கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது
-----
"துட்டனைக் கண்டால் தூர விலகு" என்னும் முதுமொழி உண்டு. பதர்களையும் துட்டர்களையும் இந்தக் கலியுகத்தில் அடையாளம் கண்டு, அவர்களை நன்னெறிப்படுத்த வழியே இல்லையா என்று தோன்றும்.
கிருதயுகத்தில் மக்கள் அறநெறியுடன் வாழ்ந்தார்கள். அறிவு, தியானம், தவம் என்பன சிறந்து இருந்த யுகம் அது. திரேதாயுகத்தில், நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். இராமாவதாரம் இந்த யுகத்தில் நிகழ்ந்தது என்று கூறுவர். துவாபரயுகத்தில், சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். மகாபாரதம் தோன்றியது இந்த யுகத்தில்தான் என்று கூறுவர். கலியுகத்தில், நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும், மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டதாகும். இந்தக் கலியுகத்தில் மக்கள் அவரவர் தமது சுயநலத்திற்காக அதர்ம வழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைமைக் குணமும், பொறாமைக் குணமும் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர். பிறரையும் சிரமத்துக்கு உள்ளாக்குவதில் மகிழ்ச்சி கொள்வர்.
"கலி" என்னும் சொல்லுக்கு, ஆரவாரம், துன்பம், செருக்கு, வஞ்சகம், வறுமை என்னும் பொருள்கள் உண்டு. எனவே, கலியுகத்தில் இவை எல்லாம் உண்டு. இவற்றோடு தான் நமது வாழ்நாளைக் கழிக்கவேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க, இறையருளைப் பெறுவது ஒன்றுதான் வழி.
யுகங்கள்தோறும் மக்களில் தீயவர்களும், கீழானவர்களும் இருந்தார்கள். தீயவர்களை - மூர்க்கர்களை - கீழ்மக்களை - கயவர்களை, அவர்களது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிட முடியாது. அவர்களது செயல்களை வைத்தே மதிப்பிட்டுக் கொள்ள முடியும். புறத் தோற்றத்தில் தீயவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிவார்கள். யாரிடத்தில் என்ன குணம் பொருந்தி உள்ளது என்பதை, அவர்களது செயல்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். விலங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். அவனிடத்தில் பிறவிகள்தோறும் பொருந்தி வந்த விலங்குத் தன்மை இருக்கும். அதில் இருந்து விடுபட்டு, தன்னை மனிதனாக்கிக் கொள்ள, நல்லறிவு பெற வேண்டும். நல்லறிவு பெறுவதற்கு அறிவுநூல்களைப் பயிலவேண்டும்.
"அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவரோடு, கல்லாதவரை ஒப்பிட்டு நோக்க, அவர் நன்மை உடைய மனிதர், இவர் தீமையை உடைய விலங்கு போல்பவர்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். மனிதர் யாவரும் உருவத்தால் ஒத்து இருக்கின்றனர். நன்மை உடையவர்கள் நூல்களைக் கற்று வல்லவர்கள். கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும், தீமை தரும் விலங்கு மனத்தை உடையவர் என்பதை அறிவுறுத்த,
"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை அவர்".
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.
இரக்கம் கொள்ளாமல் இருப்பது மிருகங்களின் இயற்கையும் அல்ல. பறவைகளின் இயற்கையும் அல்ல. அவைகளுமே இரக்கம் கொள்ளுகின்றன. விலங்கு வடிவில் இருந்தாலும், எல்லா நன்னெறிகளையும் அறிந்து இருந்தவன் வாலி. அப்படி இருந்தும், அறநெறிக்கு மாறாக நடந்து கொண்டது வாலியின் குற்றம். இராமபிரானிடம் அவன் அறநெறிகளை எடுத்துக் கூறி, இராமனது செயலில் குற்றம் கண்டுபிடித்ததில் இருந்து, அறநெறிகளை அறிந்து இருந்தவன் வாலி என்பது தெளிவாகும். இராமபிரானிடத்தில் அவன் கூறிய சொற்களே அவன் அறநெறி எது, அல்லாத நெறி எது என்பதை நன்கு அறிந்தவன் என்பதைப் புலப்படுத்தி விட்டது. தன்பால் குற்றம் இல்லை என்று வாலி கூறிய சொற்களை மறுத்து, அவனுடைய செயல் குற்றம் உடையதே என்கிறார் இராமபிரான். நல்லது எது? தீயது எது? பகுத்தறியும் அறிவு இல்லாமல் வாழ்வதுதான் விலங்கின் தன்மை என்பது ஆகும்.
"நன்று, தீது, என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்?
நின்ற நல்நெறி, நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால்". --- கம்பராமாயணம், வாலிவதைப் படலம்.
