற்றில் இழைத்தும்,சிறு சோறு அட்டும்,வண்டல் ஆட்டு அயர்ந்தும்முச்சிலில் மணல் கொழித்தும்அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து,கன்னிப் பருவத்தை அடைந்தார்.

 

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டுதமது சாதிக்கு உரிய ஆசாரப்படி,அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும்மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்ததுஉயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவிதன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

 

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டுமுருகப் பெருமான்கந்தமாதன மலையை நீங்கிதிருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டுகை தொழுதுஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்துவள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டுதிருத்தணிகை மலைக்குச் சென்றுதிருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டுகரிய திருமேனியும்காலில் வீரக்கழலும்,கையில் வில்லம்பும் தாங்கி,மானிட உருவம் கொண்டுதணியா அதிமோக தயாவுடன்திருத்தணிகை மலையினின்றும் நீங்கிவள்ளிமலையில் வந்து எய்திதான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்றுபரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

 

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியேஉலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல்இந்தக் காட்டில்பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதேநின் பெயர் யாதுதின் ஊர் எதுநின் ஊருக்குப் போகும் வழி எது?என்று வினவினார்.

 

"நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள்,ஞாலம் தன்னில்                      

ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                                

பூந்தினை காக்க வைத்துப் போயினார்,புளினர் ஆனோர்க்கு                        

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன்கொல் என்றான்".   

 

"வார் இரும் கூந்தல் நல்லாய்,மதி தளர்வேனுக்கு உன்தன்                  

பேரினை உரைத்தி,மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                    

ஊரினை உரைத்தி,ஊரும் உரைத்திட முடியாது என்னில்

சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்". 

 

"மொழிஒன்று புகலாய் ஆயின்,முறுவலும் புரியாய் ஆயின்,                               

விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                               

வழி ஒன்று காட்டாய் ஆயின்,மனமும் சற்று உருகாய் ஆயின்                              

பழி ஒன்று நின்பால் சூழும்,பராமுகம் தவிர்தி என்றான்".  

     

"உலைப்படு மெழுகது என்ன உருகியே,ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்". 

 

இவ்வாறு எந்தை கந்தவேள்உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில்வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார்.நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால்இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணிஅதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பிவேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

 

நம்பி சென்றதும்,முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகிநாணத்துடன் நின்று, "ஐயாநீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதேநம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர்.விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனேமுருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

 

நம்பிஅக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக.உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்திதிருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பிஅவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாதுஉமக்கு வேண்டியது யாது?"என்று கேட்டான்.பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கிஇளமை அடையவும்உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும்தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லிதனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

 

பிறகுஅக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ!ஆறு மலை தாண்டிச் சென்றால்ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன்நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்றுசுனையில் நீர் பருகினார் பெருமான். 

 

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடிபக்குவ அனுபவம் பெற,பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர்ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்துசகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார்,பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்கமுருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

 

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது.ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமாபுனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோஎமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும்,நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி,தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

 

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய்,முதல்வா!" என்றார்.அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடிகிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்துவிநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

 

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகிஅது கண்டு ஆனந்தமுற்று,ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால்அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார்.பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்துபிரணவ உபதேசம் புரிந்து,"நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

 

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தைபறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார்நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார்.  

 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளதுசொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.  

 

மை விழி சிவப்பவும்,வாய் வெளுப்பவும்,

மெய் வியர்வு அடையவும்,நகிலம் விம்மவும்,

கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை

எவ்விடை இருந்து உளது?இயம்புவாய் என்றாள்.   

 

இவ்வாறு பாங்கி கேட்அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில்ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கிவேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோஎன்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறிவந்தவர் கண்களும்இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி,புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

 

"தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   

கூட்டிடாய் எனில்,கிழிதனில் ஆங்கு அவள் கோலம்

தீட்டி,மா மடல் ஏறி,நும் ஊர்த் தெரு அதனில்

ஓட்டுவேன்,இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்".                                  

 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன்மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கிஅவருடைய காதலை உரைத்துஉடன்பாடு செய்துஅம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும்,பரமன் வெளிப்பட்டு,பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன்உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

 

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து,வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

 

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

 

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்துஎடுத்து அணைத்துமேனி மெலிந்தும்வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கிதெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி,முருகனை வழிபட்டு,வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி,"நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால்நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார்.அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

 

முருகவேள் தினைப்புனம் சென்றுதிருவிளையாடல் செய்வார் போல்,வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்துகுடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி,வெளி வந்து,பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால்இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்துபேய் துயில் அறிந்துகதவைத்திறந்துபாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள். 

 

"தாய்துயில் அறிந்து,தங்கள் தமர்துயில் அறிந்துதுஞ்சா

நாய்துயில் அறிந்து,மற்றுஅந் நகர்துயில் அறிந்துவெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில்பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்".

 

(இதன் தத்துவார்த்தம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும்புலன்களாகிய தமரும்ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும்தேக புத்தியாகிய நகரமும்சதா அலைகின்ற பற்று என்ற பேயும்இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

 

வள்ளிநாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவஎன் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்துஇவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

 

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டுநும் பதி போய்இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்துஉன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறிஅவ்விருவரையும் வழி விடுத்து,குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்றுஒரு பூங்காவில் தங்கினார்.

 

விடியல் காலம்,நம்பியின் மனைவி எழுந்து,தனது மகளைக் காணாது வருந்திஎங்கும் தேடிக் காணாளாய்பாங்கியை வினவஅவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டுபோர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகிஎம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

 

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார்.நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்யசேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்கஅம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

 

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்துஎம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமாஅது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார்.முருகப் பெருமான் பணிக்கவள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன்அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கிஉச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்துஎமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்?தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா?எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்துஅக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

 

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்யவள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கிபழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்டநம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து,நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து,திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறுபெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால்அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ....அணைவோனே,

                                                                                     --- திருவருணைத் திருப்புகழ்.

                               

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே. --- திருத்தணிகைத் திருப்புகழ்.

                                

 

கருத்துரை

 

 

முருகா! அடியேனை ஆண்டு அருள்வாய்.

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...