பொது --- 1005. நாலிரண்டு இதழாலே

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நாலிரண்டு இதழாலே (பொது)

 

முருகா! 

அடியேனது வினை தீர அருள்வாய்.

 

 

தான தந்தன தானா தானன

     தான தந்தன தானா தானன

          தான தந்தன தானா தானன ...... தனதான

 

 

நாலி ரண்டித ழாலே கோலிய

     ஞால முண்டக மேலே தானிள

          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே

 

ஞால முண்டபி ராணா தாரனும்

     யோக மந்திர மூலா தாரனு

          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

 

மேலி ருந்தகி ரீடா பீடமு

     நூல றிந்தம ணீமா மாடமு

          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக

 

வீசி நின்றுள தூபா தீபவி

     சால மண்டப மீதே யேறிய

          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்

 

ஆல கந்தரி மோடா மோடிகு

     மாரி பிங்கலை நானா தேசிய

          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்

 

ஆன சம்ப்ரமி மாதா மாதவி

     ஆதி யம்பிகை ஞாதா வானவ

          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி

 

கால சங்கரி சீலா சீலித்ரி

     சூலி மந்த்ரச பாஷா பாஷணி

          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி

 

காம தந்திர லீலா லோகினி

     வாம தந்திர நூலாய் வாள்சிவ

          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நால் இரண்டு இதழாலே கோலிய

     ஞால் அமுண்டக மேலே தான்,

          ஞாயிறு என்று உறு கோலா காலனும்,....அதின்மேலே

 

ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்,

     யோக மந்திர மூல ஆதாரனும்,

          நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனும் ...... நடுவாக,

 

மேல் இருந்த கிரீடா பீடமும்,

     நூல் அறிந்த மணீ மா மாடமும்,

          மேதகும் ப்ரபை கோடா கோடியும் ...... இடமாக

 

வீசி நின்று உள தூபா தீபவி-

     சால மண்டப மீதே ஏறிய

          வீர பண்டித! வீர! ஆசாரிய! ...... வினைதீராய்.

 

ஆல கந்தரி,மோடா மோடிகு-

     மாரி,பிங்கலை,நானா தேசி,

          அமோகி,மங்கலை,லோகா லோகி,.....எவுயிர் பாலும்

 

ஆன சம்ப்ரமி,மாதா,மாதவி,

     ஆதி அம்பிகை,ஞாதா ஆனவர்

          ஆட மன்றினில் ஆடா நாடிய ...... அபிராமி,

 

கால சங்கரி,சீலா சீலித்ரி

     சூலி,மந்த்ர சபாஷா பாஷணி,

          காள கண்டிகபாலீ,மாலினி,...... கலியாணி,

 

காம தந்திர லீலா லோகினி,

     வாம தந்திர நூல் ஆய்வாள்சிவ

          காம சுந்தரி வாழ்வே! தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

      ஆல கந்தரி--- ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை உடையவள்,

 

     மோடா மோடி --- பெருமிதம் மிக்க துர்க்கை,

 

     குமாரி--- கன்னிகை,

 

     பிங்கலை--- பொன்னிறம் உடையவள்,

 

     நானா தேசி--- எல்லாவிதமான ஒளி வடிவங்களும் பொருந்தியவள்,

 

     அமோகி--- மோகம் அற்றவள்,

 

     மங்கலை--- மங்கலம் ஆனவள்,

 

     லோக லோகி--- எல்லா உலகங்களையும் ஈன்று அளிப்பவள்,

 

     எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி--- எல்லா உயிர்களிலும் நிறைந்து விளங்குபவள், (சம்பிரமம் --- நிறைவு)

 

     மாதா --- தாய்,

 

     மாதவி --- துர்க்கை

 

     ஆதி அம்பிகை --- முதற்பொருள் ஆனவள்,

 

     ஞாதா ஆனவர் ஆட--- மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரி,

 

     மன்றினில் ஆடா நாடிய அபிராமி---  அவருடன் திருநடனம் புரிய விரும்பிய பேரழகி,

 

      கால சங்கரி--- காலனை அழித்தவள்,

 

     சீலா சீலி--- யாவரிலும் தூயவள்,

 

     த்ரிசூலி --- முத்தலைச் சூலத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவள்,

 

     மந்த்ர சபாஷா பாஷிணி--- மந்திரங்களின் பொருளாக விளங்குபவள்,

 

      காளகண்டி--- கறுத்த கண்டத்தை உடையவள்,

 

     கபாலி--- பிரம காபலத்தை ஏந்தியவள்,

 

     மாலினி --- மாலைகளை அணிந்தவள்,

 

     கலியாணி --- நன்மை நிறைந்தவள்,

 

      காம தந்திர லீலா லோகினி--- காமநூல்கள்  கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள்

 

      வாம தந்திர நூல் ஆய்வாள்--- சத்தி வழிபாட்டுக்குரிய நூங்களின் பொருளாக விளங்குபவள்,

 

     சிவகாம சுந்தரி வாழ்வே --- சிவகாம சுந்தரியாகிய உமாதேவியின் பெருஞ்செல்வமே! 

