இராமேசுரம் --- 0991. வானோர் வழுத்துனது

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வானோர் வழுத்துஉனது (இராமேசுரம்)

 

முருகா! 

மாதர் மயக்கினின்றும் விடுபட அருள் புரிவீர்.

 

 

தானா தனத்ததன தானா தனத்ததன

     தானா தனத்ததன ...... தனதான

 

 

வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்

     மீதே பணிக்கும்வகை ...... யறியாதே

 

மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி

     லூடே யணைத்துதவு ...... மதனாலே

 

தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக

     ளேதோ வெனக்கலவி ...... பலகோடி

 

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு

     சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ

 

மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி

     னூடே கிநிற்குமிரு ...... கழலோனே

 

மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை

     வீரா குறச்சிறுமி ...... மணவாளா

 

ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை

     நாணா துரைக்குமொரு ...... பெரியோனே

 

நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு

     ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

வானோர் வழுத்து உனது பாதார பத்மமலர்

     மீதே பணிக்கும் வகை ...... அறியாதே,

 

மானார் வலைக்கண் அதிலே தூளி மெத்தையினில்

     ஊடே அணைத்து உதவும் ...... அதனாலே,

 

தேனோ,கருப்பில்எழு பாகோ,இதற்கு இணைகள்

     ஏதோ,எனக் கலவி ...... பலகோடி,

 

தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு

     சேறு ஆடல் பெற்ற துயர் ...... ஒழியேனோ?

 

மேல்நாடு பெற்றுவளர் சூராதிபற்கு எதிரின்

     ஊடு ஏகி நிற்கும் இரு ...... கழலோனே!

 

மேகார உக்ர பரி தான் ஏறி,வெற்றி புனை

     வீரா! குறச் சிறுமி ...... மணவாளா!

 

ஞானா பரற்கு இனிய வேதாகமப் பொருளை

     நாணாது உரைக்கும்ஒரு ...... பெரியோனே!

 

நாராயணற்கு மருகா! வீறு பெற்று இலகு

     ராமேசுரத்தில் உறை ...... பெருமாளே.

 

பதவுரை

 

            மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு--- விண்ணுலகத்தைக் கவர்ந்த பெருமையால் வளர்ந்த சூரனாகிய அசுரவேந்தனுடைய

 

            எதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே --- எதிராகச் சென்று போரில் நின்ற இரண்டு வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவரே!

 

            மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா --- மேகார ஒளியுடன் கூவுவதும்வேகமுடையதும் ஆகிய தாங்குகின்ற மயிலின்கண் ஆரோகணித்து வெற்றி கண்ட வீரமூர்த்தியே!

 

            குறச்சிறுமி மணவாளா--- குறவர் குலத்திலே வந்த வள்ளியம்மையின் கணவரே!

 

            ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே --- ஞானமூர்த்தியாகிய பரசிவம்பொருளுக்கு,இனிமையான வேதம் ஆகமம் என்ற இரு நூல்களின் உட்பொருளை தயக்கமில்லாமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியவரே!

 

            நாராயணற்கு மருகா--- திருமாலின் திருமருகரே!

 

            வீறு பெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே ---பெருமை பெற்று விளங்கும் இராமேச்சுரத்தில் வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!

 

            வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே--- தேவர்கள் போற்றித் துதிக்கின்ற தேவரீருடைய திருவடித் தாமரைகள் மீது பணியும் வகையை அறியாமல்,

 

            மானார் வலைக் கண் அதிலே --- மான் போன்ற பொதுமகளிரின் பார்வையாகிய வலைப்பட்டு அதிலே மயங்கி

 

            தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே --- அன்னத்தின் தூவியுடன் கூடிய படுக்கையின்கண் தழுவி அவர்கள் தருகின்ற இன்பத்தினால்,

 

            தேனோ கருப்பில் எழு பாகோ--- அச்சுகம் தேன்தானோசர்க்கரைப் பாகுதானோஎன வியந்து,

 

             இணைகள் ஏதோ எனக் கலவி பலகோடி--- இதற்கு உலகில் சமமானம் ஏதும் இல்லை என்று கருதி பன்முறை கலவி புரிந்து,

 

            தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ--- தொலையாத மயக்கத்துடன் நாகபடம் போன்ற நிதம்பத்தில் எழுகின்ற இன்பச் சேற்றில் அழுந்தி அதனால் விளைகின்ற துன்பத்தைச் சிறிதும் ஒழிய மாட்டேனோ?

