இந்தம்பலம் --- 0992. அமல கமலவுரு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

அமல கமலஉரு (இந்தம்பலம்)

 

முருகா! 

சிவயோகத்தில் அடியேனை இருத்தி

உனது திருவடியைச் சேர அருள்.

 

தனன தனதனன தந்தந் தனத்ததன

     தனன தனதனன தந்தந் தனத்ததன

     தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான

 

 

அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை

     அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய

     லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத

 

தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ

     டகில புவனநதி யண்டங் களுக்குமுத

     லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் .....நடுவான

 

கமல துரியமதி லிந்துங் கதிர்ப்பரவு

     கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ

     ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ......சிவயோகம்

 

கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி

     குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது

     கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ......யருள்வாயே

 

திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித

     டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட

     திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ

 

செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென

     அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு

     திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே

 

அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள

     அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள

     அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ......விடும்வேலா

 

அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக

     அழகு புயமொடணை யின்பங் களித்துமகிழ்

     அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அமல கமல உரு சங்கம் தொனித்தமறை

     அரிய பரமவெளி எங்கும் பொலித்த செயல்

     அளவும் அசலம் அது கண்டு ங்கு ஒருத்தர் உளவு..அறியாதது,

 

அகர முதல் உருகொள் ஐம்பந்தொர் அட்சரமொடு,

     அகில புவனம் நதி அண்டங்களுக்கு முதல்,

     அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று,முதல் ......நடுவான

 

கமல துரியம் அதில் இந்தும்,கதிர்ப்பரவு

     கனக நிறம் உடைய பண்பு அம் படிக் கதவ

     ககன சுழிமுனையில் அஞ்சும் களித்த அமுத ......சிவயோகம்

 

கருணையுடனஉ அறி விதங்கொண்டிடக் கவுரி

     குமர குமரகுரு எ்ன்று என்று உரைப்பமுது

     கனிவு வர இளமை தந்து,உன் பதத்தில் எனை ......அருள்வாயே.

 

திமிலை,பலமுருடு,திந்திந் திமித்திமித

     டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட

     திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ

 

செகண செகணசெக செஞ்செஞ் செகக்கண என

     அகிலம் உரகன் முடி அண்டம் பிளக்கவெகு

     திமிர்த குல விருது சங்கம் தொனித்த அசுரர் ......களமீதே,

 

அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள,

     அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள,

     அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள.....                                                     விடும்வேலா!

 

அரியின் மகள் தனமொடு அங்கம் புதைக்கமுக

     அழகு புயமொடு அணை இன்பம் களித்துமகிழ்

     அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தின் மகிழ்.....பெருமாளே.

 

 

பதவுரை

 

            திமிலை பல முருடு--- பறைகளும்பலவிதமான வாத்தியங்களும்,

 

திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோசெகண செகண செக செம் செம் செகக்கண என--- திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோசெகண செகண செக செம் செம் செகக்கண என்னும் தாள ஒத்துக்கு ஏற்ப ஒலிக்கவும்,

 

            உரகன் முடி அண்டம் அகிலம் பிளக்க--- ஆதிசேடனின் பணாமுடிகளும்அண்டங்கள் யாவையும் பிளந்து போகும்படி,

 

           வெகு திமிர்த(ம்) குல விருது சங்கம் தொனித்து--- வெகுவாகப் பேரோலியுடன் வெற்றிச் சின்னங்களும்சங்குகளும் முழங்கவும், 

 

            அசுரர் களம் மீதே--- அரக்கர்கள் போர் புரிந்து மடிந்த போர்க்களத்தில்,

 

           அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள--- தேவர்கள் ஒன்று கூடி மலர்களை அங்கு மாரியாகப் பொழியவும்

 

            அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள--- அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க

 

            அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா---  திருமாலும்பிரமனும்முனிவர்களும்அண்டங்களில் உள்ளோரும் பிழைத்து உய்யவேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            அரியின் மகள் தனமொடு அங்கம் புதைக்க--- திருமாலின் மகளாகிய வள்ளநாயகியின் மார்பகங்களில் அங்கும் புதையும்படியா,

 

           முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ்--- அழகு பொருந்திய முகத்தோடுதிருத்தோள்களில் அணைத்து மிகழ்ந்தவரே!

