நல்லோர் நட்பு வேண்டும்

 


நல்லோர் நட்பு வேண்டும்

-----

 

     நட்புஇயற்கை செயற்கை என இருவகைப்படும். இயற்கை நட்பானது பிறப்பு முறையாலும்ஊர் முறையாலும் வருவது. 

 

     செயற்கை நட்பானதுமுன் செய்த உதவி பற்றி வருவதும்,இன்னோரொடு தொடர்பு வைத்துக் கொண்டால்இன்ன நன்மையை அவர் வாயிலாக அடையலாம் என்னும் உட்கிடக்கையோடு உண்டாவதும் என இருவகைப்படும்.

 

     பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தில், " நல்ல எண்ணம் உடையவர் பிரதிபலனை எதிர்பாராது பிறர்க்கு நன்மை செய்வர். நல்ல எண்ணமும்நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் தொண்டு புரிபவர் நண்பர் ஆகிறார்" என்று கூறப்பட்டுள்ளது காண்க. உண்மை நட்பு என்பது பழகப் பழகத்தான் தெளிவாகும் என்பதை இத் திருக்குறளில் காட்டுகின்றார் நாயனார்.

 

      "அறிவு உடையவரது நட்பு,பிறைச் சந்திரன் நாள்தோறும் வளர்ந்து நிறைவைடைவது போல நிறைவை அடையும்அறிவில்லாதவரது நட்பு,நிறைச் சந்திரன் பின்னே நாள்தோறும் குறைந்து வருவது போலக் குறையும்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவு உடையார் முதலில் நட்புக் கொள்வதற்கு முன் நட்புக் கொள்வதற்கு உரியவரைத் தெரிந்து நட்புக் கொள்வர். ஒவ்வொரு குணங்களாக ஆராய்ந்து அறிந்து ஒருவருக்கு ஒருவர் நட்பினை வளர்த்துக் கொள்வர். அந்த நட்பானது பிறைச் சந்திரன் போல வளர்ந்து நிறைவு பெற்று நிற்கும்.

 

     அறியவேண்டியவற்றை ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாத பேதையர் நட்புக் கொள்வதுபிறைச்சந்திரனைப் போல் முதலிலேயே முழுநட்பாக இருக்கும். பிறகு ஒன்று கூடி எல்லா இன்பங்களையும் அனுபவிக்கத் தொடங்கிகுற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றநாளுக்கு நாள் சந்திரன் தேய்வது போலத்தேய்ந்து இறுதியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

 

     எனவேநட்பு பெருகுவதற்கு அறிவுடைமை காரணம் என்றும்நட்பு சுருங்குவதற்கு அறியாமை காரரணம் என்றும் அறியப்படும்.

 

 

நிறை நீர நீரவர் கேண்மைபிறை மதிப்

பின் நீர பேதையார் நட்பு.              ---- திருக்குறள்.

 

     நட்பு குறித்து நாலடியார் கூறுவதைக் காணலாம்.

 

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும், --- வரிசையால்

வான்ஊர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     சான்றோர் கொள்ளுகின்ற நட்பு பிறைச்சந்திரனைப் ப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்சிறியாருடன் கொள்ளுகின்ற தொடர்பு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்து ஒழியும்.(எனவேஅறிவில் சிறியவரோடு நட்புக் கொள்ளுதற்கு அஞ்சுதல் வேண்டும்.)

 

நளிகடல் தண்சேர்ப்ப! நாள்நிழற் போல

விளியும் சிறியவர் கேண்மை; - விளிவுஇன்றி

அல்கு நிழற்போல் அகன்றுஅகன்று ஓடுமே

தொல் புகழாளர் தொடர்பு.                   --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பெரிய கடலின் குளிர்ந்த துறையை உடையவனே! காலை நேரத்தில் படியும் நிழலைப் போல சிறியவர் நட்பானது சிறிது சிறிதாகக் குறைந்து ஒழியும்.  பெருமைக்கு உரிய சான்றோர் நட்பானது மாலை நேரத்து நிழல்போலப் படிப்படியாக வளர்ந்து பெருகும். (இருக்க இருக்கப் பெருகும் நேய மாட்சிக்கு உரிய பெரியோரிடம் பிழைத்தல் இன்றி ஒழுகி நலம்பெறல் வேண்டும்.)

 

கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்தில் கரும்பு தின்று அற்றே;--குருத்திற்கு

எதிர் செலத் தின்று அன்ன தகைத்து அரோஎன்றும்

மதுரம் இலாளர் தொடர்பு.                        --- நாலடியார்.  