 

பொழிப்புரை

 

 

            விண்ணுலகத்தைக் கவர்ந்த பெருமையால் வளர்ந்த சூரனாகிய அசுரவேந்தனுடைய எதிராகச் சென்று போரில் நின்ற இரண்டு வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவரே!

            

     மேகார ஒளியுடன் கூவுவதும்வேகமுடையதும் ஆகிய தாங்குகின்ற மயிலின்கண் ஆரோகணித்து வெற்றி கண்ட வீரமூர்த்தியே!

 

            குறவர் குலத்திலே வந்த வள்ளியம்மையின் கணவரே!

 

            ஞானமூர்த்தியாகிய பரசிவக் கடவுளுக்கு இனிமையான வேதம் ஆகமம் என்ற இரு நூல்களின் உட்பொருளை தயக்கமில்லாமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியவரே!

 

            திருமாலின் திருமருகரே!

 

            பெருமை பெற்று விளங்கும் இராமேச்சுரத்தில் வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!

 

             தேவர்கள் போற்றுகின்ற தேவரீருடைய திருவடித் தாமரைகள் மீது பணியும் வகையை அறியாமல்மான் போன்ற பொதுமகளிரின் பார்வையாகிய வலைப்பட்டு அதிலே மயங்கிஅன்னத்தின் தூவியுடன் கூடிய படுக்கையின்கண் தழுவி அவர்கள் தருகின்ற இன்பத்தினால்அச்சுகம் தேன்தானோசர்க்கரைப் பாகுதானோஎன வியந்து இதற்கு உலகில் சமமானம் ஏதும் இல்லை என்று கருதி பன்முறை கலவி புரிந்துதொலையாத மயக்கத்துடன் நாகபடம் போன்ற நிதம்பத்தில் எழுகின்ற இன்பச் சேற்றில் அழுந்தி அதனால் விளைகின்ற துன்பத்தைச் சிறிதும் ஒழிய மாட்டேனோ?

 

 

விரிவுரை

 

 

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் ---

 

"நாவேறு பாமணத்த பாதாரம்" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளியது அறிக.

 

சகலலோக ஏகநாயகன் முருகன். ஆன்மாக்களுடைய இதயமாகிய தகராலய குகையில் விளங்குபவன். அதனால் "குகன்" எனப்படும் பெருமான். மூவர் தேவாதிகள் தொழும் முழுமுதற் கடவுள்.  ஆதலின்வானோரும் ஏனோரும் பன்னிருகைப் பரமனுடைய பாத அரவிந்தங்களைப் பரவித் துதிக்கின்றனர்.

 

கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும்

     எமது பிரான்என்று தாள்வ ணங்கிய

     கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே. ---  (குருதிபுலால்) திருப்புகழ்.

                                                                                     

முருகவேளுடைய திருவடிக்கு அணிகலமாகத் திகழ்வன வானவர் முடிகள்.

 

…..                  …..                  …..      மயிலேறும் ஐயன்

காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும்...            ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                           

முருகன் சகல தேவர்களையும் சேனைகளாக உடையவன். அதனால்தேவசேனாபதி என்று கூறுவர்.

 

பணிக்கும் வகை அறியாதே ---

 

பணிதல் என்பது சந்தத்தை நோக்கி பணிக்கும் என வந்தது. இறைவனை எவ்வாறு பணியவேண்டும் என்பதை அறிந்து முறைப்படி பணிதல் வேண்டும். 

