பொது --- 1078. பெருக்க நெஞ்சு

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பெருக்க நெஞ்சு (பொது)


முருகா! 

அடியேன் மனத் திருகலை ஒழித்து அருள்வாய்.


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்

     தனத்த தந்தனம் ...... தனதான


பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்

     ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும்


பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்

     றமைத்த பெண்தனந் ...... தனையாரத்


திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்

     திறத்தை யன்புடன் ...... தெளியாதே


சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்

     திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ


தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்

     தரித்த குன்றநின் ...... றடியோடுந்


தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்

     தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ்


சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்

     துணைச்செய் கின்றநின் ...... பதமேவும்


சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்

     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


பெருக்க நெஞ்சு உவந்து, உருக்கும் அன்பு இலன்,

     ப்ரபுத் தனங்கள் பண்பு ...... எணும் நாணும்


பிழைக்க ஒன்று இலன், சிலைக்கை மிண்டர் குன்று

     அமைத்த பெண் தனம் ...... தனை, ஆரத்


திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற, நின்

     திறத்தை அன்புடன் ...... தெளியாதே,


சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என்

     திருக்கும் என்று ஒழிந் ...... திடுவேனோ?


தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன்

     தரித்த குன்றம் நின்று ...... அடியோடும்


தடக்கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம்

     தறித்த கண்டன், எண் ...... திசையோரும்,


சுருக்கம் இன்றி நின்று அருக்கன், இந்திரன்,

     துணைச் செய்கின்ற நின் ...... பதம் மேவும்


சுகத்தில் அன்பரும், செக த்ரயங்களும்

     துதிக்கும் உம்பர் தம் ...... பெருமாளே.


பதவுரை

தருக்கி அன்று சென்று --- அகங்காரத்தோடு அன்று ஒரு நாள் போய்.

அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்றம் --- அருட்கண்ணோட்டம் பொருந்திய சிவபரம்பொருள் வீற்றிருக்கும் மலையாகிய திருக்கயிலாயத்தை,

நின்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன் --- அடிவாரத்தில் சென்று நின்று, அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனுடைய தலைகளை நெறித்தருளிய வீரராகிய சிவபெருமானும், 

எண் திசையோரும் --- அட்ட திக்குப் பாலகர்களும்,

சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் --- விரிந்த கிரணங்களை உடைய கதிரவனும்,

இந்திரன் --- இந்திரனும், 

துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் --- துணையாய் இருந்து காக்கின்ற தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்துள்ள அடியார்களும்,

செக த்ரயங்களும் --- மூவுலகில் உள்ளோரும்,

துதிக்கும் உம்பர் தம் பெருமாளே --- போற்றித் துதிக்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பு இலன் --- உள்ளம் நிரம்ப மகிழ்ச்சியோடு உருகுகின்ற அன்பு இல்லாதவனும்,

ப்ரபுத் தனங்கள் --- பெருமையில் சிறந்த நிலையோ,

பண்பு --- நற்பண்புகளோ,

எ(ண்)ணு(ம்) நாணும் --- மதிக்கத் தக்க நாணமோ, 

பிழைக்க ஒன்று இலன் --- உய்தி பெறும் வகைக்கு ஒன்றும் இல்லாதவனும் ஆகிய அடியேன்,

சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற --- வில்லை ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் அவதரித்த வள்ளிநாயகியின் மார்பகங்களை, திருக்கைகளால் ஆரத் தழுவும்பொருட்டுச் சென்ற

நின் திறத்தை அன்புடன் தெளியாதே --- தேவரீரின் அருட்திறத்தை உள்ளன்போடு தெளிந்து அறியாமல்,

சினத்தில் மண்டி --- உள்ளத்தில் (காமக்) குரோதம் (முதலாகிய குற்றங்கள்) நிரம்பியிருக்க,

மிண்டு உரைக்கும் வம்பன் --- இடக்கர் சொற்களைப் பேசித் திரியும் வீணன் ஆன அடியேன்,

என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ --- எனது சிந்தைத் திருகலை என்று ஒழியப் பெறுவேன்?