 

இதன் பொருள் ---

 

     கல்வியின் பயன் தெரிந்து,உரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவினை உடைய மேலோருடைய நட்பானது,எப்போதும் குருத்தில் இருந்து (நுனிப் பகுதியில் இருந்து) கடித்துத் தின்பது போபோகப் போகச் சுவை மிகுந்து இருக்கும். ஆனால்கரும்பை இதன் அடிப்பகுதியில் இருந்துநுனிப்பகுதிய நோக்கிக் கடித்துத் தின்பது போன்றுஇனிய குணம் இல்லாதவர்களுடைய நட்பானது தொடக்கத்தில் இனிமையாக இருந்துநாளடைவில் கசக்கும். (கற்றார் நட்பு மேன்மேலும் இன்பம் தந்து செல்லும்.)

 

     "ஒருவரைக் கண்டபோது முகம் மாத்திரமே மலரும் வகையில் நேசிப்பது நட்பு அல்ல.அன்பால் உள்ளமும் மலர நேசிப்பதே நட்பு ஆகும்" என்கின்றார் நாயனார்.நெஞ்சினை இடமாக வைத்து நிகழ்வதாகிய அன்பினை நெஞ்சு என்று கூறினார். அகம் --- மனம். மலருதல் ---  குளிர்ச்சி அடைதல்.

 

     அகமும் முகமும் ஒருசேர மலரும்படி அன்பு கொண்டவர் எக்காலத்தும் விடாத நட்புக் கொண்டு இருப்பர். அகத்தில் அன்பு இல்லாது, முகத்தில் மட்டும் அன்பு கொண்டவர் போல நடித்து, முகத்தை மலர்த்திக் காட்டுபவர் நட்பு நெடுநாள் நில்லாது போகும்.

 

முகம் நக நட்பது நட்பு அன்றுநெஞ்சத்து

அகம் நக நட்பது நட்பு.            --- திருக்குறள்.          

 

 

     "நள்" என்றால் விரும்பு என்றும், "நள்ளுதல்" என்றால் விரும்புதல் என்றும் பொருள். இந்த "நள்" அல்லது, "நள்ளுதல்" என்னும் சொல்லை அடியாகக் கொண்டு, "நட்பு" என்னும் சொல் உண்டானது. 

 

     நட்பு என்பது வெளியில் இருந்துதான் உண்டாகவேண்டும்உண்டாகும் என்பது இல்லை. உறவிலும் நட்பு உண்டாகலாம். "நட்பு" என்னும் சொல்லுக்குசிநேகம்தோழமைஉறவுசுற்றம் என்றும் பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் ஏற்றுச் செல்வார்கள். ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்துகொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டு உதவுவார்கள். நன்மை கிடைக்கும் வரையில் ஒன்றாக இருந்துவிட்டுஅல்லாத காலம் வந்தபோதுசொல்லாமல் கொள்ளாமல் ஒதுங்குபவர்கள் நட்புக்கு இலக்கணம் ஆகமாட்டார்கள்.

 

     நட்பின் இலக்கணம் பார்த்தாயிற்று. யாரை நட்புக் கொள்ளலாம்உறவிலும் கூட ஒருவரோடு ஒருவர் நட்புப் பூண்டு ஒழுகலாம். நண்பர் என்பவர் வெளியில் இருந்துதான் வரவேண்டும் என்பது இல்லை.

 

     சரிசெல்வம் படைத்த ஒருவரோடு நட்புக் கொள்ளலாமாகல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவரோடு நட்புக் கொள்ளலாமாபொருளில் தானே உலகமே இருக்கின்றது. பொருள் உடையவரோடு நட்புக் கொள்வதுதானே பொருத்தம் என்று தோன்றலாம். பொருள் உடையவரோடு நட்புக் கொண்டு பொருளால் உயர்ந்தவர்களைக் காணுதல் அரிது. ஆனால்கல்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவரோடு நட்புக் கொண்ட ஒருவர் தானும்கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவராகக் காணலாம்.

 

     கோப்பெருஞ்சோழன்கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய பிசிராந்தையார் மாட்டு நட்புப் பூண்டு இருந்தார் என்பதை அறியலாம். 

 

     செல்வம் மட்டும் இருந்து என்ன பயன்?அதைப் பயன்படுத்துகின்ற அறிவும் இருக்கவேண்டும் அல்லவாஎனவேதான்மன்னர்களும் கூடமந்திரிப் பிரதானிகளையும்படைத் தலைவர்களையும் தனது அரசவையில் வைத்து இருந்தாலும்ராஜகுரு என்று அறிவில் சிறந்து ஒருவரையும் வைத்து இருந்தனர்.

