மூடரைத் திருத்த முடியாது

  

மூடரைத் திருத்த முடியாது

-----

     

     திருக்குறளில் "பேதைமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "செயலை எவ்வாறு மேற்கொண்டு முடிப்பது என்னும் அறிவு இல்லாத ஒருவன்ஒரு செயலை மேற்கொண்டால், அது நிறைவேறாமல் போவது மட்டுமா? மேலும் விலங்கு என்னும் தளையையும் அவனே பூணுவான்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவில்லாத ஒருவன் தனக்கு ஒரு பயன் வேண்டி, ஒரு செயலை மேற்கொள்வானானால், எடுத்த செயலை முடிக்கும் விதத்தை அறியாமல், தொழிலைக் கெட்டுப் போகச் செய்வதுடன், அதற்கு உரிய தண்டனையையும் அவனே தேடிக் கொள்ளுவான்.

     

பொய்படும் ஒன்றோபுனை பூணும்கை அறியாப்

பேதை வினை மேல்கொளின்.            

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

பொய்படும் --- தொடங்கிய காரியம் முடிவு பெறாமல் பொய்த்துப் போகுதல். 

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக,சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய,"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தன்தலைமேல் தன்கை வைத்து ஓர் தானவன்முன்                                                       பெற்ற வரம்

சென்றுஇறக்கல் ஆச்சே சிவசிவா - என்றென்றும்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்

பேதை வினைமேல் கொளின்.                 

 

இதன் பொருள் ---

 

     பஸ்மாசுரன் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, தான் யார் தலைமேல் கை வைத்தாலும் அவர் மாளவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத்தினான். அந்நேரத்தில்,திருமால் மோகினி அவதாரம் எடுத்து பசுமாசுரனை தனது அழகினால் மயக்கி காமம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும்படி கூறிமோகினி ஆடினாள். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்துதனதுதலையிலேயே கை வைத்தான். சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் அழிந்தான். 

 

     தான் எண்ணியதும் முடியவில்லை. தானும் அழிந்து போனான்.

 

     அறிவில்லாதவன் தனது சொல்லாலேயே தனக்குத் தீங்கைத் தேடிக் கொள்வான் என்கின்றது பழமொழி நானூறு என்னும் நூல்.

 

பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை,தன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும், - நல்லாய்!

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்.        --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நற்குணம் உடையவளே! மணலின் உள்ளே முழுகி மறைந்து கிடக்கும் தவளையும்தனது குரலைக் காட்டிக் கத்திக்கொண்டு இருக்கின்ற தனது வாழின் செயலாலேயே தன்னைத் தின்பவரிடம் அகப்பட்டுக் கொண்டு அழிந்து ஒழியும். அதுபோலவேபிறரைப் பற்றிப் பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் முட்டாளும் தன்னுடைய சொல்லினாலேயே தன்னைத் துயரத்தில் ஆழ்த்திக் கொள்வான்.

 

         அறிவில்லாதவன் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.  இதற்குக் காரணம் ஆணவம். அது அறிவை மறைக்கும் என்பர் பெரியோர். ஆணவம் என்பது அறிவை விளங்க ஒட்டாமல் செய்யும். ஆணவம் என்னும் சொல்லுக்கு அறியாமைஅவிச்சை என்றும் பொருள் உண்டு. 

 

     அறிவில்லாதவன் சும்மா இராமல்பொறாமை காரணமாகஅறிவுடையாரிடத்தில் ஏதவாது ஒரு குற்றத்தைக் கற்பித்துக் கொண்டுஎப்போதும் பிறரைப் பற்றிப் பொல்லாங்கு பேசிக் கொண்டு திரிவான். அவ்வாறு சொல்லித் திரிவதன் மூலம்தன்னை அறிவுடையவனாக அடையாளம் செய்துக் கொள்ளலாம் என்பது அவனுடைய கற்பனை. அவனுடைய உண்மையான தன்மையை நாளடைவில் அறிந்து கொள்ளுகின்ற பிறர்அவனை வெறுப்பார்கள். அவன் எண்ணியது ஈடேறாது போகும். "நுணலும் தன் வாயால் கெடும்" என்னும் பழமொழிக்கு விளக்கமாக இப் பாடல் அமைந்தது. 

 

     எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அறியாமை நிறைந்துள்ள மூடர்களைத் திருத்துவது இயலாத காரியம் என்கின்றது "அறப்பளீசுர சதகம்".

 

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போல் செய்யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

 

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

 

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியாது காண்!

 

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     மேவு ஆர் கொன்றை புனை வேணியா --- விரும்பிய ஆத்தி மலரையும் கொன்றை மாலையையும் புனைந்துள்ள சடைமுடியை உடையவனே!சுரர் பரவும் அமலனே --- தேவர்கள் போற்றுகின்ற தூயவனே!,  அருமை மதவேள் --- அருமை பொருந்திய மதவேள் என்பான்அனுதினமும் மனதில் நினைதரு --- சதா காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     நீர் மேல் நடக்கலாம் --- தண்ணீரின் மேல் நடந்து செல்லலாம்;  எட்டியும் தின்னலாம் --- மிகுந்த கசப்புச் சுவையை உடைய எட்டிக் காயையும் தின்னலாம்;  நெருப்பை நீர் போல் செய்யலாம் --- நெருப்பைத் தண்ணீர் போல் குளிரச் செய்யலாம்; நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம் --- நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்;நீள் அரவினைப் பூணலாம் --- நஞ்சு உடைய  நீண்ட பாம்பை,அது கடிக்காமல் பண்ணிதோள்மேலே அணிந்து கொள்ளலாம்;  பார் மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம் --- உலகத்திலே உள்ள மணலைச் சோறாகச் சமைக்கலாம்பட்சமுடனே உண்ணலாம் --- அப்படிச் சமைத்ததை அன்புடன் உண்ணலாம்பாணமொடு குண்டு விலகச் செய்யலாம் --- அம்பையும் துப்பாக்கிபீரங்கி ஆகியவற்றின் குண்டுகளையும் நம் மீது படாமல் விலகும்படிச் செய்யலாம்;மரப்பாவை பேசப் பண்ணலாம் --- மரத்தால் செய்யப்பட்ட பதுமையைப் பேசும்படி செய்யலாம்ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம்  --- அழகிய காடியையும் கடைந்து அதிலிருந்து வெண்ணெயையும் எடுக்கலாம்

 

     புத்தி சற்றும் இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது --- அறிவு என்பது சிறிதும் இல்லாத பேதையரின் மனத்தைத் திருத்த யாவராலும் முடியாது. காண் --- இதை நீ அறிவாயாக.

 

          நீர்மேல் நடத்தல்நெருப்பை நீர்போல் குளிர வைத்தல் ஆகிய சித்திகளை அரிதில் ஒருவன் முயன்று பெறலாம். கொடிய விலங்கும் நஞ்சுடைய பாம்பும் கூட வசியத்தால் வசமாகும். இவை எல்லாம் உலகிலே நாம் காணக் கூடிய வித்தைகளே. ஆனால்ஒருவன் செய்தற்கு அரிய செயல் என்பது அறிவற்ற ஒருவனின் மனத்தைத் திருத்துவதுதான். அதுதான் யாராலும் முடியாத ஒன்று. அறிவற்றவன் எப்போது திருந்துவான்பட்டால்தான்.

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...