எல்லாம் முன்வினைப் பயனே

 


எல்லாம் முன்வினைப் பயனே

-----

 

     கடந்த இரு நாட்களாக எனது பதிவுகளைப் படித்துஅலுவலக வாழ்க்கையில் என்னை அறிந்த ஒரு அன்பரும்பொது வாழ்க்கையில் என்ன நன்கு அறிந்த ஒரு பெரியவரும்அலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

 

     "நல்லதை நினைத்துநல்லதையே செய்பவன் துன்புறுகின்றான். எப்போதும் கெடுதலையே நினைத்துக் கேடு செய்பவன் நான்றாகத் தானே இருக்கின்றான்?பின் ஏன் ஒருவன் நல்லவனாக வாழவேண்டும்உங்களுக்கு என்ன நல்லது நடந்து விட்டது?" என்பது அவர்கள் கேள்வி. அவர்கள் கேட்டிருப்பது முற்றிலும் உண்மைதான். "துன்பு உளது எனின் அன்றோ,சுகம் உளது" என்பது கம்பர் வாக்கு. என்பதை மறந்துவிடக் கூடாது.

 

     ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அவரவர் செய்த முன்வினையின் பயனாகவே பிறவி வாய்க்கின்றது. பிராரத்த வினையின் பயனைபிறப்பு எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அனுபவித்துத் தான் கழிக்கவேண்டும். அது நன்மையும்தீமையும் விரவியதாகவே இருக்கும். நல்லவர்க்குக் கேடு வருகின்றது என்பதும்தீயவர்கள் எந்தக் கேடும் இல்லாமல் ஆனந்தமாக வாழ்கின்றார்கள் என்பதும் அவரவர் முன்வினைப் பயனே ஆகும்.

 

     "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது கொன்றை வேந்தன். இது தீவினைக்கு மட்டும் சொல்லபட்டது என்று எண்ணுதல் கூடாது. நல்வினைக்கும் இது பொருந்தும். 

 

     அழுக்காறு காரணமாகத் தான் பொறாமைக்காரனுக்கு செல்வம் சேர்ந்ததாநல்லவன் கேடு அடைவதுஅவன்நேர்மையாளனாக இருப்பதால் தானாஇவற்றை ஆராய்ந்தால் உயர்வும் தாழ்வும் வேறுபல காரணங்ளால் உண்டாயின என்பது தெரியவரும். நன்மை தீமை என்பன சமூக வாழ்க்கைக்காக உண்டான அறக் கருத்துக்கள்நல்லவர்களுக்கு நன்மைதான் ஏற்படவேண்டும்.  தீயவன் கேடு உறவேண்டும் என்பது தான் உலகம் விரும்புவது. ஆனால்உலக இயல்புநல்லவனாக இருந்தால் செல்வம் தானாக வந்துவிடும்பொறாமைப்படுபவன் செல்வம் அதுவாக நீங்கி விடும் என்பதாக இல்லை.

 

     செல்வம் படைத்தவனைப் பார்த்து ஆற்றமாட்டாமல் புலம்பிக் கொண்டிருந்தால் வளர்ச்சி ஏற்படாது. ஒருவரது கல்விதிறமைஅனுபவம் இவற்றிற்குண்டான வகையில் முயற்சி மேற்கொண்டால் மேன்மை உண்டாவது உறுதி.

 

     அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "மனக்கோட்டம் காரணமாகப் பொறாமை கொண்டவனுக்கு உண்டாகும் செல்வப் பெருக்கும்செம்மையான மனத்தினை உடையவனது வறுமையும் ஆராயப்படும்" என்கின்றது.

 

     பொறாமை உடையவன்பால் செல்வமும்அது இல்லாதவனிடத்தில் வறுமையும் உண்டாவது இல்லை. இதற்குக் காரணம்அவரவரின் பழவினையே. எனவே,அதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கின்றது.

 

     இந்த உண்மை,சிலப்பதிகாரத்துள் அடைக்கலக் காதையில் காட்டபட்டுள்ளது. 

