அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருந்த வீடும் (பொது)
முருகா!
நிலையற்ற பொருளைச் சதம் என்று கருதாமல்,
தேவரீரை வழிபட்டு உய்ய அருள் புரிவீராக.
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருந்த வீடும், கொஞ்சிய சிறுவரும், ...... உறுகேளும்,
இசைந்த ஊரும், பெண்டிரும், இளமையும், ...... வளமேவும்
விரிந்த நாடும், குன்றமும் நிலை என ...... மகிழாதே,
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட ...... அருள்வாயே.
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே!
குரங்கு உலாவும் குன்று உறை குறமகள் ...... மணவாளா!
திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு ...... புலவோனே!
சிவந்த காலும் தண்டையும் அழகிய ...... பெருமாளே.
பதவுரை
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே --- குருந்த மரத்தில் ஏறியவரும் மேகவண்ணருமான திருமாலின் திருமருமகரே!
குரங்கு உலாவும் குன்று உறை குறமகள் மணவாளா --- குரங்குகள் உலாவும் குன்றுகளால் ஆன வள்ளிமலையில் வாசம் செய்திருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!
திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு புலவோனே --- திருத்தமான முறையில் வேதங்களை இனிய தமிழ்மொழியில் தேவாரப் பாடல்களாக உலகவர் அறியத் (திருஞானசம்பந்தராக வந்து) தந்தருளிய புலவரே!
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே --- செம்மையான திருவடியும், அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமையில் மிக்கவரே!
இருந்த வீடும் --- அடியேன் வாழுகின்ற வீடும்,
கொஞ்சிய சிறுவரும் --- அடியேனுடன் கொஞ்சிப் பழகும் புதல்வர்களும்,
உறுகேளும் --- வினைவயத்தால் அடியேனோடு வந்து பொருந்திய உறவினரும்,
இசைந்த ஊரும் --- அடியேன் பொருந்தி வாழும் ஊரும்,
பெண்டிரும் --- அடியேனுடைய மனைவி முதலான பெண்களும்,
இளமையும் --- எனது இளமையும்,
வளம் மேவும் விரிந்த நாடும் குன்றமும் --- வளப்பம் நிறைந்து, விரிந்து பரந்த எனது நாடும், நாட்டில் உள்ள மலைகளும்,
நிலை என மகிழாதே --- என்றும் நிலைத்து இருப்பவை என்று மகிழ்ச்சி கொள்ளாமல்,
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே --- ஒளி விளக்கு ஏற்றி தேவரீரை வழிபட அருள்வீராக.
பொழிப்புரை
குருந்த மரத்தில் ஏறியவரும் மேகவண்ணருமான திருமாலின் திருமருமகரே!
குரங்குகள் உலாவும் குன்றுகளால் ஆன வள்ளிமலையில் வாசம் செய்திருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!
திருத்தமான முறையில் வேதங்கை இனிய தமிழ்மொழியில் தேவாரப் பாடல்களாக உலகவர் அறியத் (திருஞானசம்பந்தராக வந்து) தந்தருளிய புலவரே!
செம்மையான திருவடியும், அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமையில் மிக்கவரே!
அடியேன் வாழுகின்ற வீடும், அடியேனுடன் கொஞ்சிப் பழகும் புதல்வர்களும், வினைவயத்தால் அடியேனோடு வந்து பொருந்திய உறவினரும், அடியேன் பொருந்தி வாழும் ஊரும், அடியேனுடைய மனைவி முதலான பெண்களும், எனது இளமையும், வளப்பம் நிறைந்து, விரிந்து பரந்த எனது நாடும், நாட்டில் உள்ள மலைகளும் என்றும் நிலைத்து இருப்பவை என்று மகிழ்ச்சி கொள்ளாமல், ஒளி விளக்கு ஏற்றி தேவரீரை வழிபட அருள்வீராக.
விரிவுரை
இருந்த வீடும், கொஞ்சிய சிறுவரும்......நிலை என மகிழாதே ---
இத்திருப்புகழில் அநித்தமான பொருள்களை, நித்தம் என நினைத்து, மாந்தர் மயங்கித் தியங்குவதைப் பற்றி அடிகளார் கூறுகின்றார்.
வீடு, பொன், புதல்வர், அழகிய மகளிர், வலிமை, குலம், நிலைமை, ஊர், பேர், இளமை, சார்பு, துணிவு, அணிகலன், வளமை, வரிசை, சுற்றம் இவைகள் யாவும் நிலைபேறில்லாதவை; உள்ளவைபோல் இருந்து அழிகின்றவை.
