அகவொழுக்கம் --- புறவொழுக்கம்

 


புறவொழுக்கம்அகவொழுக்கம்.

-----

 

     திருக்குறள்அறத்துப்பாலில் "ஒழுக்கம் உடைமை" பற்றிக் கூறவந்த நாயனார்"நல்லொழுக்கம் என்பது அறத்திற்குக் காரணமாய் நின்று இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை விளைக்கும் என்றும்,தீய ஒழுக்கமானது எப்போதும்பாவத்திற்குக் காரணமாய் இருந்து துன்பத்தையே தரும்" என்றும் அறிவுறுத்த,

 

நன்றிக்கு வித்து ஆகும் நல்ஒழுக்கம்தீ ஒழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

 

என்று அருளினார். 

 

ஒழுகல் --- முறையாக நடத்தல்பாய்தல்உயர்ச்சி.

 

ஒழுக்கம் --- நடைமுறைமைநன்னடத்தைஆசாரம்சீலம்.

 

     ஒழுக்கம்என்பதுஅக ஒழுக்கம்புற ஒழுக்கம் என்று இருவகைப்படும். அகவொழுக்கம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது. புறவொழுக்கம் அகவொழுக்கத்திற்குத் துணையாக நிற்பது. அகத்தில் ஒழுக்கம் இல்லாமல்புறத்தில் மட்டுமே ஒழுக்கமாக இருப்பது நன்மையைத் தராது.

 

     புற ஒழுக்கம் என்பதுமுதலில் உடல் தூய்மையைக் குறிக்கும். இந்த உடல் தூய்மையானது நீரால் அமையும். உடம்பு தூய்மை ஆதல் --- புறத்திலே உள்ள அழுக்கு நீங்குதல்.

அகவொழுக்கம் என்னும் உள்ளத் தூய்மையானது அவன் பேசும் வாய்மையால் காணப்படும்மனம் தூய்மை ஆதல் --- மெய்ம்மையை உணர்தல். மனம் தூய்மை ஆவதற்கு மெய் பேசுதல் அன்றிவேறு காரணம் இல்லை.

 

புறம் தூய்மை நீரால் அமையும்அகம் தூய்மை

வாய்மையால் காணப் படும்.

 

     ஒருவனுக்கு புறந்தூய்மை என்னும் புறவொழுக்கம்அகந்தூய்மை என்னும் அகவொழுக்கம் ஆகிய இரண்டுமே இன்றியமையாதவை என்றார்.

 

     ஒருவன் புறத்திலே தூய்மை உடையவானக இருக்கின்றான் என்பது வெளிப்படையாகவே அறியப்படும். அவன் உள்ளத்தளவில் தூய்மை உடையவனாக இருக்கின்றானா என்பதுஅவனது நடவடிக்கைகளால் நாளடைவில் காணப்படும்.

 

     ஒழுக்கம் உடைமை என்பதுஅகவொழுக்கத்தையே வலியுறுத்தி நிற்கும். அதுவேஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாய் நின்று இம்மையிலும்மறுமையிலும் இன்பத்தை விளைவிக்கும். தீயவழிகளில் செல்வதும் ஒருவகை ஒழுக்கம்தான். அது தீயொழுக்கம் ஆகும். அது ஒருவனுக்குப் பாவத்திற்குக் காரணமாய் இருந்துதுன்பத்தையே தரும். 

 

     நல்லொழுக்கம் என்னும் அகவொழுக்கத்திற்கு வித்தாக அமைந்தவை பற்றி, "ஆசாரக் கோவை" என்னும் நூலில்,

 

"நன்றி றிதல்,பொறையுடைமை,இன்சொல்லோடு,

ன்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை ,கல்வியோடு,

ப்புரவுற்ற றிதல்,அறிவுடைமை,

நல்லினத் தாரோடு நட்டல்,இவைட்டும்

சொல்லிய ஆசார வித்து".    

 

என்று சொல்லப்பட்டு உள்ளது.

                           

     "உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பதை மனத்தில் கொண்டுதனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாது இருத்தலும் "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்" ஆகிய பொறுமையும் "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்னும் திருமூல நாயனார் அருள்வாக்கிற்கு ஏற்எல்லோரிடத்தும் இன்சொல் வழங்கலும்ந்த உயிர்க்கும்துன்பம் தருபவற்றைச் செய்யாது இருத்தலும்கல்விஅறிவோடு இருத்தலும்பிறர் துன்பம் கண்டு பொறுத்து இராமல்தன்னால் ஆன உதவியைக் கைம்மாறு கருதாமல் செய்தலும்நல்லறிவு மிகுந்து இருத்தலும்நல்ல இயல்பு உள்ளவர்களோடு நட்புக் கொண்டு வாழ்தலும் ஆகிய இவை எட்டுமே அறிஞர்களால் சொல்லப்பட்ட நல்லொழுக்கதிற்கு வித்தாக அமைந்தவை.

