040. கல்வி --- 02. எண்என்ப ஏனை எழுத்து என்ப

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "கணக்கு முதலிய கலைகள்,பிறவகை நூல்கள் என்பன ஆகிய இந்த இரண்டும் மங்கல நிலையில் உயிர்வாழ்கின்ற மக்களுக்குக் கண்கள் எனச் சொல்லுவார்" என்கின்றார் நாயனார்.

 

     எண் என்பது கணிதம்.

 

     "எண் எழுத்து இகழேல்" என்பது ஆத்திசூடி.

 

     "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்பது கொன்றைவேந்தன்.

 

     உலகத்து மக்கள் அறிவு பெறவேண்டிஎண் என்று சொல்லுவனவும்எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய நூல்களைப் பயிலவேண்டியது இன்றியமையாதது ஆகின்றது.

 

     மக்கள் பிறப்பிற்கு கண் இன்றியமையாத உறுப்பு ஆகின்றது. "முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனிடம் முறையிட்டது அறிக.

 

 

திருக்குறளைக் காண்போம்...

 

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்இரண்டும்,

கண் என்ப வாழும் உயிர்க்கு.

 

இதற்குப் பரிமேலகழர் உரை ---

 

     எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்--- அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும்

 

     வாழும் உயிர்க்குக் கண் என்ப- அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.

 

            (எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவேஅதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்அறமுதற் பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின்கண் எனப்பட்டன. அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதேஅறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின்,திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்மொழித் திறத்தின் முட்டறுப்பான் ஆகும்மொழித் திறத்தின்முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்துகட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்பஎன்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார்அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவி ஆவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

எண்ணம்பன்எண்என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்குஎன்பது புல்லைக் கஞ்சமலர்ப்
பெண் இன்பநாதன் எண்சீரெழுத்து அன்றிப் பிறிதும் உண்டோ
மண்ணின்கண் மாடும்மறுமைக்கண் வீடும் வழங்குதற்கே.

 

இதன் பொருள் ---

 

     எண்எழுத்து என்பன ஆகிய இந்த இரண்டும் மங்கல நிலையில் உயிர்வாழ்கின்ற மக்களுக்குக் கண்கள் எனச் சொல்லுவார் என்று சொல்லப்பட்டது பற்றிஉயிர்களுக்கு மண்ணுலக வாழ்வில் செல்வமும்மறுமையில் வீடு பேற்றினையும் வழுங்குவதற்கு எண்ணவேண்டியதுதாமரை மலரில் எழுந்தருளி உள்ள திருமகள் கணவனும்திருப்புல்லாணி என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளி உள்ளவனும் ஆகிய பெருமானின் திருநாமமாகிய எட்டெழுத்து மந்திரம் அல்லால் வேறு இல்லை.

 

     கஞ்சமலர்ப் பெண் இன்பநாதன் --- தாமரை மலரில் எழுந்தருளிய திருமகளின் இனிய கணவன். எண்சீர் எழுத்தன்றி --- திருவெட்டெழுத்தை அல்லாமல். மண்ணில் கண் மாடும் --- நிலவுலகத்தில் செல்வத்தையும். மறுமைக்கண் வீடும் --- மறுபிறப்பில் வீடுபேற்றையும்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.

 

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,

பண்ணின் இசைமொழி பாடிய வானவர்தாம் பணிவார்;

திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி

நண்ண அரிய அமுதினை;நாம் அடைந்து ஆடுதுமே.

                                ---  அப்பர் தேவாரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திரு வேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவ பெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம் .

 

 

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்

பண்ணும் திறனும் படைத்த பரமனைக்

கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது

உள்நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே.--- திருமந்திரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     என் அறிவையும்எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல்அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. ("எண்ணெழுத்து இகழேல்",  "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண்திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம். இன்னோரன்ன பலவற்றை இனம்இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும்பொருள்களை உணரும் கருத்திலும் `அதுஎன்றும், `இதுஎன்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வைஅவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்றுஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.

 

 

துணையது வாய்வரும் தூயநற் சோதி

துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணையது வாய்வரும் தூயநற் கந்தம்

துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. --- திருமந்திரம்.

 

இதன்பொழிப்புரை ---

 

      உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன்என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

 

 

எழுத்தறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்

     தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி

பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்

     பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்

கழுத்தரிந்து கரமமலத் தலையை வீசும்

     கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி

விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன

     வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே. 

                                              --- திருவருட்பா.

இதன் பொருள் ---

 

     எழுத்தறிந்து தம்மையும் உணர்ந்த யோகர் உள்ளத்து அறிவாம் தருவில் அன்பெனும் உச்சியில் பழுத்துமவுனச்சுவை பொங்கிப் பதம் பொருந்த அனுபவிக்கும் பழமாய்மாயையை அரிந்து கன்மமலத்தைப் போக்கும் கடுந்தொழிலராகிய தொண்டர் தமக்கே கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்த பொருளாய்,மோனவெளியில் ஆனந்த விளைவாகிறவன் மகாதேவன்.

 

 

கண்ணுங்கால் கண்ணும் கணிதமேயாழினோடு

எண்ணுங்கால் சாந்தேஇலைநறுக்கிட்டு - எண்ணுதல்

இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாய

சிட்டன்என்று எண்ணப் படும்.     ---  சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     கண்ணுங்கால் --- நினைக்குமிடத்துகண்ணும் --- நினைத்தற்குரியகணிதம் --- கணிதமும்யாழினோடு --- யாழினுடன்எண்ணுங்கால் --- எண்ணுமிடத்துசாந்து --- சந்தன மரைத்தல்இலை நறுக்கிட்டு --- இலை கிள்ளிஎண்ணுதல் --- எண்ணல்இட்ட --- ஏற்படுத்தப் பட்டஇவ்வைந்தும் --- இந்த ஐந்து தொழில்களையும்அறிவான் --- அறிந்து செய்ய வல்லவன்இடை ஆய சிட்டன் என்று --- இடையாகிய சிட்டன் என்றுஎண்ணப்படும் --- எண்ணப்படுவான்.

 

 

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறி

இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.       --- நான்மணிக்கடிகை.

 

இதன் பொருள் ---

 

     கற்ப கழிமடம் அஃகும் - ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால்மிக்க அறியாமை ம றையப்பெறுவான்மடம் அஃக புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும் --- அறியாமை குறைய புல்லறிவு நீங்கிஇவ்வுலகத்தின்இயற்கையை அறிவான்;

 

            கோள் உணர்ந்தால் தத்துவமான நெறி படரும் - அவ் இயற்கையை அறிந்து கொண்டால் உண்மையான அருள் நெறியில் செல்வான்அந் நெறி இப்பால் உலகின் இசைநிறீஇ உப்பால் உயர்ந்த உலகம் புகும் --- அந் நெறியினால்இவ்வுலகின்கண் புகழ் நிறுத்திமறுமையில் உயர்ந்த வீட்டுலகத்தில் புகுவான்.

 

            ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை குறையப் பெறுவான்! அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான்அறிய மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான்செல்லஇவ்வுலகத்தில் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...