பொது --- 1001. வேதவித்தகா சாமீ


                                                            அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வேத வித்தகா (பொது)

 

தான தத்தனா தானா தனாதன

     தான தத்தனா தானா தனாதன

          தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான

 

 

வேத வித்தகா சாமீ நமோநம

     வேல்மி குத்தமா சூரா நமோநம

          வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத

 

வீர பத்மசீர் பாதா நமோநம

     நீல மிக்ககூ தாளா நமோநம

          மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத

 

போத மொத்தபேர் போதா நமோநம

     பூத மற்றுமே யானாய் நமோநம

          பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும்

 

பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம

     ஆறி ரட்டிநீள் தோளா நமோநம

          பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக

 

மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்

     மீதி ருக்குமே ரார்மாபு லோமசை

          வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும்

 

வேத வித்தகீ வீமா விராகிணி

     வீறு மிக்கமா வீணா கரேமக

          மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ

 

ஆதி சத்திசா மாதேவி பார்வதி

     நீலி துத்தியார் நீணாக பூஷணி

          ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும்

 

ஆர்யை பெற்றசீ ராளா நமோநம

     சூரை யட்டுநீள் பேரா நமோநம

          ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வேத வித்தகா! சாமீ! நமோ நம,

     வேல் மிகுத்த மா சூரா! நமோ நம,

          வீம சக்ர யூகாளா! நமோ நம,...... விந்துநாத

 

வீர பத்ம சீர் பாதா! நமோ நம,

     நீல மிக்க கூதாளா! நமோ நம,

          மேகம் ஒத்த மாயூரா! நமோ நம,...... விண்டிடாத

 

போதம் ஒத்த பேர் போதா! நமோ நம,

     பூத மற்றுமே ஆனாய்! நமோ நம,

          பூரணத்து உளே வாழ்வாய்! நமோ நம,......துங்கமேவும்

 

பூதரத்து எலாம் வாழ்வாய்! நமோ நம,

     ஆறு இரட்டி நீள் தோளா! நமோ நம,

          பூஷணத்து மா மார்பா! நமோ நம,...... புண்டரீக

 

மீது இருக்கு நா மாதோடு,சேயிதழ்

     மீது இருக்கும் ஏர் ஆர் மா,புலோமசை,

          வீர மிக்க ஏழ் பேர் மாதர்,நீடு இனம் .....நின்றுநாளும்

 

வேத வித்தகீ! வீமா! விராகிணி!

     வீறு மிக்கமா வீணா கரே! மக

          மேரு உற்றுவாழ் சீரே! சிவாதரெ! ...... அங்கராகீ!

 

ஆதி சத்தி! சாமாதேவி! பார்வதி!

     நீலி! துத்தி ஆர் நீள்நாக பூஷணி!

          ஆயி! நித்தியே! கோடீர மாதவி! ...... என்று தாழும்

 

ஆர்யை பெற்ற சீராளா! நமோ நம,

     சூரை அட்டு நீள் பேரா! நமோ நம,

          ஆரணத்தினார் வாழ்வே! நமோ நம,...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

            வேத வித்தகா சாமீ நமோநம--- வேதங்கள் உணர்த்துகின்ற பேரறிவாளரே! எல்லா உயிர்களையும் தனக்கு உடைமையாக உடையவரே! போற்றிபோற்றி 

 

            வேல் மிகுத்த மாசூரா நமோநம--- வேலினைச் சிறப்பாக ஏந்தும் பெருவீரரே!  போற்றிபோற்றி 

 

            வீம சக்ர யூகாளா நமோநம--- அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவரே!போற்றிபோற்றி

 

            விந்துநாத---  ஒளி வடிவாகவும்நாத வடிவாகவும் விளங்குபவரே!

 

            வீர--- வீரரே!

 

     பத்ம சீர்பாதா நமோநம --- தாமரை மலரைப்  போன்ற அழகிய திருவடிகளை உடையவரே!போற்றிபோற்றி

 

            நீலம் மிக்ககூ தாளா நமோநம--- நீல நிறத்தில் மிகுந்த கூதள மலர் மாலைகள் அணிந்தவரே!போற்றிபோற்றி 

 

            மேகம் ஒத்த மாயூரா நமோநம--- மேக நிறத்தினை ஒத்துள்ள மயிலை வாகனமாக உடையவரே!  போற்றிபோற்றி

 

            விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம--- சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானாசிரியரே! போற்றிபோற்றி

 

            பூதம் மற்றுமே ஆனாய் நமோநம--- பஞ்ச பூதங்கறளும்பிறவாகவும் ஆனவரே!  போற்றிபோற்றி 

 

            பூரணத்துளே வாழ்வாய் நமோநம--- பரிபூரணப் பொருளாக வாழ்பவரே!போற்றிபோற்றி

 

            துங்கம் மேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம--- உயர்ந்த மலைகளில் எல்லாம் வாழ்பவரே!போற்றிபோற்றி 

 