 

     இவ்வாறு அகவொழுக்கம் குன்றாமல் வாழ்பவர் பெறும் நன்மைகள் குறித்தும் "ஆசாரக் கோவை" பின்வருமாறு கூறுகின்றது.

 

பிறப்பு,நெடுவாழ்க்கை,செல்வம்,வனப்பு,

நிலக்கிழமை,மீக்கூற்றம்,கல்விநோயின்மை,

இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப,என்றும்

ஒழுக்கம் பிழையா தவர்.    

 

     எப்பொழுதும்நல்லொழுக்கம் எனப்படும் அகவொழுக்கதில் தவறாதவர்கள்நற்குடிப்பிறப்புநீண்ட வாழ்நாள்,பொருட் செல்வம்,அழகுடைமைநிலத்திற்கு உரிமை,சொல்லின் மேன்மைகல்வியில் சிறந்து நிற்றல் நோய் இன்மைஆகிய இந்த எட்டு வகை நன்மையினையும்அவற்றிற்குரிய இலக்கணங்களுடன்அடைவர்.

 

     வருணத்தால்பிறப்பால் யாருக்கும் உயர்வோதாழ்வோ உண்டாவதில்லைஒழுக்கத்தால் மட்டுமே உயர்வும் தாழ்வும் என்று சொல்லப்பட்டது. "மேல் இருந்தும் மேல் அல்லர்மேல் அல்லார்மீழ் இருந்தும் கீழ் அல்லார்கீழ் அல்லவர்" என்றார் நாயனார். உயர்ந்து குயிடில் பிறந்து இருந்தும்அக் குடிக்கு உரிய நல்லொழுக்கங்களில் நில்லாதவர்உயர்ந்தோர் அல்ல. கீழ்க் குடியில் பிறந்து இருந்தாலும்அக் குடிக்கு இயல்பாக உள்ள தீயொழுக்கத்தில் நில்லாதவர் கீழோர் அல்லர்.

 

     அகவொழுக்கத்தால் மேன்மையே உண்டாகும்தீயவொழுக்கத்தால்அடையக் கூடாததீராத பழி வந்து சேரும் என்றார் நாயனார். அடையக் கூடாத பழி என்றதுஒழுக்கத்தில் இருந்து தவறிய ஒருவன் மீதுபிறன் ஒருவன் தான் கொண்ட பகைமை உணர்வு காரணமாகஅடாத பழியைச் சொன்னாலும்அதனையும் உலகத்தவர் பழியாகவே கொள்ளுவர் என்பதால். செய்யாத செயலுக்காகஅடையக் கூடாத பழி வந்து அடைந்தது.

 

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மைஇழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

கல்லாதவர் இடைக் கட்டுரையின் மிக்கதோர்

பொல்லாதது இல்லை ஒருவற்கு,- நல்லாய்!

இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை,இல்லை

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.  --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நற்குணம் உடைய பெண்ணே! ஒழுக்கக் குறைபாட்டினாலே இழிவு உடையவர் ஆவதைக் காட்டிலும்இழிவு தருவது வேறு ஒன்றும் இல்லை. அதுபோலவேஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வை விடசிறந்து உயர்வும் இல்லை. கல்வி அறிவு இல்லாதவரிடம் சென்றுநற்பொருளைக் கூறுவதைக் காட்டிலும் மிகுதியான பொல்லாங்கும் இல்லை.

 

     கல்வி அறிவு இல்லாதவன்நற்பொருளைக் கேட்டதும்,சொன்னவரையே அவமதிக்க முற்படுவான். அதனால்பொல்லாங்கே மிகும் என்பதால், "இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை" என்றும், "ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை" என்றும் சொல்லப்பட்டது. 

 

     பரதனுடன் வந்த சேனைகள் சித்திரகூடம் சென்று சேர்ந்ததைக் கூறவந்த கம்பர்அசை சேனைகளுக்கு அதிபதியாக இருந்து மாண்ட தயரதனைச் சிறப்பித்து,

பின்வருமாறு பாடுகின்றார்.

 

வன்தெறு பாலையை மருதம் ஆம் எனச்

சென்றதுசித்திர வடம் சேர்ந்ததால்,

ஒன்ற உரைத்து, ‘உயிரினும் ஒழுக்கம் நன்றுஎனப்

பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே.         --- கம்பராமாயணம்திருவடி சூட்டு படலம்.

 

இதன் பொருள் ---   

 

     உயிரை விட நல்லொழுக்கமே சிறந்து விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்துஉயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது ஒப்பற்ற சேனைகள்கொடிய பாலை நிலத்தைநீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்த மருதநிலம்என்று கருதி எளிதாகக் கடந்து சென்றுசித்திரகூட மலையை அடைந்தன.  

 

     அகவொழுக்கமே நன்மையைத் தருவது. தீயொழுக்கம் தீமையைத் தருவது. 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...