     

     கோவலன் கவுந்தியடிகட்கு மதுரையின் சிறப்பையும் பாண்டியன் கொற்றத்தையும் கூறும்பொழுதுதலைச் செங்கானத்து மறையவனாகிய மாடலன் என்பவன்,குமரி ஆடி மீண்டு வந்த வழிநடை வருத்தம் நீங்கக் கவுந்தி அடிகள் இருக்குமிடத்தை அடைந்தான். கோவலன் அவனைக் கண்டு வணங்கஅவன் கோவலனை நோக்கி, "மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்று பெயரிட்டு வாழ்த்தித் தானம் கொடுக்கும் பொழுது தானம் பெறுதற்கு வந்த முதுமறையோனை மதயானை பற்ற அதன் கையினின்றும் அவனை விடுவித்துஅதன் கையகத்தே புக்குக் கோட்டிடை ஒடுங்கிப் பிடரில் ஏறி,அதனை அடக்கிய கருணை மறவனே! தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ உணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானம் செய்துகணவனை அவளுடன் கூட்டிஅவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்த செல்லாச் செல்வனே! பத்தினி ஒருத்தி அடாப்பழி எய்தப் பொய்ச் சான்று கூறிச் சதுக்கப் பூதத்தால் கொல்லப்பட்டவனுடைய தாயின் துயர் நீங்க அவன் சுற்றத்தோர்க்கும் கிளைகட்கும் பொருள் ஈந்து பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மலே!" என்று கோவலன் செய்த நற்செயல்களை எல்லாம் கூறி,"நான் அறிய நீ இப்பிறவியில் செய்தன எல்லாம் நல்வினையாகவே இருக்க,இம் மாணிக்கக் கொழுந்தாகிய கண்ணகியுன் நீ இவ்வாறு வந்தது உனது முன்வினைப் பயனோ?" என வினவினான்.

 

இம்மைச் செய்தன யானறி நல்வினை

உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது

விருத்த கோபால நீ என வினவ....

         

இதன் பொருள் ---

 

      விருத்த கோபால --- அறிவால் முதிர்ந்த கோவலனே!  நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை --- நான் அறிய இப் பிறப்பில் நீ செய்தன யாவும் நல்வினையே. அப்படி இருக்கவும்,உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது --- ஒப்பற்ற தனிமையால் வருந்தி,இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் (கண்ணகியுடன்) இங்கு வந்தது முற்பிறப்பில் நீ செய்த தீவினையின் பயனேயோஎன வினவ --- என்று மாடலன் கேட்க...

 

     பட்டினத்தடிகளின் துறவு நிலை எல்லோரும் அறிந்ததே. கடல் அளவு செல்வத்தைத் துறந்தவர். அவர் பல தலங்களைத் தரிசித்துஉஞ்சேனை மாகாளம் சென்று மாகாளேசுவரரை வணங்கி,ஊர்ப் புறத்தில் உள்ள ஒரு காட்டில் உள்ள விநாயகர் ஆலயத்தில் சென்று நிட்டை கூடி இருந்தார். அவ்வாறு இருக்கையில்அந்த ஊரை ஆள்பவராகிய பத்திரகிரி மன்னனின் அரண்மனையில் சில கள்வர் புகுந்துவிலை உயர்ந்த அணிகலன்கள் பலவற்றைக் கவர்ந்துசெல்லுகின்ற வழியில்,தமது கோரிக்கை,காட்டில் உள்ள பிள்ளையாரின் கருணையால் நிறைவேறியது என்று கருதிஅவருக்கு ஒரு அணிகலனை அளிக்க வேண்டி,ஒரு இரத்தின மாலையை விநாயகர் மீது வீசிச் சென்றனர். இரவு நேரமாகையால்அந்த அணிகலனானது அங்கே நிட்டை கூடி இருந்தபட்டினத்தடிகளின் கழுத்தில் விழுந்தது. 