 

     செல்வம் உடையவரோடு நட்புப் பூண்டு இருந்தாலும்அறிவு மிக்கவருடைய நட்பும் இன்றியமையாதது என்று எண்ணித் தான்சிவபெருமான் கூடசெல்வத்தில் மிக்கவனாகிய குபேரனைத் தனக்குத் தோழனாகக் கொண்டதோடு நில்லாமல்கல்வி அறிவில் சிறந்து விளங்கிய நம்பியாரூர் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்டிருந்துபின்னாளில் சுந்தரமூர்த்தி நாயனாராக விளங்கிவரையும் தனக்குத் தோழனாகக் கொண்டார் என்கின்றார்கற்பனைக் களஞ்சியம்துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

அறிந்து செல்வம் உடையானாம்

         அளகைப் பதியான் தோழமை கொண்டு,

உறழ்ந்த கல்வி உடையானும்

            ஒருவன் வேண்டும் என இருந்து,

துறந்த முனிவர் தொழும் பரவை

            துணைவா! நினைத் தோழமை கொண்டான்,

சிறந்த அறிவு வடிவமாய்த்

            திகழும் நுதல்கண் பெருமானே.            --- நால்வர் நான்மணி மாலை.

                                

இதன் பொருள் ---

 

     துறந்த முனிவர் தொழும் பரவை துணைவா --- முற்றத் துறந்த முனிவர் ஆகிய உபமன்னிய முனிவரும் ஒணங்கிப் போற்றுகின்ற பரவை நாச்சியாரின்கணவரே!சிறந்த அறிவு வடிவமாய்த் திகழும் நுதல்கண் பெருமான் --- இயற்கை அறிவு வடிவராய் இலங்கும் நெற்றிக் கண்களை உடைய சிவபெருமான் செல்வம் உடையானாம் அளகைப் பதியான் தோழமை கொண்டு

 --- பொருட்செல்வத்தில் தலைவனாய் அளகையம்பதிக்கு இறைவன் ஆகிய குபேரனைத் தனக்குத் தோழனாகக் கொண்டுஉறழ்ந்த கல்வி உடையானும் ஒருவன் வேண்டும்என இருந்து --- தம்மை நிகர்த்துத் கல்விச் செல்வத்தில் தலைமை பெற்ற தோழரும் ஒருவர் வேண்டும் என எண்ணி இருந்துநினை அறிந்து தோழமை கொண்டான் --- உம்மைநட்பிற்குஉரியவராக நாடித் தோழமை கொண்டார்.

 

            "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் திருவள்ளுவ நாயனார்எனவேபொருட்செல்வம் உள்ளவர் என்று மட்டுமே கருதி,கீழ்மக்களோடு நட்புக் கொள்ளுதல் என்பதை விடஅறிவு ஒழுக்கங்களில் சிறந்தவரது நட்பையே கொள்ளுதல் வேண்டும். செல்வரைச் சிறப்புச் செய்து அவரோடு இணங்கிஉயர்வு பெற்றவரைக் காணுதல் மிக அரிது. எனவேஉயர்ந்தோர்செல்வத்தை பொருட்டாக மதிக்காமல்,அறிவு ஒழுக்கங்களையே மதிப்பவர்கள்தம்மை விட அறிவு மிக்கவர்களையே மதிப்பார்கள். 

 

     சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்காத உபமன்னிய முனிவர்வானத்தில் செல்லும் பெரோளிப் பிழம்பைப் பார்த்துகண்களில் நீர் மல்க வணங்கி,அது செல்லும் திசை நோக்கித் தொழுத வண்ணம் இருந்தார்அவரது சீடர்கள் வியப்புற்று, "சிவத்தைத் தவிர வேறு யாரையும் வணங்காத தாங்கள் இன்று என்ன செய்தீர்கள்?" என்றனர். "சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபிரான் திருவருளால்மண்ணுலகத்தில் இருந்துதிருக்கயிலைக்கு சோதி வடிவில் எழுந்தருளுகின்றார். சிவபரம்பொருளைத் தனது உள்ளதால் தழுவிக் கொண்டவர் அவர். ஆதலின்,அவர் நாம் வணங்கத் தக்கவர்" என்றார். "தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் நம்பியாரூரன்,நாம் தொழும் தன்மையான்" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடினார்.

 

     "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று கூறி,சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்டு அருளினார். தான் தோழனாக ஏற்றுக் கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் மன வருத்தம் கொண்ட போதுஅவருக்கு உடனே உதவினார். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனைவியார் ஆகிய பரவைநாச்சியார் கொண்டிருந்த ஊடலை மாற்றுவதற்காக,இரவுக் காலத்திலும்,அம்மையாருடைய இல்லம் நோக்கி,தூதராகச் சென்றார். இந்த ஊடலுக்குக் காரணமாக அமைந்த்துசங்கிலி நாச்சியாரின் திருமணம். திருவொற்றியூரில்சங்கிலி நாச்சியாரைக் கண்டுதனது தோழர் ஆகிய சுந்தரமூர்த்தி கொண்ட விருப்பத்தை நிறைவேற்றித் தந்தவர் சிவபெருமான். அது மட்டுமல்ல. திருக்கச்சூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள்பசியால் வருந்தி இருந்தபோதுஅவருக்காக இல்லங்கள் தோறும் சென்று,சோறு இரந்து வந்து உண்ணத் தந்தார்.