 

      தேவர்கள் பெருமாளே--- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!.

 

     நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான்--- ஆறு இதழ்க் கமல வடிவில் பொன்னிறம் கொண்ட சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தின் மீது,

 

       இளஞாயிறு என்று உறு கோலாகாலனும்--- உதயசூரியன் என கோலாகலமாக விளங்கும் பிரமனும்

 

      அதின் மேலே --- அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்,

 

     ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்--- (மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் ஆகிய) இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமாலும்,

 

      யோக மந்திர மூலாதாரனும்--- (அதற்கும் மேலேஉயிர்கள் புரியும்யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) விளங்குகின்ற உருத்திரனும், (அகிய இம்மூவரும்)

 

      நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்)--- தேடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தியும் 

 

     நடுவாக--- நடு நிலையில் வீற்றிருக்க

 

     மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)--- இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு உரிய இருப்பிடமும்

 

      நூல் அறிந்த மணீ மாமாடமும் --- சாத்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும்,

 

      மேதகு ப்ரபை கோடா கோடியும் இடமாக--- மேன்மை வாய்ந்த,கோடானு கோடி ஒளி விளங்கும் இடத்தை தேவரீரது இடமாகக் கொண்டு

 

      வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித--- வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதரே!

 

      வீர ஆசாரிய--- வீரம் மிக்க குருமூர்த்தியே!

 

     வினை தீராய்--- அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

 

பொழிப்புரை

 

     ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை உடையவள்பெருமிதம் மிக்க துர்க்கைகன்னிகைபொன்னிறம் உடையவள்எல்லாவிதமான ஒளி வடிவங்களும் பொருந்தியவள்மோகம் அற்றவள்மங்கலம் ஆனவள்எல்லா உலகங்களையும் ஈன்று அளிப்பவள்எல்லா உயிர்களிலும் நிறைந்து விளங்குபவள், (சம்பிரமம் --- நிறைவு)தாய்துர்க்கை,  முதற்பொருள் ஆனவள்மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிஅவருடன் திருநடனம் புரிய விரும்பிய பேரழகி,காலனை அழித்தவள்யாவரிலும் தூயவள்முத்தலைச் சூலத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவள்மந்திரங்களின் பொருளாக விளங்குபவள்கறுத்த கண்டத்தை உடையவள்பிரம காபலத்தை ஏந்தியவள்மாலைகளை அணிந்தவள்நன்மை நிறைந்தவள்காமநூல்கள்  கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள்,  சத்தி வழிபாட்டுக்குரிய நூங்களின் பொருளாக விளங்குபவள்,சிவகாம சுந்தரியாகிய உமாதேவியின் பெருஞ்செல்வமே! 

 

       தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!.

 

     ஆறு இதழ்க் கமல வடிவில் பொன்னிறம் கொண்ட சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தின் மீதுஉதயசூரியன் என கோலாகலமாக விளங்கும் பிரமனும் அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்,மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் ஆகிய இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமாலும்,அதற்கும் மேலேஉயிர்கள் புரியும் யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் அனாகதம் என்ற ஆதார நிலையில் விளங்குகின்ற உருத்திரனும்அகிய இம்மூவரும்நாடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தியும்  நடு நிலையில் வீற்றிருக்க,  இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு உரிய இருப்பிடமும்,  சாத்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும்மேன்மை வாய்ந்த,கோடானு கோடி ஒளி விளங்கும் இடத்தை தேவரீரது இடமாகக் கொண்டுவீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதரே!

 

     வீரம் மிக்க குருமூர்த்தியே!

 

     அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

 

விரிவுரை

 

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இளஞாயிறு என்று உறு கோலாகாலனும்--- 

 

நாலிரண்டு --- நான்கோடு இரண்டுஆறு.

 

ஞால் --- தொங்குகின்ற,

 

முண்டகம் --- தாமரை.

 

சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தில் தொங்குகின்ற ஆறு இதழ்க் கமலத்தின் மீது,பொன்ற நிற வடிவத்தோடுஇளஞைசூரியனைப் போல விளங்குபவர் பிரமதேவர்.

 

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்

கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்?.

 

நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவைஉள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது.

                                                            ---பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்

சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!

 

எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில்அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.         --- பட்டினத்தார் பூரணம்

 

அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும் --- 

 

அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமால்.

 

அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்?.

 

மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவைஉப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது.

                                                     --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்

ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.

 

எங்கும் நிறைந்த பொருளேமணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.                   --- பட்டினத்தார் பூரணம்

 

யோக மந்திர மூலாதாரனும்--- 

 

அனாகதம் என்னும் ஆதாரத்தில்உயிர்கள் புரியும்யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் விளங்குபவர்  உருத்திரமூர்த்தி.

 

மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?.

 

முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது?        ---பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்

கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.

 

எங்கும் நிறைந்த பொருளேஅநாகதத்தில்அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன்.             --- பட்டினத்தார் பூரணம்

 

 

நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்)--- 

 

இம்மூவரும் நாடி நிற்பது அனாகதம் என்னும் ஆதாரத்திற்கு மேல் உள்ள புருவ தேடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தி.