 

துயர் ஒழியேனோ ---

 

விலைமகளிர் வலைப்பட்டுதுன்பத்தை இன்பமாக எண்ணிவிளக்கில் விழும் விட்டில் பூச்சியைப் போல் கட்டிலில் கிடந்துமட்டு இல்லாத காலம் மயங்கித் திரிந்து துன்புறும் தன்மைஞான பண்டிதனுடைய திருவடித் தியானத்தால் தொலையும்.

 

நெருப்பை அடுத்து இருப்பவனை,பனியின் துயர் சாராதது போல்குமாரக் கடவுளை அடுத்து இருப்பவரை காமாதி அறுபகை சாராது.

 

மேல்நாடு பெற்று வளர் சூராதிபன்---

 

சூரபன்மன் அரும்பெரும் தவம் புரிந்து சிவபெருமானிடம் 1008அண்டங்களையும்அவற்றிற்கு ஒரு கணத்தில் சென்று மீளும் இந்திரஞாலத் தேரும்வஜ்ர யாக்கையும்எண்ணிலாத படைக்கலங்களையும்நாலுவித படைகளையும் பெற்றனன்.

 

அத்துடன் அமையாதுஇந்திரனையும் வென்றுதேவர்களைச் சிறையில் அடைத்துதேவலோகத்தையும் கவர்ந்து கொண்டனன்.  அதனால் அமரர்கள் அளவற்ற காலம் அளவற்ற அல்லல் உற்றார்கள்.

 

ஏதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே---

 

அத்தகைய சூரபன்மனுக்கு எதிரில் மாலயனாதி வானவர்களும் நிற்க முடியாது அஞ்சி ஓடி ஒளிந்தனர். வேற்படையை உடைய எந்தை கந்தவேள் அவனை எதிர்த்து நின்று போர் புரிந்து வென்றனர்.

 

வீரர்கள் தாம் பெற்ற வெற்றிக்குச் சின்னமாகக் காலிலே அணிவது வீரகண்டாமணி. அதற்குக் கழல் என்று பேர். முருகவேள் இரு திருவடிகளிலும் அவ் வீரக் கழலை அணிந்தனர்.

 

மேகார உக்ரபரி தான் ஏறி வெற்றி புனை வீரா---

 

ஓகார வடிவில் ஆடும் மயில்,மேகார ஒலியுடன் கூவும். உலகம் முழுவதும் ஒரு நொடியில் வலம் வரும் வேகமுடையது.

 

பரி --- குதிரை. பரித்தல் --- தாங்குதல். தாங்குவதனால் குதிரை,பரி எனப்பட்டது. இங்கே மயில் உவம ஆகுபெயராகபரி எனக் கூறப்பட்டது.

 

"பட்சி என்னும் உக்ர துரகமும்" என்று, "பக்கரை விசித்ரமணி" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் கூறுகின்றனர்.

 

ஞானா பரற்கு ---

 

பரன் --- பெரியவன்.

 

சிவபெருமான் அறிவின் வடிவானவர். அறிவு வேறு சிவம் வேறு இல்லை.

 

அறிவு வடிவுஎன்று அறியாத என்னை

அறிவு வடிவுஎன்று அருள்செய்தான் நந்தி,

அறிவு வடிவுஎன்று அருளால் அறிந்தே

அறிவு வடிவுஎன்று அறிந்து இருந்தேனே.        --- திருமந்திரம்.

 

அறிவு வடிவாய சிவபெருமானுடைய திருமுகங்களில் இருந்து சகல வித்தைகளும் பிறந்தன.

 

ஞானமூர்த்தி ஆதலின்நால்வர்கட்குவாக்கிறந்த பூரணமாய்மறைக்கு அப்பாலாய்எல்லாமாய்அல்லதுமாய் இருந்த தனை இருந்தபடி இருந்து காட்டிசொல்லாமல் சொல்லி உபதேசித்தனர். ஆகவேஅவர் தென்முக நோக்கிய இன்முக மூர்த்தி. குருபரன். நினைப்பவர் சந்தேகங்களைப் பொடிபடுத்திஞானத்தை அருளும் ஞானபாநு.