பொழிப்புரை

அகங்காரத்தோடு அன்று ஒரு நாள் போய். அருட்கண்ணோட்டம் பொருந்திய சிவபரம்பொருள் வீற்றிருக்கும் மலையாகிய திருக்கயிலாயத்தை, அடிவாரத்தில் சென்று நின்று, அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனுடைய தலைகளை நெறித்து அருளிய வீரராகிய சிவபெருமானும், அட்ட திக்குப் பாலகர்களும், விரிந்த கிரணங்களை உடைய கதிரவனும், இந்திரனும், துணையாய் இருந்து காக்கின்ற தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்துள்ள அடியார்களும், மூவுலகில் உள்ளோரும் போற்றித் துதிக்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

உள்ளம் நிரம்ப மகிழ்ச்சியோடு உருகுகின்ற அன்பு இல்லாதவனும், பெருமையில் சிறந்த நிலையோ, நற்பண்புகளோ, மதிக்கத் தக்க நாணமோ,  உய்தி பெறும் வகைக்கு ஒன்றும் இல்லாதவனும் ஆகிய அடியேன், வில்லை ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் அவதரித்த வள்ளிநாயகியின் மார்பகங்களை, திருக்கைகளால் ஆரத் தழுவும்பொருட்டுச் சென்ற தேவரீரின் அருட்திறத்தை உள்ளன்போடு தெளிந்து அறியாமல், உள்ளத்தில் (காமக்) குரோதம் (முதலாகிய குற்றங்கள்) நிரம்பியிருக்க, இடக்கர்ச் சொற்களைப் பேசித் திரியும் வீணன் ஆன அடியேன், எனது சிந்தைத் திருகலை என்று ஒழியப் பெறுவேன்?

விரிவுரை

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பு இலன் --- 

பெருக்க - நிரம்ப, நீடித்த.

உள்ளம் நிறைய அன்று இருந்தால் அது நீடித்து இருக்கும். அன்பினால் உள்ளம் உருகும். இறைவனது பொருள்சேர்ந்த புகழை மகிழ்ச்சியுடன் திருவருளைப் பெறும் வழியாகும். அவனது புகழை விருப்பொடு படிப்பவர்க்குத் துன்பங்கள் நீங்கும். முடிவிலா ஆனந்தம் உண்டாகும். "அன்பினால் உருகி விழிநீர் ஆளாக வாராத முத்தியினது ஆவேச ஆசைக் கடற்குள் மூழ்கி......... மொழி தழுதழுத்திட உருகும் சன்மார்க்க நெறி" என்றார் தாயுமான அடிகளார்.

"இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

 இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”       ---திருப்புகழ்.

"உன்புகழே பாடிநான் இனி அன்புடன் ஆசார பூசைசெய்து

 உய்ந்திட வீணாள் படாதுஅருள்         புரிவாயே"    ---(கொம்பனையார்) திருப்புகழ்.

"பாதமலர் மீதில் போதமலர் தூவிப்

 பாடும் அவர் தோழத் தம்பிரானே”"    ---(ஆலவிழி) திருப்புகழ்.


ப்ரபுத் தனங்கள் --- 

பெருமையில் சிறந்த நிலை.


எ(ண்)ணு(ம்) நாணும் --- 

எண்ணுதல் - மதிக்கப்படுதல்,

நாணுதல் - பயபக்தி காட்டுதல், அஞ்சுதல், அடங்குதல், குவிதல்.

"நாண் உடைமை" என்று ஓர் அதிகாரத்தை வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார். நாணம் உடைமை ஒன்றே மனிதர்க்குச் சிறப்புத் தருவது. 

"ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல,

நாண் உடைமை மாந்தர்க்குச் சிறப்பு" --- திருக்குறள்.

உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மற்றவையும் வேறு வேறு அல்ல. அவை மக்களுக்கு எல்லாம் பொதுவானவையே. நல்ல மக்களுக்குச் சிறப்பினைத் தருவது நாண் உடைமையே.

"அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல்

பிணி அன்றோ பீடுநடை" --- திருக்குறள்.

மேலோர்க்கு நாணம் உடைமை ஒன்றுதானை ஒப்பற்ற அணிகலம் ஆகும். அந்த அணிகலம் இல்லையானால், அவரது வீறுநடை என்பது நோய் ஆகும்.


பிழைக்க ஒன்று இலன் ---

பிழைப்பு - உய்தி, தப்பிப் பிழைத்தல்.

"பிழைப்பு வாய்ப்பு ஒன்று இல்லா நாயேன்" என்பது மணிவாசகம்.  


சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே --- 

சிலை - வில். வில்லைக் கேயில் கொண்ட வேடர்கள்.