 

            அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே--- அருமை வாய்ந்த மயிலுடனும்வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்னும் திருத்தலத்தில் மகிழ்வோடு எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

            அமல கமல உரு சங்கம் தொனித்த--- மலம் அற்றதாய்ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால்பிரமரந்திரத்தில்1008இதழோடு உள்ள குருகமலத்தில் சங்க நாதம் ஒலிக்க

 

            அரிய பரமவெளி எங்கும்--- வேதங்களாலும் அறிந்துகொள்ள முடியாததான பரமவெளி எங்கும்,

 

           பொலித்த செயல் அளவும் அசலம் அது மறை கண்டு--- பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலைபெற்ற தன்மையை இரகசியமாக உணர்ந்தும்,

 

            அங்கு ஒருத்தரு(ம்) உளவு அறியாதது --- அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாக உள்ள,

 

            அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு --- அகரத்தை முதலாக்க் கொண்டு உருப்பெறுகின்ற ஐம்பத்தோரு எழுத்துக்களோடு,

 

            அகில புவன நதி அண்டங்களுக்கும் முதல்--- எல்லா உலகங்கட்கும்நதிகளுக்கும்மற்றுள்ள அண்டங்களுக்கும் முதலாக உள்ளதாய்,

 

           அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று---செந்நிறச் சுத்தப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய்

 

            முதல் நடுவான கமல துரியம் அதில்--- முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில்

 

            இந்தும் கதிர்ப் பரவு--- சந்திர ஒளி பரவி உள்ளதும்,

 

           கனக நிறமுடைய --- பொன்னொளி உடையதும்,

 

           பண்பு அம் படி(க)க் கதவம் ககனம்--- அழகிய படிக நிறமான வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில்

 

            சுழி முனையில் --- சுழுமுனை நாடியில்,

 

          அஞ்சும் களித்த அமுத சிவயோகம்--- ஐம்புலன்களும் இன்புறுகின்ற அருதமாகிய சிவயோகத்தினை,

 

            கருணை உடன்--- தேவரீரது திருவருட் பெரும் கருணாயால்,

 

           அறிவு இதம் கொண்டிட --- எனது அறிவில் இன்பம் உண்டாகும் வண்ணம்,

 

            கவுரி குமர--- உமாதேவியின் திருக்குமாரரே!

 

           குமரகுரு--- குமாரகுருவே

 

           என்று என்று உரைப்ப--- என்று பலகாலும் கூறி,

 

            முது கனிவு வர இளமை தந்து---முதிர்ந்து கனிந்த பத்தியானது அடியேனுக்கு உண்டாகுமாறுஇளமை நிலையைத் தந்து,

 

           உன் பதத்தில் எனை அருள்வாயே --- தேவரீரது திருவடியில் அடியேனைச் சேர்த்து அருளவேண்டும்.

 

பொழிப்புரை

 

     பறைகளும்பலவிதமான வாத்தியங்களும்திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோசெகண செகண செக செம் செம் செகக்கண என்னும் தாள ஒத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேடனின் பணாமுடிகளும்அண்டங்கள் யாவையும் பிளந்து போகும்படி,வெகுவாகப் பேரோலியுடன் வெற்றிச் சின்னங்களும்சங்குகளும் முழங்கவும்,அரக்கர்கள் போர் புரிந்து மடிந்த போர்க்களத்தில்,

தேவர்கள் ஒன்று கூடி மலர்களை அங்கு மாரியாகப் பொழியவும்,  அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க,  திருமாலும்பிரமனும்முனிவர்களும்அண்டங்களில் உள்ளோரும் பிழைத்து உய்யவேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

     திருமாலின் மகளாகிய வள்ளநாயகியின் மார்பகங்களில் அங்கும் புதையும்படியா,அழகு பொருந்திய முகத்தோடு,திருத்தோள்களில் அணைத்து மிகழ்ந்தவரே!

 

     அருமை வாய்ந்த மயிலுடனும்வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்னும் திருத்தலத்தில் மகிழ்வோடு எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