 

     நட்புக் கொண்டவர் துன்புறும்போதுஎவ்விதத்திலும் உதவுவது நட்புக்கு அழகு என்பதை, "உடுக்கை இழந்தவன் கைபோலஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்றார் திருவள்ளுவ நாயனார். "ஆங்கே" என்றதால், "அப்போதே" என்பது பெறப்படும்.

 

படியிலா நின்  பாட்டில் ஆரூர

            நனி விருப்பன் பரமன் என்பது

அடியனேன் அறிந்தனன் வான்தொழும்

            ஈசன் நினைத்தடுத்து ஆட்கொண்டும் அன்றி

தொடிஉலாம் மென்கை மடமாதர்பால்

            நினக்காகத் தூது சென்றும்

மிடி இலா மனைகள் தொறும் இரந்திட்டும்

            உழன்றமையால் விளங்கும் ஆறே.            --- நால்வர் நான்மணி மாலை.

 

     இறைவன் தனது தோழராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்காகத் தூது சென்ற அருமையை வியந்துதுறமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இவ்வாறு பாடி அருளினார்.

 

இதன் பொருள் ---

 

     ஆரூர –- நம்பியாரூர வள்ளலேவான் தொழும் ஈசன் நினைத் தடுத்து ஆட்கொண்டு ---  தேவரும்இறைஞ்சும் சிவபெருமான்,தேவரீர் திருமணம் செய்யாதபடி தடுத்து  அடிமை கொண்டு உழன்றமையாலும்அன்றித் தொடி உலாம் மென்கை மடமாதர்பால் நினக்கு ஆகத் தூது சென்றும் --- அது அன்றியும்வளையல்கள் சஞ்சரிக்கும் மெல்லிய கைகளையும்இளமையையும் உடைய பரவைநாச்சியாரும்சங்கிலி  நாச்சியாரும் பரிந்து உடன்படத் தேவரீர் பொருட்டுத் தூது நடந்து  உழன்றமையாலும்மிடி இலா மனைகள் தொறும் இரந்து இட்டு உழன்றமையாலும் ---   வறுமை இல்லாத வீடுகள்தோறும் அன்னம் ஏற்றுஅமுது அளித்து  உழன்றமையாலும்நின் படி இலாப் பாட்டில் பரமன் நனி விருப்பன் என்பது ---  தேவரீர் அருளும் நிகரற்ற திருப்பாட்டில் அப்பெருமான் அதிக நேசம் உடையர் என்பதைஅடியனேன் விளங்குமாறு அறிந்தனன் ---  அடியேன் விளங்கும்படி  அறிந்தேன்.

 

     "இன்தொண்டர் பசி அகச்சூரின் மனைதோறும் இரக்க நடைகொள்ளும் பதம்" என்று வள்ளல்பெருமான் இந்த நிகழ்வை உள்ளம் உருகப் பாடியுள்ளார்.

 

     எனவேநட்புக் கொள்ளுவதுபொருள் உடையாரித்தில் மட்டுமே இல்லாமல்,கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றாரோடும் அமைவது நல்லது.

 

     எல்லாம் வல்ல பரம்பொருளையே தோழனாகக் கொள்வதும்அவனை அடைவதற்கு உரிய நால்வகை நெறிகளில் (மார்க்கங்களில்வழிகளில்) ஒன்றாகும். இது சகமார்க்கம் எனப்படும். இறைவனையே நண்பனாகக் கொண்டு வழிபடலாம். இறைவன் நண்பன் ஆனால்இக்கட்டு வந்தபோது கைவிட மாட்டான். "எனது நண்பனே! நலம் சார் பண்பனே! உன்னையே நம்பினேன் கைவிடேல் எனையே" என்றார் வள்ளல்பெருமான். "கண்ணன் என் தோழன்" என்று பாரதியார் பாடினார்.

 

     கண்ணன் எல்லோரிடமும் அன்பு பூண்டு இருந்தான். ஆனால் அருச்சுனனையும் குசேலரையும் மட்டுமே தனது நண்பர்கள் என்றான்.நாம் அனைவரிடமும் பழக முடியும். பேச முடியும்ஆனால் சிலரை மட்டுமே நண்பராக கொள்ளமுடியும். பயன் கருதாது,அளவு கடந்த அன்பு கொண்டோரிடம் மட்டுமே நட்பு கொள்ள முடியும். 

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...