            ஆறு இரட்டி நீள் தோளா நமோநம --- நீண்ட பன்னிரு திருத்தோள்களை உடையவரே!போற்றிபோற்றி 

 

            பூஷணத்து மாமார்பா நமோநம--- அணிகலன்களைப் பூண்ட திருமார்பரே! போற்றிபோற்றி

 

            புண்டரீக மீதிருக்கு நா மாதோடு--- வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் கலைமகளோடு

 

            சே இதழ் மீதிருக்கும் ஏரார் மா--- செந்தாமரை மீது வீற்றிருக்கும் அழகு பொருந்திய திருமகளோடு,

 

            புலோமசை --- இந்திராணியும்,

 

            வீர மிக்க ஏழ் பேர்மாதர்--- வீரம் மிக்க ஏழு மாதர்களும்,

 

            நீடு இனம் நின்று நாளும்--- இவர்களோடு கூடியுள்ள மற்ற எல்லாத் தெய்வமகளிரும் திருமுன் நின்று நாள்தோறும் 

 

            வேத வித்தகீ --- வேதத்தில் வல்லவளே!

 

     வீமா --- பயங்கரியே!

 

            விராகிணி--- பற்று அற்றவளே

 

            வீறுமிக்க மா வீணா கரே--- பெருமை மிக்க அழகிய விபஞ்சி என்ற வீணையைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!

 

            மகமேரு உற்று வாழ் சீரே--- மகாமேரு மலையில் இருந்து வாழும் சிறப்பினை உடையவளே

 

            சிவாதரெ--- சிவபரம்பொருளின் திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்தியவளே! 

 

            அங்கராகீ--- திருமேனியில் நறுமணப் பொருள்களைப் பூசியவளே!

 

            ஆதி சத்தி--- ஆதிசத்தியே!

 

            சாமாதேவி--- பசிய திருமேனி உடையவளே!

 

            பார்வதி--- மலையரசன் திருமகளே! 

 

            நீலி --- துர்க்கையே!

 

            துத்தி ஆர் நீள் நாகபூஷணி --- புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை அணிந்தவளே

 

            ஆயி --- உலகன்னையே!

 

            நித்தியே --- என்றும் உள்ளவளே!

 

            கோடீர மாதவி--- நீண்ட சடையுள்ள துர்க்காதேவியே!

 

            என்று தாழும் ஆர்யை பெற்ற சீராளா நமோநம--- என்று முடி தாழ்த்தி அடி வணங்கும் பெருந்தேவியானவள் பெற்றருளிய சிறப்பு மிக்கவரேபோற்றிபோற்றி,

 

            சூரை அட்டுநீள் பேரா நமோநம--- சூரபதுமனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவரேபோற்றிபோற்றி

 

            ஆரணத்தினார் வாழ்வே நமோநம --- வேதம் ஓதுவோர்களின் பெருவாழ்வே! போற்றிபோற்றி.

 

            தம்பிரானே--- தனிப்பெரும் தலைவரே!

 

 

பொழிப்புரை

 

 

            வேதங்கள் உணர்த்துகின்ற பேரறிவாளரே! எல்லா உயிர்களையும் தனக்கு உடைமையாக உடையவரே! போற்றிபோற்றி. 

 

            வேலினைச் சிறப்பாக ஏந்தும் பெருவீரரே!  போற்றிபோற்றி. 

 

            அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவரே!போற்றிபோற்றி.

 

            ஒளி வடிவாகவும்நாத வடிவாகவும் விளங்குபவரே!

 

            வீரரே!

 

            தாமரை மலரைப்  போன்ற அழகிய திருவடிகளை உடையவரே!போற்றிபோற்றி

 

            நீல நிறத்தில் சிறந்த கூதள மலர் மாலைகள் அணிந்தவரே!போற்றிபோற்றி 

 

            மேக நிறத்தினை ஒத்துள்ள மயிலை வாகனமாக உடையவரே!  போற்றிபோற்றி

 

            சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானாசிரியரே! போற்றிபோற்றி 

 

            பஞ்ச பூதங்கறளும்பிறவாகவும் ஆனவரே!  போற்றிபோற்றி 

 

            பரிபூரணப் பொருளாக வாழ்பவரே!போற்றிபோற்றி

 

            உயர்ந்த மலைகளில் எல்லாம் வாழ்பவரே!போற்றிபோற்றி 

 

            நீண்ட பன்னிரு திருத்தோள்களை உடையவரே!போற்றிபோற்றி 

 

            அணிகலன்களைப் பூண்ட திருமார்பரே! போற்றிபோற்றி

 

            வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் கலைமகளோடுசெந்தாமரை மீது வீற்றிருக்கும் அழகு பொருந்திய திருமகளோடுஇந்திராணியும்வீரம் மிக்க ஏழு மாதர்களும்இவர்களோடு கூடியுள்ள மற்ற எல்லாத் தெய்வமகளிரும் திருமுன் நின்று நாள்தோறும் 