மிண்டர் - வலிமை பொருந்தியவர். அறிவில்லாதவர்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார், சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்து, தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார். தினைப்புனத்தைக் காவல் கொண்டது, வள்ளிநாயகியார் புரிந்த தவத்தைக் குறிக்கும்.

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

அடியார்கள் இறைவன் அடைய வேண்டித் தவம் புரிவார்கள். அவர்களால் இறைவனைத் தாமாகச் சென்று அடைய முடியாது. இறைவன் அடியார்களின் தவத்திற்கு இரங்கி, தான் இருக்கும் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆட்கொள்ள வேண்டும். நல்லடியார்களைத் தேடிச் சென்று இறைவன் ஆட்கொண்டு அருள் புரிவான் என்பதற்கு, திருக்கயிலாயத்தை விட்டு, திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்து ஆண்டகொண்ட வரலாறு சான்று. மணிவாசகப் பெருமானையும், திருக்கயிலாயத்தை விட்டு, திருப்பெருந்துறைக்கு வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார் சிவபரம்பொருள். "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறை உறை சிவனே" என்று மணிவாசகப் பெருமான் உள்ளம் உருகப் பாடி அருளியதை எண்ணுக. அருணகிரிநாதப் பெருமான், "மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே!" என்று பாடி அருளியதையும் சிந்தையில் வைத்துக் கொள்ளவேண்டும். 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு,  தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையை விட்டு, வள்ளிமலைக்கு எழுந்தருள் புரிந்தார். இது "வள்ளிச் சன்மார்க்கம்" ஆகும்.


மிண்டு உரைக்கும் வம்பன் --- 

மிண்டு உரைத்தல் - இடக்கர் சொற்களைப் பேசுதல். 

வம்பன் - வீணன்.

 

திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ --- 

திருக்கு - மாறுபாடு. உள்ளத்தில் உண்டாகின்ற மாறுபாடு.

"திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்,

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே" --- அப்பர் பெருமான்.

பொருள்களில் அழுக்குச் சேர்ந்தால் போக்குவதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவோம். புலன்கள் வழியே மனம் செல்லும்போது, காமம் என்னும் விருப்பு, வெகுளி என்னும் வெறுப்பு, மயக்கம் என்னும் அறியாமை ஆகிய மூன்றுவிதமான அழுக்குகளும் நீங்காமல் ஒட்டிக் கொண்டே இருக்கும். இவை மனம், மொழி, மெய் என்னும் மூவிதத்தால் நிகழும். மனத்தால் உண்டான அழுக்கு. வாக்கால் உண்டான அழுக்கு. செயலால் உண்டான அழுக்கு இந்த மூன்று விதமான அழுக்கினைக் களைவதற்கு ஓர் உபாயத்தை, சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்கின்றார்.

"திருக்கு உறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,

           தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

           அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

            அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

            வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

           விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து, மின்னொளி கடந்த

            ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

            ஈசனே, மாசிலா மணியே."       

      மனத்தால் உண்டாகும் அழுக்கு ஆகிய அழுக்காறு,  அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, இறைவன் திருவடித் தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.

வாக்கினால் உண்டாகும், பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்னும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.

பாவச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம்  காயத்தால்  உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.

      இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைப் போக்கி, இறைச் சிந்தனையில் திளைப்பது பற்றி சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.

      மனத்தை அடியாகக் கொண்டு நினைவும், அதனால், வாக்கைக் கொண்டு சொல்லும், உடம்பைக் கொண்டு செயலும் நிகழும். மனம் தூய்மையாக இருந்தால், நினைவு, சொல், செயல் ஆகியவையும் தூய்மையாக அமையும். இதனால், தனக்குக் கேடு வருவதில்லை. பிறருக்குக் கேடு விளைவதில்லை. மனம் தூய்மை அற்றுப் போனால், நினைவு, சொல், செயல் யாவும் தூய்மை இல்லாது போகும். அதனால், தனக்கும், பிறருக்கும் கேடு விளையும்.

 

தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்றம் சென்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன் --- 

தருக்கி - நான் என்னும் அகங்காரம் கொண்டு.

அருள் கண் ஒன்று அரன் --- அருளாகிய கண் பொருந்தி உள்ள சிவபரம்பொருள். (ஒன்றுதல் - பொருந்துதல்)

தரித்த குன்றம் - சிவபரம்பொருள் இருந்த திருக்கயிலாய மலை.