 

இனிய வேதாகமப் பொருளை ---

 

இனிமையானது வேதாகமங்கள். வேதம் --- பொது. ஆகமம் --- சிறப்பு. இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும். வேதாகமப் பொருளாக விளங்குவது "ஓம்" எனப்படும் பரவித்தை.

 

வேதம் வாழ்வியல் நூல்பொது.  ஆகமங்கள் வழிபாட்டு நூல்சிறப்பு..

 

வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்;

ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன;

நாதன் உரை அவை நாடில் இரண்டந்தம்

பேதம் அது என்னில் பெரியோர்க்கு அபேதமே. --- திருமூலர்

 

     வேதம் ஆகமம் இரண்டுமே இறைவனால் அருளப்பட்டவை.

வேதம்பொது நூல் ஆகும். ஆகமம் சிறப்பு நூல் ஆகும்.  இரண்டும் பேதப்படுவன போல் தோன்றும். உண்மை உணர்ந்த பெரியோர்க்கு பேதம் தோன்றாது. பொது என்பது உண்மையை முற்ற உணர்த்தாது. ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு என்பது உண்மையை முற்ற உணர்த்துவது. 

 

     உலகர் உண்மையை ஓரளவே உணர்வார். சத்திநிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பேமுற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும்சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும்ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. 

 

     எனவே,இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறுசித்தாந்தம் வேறுஎன்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுசிறப்பு என்னும் வகையில் `வேதாந்தம்எனவும், `சித்தாந்தம்எனவும் நிற்கின்றது என்பர்.

 

வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்,

            வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்,

ஆதி நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும்,

            ஆரணநூல் பொதுசைவம் அரும்சிறப்பு நூலாம்,

நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்

            நிகழ்த்தியதுநீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்

தீது இல்பொருள் கொண்டு உரைக்கும் நூல்சைவம்பிறநூல்

            திகழ்பூர்வம்சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்.        --- சிவஞானசித்தியார்.

                                    

       உலகத்தில் உயர்ந்த நூல்கள் எனக் கூறப்படுவன வேதங்களும் சிவாகமங்களுமாகிய இரண்டே. இவற்றின் வேறாக எழுந்த நூல்கள் எல்லாம் இவற்றின் கருத்துக்களை விரித்து உரைக்கும் நூல்களே ஆகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினை உடையவனும் இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனுமாகிய சிவபெருமானால் அருளப்பட்டவை வேதம்ஆகமம் என்னும் இவை இரண்டும் ஆகும். இவ்விரு நூல்களும் முதல் நூல்களே. இவை முறையே உலகத்தவர்க்கும்சத்திநிபாதம் எய்தியவர்க்கும் என இறைவனால் அருளப்பட்டன. இவற்றுள் மறைகள் பொது என்றும் சிவாகமங்கள் சிறப்பு என்றும் கூறப்படும். விரிந்த வேதத்துள் கூறப்பட்டவற்றைத் தவிர எஞ்சி நின்ற பொருள்களையும். வேத முடிபாகிய உபநிடதங்களின் சாரமாகிய குற்றமற்ற பொருள்களையும் தனித்து எடுத்துக் கொண்டு இனிதே விளக்குவது சிவாகமம். எனவேபிற நூல்கள் எல்லாம் பூர்வ பக்கம் எனவும் சிவாகமங்கள் சித்தாந்தம் என்றும் கொள்ளப்படும்.