 

வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்

கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.

 

வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது.

                                                          ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்

புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே

 

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவதுநெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல்ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.

                                                                                    ---  பட்டினத்தார் பூரணம்.

 

மேல் இருந்த கிரீடா பீடமு(ம்) நூல் அறிந்த மணீ மாமாடமும் மேதகும் ப்ரபை கோடா கோடியும் இடமாகவீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித--- 

 

கிரீடம் --- தலைமை நிலை.

 

பீடம் --- இருப்பிடம்.

 

மணி மாமாடம் --- ஒளி பொருந்திய இடம்.

 

பிரபை --- ஒளி.  கோடி சூரிய ஒளி.

 

இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்க் கமலம். சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவஇவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.

 

"உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்ழ".

 

ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.

 

"ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை

பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்"?

 

ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்துஅதனை அடையப் பெறுவது எப்போது.

                                                            --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

"உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்

அச்சமுடன்  நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே".

 

எங்கும் நிறைந்த பொருளேஉச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல்பயத்துடனே புத்தி கெட்டேன்.                    ---பட்டினத்தார் பூரணம்.

 

இந்த நிலையில் விளங்கும் அருட்காட்சியினை வள்ளல்பெருமான் அனுபவித்து விளக்குவதைக் காணலாம்...

 

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்

     அற்புதக் காட்சி அடி - அம்மா

    அற்புதக் காட்சி அடி.              ---  திருவருட்பா.

 

ஆணிப் பொன்னம்பலம் --- மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சபை.

 

ஜோதி மலைஒன்று தோன்றிற்றுஅதில்ஒரு

     வீதி உண்டாச்சுது அடி - அம்மா

     வீதி உண்டாச்சுது அடி                ---  திருவருட்பா.    

                       

சோதி மலை --- சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார்.                                  

 

வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு

     மேடை இருந்தது அடி - அம்மா

     மேடை இருந்தது அடி                 ---  திருவருட்பா.                      

மேடைமேல் ஏறினேன்,மேடைமேல் அங்கு ஒரு

     கூடம் இருந்தது அடி - அம்மா

     கூடம் இருந்தது அடி.                 ---  திருவருட்பா.                              

கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை

     மாடம் இருந்தது அடி - அம்மா

     மாடம் இருந்தது அடி.                 ---  திருவருட்பா.                           

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்

     என் என்று சொல்வன் அடி - அம்மா

     என் என்று சொல்வன் அடி.       ---  திருவருட்பா. 

 

இந்த அற்புத அருளனுபவத்தை அருணை வள்ளலார் அருளுமாறு காண்க.

 

கற்பகந் தெருவில் வீதி கொண்டுசுடர்

பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு

கட்டி விந்து பிசகாமல் வெண்பொடிகொடு ...... அசையாமல்

                                                                                    --- (கட்டிமுண்ட) திருப்புகழ்.

 

                                                ….                   ….       வானின்கண்

நாம மதி மீதில் ஊறுங்கலா இன்பம்

நாடிஅதன் மீதுபோய் நின்ற ஆனந்த

மேலைவெளி ஏறி,நீஇன்றி நான்இன்றி

நாடியினும் வேறு தான்இன்றி    வாழ்கின்றது ஒருநாளே.      ---  (மூளும்வினை) திருப்புகழ்.

 

வீர ஆசாரிய--- 

 

தன்னை நம்பியவர்களை என்றும் கைவிட்டு விடாத வீரம் மிக்க குருமூர்த்தி முருகப் பெருமான்.

 

ஆல கந்தரி--- 

 

ஆலம் -- விடம். கந்தரம் --- கழத்து,  கண்டம்.

 

குமாரி--- 

 

எல்லா உலகங்களையும்உயிர்களையும் ஈன்று அளித்தும்,இன்னமும் கன்னியாகவே விளங்குபவள்.

 

"அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!" என்று தாயுமானவரும், "கருதரிய கடலாடை உலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி'"என்றும் சிவப்பிரகாச சுவாமிகளும் பாடி இருத்தல் காண்க.

 

நானா தேசி--- 

 

நானா பலவிதமாஎல்லாவிதமான.

 

தேசி --- தேசு --- ஒளி.

 

எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி--- 

 

சம்பிரமம் --- நிறைவு

 

எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பவள்.

  

ஞாதா ஆனவர் ஆட--- 

 

ஞாதா --- மெய்ப்பொருள். 

 

மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரி,

 

காம தந்திர லீலா லோகினி--- 

 

உயிர்களுக்குப் போகத்தை ஊட்டுபவள்.

 

வாம தந்திர நூல் ஆய்வாள்--- 

 

வாமம் --- சத்தி.

 

வாம தந்திரம் --- சத்தி வழிபாட்டுக்கு உரிய நூல்கள்.

 

கருத்துரை

 

முருகா! அடியேனது வினை தீர அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...