            மலம் அற்றதாய்ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால்பிரமரந்திரத்தில்1008இதழோடு உள்ள குருகமலத்தில் சங்க நாதம் ஒலிக்கவேதங்களாலும் அறிந்துகொள்ள முடியாததான பரமவெளி எங்கும்பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலைபெற்ற தன்மையை இரகசியமாக உணர்ந்தும்அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாக உள்ள,அகரத்தை முதலாக்க் கொண்டு உருப்பெறுகின்ற ஐம்பத்தோரு எழுத்துக்களோடுஎல்லா உலகங்கட்கும்நதிகளுக்கும்மற்றுள்ள அண்டங்களுக்கும் முதலாக உள்ளதாய்,செந்நிறத் தூய பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய்முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான பிரமரந்திரம் என்ற பேரின்ப கமலத்தில்,  சந்திர ஒளி பரவி உள்ளதும்பொன்னொளி உடையதும்அழகிய படிக நிறமான வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில்சுழுமுனை நாடியில்ஐம்புலன்களும் இன்புறுகின்ற அருதமாகிய சிவயோகத்தினைதேவரீரது திருவருட் பெரும் கருணாயால்எனது அறிவில் இன்பம் உண்டாகும் வண்ணம்உமாதேவியின் திருக்குமாரரே!குமாரகுருவேஎன்று பலகாலும் கூறிமுதிர்ந்து கனிந்த பத்தியானது அடியேனுக்கு உண்டாகுமாறுஇளமை நிலையைத் தந்து,தேவரீரது திருவடியில் அடியேனைச் சேர்த்து அருளவேண்டும்.

 

 

விரிவுரை

 

அமல கமல உரு சங்கம் தொனித்த--- 

 

கமலம் --- தாமரை. பிரமரந்திரத்தில் 1008 இதழ்களோடு கூடிய தாமரையில் பராசத்தியோடு பரசிவம் வீற்றிருக்கும் இடம்.

 

மூலாதாரம்சுவாதிட்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்கட்கும் அப்பாற்பட்ட ஆனந்த மேலை வெளியில் விளங்கும் பரவெளியை என்பது.

 

ஆனந்த மேலை வெளியேறி நீயின்றி நானின்றி

நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற....   தொருநாளே”      

                                                                            --- (மூளும் வினை) திருப்புகழ்

 

பொலித்த செயல் அளவும் அசலம் அது மறை கண்டு --- 

 

அசலம் --- அசைவற்ற நிலை.

 

மறை --- இரகசியம்.

 

அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கும் முதல் --- 

 

அகரம் முதலாக உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்கள்.

 

இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும்

இணையார் கழலிணை ஈரைஞ்சது ஆகும்

இணையார் கழலிணை ஐம்பத்தொன்று ஆகும்,

இணையார் கழலிணை ஏழாயிரமே.     --- திருமந்திரம்.

.

சிவனதுதிருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும்பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும்மூல எழுத்துக்களாகிய (மாத்ருகா அட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும்ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.

 

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்

ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்

ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. திருமந்திரம்.

 

மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம்ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்துஎன்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்துஎன்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.

 

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்

அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்

அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே .

 

சிவபெருமான் ஐம்பூத தத்துவங்களைப் படைத்தும்,அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப் பிறவிகளான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும்அவைகளைக் காத்தும்அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.

 

பூதங்கள் ஐந்தாகிப்

    புலனாகிப் பொருளாகிப்

பேதங்கள் அனைத்துமாய்ப்

    பேதமிலாப் பெருமையனைக்

கேதங்கள் கெடுத்தாண்ட

    கிளரொளியை மரகதத்தை

வேதங்கள் தொழுதேத்தும்

    விளங்குதில்லை கண்டேனே.   --- திருவாசகம்.

 

ஐம்பூதங்களாகிச் சுவைஒளிஊறுஓசைநாற்றம் என்ற புலன்களாகி ஏனைய எல்லாப் பொருள்களுமாகிஅவற்றிற் கேற்ப வேறுபாடுகளுமாய்த் தான் வேறுபடுதலில்லாத பெருமை யுடையவனாய்த் துன்பங்களைப் போக்கி எம்மை ஆண்டு அருளிய ஒளிப்பொருளானவனைப் பச்சைமணி போன்றவனை வேதங்கள் வணங்கித் துதிக்கின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

 

 

அஞ்சும் களித்த அமுத சிவயோகம்--- 

 

அஞ்சும் --- ஐம்புலன்களும். ஐம்புலன்களும் ஆர இன்புறுகின்றது சிவயோகம். 

 

திமிலை பல முருடு--- 

 

திமிலை --- பறைகள்.

 

பல முருடு --  பல வகையான வாத்தியங்கள்,

 

வெகு திமிர்த(ம்) குல விருது சங்கம் தொனித்து--- 

 

திமிர்தம் --- பேரோலி. 

 

அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே--- 

 

இந்தம்பலம் என்னும் திருத்தலம் குறித்து அடியேனால் அறியமுடியவில்லை.

 

கருத்துரை

 

முருகா! சிவயோகத்தில் அடியேனை இருத்திஉனது திருவடியைச் சேர அருள்.

 

 

 

 

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...