மாயை - தோன்றி நின்று அழிவது. மாயம் - ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது. அதாவது துன்பத்தை இன்பம்போல் காட்டி மயக்கஞ்செய்வது. எனவே மாயையால் மயங்கி, நிலையில்லா இன்பத்தை தனக்குச் சொந்தமாக நினைப்பது பிழை. அது புறப்பற்று. பற்று அற்றவர்க்கே வீடுபேறு உண்டாகும். இதுபற்றி பரிமேலழகர் திருக்குறள் உரையில் கூறுமாறு காண்க.
ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழியுந் தன்மையுடைய இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை யுண்டாம்; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகளெல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம். அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்றாகிய எனதென்பதும், அகப்பற்றாகிய யான் என்பதும் விடும்.
எனவே, கனவு காண்பது போன்று நிலையில்லாதவற்றை நிலைத்தவையாக மாந்தர் கருதி மயங்கி மடிகின்றனர். அப்படி நினைப்பது அறிவின்மையின் சிகரம் என்கின்றார் திருவள்ளுவர்.
"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை."
இறைவனையன்றி ஏனைய யாவும் அநித்தியமானவையே. ஆதலின், அவைகளை நமது சொந்தம் என்று கருதி உழலக் கூடாது.
எண்ணில் கோடி உகங்களாக எண்ணில் கோடி பிறப்புக்களை மாறி மாறி எடுக்கின்ற ஆன்மாக்களுக்கு, ஒவ்வொரு பிறப்பிலும், மனைவி மக்கள் முதலியோர் மாறி மாறி வருகின்றனர். அந்தந்தப் பிறப்பில் அந்தந்த மனைவி மக்களுக்காக உழைத்து நல்வழியிலும் அல்வழியிலும் பொன்னையும் பொருளையும் ஈட்டி, அவர்களுக்கு அவைகளைத் தந்து மாண்டு ஒழிகின்றார்கள்.
ஊர்அனந் தம்,பெற்ற பேர்அனந் தம்,சுற்றும்
உறவுஅனந் தம்,வினையினால்
உடல்அனந் தம்,செயும் வினைஅனந் தம்,கருத்
தோஅனந் தம்,பெற்றபேர்
சீர்அனந் தம்,சொர்க்க நரகமும் அனந்தம்,நல்
தெய்வமும் அனந்தபேதம்,
திகழ்கின்ற சமயமும் அனந்தம்,அத னால்ஞான
சிற்சத்தியால் உணர்ந்து
கார்அனந் தங்கோடி வருஷித்தது எனஅன்பர்
கண்ணும்விண் ணும் தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநம்
கடவுளைத் துரியவடிவைப்
பேர்அனந் தம்பேசி மறைஅனந் தம்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசஅரும் அனந்தபத ஞானஆ னந்தமாம்
பெரிய பொருளைப் பணிகுவாம். --- தாயுமானார்.
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே ---
"தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் கூறி உள்ளது காண்க.
"வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
உட்புகுந்து, வலமாய் வந்தே,
ஒருவிளக்கு ஆயினும்பசுவின் நெய்யுடன்,தா
மரைநூலின் ஒளிர வைத்தால்,
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
கைலாசம் காணி ஆகும்!
திருவிளக்குஇட் டார்தமையே தெய்வம் அளித்
திடும்! வினையும் தீரும் தானே!" --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து வலமாய் வந்து --- வேண்டிய பேறுகளை அருளும் திருத்தண்டலை நீள்நெறிநாதரின் திருக்கோயிலின் உள்ளே சென்று, வலமாக வந்து வணங்கி, ஒரு விளக்காயினும் --- ஒரு விளக்காவது, பசுவின் நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் ---பசுவின் நெய்யை விட்டு, தாமரை நூலிலே ஒளிரும்படி வைத்தால், கருவிளக்கும் பிறப்பும் இல்லை --- மறுமுறையும் கருவிலே ஊறி வரும் பிறவித் துன்பம் இல்லை, இறப்பும் இல்லை --- மரணமும் இல்லை, கைலாசம் காணி ஆகும் --- சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை உரிமை ஆகும். திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் --- திருவிளக்கு இட்டவர்வர்களையே தெய்வம் காப்பாற்றும், வினையும் தீரும் --- பழவினையும் நீங்கும்.