வேதத்தில் வல்லவளே!பயங்கரியே! பற்று அற்றவளே!  பெருமை மிக்க அழகிய விபஞ்சி என்ற வீணையைத் திருக்கரத்தில் ஏந்தியவளேமகாமேரு மலையில் இருந்து வாழும் சிறப்பினை உடையவளேசிவபரம்பொருளின் திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்தியவளே! திருமேனியில் நறுமணப் பொருள்களைப் பூசியவளேஆதிசத்தியே! பசிய திருமேனி உடையவளே! மலையரசன் திருமகளே!  துர்க்கையே! புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை அணிந்தவளேஉலகன்னையே!என்றும் உள்ளவளே !நீண்ட சடையுள்ள துர்க்காதேவியே! என்று முடி தாழ்த்தி அடி வணங்கும் பெருந்தேவியானவள் பெற்றருளிய சிறப்பு மிக்கவரேபோற்றிபோற்றி.

 

            சூரபதுமனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவரேபோற்றிபோற்றி

 

            வேதம் ஓதுவோர்களின் பெருவாழ்வே! போற்றிபோற்றி

 

            தனிப்பெரும் தலைவரே!

 

 

விரிவுரை

 

வேண்டுகோள் ஏதும் இன்றிமுழுதும் துதிமயமான திருப்புகழ்ப் பாடல் இது.

 

வீம சக்ர யூகாளா நமோநம--- 

 

வீமம் --- அச்சம்.

 

அச்சத்தைத் தருகின்ற வியூகங்களைசூரபதுமனோடு புரிந்த போரில் வகுத்தவர்.

 

வியூகம் --- படைகளின் அணிவகுப்பு.

 

படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய்வகையான் நான்காய்விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம்மண்டலம்அசங்கதம்போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும்மண்டலவிரி இரண்டும்அசங்கத விரி ஆறும்போக விரி ஐந்தும் என இவை. இவ்வாறு பரிமேலழகர் திருக்குறளுக்கு விளக்கமாக்க் கூறியுள்ளது காண்க.

 

அக்கரம் யாவும் உணர்ந்த சிலைக் குருஆசுரசேனை நடுச்

சுக்கிரனார் நிகர் என்னவகைப்படு தூசியின்மாமுறையே

எக்கரமும் படைகொண்டு எழுசேனையைஎயில்கள் வளைப்பனபோல்,

சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உறநின்றனனே.    --- வில்லிபாரதம்.

 

நீலம் மிக்ககூ தாளா நமோநம--- 

 

"வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்" என்கின்றது திருமுருகாற்றுப்படை. 

 

"முடியில் கொண்ட கூதளம்என"  --- (அலகில் அவுணரை) திருப்புகழ்..

                       

"முருகவிழ் கூதாள மாலிகைதழுவிய சீர்பாத தூளி" --- (இருகுழை மீதோடி) திருப்புகழ்.

                       

 

மேகம் ஒத்த மாயூரா நமோநம--- 

 

நீல நிறத்தை உடையது மேகம். எனவேமயிலானது நீலமயில் எனப்பட்டது. 

 

மயூரம் --- மயில்.  சிகண்டி --- மயில்.

 

"நீலச் சிகண்டி" எனவும்"நீலம் கொள் மேகத்தின் மயில்" எனவும் அருணை அடிகளார் கூறியது காண்க.

 

துங்கம் மேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம--- 

 

பூதரம் --- மலை.  குன்றுகள் தோறும் குடியிருப்பவர் குமரவேள்.

            

புண்டரீக மீதிருக்கு நா மாதோடு--- 

 

புண்டரிகம் --- தாமரை. 

 

நா மாது --- கலைமகள். கலைமகளின் இருக்கையைக் குறித்ததால்வெள்ளைத் தாமரை என்று கொள்ளப்பட்டது.

 

சே இதழ் மீதிருக்கும் ஏரார் மா--- 

 

சே இதழ் --- சிவந்த இதழ்களைக் கொண்ட செந்தாமரை.

 

மா --- இலக்குமி.

 

வீமா---

 

வீமம் --- அச்சம். 

            

விராகிணி--- 

 

ராகம் --- பற்றுவிருப்பு. 

 

விராகம் --- பற்று அற்ற. விருப்பு அற்ற.

            

வீறுமிக்க மா வீணா கரே--- 

 

வீறு --- பெருமை.  வீணா கரே --- வீணையைக் கரத்தில் கொண்டுவள்.

 

அங்கராகீ--- 

 

அங்கராகம் --- நறுமணப் பூச்சு.

 

பொங்கு அரா வெயில் மணிப் பூணும்பேணும் நீற்று

அங்கராகமும்உவந்து அணியும் மேனியாய்!

சங்கரா! மேரு வெஞ் சாபம் வாங்கிய

செங் கரா! சிவ சிவ! தேவ தேவனே!  --- வில்லிபாரதம்.

 

கோடீர மாதவி--- 

 

கோடீரம் --- நீண்ட சடை.

 

ஆர்யை பெற்ற சீராளா நமோநம--- 

 

ஆர்யை --- ஆரியை. உயர்ந்தவள். 

 

            

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...