 

     திருடர்களைத் தேடி வந்த அரண்மனைக் காவலர்கள்பட்டினத்தடிகளின் கழுத்தில் இருந்த இரத்தினமாலையைக் கண்டுஇவர் தான் திருடர் கூட்டத்தில் ஒருவராக இருக்கவேண்டும் என்று கருதிபட்டினத்தடிகளை வருத்திதிருடர் கூட்டத்தாரைக் காட்டுமாறு துன்புறுத்தினர். அடிகள் எல்லாவற்றிற்கும் "சிவசிவ" என்றே பதில் இறுத்து வந்தார். காவலர்களுள் ஒருவன் ஓடிஅரசனிடம் சென்று, "கள்வரின் தலைவன் காட்டுப் பிள்ளையார் கோயிலில் அகப்பட்டான்" என்றான். அரசன் ஆணைப்படிபட்டினத்தடிகளை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினர். பட்டினத்தடிகளைக் கழுவில் ஏற்றுமாறு மன்னன் ஆணையிட்டான். அடிகள் புன்னகையோடு கழுமரத்தின் முன் நின்றுஇறைவனை நினைந்து,

 

"என்செயல் ஆவது  யாதொன்றும் இல்லை,இனித் தெய்வமே!

உன்செயலே என்று உணரப் பெற்றேன்,இந்த ஊன் எடுத்த

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை,பிறப்பதற்கு

முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே"

 

என்று பாடினார். உடனே கழுமரம் தீப் பற்றி எரிந்தது. இதனை அறிந்த மன்னன் ஓடோடி வந்துகழுமரத்தின் அருகில் இருக்கும் தவக் கொழுந்தாகிய பட்டினத்தடிகளைப் பணிந்து அவரத் சீடன் ஆனான்.

 

     தீக்குணம் உடைவன் துன்பம் இன்றி வாழ்வதும்நல்ல மனம் உடையவன் துன்புறுவதும்முன் வினைப் பயனே என்று தெளிந்து கொள்ளுதல் வேண்டும். முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவித்துத் தொலைத்தால் நல்லது தானே.

 

     முன்வினையாகிய புண்ணியத்தின் பயன் இல்லாமல் ஒருவன் இன்புற்று வாழமுடியாது. எனவேஇப்போது அழுக்காறு கொண்டவன் வளமாக வாழ்வதும்சான்றோன் வறுமையில் வாடுவதும் வேறு காரணத்தால் என்பதை ஆராய்ந்து தெளியவேண்டும் என்பதை,

 

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

 

என்னும் திருக்குறளின் வழி நாயனார் அறிவுறுத்தினார்.

 

         தினை விதைத்தவன் தினை அறுப்பான்;வினை விதைத்தவன் வினை அறுப்பான்'என்பது பழமொழி.

 

     "இன்னா செய்யாமை"என்னும் அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால்தமக்குத் துன்பங்கள்,பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்கின்றார் நாயனார்.

 

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பிள்ளையார் வைப்பினில் தீப் பெய்வித்த மீனவன்தீத்

துள்ளு வெப்பு நோய் உழந்தான்,சோமேசா! - எள்ளிப்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யில் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! எள்ளி --- இகழ்ந்துபிறர்க்கு இன்னா --- பிறர்க்குத் துன்பங்களைமுற்பகல் செய்யின் --- ஒரு பகலினது முற்பகுதியின்கண் செய்வாராயின்தமக்கு இன்னா --- தமக்குத் துன்பங்கள்பிற்பகல் தாமே வரும் --- அதன் பிற்பகுதியின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.

 

          பிள்ளையார் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வைப்பினில் --- எழுந்தருளி இருந்த திருமடத்தில்தீ பெய்வித்த மீனவன் --- சமணர்கள் தீக் கொளுவுவதற்குக் காரணனாய் இருந்த கூன் பாண்டியன்தீ துள்ளு வெற்பு நோய் உழந்தான் --- தீக்கொதிப்பு மிக்க சுரமோயால் வருந்தினான் ஆகலான் என்றவாறு.