அக் காலத்திலே, திருக்கோயிலில் அகல் விளக்கு மட்டுமே இருக்கும். கருவறையில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வணங்கத் திருவிளக்குத் துணை புரியும். திருக்கோயில் வலம் வருவாருக்கும் இரவுக் காலங்களில் விளக்கொளி துணைசெய்யும். திருக்கோயில் வலம் வருதற்கும், இறைவனை வணங்குதற்கும் திருவிளக்கு இடுதல் என்பது ஒரு திருப்பணியாகச் செய்யப்பட்டது. இது பற்றியே நமிநந்தி அடிகள் திருவிளக்கு இட்டார் என்பதும் அறியப்படும்.
அதன்றியும், புறத்து இருள் நீங்க ஒளிவிளக்கு ஏற்றுவது போல, அகத்து உள்ள ஆணவ இருள் நீங்க ஞான விளக்கினை, அருள் விளக்கினை ஏற்ற வேண்டும் என்பதும் குறிப்பு.
"இல்லக விளக்கு, அது இருள் கெடுப்பது. ...... நல் அக விளக்கு, அது நமச்சிவாயவே" என்னும் அப்பர் பெருமான் அருள் வாக்கின் உண்மைப் பொருளை உணர்ந்து தெளிதல் வேண்டும். வெறுமனே சொல்லுக்குள்ள பொருளை மட்டும் காண்பது சிறப்பு அல்ல. திருக்கோயிலில் மட்டுமல்ல, இல்லத்திலும் திருவிளக்கு ஏற்றுவதில், இந்த உண்மை பொதிந்துள்ளது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
புறத்து இருள் அகல விளக்கு பயன்படுவதுபோல, அகத்து இருள் அகல உள்ளத்தின் உள்ளே அருள்விளக்கு ஏற்றவேண்டும் என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது. புற இருளை ஞாயிற்றின் ஒளி போக்குவதைப் போல, மக்களின் அகஇருளைப் போக்குவது பெரியபுராணம் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியது சிந்தனைக்கு உரியது. "நீறுஅணிந்தார் அகத்து இருளும் நிறைகங்குல் புறத்து இருளும் மாறவரும் திருப்பள்ளி எழுச்சி" எனத் திருப்பள்ளி எழுச்சிக்கு தெய்வச் சேக்கிழார் பெருமான் அளித்துள்ள விளக்கம் நம் உள்ளத்தைக் கொள்ளை இன்பத்தில் திளைக்கச் செய்கிறது அல்லவா.
விதவிதமான மின் விளக்குகள் வந்துவிட்ட இக்காலத்திலும், விளக்கிடுவது புண்ணியம் என்று எண்ணி, விதவிதமான விளக்குகள், அகல், எலுமிச்சைப் பழத்தோல், உடைத்த தேங்காய் என்று என்னென்ன புதுமைகளைக் கற்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு இப்போது திருக்கோயிலில் விளக்கிடுவதும் திருக்கோயில் கறைபடுவதைப் பற்றிக் கவலை சிறிதும் இல்லாமல் நிகழ்கிறது. நமது இல்லத்தில் இப்படி விளக்கு ஏற்றுவோமா, நமது இல்லத்தைக் கறைபடிய விடுவோமா என்பதை எண்ணிப் பார்த்தல் நலம்.
புறவழிபாடு, அகம் செம்மைப்பட வேண்டும் என்பதற்காக உள்ள கிரியையே தவிர, அக ஒழுக்கம் இல்லாமல் மனமாசு அகலாது. அறமும் தழைக்காது. அதனால்தான் அகவிளக்கு ஏற்றுவது குறித்து திருநாவுக்கரசு சுவாமிகள் பின்வரும் அருட்பாடல்களை நான்காம் திருமுறையில் அருளி உள்ளார்.
"நொய்யவர், விழுமியாரும், நூலின் நன்நெறியைக் காட்டும்
மெய்யவர், பொய்யும் இல்லார், உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய்அமர் திரியும் ஆகி, நெஞ்சத்துள் விளக்கும் ஆகி,
செய்யவர், கரிய கண்டர், திருச்செம்பொன் பள்ளியாரே."
"பொள்ளத்த காய மாயப் பொருளினை, போகமாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணருமாறு உணரவல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே."
"தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீர்ஆகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே."
"பின்னுவார் சடையான்தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவரா நரகம்தன்னுள், தொல்வினை தீரவேண்டின்
மன்னுவான் மறைகள்ஓதி, மனத்தினுள் விளக்குஒன்று ஏற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடையகோவே."
"மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு உயரத் தூண்டி
உய்வதுஓர் உபாயம்தன்னால் உகக்கின்றேன் உகவாவண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால,
செய்வது ஒன்று அறியமாட்டேன் திருப்புகலூர னீரே."
"உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி, உயிர்எனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்புஅமர் காளை தாதை கழல்அடி காணல்ஆமே."
அகஇருளைப் போக்கும் விளக்காக அருட்பெருஞ்சோதி ஆண்டவர் விளங்குவதை, வள்ளல் பெருமானார் பின்வருமாறு பாடியுள்ளார்----
"வெருள் மனமாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்சோதி
சுருள்விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே
அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ்சோதி.
அருள்ஒளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்
இருள்அற என்உளத்து ஏற்றிய விளக்கே.
துன்புறு தத்துவத் துரிசு எலாம் நீக்கிநல்
இன்புஉற என் உளத்து ஏற்றிய விளக்கே.
மயல்அற அழியா வாழ்வு மேன்மேலும்
இயல்உற என் உளத்து ஏற்றிய விளக்கே.
வெம்மல இரவுஅது விடி தருணந்தனில்
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செஞ்சுடரே."
"எனது உயிரில் அழுக்கைத் துடைத்து விட்டு, எழு கருணை மழைக்குள் குளிக்க விட்டு, இனி அலையாதே, அலையும் மனத்தைப் பிடித்து வைத்து, அதில் உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின் அழகு விளக்கைப் பதித்து வைத்ததும், அவியாதே அறிவை உருட்டித் திரட்டி வைத்து, அதின் அமிர்த குணத்தைத் துதிக்க வைத்து, எனை அடிமை படைக்கக் கருத்தில் முற்றிலும் நினையாயோ". இது அருணகிரிநாதப் பெருமான் அருள்வாக்கு.
"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்எனும்
தூய்மையில் குப்பை தொலைவுஇன்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கி, பொருதிறல்
மைஇருள் நிறத்து மதன்உடை அடுசினத்து
ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி, அருள் விளக்கு ஏற்றி,
துன்ப இருளைத் துரந்து, முன்புறம்
மெய்எனும் விதானம் விரித்து, நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்சிந்தைப்
பாழ்அறை உனக்குப் பள்ளியறை ஆக்கி,
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு,
எந்தை, நீ இருக்க இட்டனன், இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள்ளத்து
நுரைஎனச் சிதறி, இருசுடர் மிதப்ப,
வரைபறித்து இயங்கும் மாருதம் கடுப்ப,
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இது எனக் கலங்கா நின்றுழி,
மற்று அவர் உய்யப் பற்றிய புணையாய்,
மிகநனி மிதந்த புகலி நாயக,
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்க, நின்
செல்வச் சிலம்பு மெல்என மிழற்ற,
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டு இங்கு
எழுந்து அருளத் தகும் எம்பிரானே."
இது பட்டினத்தடிகள் பாடிய திருக்கழுமலமும்மணிக்கோவை. பதினோராம் திருமுறையில் உள்ளது. இதன் பொருளை அனுபவிப்போம்.
இதன் பொருள் ---
"என்றைக்கு நான் கருவில் புகுந்தேனோ, அதுமுதல் எண்ணற்ற பிறவிகளை எடுத்துவிட்டேன். எத்தனை பிறவி என்று என்னால் கணக்கிட்டுச் சொல்லவும் முடியாது. அவ்வளவு பெரிய கணக்கைப் போட்டு விடைகாணக் கூடிய அறிவு எனக்கு இல்லை. அதனால் இப்படிச் சொல்லி வைக்கிறேன் சுவாமி. எழுகடல் மணலை அளவு இடின் அதிகம் எனது இடர்ப்பிறவி அவதாரம். எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பலபிறவி எடுத்தே இளைத்து, இங்கு அவை நீங்கி, இம்மானிடத்தில் வந்து உதித்து, மண்ணில் வாழ்க்கை மெய்யாக மயங்கி உழன்றால், அடியேன் உன் மாறாக் கருணை தரும் திருவடித் தாமரை என்று அடைவேன். இந்த நினைவுகூட உமது அருளால் வந்ததுதான் சுவாமி. நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா என்னை நினைக்கவைத்த பரம்பொருளே நீர்தானே சுவாமி. இந்த உண்மையை இப்பொழுதுதான் நான் உணர்ந்தேன், இத்தனை பிறவிகளை நான் எடுத்து எடுத்து உழன்றதால், மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன், வேதா என்று சொல்லப்படும் பிரமனும் கைசலித்துவிட்டான். ஆதலால், நாதா, இருப்பைூர் வாழ் சிவனே நான் இன்னும் ஓர் அன்னை கருப்பையில் வாராமல் நீ கண்பார்க்க வேண்டும். அதற்கு ஏதுவாக நான் என்ன செய்தேன் என்பது உமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே சுவாமி. இருந்தாலும் எனது செய்கையை நான் விளக்கிச் சொல்லி உம்மிடம் நான்வேண்டுவதை என்பதை இதோ விளக்குகிறேன் சுவாமி."