 

நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே---

 

சிவபெருமானே குழந்தையாக வந்தனர். சிவன் வேறு முருகன் வேறு இல்லை. மணியிலிருந்து ஒளி வருவது போல்சிவமாகிய மணியில் இருந்து முருகனாகிய ஒளி வந்தது. எனினும்,தந்தை மைந்தன் என நின்றபடியால் தந்தைக்கு நாம் உபதேசிக்கின்றோமே என்ற தயக்கம் இன்றி,  ஆதிகுருவாகிய தந்தைக்கும் குருமூர்த்தமாக இருந்து "ஓம்" என்ற தனி மந்திரத்தின் தத்துவப் பொருளை உபதேசித்து அருளினார்.

 

அதனால்அவரை ஒரு பெரியோன் என்று அழைக்கின்றார். ஒப்பற்ற பெரியவன். வடிவில் சிறியவன். தகுதியில் பெரியவன் என்கின்றார்.

 

நாராயணற்கு மருகா---

 

நாரம் --- குளிர்ச்சி. அயனம் --- இடம். குளிர்ந்த தண்ணீரில் இருப்பவர்.  "நீரிடைத் துயின்றவன்" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். உமாதேவியின் வடிவங்களில் திருமால் புருஷவடிவாக விளங்குவர்.  ஆதலின்திருமாலின் தங்கை உமை. அதனால் திருமாலுக்கு முருகவேள் மருகர் ஆகின்றார்.

 

வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே---

 

வீறு - பெருமை. தென்கடலும் கீழ்க்கடலும் கூடுகின்ற தனுஷ்கோடியின் அருகில் உள்ள இடத்தில்ஸ்ரீராமர் இராவணாதி அவுணரைச் சங்கரித்துத் திரும்பியபோதுசீதையுடன் சிவலிங்கத்தை நிருவி சிவாகம முறைப்படி வழிபாடு புரிந்தனர். அதனால்அத் திருத்தலம் இராமேசுரம் எனப்பட்டது. இன்னும் அத் திருத்தலம் அளவிடப்படாத மகிமை உடையதாய் வடநாட்டையும் தென்னாட்டையும் இணைப்பதாய்பணிவார் பவப்பிணியைப் போக்குவதாய்கோடி வினைகளை நீக்கும் கோடி தீர்த்தத்தை உடையதாய் விளங்குகின்றது.

 

இராமர் அங்கு பூசித்தார் என்பதனை அடியில் வரும் தேவாரப் பாடல்களால் அறிக.

 

தேவியை வவ்விய தென்இலங் கைத்தச மாமுகன்

பூஇய லும்முடி பொன்றுவித் தபழி போய்அற,

ஏஇய லும்சிலை அண்ணல்செய் தஇரா மேச்சுரம்

மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.  ---  திருஞானசம்பந்தர்.

                                     

குன்றுபோல தோள் உடைய

            குணம்இலா அரக்கர் தம்மைக்

கொன்றுபோர் ஆழி அம்மால்

            வேட்கையால் செய்த கோயில்

நன்றுபோல் நெஞ்சமேநீ

            நன்மையை அறிதி ஆயில்

சென்று நீ தொழுதுஉய் கண்டாய்

            திருவிரா மேச்சு ரம்மே.               --- அப்பர்

 

வாக்கினால் இன்பு உரைத்து

            வாழ்கிலார் தம்மை எல்லாம்

போக்கினால் புடைத்து அவர்கள்

            உயிர்தனை உண்டு மால்தான்

தேக்குநீர் செய்த கோயில்

            திருஇரா மேச்சு ரத்தை

நோக்கினால் வணங்கு வார்கள்

            நோய்வினை நுணுகும் அன்றே.             --- அப்பர்

 

காசியினின்றும் நாள்தோறும் கங்கை தீர்த்தம் வந்து,அதனால் இராமலிங்கத்திற்கு அபிஷேகம் புரிவதும்வடநாட்டு மக்கள் இடையறாது வந்து வழிபடுவதும் கண்கூடு.

 

கருத்துரை

 

முருகா! மாதர் மயக்கினின்றும் விடுபட அருள் புரிவீர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...