 

         பாண்டி நாட்டை சமணக்காடு மூடவேகூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்மந்திரியாகிய குலச்சிறையாரும் மனமிக வருந்தி என்று பாண்டியன் நல்வழிப்படுவான் என்று இருக்கும்கால்திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமெனக் குறையிரந்தமையான்பிள்ளையார் அவர்க்கு விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிடப் பிள்ளையார் அத்தீபையவே சென்று பாண்டியற்கு ஆகவே என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம்புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     பின்வரும் பாடல்கள் காட்டும் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்

யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்

முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் நற்பகலே..  --- சிலப்பதிகாரம்.

                                          

இதன் பதவுரை ---

 

     (பாண்டிநன் நெடுஞ்செழியனின் தேவியைப் பார்த்துகணவனை இழந்து நின்று கண்ணகி கூறியது)

 

     கோ வேந்தன் தேவி --- பேரரசன் ஆகிய பாண்டியன் பெருந்தேவியேகொடுவினையாட்டியேன் யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் --- கணவனை இழந்த தீவினையுடையேன் ஆகிய நான் ஒன்றும் அறியாத தன்மையை உடையவள் ஆயினும்முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் --- பிறருக்கு முற்பகலில் கேடு செய்த ஒருவன்,தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணல் உறும் தன்மையை உடைவை வினைகள் என்பதை அறிவாயாக.

 

     பிறருக்குத் தீங்கு இழைத்தவர்கள்அதன் பயனை அடைய நெடுநாட்கள் ஆகும் என்று எண்ணவேண்டாம். முற்பகல் செய்தால் பிற்பகலிலேயே விளைதலும் கூடும்.

     

நெடியாது காண்கிலாய் தீ எளியைநெஞ்சே!

கொடியது கூறினாய்,மன்ற - அடியுளே

முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் கண்டு விடும்.         ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சே கொடியது கூறினாய் --- நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்) நீ எளியை --- நீ அறிவு இல்லாதாய்நெடியது காண்கிலாய்! --- (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங் காலத்திற்குப் பின் அறியாய்அடியுளே --- அந்த நிலையிலேபிறன்கேடு முன் பகல் கண்டான் --- பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான்தன் கேடு பின்பகல் மன்ற கண்டு விடும் --- தனக்கு வரும் தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல் அடைவான்.

 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

                                    --- கொன்றை வேந்தன்.

இதன் பொருள் ---

 

     ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. 

 

     முற்பகலில் தீமை செய்தால்பிற்பகலில் தீமை வந்து விளையும் என்று சொல்லவேமுற்பகலில் நன்மை செய்தார்க்குபிற்பகலில் நன்மை வந்து விளையும் என்பது சொல்லாமலே பெறப்படும்.

 

     பிறர்க்குத் தன்பம் செய்கின்றோம் என்று நினைத்துக் கொண்டுதமக்கான துன்பத்தை விதைத்துவிளைத்துக் கொள்கின்றோம் என்று எண்ணுவது அறிவுடைமை ஆகும். துன்பத்தைச் செய்துதுன்பத்தைத் தேடிக் கொள்வது பைத்தியக்காரத் தனமே ஆகும். எனவேபிறர்க்குத் துன்பம் செய்வதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை.

 

பிறர்க்கு இன்னா செய்தலில் பேதைமை இல்லை,

பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டுத் - தனக்கு இன்னா

வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலில்

பித்தும் உளவோ பிற.                 --- அறநெறிச்சாரம்.

     

முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து

     மூடு மாதலின் முன்னமே

என்னை நீ தியக்காது எழும் மட

     நெஞ்சமே! எந்தை தந்தையூர்

அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள்

     கூடிச் சேரும் அணிபொழில்

புன்னைக் கன்னி களக்கரும்பு

     புறம்ப யம்தொழப் போதுமே.   --- சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     அறியாமையையுடைய மனமே!  ஒருவர் முற்பிறப்பில் செய்த வினைஇப் பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின்அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பேஎமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய,பெண்அன்னங்கள்அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டுபின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு .  

 

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

    மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்,

    சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,

அந்தி வெண்பிறை சூடும் எம்மானே!

    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!

எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய்,

    இடைமருது உறை எந்தை பிரானே.  --- சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே!  திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே!  என் தந்தையே! திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே!  முற்பிறப்பில் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால்அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலம் எல்லாம் போயின.  நன்மை தீமைகளைச் சிந்தித்துஉலகப் பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதவனாக நான் ஆயினேன்.உலகியலில் இல்லை என்று வந்து இரப்பவர்கட்கு அவர் விரும்பியதை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன். எனக்குநீஉய்யும் நெறியை வழங்கியருளாய்.

 

பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன,இம்மைவந்து

சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே,வந்து அமரர் முன்னாள்

முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடி வணங்கும்

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்டநன்னெஞ்சமே.  --- அப்பர் தேவாரம்.

                                                              

இதன் பொருள் ---

 

     தேவர்கள் சிவசந்நிதிக்கு முன் வந்து,சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமானுக்கு அடிமை செய்யாது வாழ்நாளைப் பாழாக்கின எனது நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்து,நம்மை விடாது பிணித்த பாவங்கள்,இந்தப் பிறப்பில் வந்து நமக்குப் பாவப் பயன்களைத் தரும். எனவேஅவை குறித்து இப்போதுவருந்துவதனால் பயன் யாது?

 

பொற்பகல் சிகரியுள் பொருந்தி ஆழ்பவர்

அற்பகல் நுகரும் மீன் அவரை நுங்குமால்

முற்பகல் ஓர்பழி முடிக்கின்,மற்று அது

பிற்பகல் தமக்கு உறும் பெற்றி என்னவே.  --- கந்தபுராணம்.

 

     முற்பகல் இன்னா செய்தவர்பிற்பகல் இன்னல் உற்று அழிவர் என்னும் தன்மை போல்,போரில் அழிந்து கடலில் வீழ்ந்த தானவரை,மீன்கள் நுங்கின. முன்பு அரக்கர்கள் மீன்களை உண்டார்கள். இன்று அவை அவர்களைத் தின்று களித்தன. 

 

     காமிய வனத்தில் இருந்த பாண்டவர்களைக் காண அரசர்கள் பலரும்அவர்களது நிலைக்கு வருந்திகௌரவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று சினந்து கூறுகின்றார்கள். கண்ணன் அவர்களைப் பார்த்த, "மனக் குற்றம் கொண்டு தீய செயல்களைச் செய்பவர்கள்கெட்டுப் போவது நிச்சயம் என்பதை நீங்கள் கேட்டு அறியவில்லையா?இப்போது பாண்டவர்கள் தமது வனவாசத்தையும்அஞ்ஞாதவாசத்தையும் முடித்தாக வேண்டும். அதன் பின்னர்,துரியோதனாதியர்கள் அழியும் காலம் கனிந்து வரும். அப்போது அவர்களோடு போர் புரியலாம்" என்று அமைதி கூறுகின்றான்.

 

விடுக இந்த வெகுளியைப் பின்பு உற,

அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே,

வடுமனம் கொடு வஞ்சகம் செய்பவர்

கெடுவர் என்பது கேட்டு அறியீர்கொலோ.

                                                  ---  வில்லிபாரதம்அருச்சுனன் தவநிலைச் சருக்கம்.

 

இதன் பொருள் ---

 

     இந்தக் கோபத்தைநீங்கள் இப்பொழுதுவிடுவீர்களாகவனவாச அஜ்ஞாதவாசங்களின் பின்பாகஉம்முடைய பலபராக்கிரமங்கள் வெளிப்படும்படி பகைவர்களைக் கொல்லுவீராககுற்றத்தையுடைய மனத்தை உடையவர்களாய வஞ்சனை செய்பவர்கள் கெட்டே விடுவர் என்னும் வார்த்தையை நீங்கள் கேட்டு அறியவில்லையா?

 

     கேட்டு அறியவில்லையா என்பதன் மூலம்நீங்கள் கேட்டு அறிந்திருப்பீர்கள். நீங்கள் கேட்டு அறிந்ததுபாரதப் போரில் உண்மையாக நிகழ்வதையும் காணப் போகின்றீர்கள் என்று கண்ணன் சூசகமாக அறிவித்தான்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...