"கருவுற்ற நாள் முதலாக இவ்வளவு நெடுங்காலமும், என் மனதில் காமம், வெகுளி முதலான குப்பை நிரம்பிக் கிடந்தது. கோடிய மனத்தால் வாக்கினால் செயலால் கொடிய ஐம்புலன்களால் நான் செய்த பாவம்தான் நரகமும் கொள்ளாது, செய்தவம் புரியினும் தீராதே சுவாமி. நிரம்பிக் கிடந்த அந்தக் குப்பையை எல்லாம் அகற்றியே ஆகவேண்டும் என்னும் நல்லறிவை எமக்கு நீர் உடனிருந்தே ஊட்டியதால், அடியேன் பெற்ற அறிவைக் கொண்டு, குப்பைகளை எல்லாம் மிகவும் முயன்று போக்கிவிட்டேன். அங்கே கிடந்த அஞ்ஞானத்திற்கு ஏதுவாகி துன்பத்தையே விளைவிக்கக் கூடிய ஐம்புல ஆசைகளாகிய முரட்டுக்குணம் கொண்ட எருமைக் கடாக்களையும் அவிழ்த்துத் துரத்திவிட்டேன். அறிவைக் கொண்டு குப்பைகளை அகற்றியபோதும், கொஞ்சம் கொஞ்சம் தூசு இருக்கத்தான் செய்தது. அதனால் அன்பாகிய நீர் அல்லது ஆப்பி நீரைக்கொண்டு மெழுகி விட்டேன். அஞ்ஞானமாகிய துன்பஇருளை ஓட்டுகின்ற ஞானவிளக்காகிய அருள்விளக்கை அங்கே எற்றிவைத்தேன். மெய்ம்மையாம் விதானத்தையும் அமைத்தேன். இவ்வாறு செய்ததால், இதுவரை அற்பமான கீழ்த்தனமான உணர்வுகளிலேயே இருந்த என்னுடைய சிந்தையாகிய பாழ் அறையானது இப்போது பள்ளிஅறை ஆனது அல்லவா. எம்பெருமான் எழ்ந்தருள, இதயத்தாமரையாகிய ஆசனத்தையும் இட்டுவைத்தேனே. பெருமானே மாலயனாதி வானவர் எல்லாம் உமது திருவடியைப் பற்றி அல்லவா உய்ந்தனர். பெருமானே உமது திருவடியில் அணிந்த சிலம்பு ஒலிக்க, அமையாக் காட்சி இமையக்கொழுந்தாகிய எம்பெருமாட்டியுடன் உடனே எழுந்தருள் வேண்டும்."
"சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா
நல் இடிஞ்சில் என்னுடைய நா ஆக – சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேல் இருந்த
பெண்பாகற்கு ஏற்றினேன் பெற்று." --- கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
புற இருளைப் போக்கும் விளக்குப் போல, அகஇருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியைத் தரும் விளக்காக வெண்பா.
எரிகின்ற திரிக்கு முதல் நெய்யாதல் போல, விளங்குகின்ற சொல்லுக்கு முதல் பொருள் ஆதல் பற்றி, அவற்றை முறையே திரி, நெய் என்றார்.
நெய்யில் பொருந்தி எரியும் திரிக்கு நிலைக்களன் அகல் ஆகும். பொருளை விளக்கும் சொல்லுக்கு நிலைக்களன் நாக்கு. திரி - சொல், நெய் - பொருள், அகல் - நாக்கு.
விளக்கு ஏற்றுதல் சிறந்த பணி. புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலினும், அக இருளை நீக்கும் ஞான விளக்கை ஏற்றுவது மிகச் சிறந்த பணி.
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே ---
கண்ணபிரானை மணந்துகொள்ளும் பொருட்டு ஆயர்பாடியில் சில இளங்கோபிகை மாதர்கள் யமுனை நதியில் கௌரி நோன்பு நோற்கும் பொருட்டு சென்றார்கள். தமது உடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினார்கள். புண்ணிய நதிகளில் நிர்வாணமாகக் குளிப்பது பெருங்குற்றம்.