கண்டன் - வீரன்.

இராவணன் திக்குவிஜயம் புரிந்து வந்தபோது, திருக்கயிலை மலைக்கு மேல் பறக்க இயலாது, அவனுடைய புஷ்பக விமானம் தடைப்பட்டு நின்றது. திருக்கயிலை மலையைக் காவல் புரிகின்ற திருநந்தி தேவர் “ஏ தசக்ரீவனே! இது கண்ணுதற் கடவுள் உறையும் எண்ணுதற்கரிய புகழுடைய திருக் கயிலாய மலை. மதியும் கதிரும் வலம் வருகின்ற இம் மலைக்குமேல் உன் விமானஞ் செல்லாது. வலமாகச் செல்” என்றார். தோள் வலியால் தருக்குற்று நின்ற அவ்வரக்கன் சீறி, “குரங்குபோல் முகம் வைத்திருக்கின்ற நீ எனக்கு அறிவுரை பகிர்கின்றனையோ?” என்றான். திருநந்திதேவர் சிறுநகை செய்து, “திறங்கெட்ட தீயவனே, குரங்கினால் உன் நாடும் நகரும் அழிந்து உனக்குத் தோல்வி எய்தக் கடவது” என்று சபித்தருளினார்.

இதை வீடணன் இராவணனிடம் எடுத்துக் கூறுவதாகக் கம்பர் பாடியது காண்க.

"மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள்

நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,

கூலவான் குரங்கினால் குறுகும் கோள், அது

வாலிபால் கண்டனம் வரம்பில் ஆற்றலாய்.

"எல்லையில்லாத  வல்லமை உடையவனே! நீ, ஓங்கி, உயர்ந்த  திருக் கைலாய மலையைப் பேர்த்து எடுத்த அந்த நாளிலே, நான்கு தோள்களை உடைய நந்தி தேவன்  கூறிய சாபத்தினாலே, வால் உள்ள பெரிய குரங்கினால் தீங்கு என்ற  அதனை வாலியிடம் பார்த்தோமே" என்று இராவணனை விபீடணர் எச்சரித்தார்.

நந்தேவர் கூறியதற்கு வெகுண்டு, “இந்த நந்தியையும் நந்திக்குத் தவைனாகிய ஈசனையும் இவ்வெள்ளி மலையையும் பறித்துக் கடலில் எறிவேன்” என்று கூறி, இருபது கரங்களாலும் வெள்ளி மலையைப் பேர்த்துத் தோளில் வைத்து அசைத்தான். உமாதேவியார் இறைவனை நோக்கிப் “பெருமானே! மலை நிலை குலைகின்றதே” என்றாள்.

புரமெரித்த அரனார் புன்னகை புரிந்து, இடக் காலின் பெருவிரல் நக நுனியால் சிறிது ஊன்றி அருளினார். இராவணன் அப்படியே மலையின் கீழ் எலிக் குஞ்சுபோல் அகப்பட்டுத் தாளும் தோலும் நெரிந்து விரிந்து ‘ஓ’ என்று கதறிப் பதறி அழுதான். அதனால் இராவணன் என்று அவனுக்குப் பேர் ஏற்பட்டது.

"முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே

உந்திமா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்"    ---  திருஞானசம்பந்தர்.


எண் திசையோரும் --- 

அட்ட திக்குப் பாலகர்களும்.


சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் --- 

விரிந்த கிரணங்களை உடைய கதிரவன்.


துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் --- 

இறைவன் திருவடியே உயிர்களுக்குக் காவலாய் அமைந்ததாகும். மேலான சுகத்தைத் தருவதாகும். திருவடி இன்பம் குறித்து, அப்பர் பெருமான் பாடியருளிய பாடலைக் காண்க.

"மாசில் வீணையும், மாலை மதியமும்,

வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,

மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே,

ஈசன் எந்தை இணையடி நீழலே."

"துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள்பாலும் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ?" என்று பிறிதோர் திருப்புகழில் அடிகளார் அருளியது காண்க.


செக த்ரயங்களும் --- 

செகம் - உலகம்.

த்ரயம், திரயம் - மூன்று. மூவுகமும் போற்றுகின்ற.


கருத்துரை


முருகா! அடியேன் மனத் திருகலை ஒழித்து அருள்வாய்.













No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...