இதன் பொருள் ---
விலங்கின் இயல் - விலங்குகளின் இயல்பாவது; நன்று தீது என்று - நல்லது இது, தீயது இது என்று; இயல் தெரி - அதனதன் இயல்புகளை உள்ளபடி உணர்கின்ற; நல் அறிவு இன்றி - நல்ல அறிவில்லாமல்; வாழ்வது அன்றோ - (மனம் போனவாறு) வாழ்வது அல்லவா? நின்ற நல் நெறி - நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்; நீ அறியா நெறி - நீ ஆராய்ந்து உணராத அறவழி; ஒன்றும் இன்மை - ஒன்றும் இல்லை என்பதை; உன் வாய்மை உணர்த்தும் - இப்பொழுது நீ பேசிய உனது வாய்மொழியே உணர்த்தும்.
"தக்க இன்ன, தகாதன இன்ன, என்று
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும் விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே" --- கம்பராமாயணம், வாலிவதைப் படலம்.
இதன் பொருள் ---
தக்க இன்ன, தகாதன இன்ன என்று - தகுதியானவை இவை, தகுதியில்லாதவை இவை என்று தெளிந்து; ஒக்க உன்னலர் ஆயின் - நீதிநூல் முறைமைக்கு ஏற்ப எண்ணாதவர்களானால்; உயர்ந்துள மக்களும் விலங்கே - உருவத்தாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும் விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்; மனுவின் நெறி புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே - மனுதர்மம் வகுத்த நன்னெறியில் நடக்குமாயின், அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும் தேவர்களுக்கு ஒப்பானவையே.
ஐம்பொறி உணர்வும், உணவு, உறக்கம் போன்ற செயல்களும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவை, தீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும், மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால், மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் வைத்தே எண்ணப்படுவர். விலங்காய்ப் பிறந்தும் நீதிநெறியோடு வாழுமாயின் விலங்கும் தேவர்கட்குச் சமமாக மதிக்கப்படும் என்பதால், 'விலங்கும் புத்தேளிரே' என்றார்.
இதனை, பின்வரும் திருக்குறளால், நாயனார் நம்மைத் தெளிவுபடுத்துகின்றார்.
"கணை கொடிது, யாழ்கோடு செவ்விது, ஆங்கு, அன்ன
வினைபடு பாலால் கொளல்".
இதன் பொருள் ---
அம்பு வடிவில் நேராக இருப்பினும், செயலால் தீங்கு விளைவிப்பது. கழுத்தில் வளைந்து யாழ் இருப்பினும், அது தரும் இனிமையான இசை இன்பத்தைத் தரும்.
அதுபோலவே, ஒருவரை நல்லவர் தீயவர் என்பதை அவருடைய புறத்தோற்றத்தால் கூற இயலாது. ஆகவே, ஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும், பிற நிலைகளாலும் மதிப்பிடக் கூடாது. அவர் செய்யும் செயலைக் கொண்டே நல்லவரா, தீயவரா என்பதை அறிந்து கொள்ளவேண்டும். புறத்தோற்றத்தில் எல்லோரும் மனித வடிவில்தான் உள்ளனர். அவர் சொல்லும் சொல் கூட மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், அவரது சொல் வேறு, செயல் வேறாக இருக்கும் என்பதை வாழ்வியலில் நாம் அறிந்து கொள்ள முடியும். காட்டில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் வடிவத்தாலும், செயலாலும் வேறுபட்டு இருப்பவை. அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கு உபாயங்கள் உள்ளன. ஆனால், கயவர்களும் மனித வடிவில்தான் இருக்கின்றனர். செயல்களை வைத்தே கயவர்களை அறிந்து கொள்ள முடியும். கயவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான உபாயத்தை, அறிவு நூல்களை ஓதுவதன் மூலமாகவும், கற்ற பெரியோர்கள் சகவாசத்தாலுமே அறிந்து கொள்ள முடியும்.
எந்த விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.
"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்
கொண்டு உட்படுத்தி விடலாம்,
கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது
கொடுத்துத் திருப்பிவிடலாம்,
உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை
உகந்து கூத்தாட்டி விடலாம்,
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி
உண்டாக்க லாம்,உயிர்பெறப்
பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்
பெரும்புனல் எனச்செய்யலாம்,
பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்
பின்புவரு கென்றுசொலலாம்,
மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்
மட்டும் திருப்ப வசமோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே".
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம். கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் - மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.
எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் அதிகாரத்துள்,
"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல்"
என்னும் திருக்குறளின் வழி, கயவர்கள் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார்.
"தேவர் அனையர் கயவர், அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலால்"
என்னும் திருக்குறளின் வழி, கயவர்கள் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார்.
மனிதர்களை முதல் இடை கடை என்று மூன்றுவகைப் படுத்தலாம். முதல் வகையினர் பக்குவர்கள். இவர்கள் உள்ளும் புறமும் தூய்மையானவர். உள்ளேயும் வெளுப்பு, புறத்தேயும் வெளுப்பு. "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பக்குவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் எழாது. இடைப்பட்டவர்கள் பக்குவாபக்குவர்கள். அதாவது, பக்குவப்பட்டவர்களும் அல்லர், பக்குவப்படாதவர்களும் அல்லர். இவர்கள் அகத்தே கறுத்து, புறத்தே வெளுத்து இருப்பவர்கள். இவர்களைத் திருத்தவே இந்த உலகத்தில் இறைவன் அருளால் தாம் வருவிக்கப்பட்டதாக வள்ளல்பெருமான் பாடுகின்றார்.