"உடுத்து அலால் நீராடார், ஒன்றுஉடுத்து உண்ணார்,
உடுத்தஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்
ஒன்றுஉடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை." --- ஆசாரக் கோவை
கோபிகையரது குற்றத்தை உணர்த்துவான் பொருட்டு, அந்த ஆடைகளை யெல்லாம் எடுத்துச் சுருட்டி மூட்டையாகக் கட்டி, அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டார் கண்ணன். நீராடிய இளஞ் சிறுமிகள் கரையை அடைந்து தமது உடைமைகளைக் காணாது, பிறகு நாணிக் கோணி, மீளவும் நீரில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார்கள். மரத்தின்மீது நின்ற மணிவண்ணனைக் கண்டு நாண மீதூர்ந்தார்கள். “யசோதை பெற்ற இளஞ் சிங்கமே! எங்கள் ஆடையைக் கொடுத்தருளும்” என்று வேண்டினார்கள். பகவான், “சிறுமியர்களே! புண்ணிய நதியில் ஆடையின்றி நீராடுவது, குற்றம். ஆதலால் அப்பிழை தீரக் கும்பிட்டால் தருவேன்” என்று அருளச் செய்தார். அங்ஙனமே அவர்கள் தொழுது உடைகளைப் பெற்றார்கள்.
"மருமாலிகைப் பூங் குழல் மடவார்
வாவி குடைய, அவர் துகிலை
வாரிக் குருந்தின் மிசை ஏறி,
மடநாண் விரகம் தலைக்கொண்டு,
கருமா நாகம் செந்நாகம்
கலந்தது என, அவ் வனிதையர்கள்
கையால் நிதம்பத் தலம் பொதிந்து,
கருத்தும் துகிலும் நின்று இரப்ப,
பெருமா யைகள் செய்து, இடைச்சியர்கள்
பின்னே தொடர, வேய் இசைத்து,
பேய்ப்பெண் முலைஉண்டு உயிர் வாங்கி,
பெண்களிடத்தில் குறும்பு செய்யும்
திருமால் மருகன் அலவோ நீ?
சிறியேம் சிற்றில் சிதையேலே.
செல்லுத் தவழும் திருமலையில்
செல்வா! சிற்றில் சிதையேலே." --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
ஆடைகளைப் பெருமான் கவர்ந்தான் என்ற வரலாற்றின் உட்பொருள் தேகாபிமானத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.
திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு புலவோனே ---
ஆன்மாக்கள் யாவும் இறைநிலையை உணர்ந்து ஓதி உய்வு பெற, ஆகமங்களையும், வேதங்களையும், புராணம் முதலாகிய நூல்கள் பலவற்றையும் திருஞானசம்பந்தராக எழுந்தருளி வந்து திருப்பதிகங்களில் வைத்து ஓதியருளியவர் முருகப் பெருமான்.
இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.
ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர். திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?. தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.
இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.
அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
தோடு உடைய செவியன் எனத் தொடங்கி, பல்லாயிரம் திருப்பதிகங்களை, வேதங்களின் பொருளை நிறைத்து, அருமையான தமிழால், பாடி அருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான். தொண்டர் மனம் களிசிறப்ப, தூயதிரு நீற்றுநெறி எண்திசையும் தனிநடப்ப, ஏழ்உலகும் களிதூங்க, அண்டர்குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக, வண்தமிழ்செய் தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப வந்து திரு அவதாரம் புரிந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.
"எல்லை இலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழால்" இம்
மாநிலத்தோர்க்கு உரைசிறப்பப்
பல் உயிரும் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து. --- பெரியபுராணம்.
திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத்து அமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்து, அன்னியூர் சென்று போற்றி,
பருக்கை வரைஉரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து,
விருப்புடன் பாடல் இசைத்தார்
"வேதம் தமிழால் விரித்தார்". --- பெரியபுராணம்.
எழுது மாமறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி, முதல்வரைப் போற்றி, முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில். --- பெரியபுராணம்.
"சுருதித் தமிழ்க் கவிப் பெருமாளே" என்று திருத்தணிகைத் திருப்பகழில் அடிகளார் முருகப் பெருமானைப் போற்றி உள்ளது அறிக.
கருத்துரை
முருகா! நிலையற்ற பொருளைச் சதம் என்று கருதாமல்,
தேவரீரை வழிபட்டு உய்ய அருள் புரிவீராக.