"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருந்தி, சன்மார்க்க
சங்கத்து அடைவித்திட, அவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற்கு என்றே எ(ன்)னை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே." --- திருவருட்பா.
இதன் பொருள் ---
மனத்தில் தீய எண்ணங்களால் அழுக்குற்றுப் புறத்தே தூயவர் போல ஒழுகுகின்ற மக்கள் அனைவரையும் திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் சேர்க்கவும், அவர்களும் இவ்வுலக வாழ்க்கையிலேயே மேலுலக இன்பத்தைப் பெறுவித்திடுதற்கும் என்றே என்னை இந்தக் காலத்தில் இறைவன் வருவிக்க வந்து அவனது திருவருளைப் பெற்றுள்ளேன்.
கடைப்பட்டவர்களாகிய கயவர்களிடத்து அஞ்ஞானம் நிறைந்து இருக்கும். இவர்கள் உள்ளும் புறமும் கறுத்தவர்கள். கடவுள் உண்டு என்பதையும், பாவபுண்ணியங்கள் உண்டு என்பதையும், வினையின் பயன் உண்டு என்பதையும் நம்பாதவர்கள். இவர்களைப் பீடித்து உள்ள இந்தத் தீராத நோயைத் தீர்த்து, அவர்களை நல்வழிப்படுத்த மருந்து அருளி உதவுமாறு வயித்தியநாதப் பெருமானை வேண்டுகின்றார். கயமைத் தனத்தைத் தொழில்படுத்துகின்ற அஞ்ஞானம் என்னும் நோய் உயிரைப் பற்றியது. அது தீராத பிணியாகிய பிறவிப்பிணிக்குக் காரணமாக அமைகின்றது. உடல்நோய், உள்ளநோய், உயிர்நோய் ஆகியவற்றைத் தீர்த்து அருள் புரிகின்ற மருத்துவராக இறைவன் உள்ளான். வயித்தியநாதப் பெருமான் மீது வள்ளல்பெருமான் பாடி அருளிய பாடலைக் காண்போம்.
"கல்லையும் உருக்கலாம்; நார் உரித்திடலாம்;
கனிந்த கனியாச் செய்யலாம்;
கடுவிடமும் உண்ணலாம்; அமுது ஆக்கலாம்; கொடும்
கரடிபுலி சிங்கம் முதலா
வெல்லும் மிருகங்களையும் வசம் ஆக்கலாம்;அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்;
மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம்; மணலை
மேவுதேர் வடம் ஆக்கலாம்;
இல்லை ஒரு தெய்வம், வேறு இல்லை, எம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள் குறியே
எங்கள்குல தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்
எத்துணையும் அரிது அரிதுகாண்;
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா
மணி உலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வயித்தியநாதனே." --- திருவருட்பா.
இதன் பொருள் ---
மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரான் ஆகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) கோயில் கொண்டு அருளும் வைத்தியநாதப் பெருமானே! கருங் கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்து எடுக்கலாம்; அக் கல்லைப் பழுத்த பழமாகவும் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப் போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்களுக்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை உடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும். அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்தினை அருள்வீராக.
எரிமலைகளில் கற்கள் உருகி நெருப்புக் குழம்பாய் வெளிவருவதைப் பார்க்கின்றோம். எனவே, “கல்லையும் உருக்கலாம்” என்றார். சிற்பத்தொழில் வல்லவர், கல்லில் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண, "கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் “கல் நார் உரித்து என்னை ஆண்டு கொண்டான்" எனவும், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்” என்று பாடி உள்ளதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வள்ளல்பெருமான் பாடுகின்றார். கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால், அவனுக்கு அடியவராகிய அப்பர்பெருமான், சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டு, சாவாது இருந்தார். “வஞ்சனை பால்சோறு ஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே” அப்பர்பெருமானே பாடி உள்ளார். இதனை, "நஞ்சு அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு" என்றே சேக்கிழாரும் பாடி உள்ளார். எனவே, “கடல் விடமும் உண்ணலாம், அமுது ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்" என்று தாயுமான அடிகளார் பாடி உள்ளார். அதனை ஒட்டியே, "கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்" என்றார் வள்ளல்பெருமான். வாழைத் தண்டை விறகு ஆக்கினார் பட்டினத்தார். உலகவர், வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் பேசுவர். எனவே, “மிக்க வாழைத் தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். கயவர்கள் காம இன்பத்தையேபெரிதும் விரும்பி இருப்பர். காம இன்பம் தரும் பெண் அல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளால் அன்றி இத்தகு கயவர்க்கு அறிவு விளக்கம் பெறாது என்பது பற்றி, அவர் கொண்டு உள்ள “உணர்வு அற மருந்து அருள்க” என வேண்டுகிறார்.
No comments:
Post a Comment