பொது --- 1077. புரக்க வந்த

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புரக்க வந்த (பொது)

முருகா! 

உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்

     தனத்த தந்தனம் ...... தனதான


புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்

     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்


புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்

     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே


செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்

     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்


த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்

     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ


குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்

     குவட்டி லங்கையுந் ...... துகளாகக்


கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்

     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்


துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்

     துரத்த னும்பிறந் ...... திறவாத


சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்

     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புரக்க வந்த, நம் குறக் கரும்பை, மென்

     புனத்தில் அன்று சென்று ...... உறவாடி,


புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண்

     புதுக் குரும்பை, மென் ...... புயம் மீதே


செருக்க நெஞ்சகம் களிக்க, அன்புடன்

     திளைக்கும் நின் திறம் ...... புகலாது, இந்-


த்ரியக் கடம் சுமந்து, அலக்கண் மண்டிடும்

     தியக்கம் என்று ஒழிந் ...... திடுவேனோ?


குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும்

     குவட்டு இலங்கையும் ...... துகளாக,


கொதித்த கொண்டலும், த்ரி அட்சரும், கடம்

     கொதித்து மண்டு வெம் ...... பகை ஓட,


துரக்கும் விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்-

     துரத்தனும், பிறந்து ...... இறவாத


சுகத்தில் அன்பரும், செக த்ரயங்களும்

     துதிக்கும் உம்பர் தம் ...... பெருமாளே.

பதவுரை

குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும்,

திரி அட்சரும் --- (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும்,

கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், 

விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும்,

பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும்,

செக த்ரயங்களும் --- மூவுலகங்களும் துதிக்கின்றவரும்,

துதிக்கும் --- துதிக்கின்ற

உம்பர்தம் பெருமாளே --- தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

புரக்க வந்த நம் குறக் கரும்பை --- உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி

மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி,

புடைத்து --- பக்கங்களில் பருத்து விளங்கி,

அலங்க்ருதம் படைத்து எழுந்த ---  அலங்காரத்தோடு எழுந்துள்ளதும்,

திண் புதுக் குரும்பை --- வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய மார்பகங்களின் மீதும், 

மென் புய(ம்) மீதே --- மென்மையான தோள்களின் மீதும்,

செருக்க நெஞ்சகம் களிக்க --- மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய,

அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது --- அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல்,

இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

பொழிப்புரை

குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும், சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும், மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும்,  ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும், பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும், மூவுலகங்களும் துதிக்கின்றவரும், தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி, அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி, பக்கங்களில் பருத்து விளங்கி, அலங்காரத்தோடு எழுந்துள்ளதும், வலிமையும் எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய அவரது மார்பகங்களின் மீதும், மென்மையான தோள்களின் மீதும், மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய, அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல், ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

விரிவுரை


புரக்க வந்த நம் குறக் கரும்பை --- 

புரத்தல் - ஆண்கொண்டு காத்து அருளுதல்.

குறக் கரும்பு என்பது குறமகளாகிய வள்ளிநாயகியைக் குறிக்கும்.


மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- 

மென்மை - அமைதி. மென்புனம் - அமைதி வாய்ந்த தினைப் புனம்.


புடைத்து --- 

"புடை பரந்து ஈர்க்கு இடை போகா இளமுலை" என்பது மணிவாசகம். 


அலங்க்ருதம் ---

அலங்காரம். 


திண் புதுக் குரும்பை --- 

திண்மை - வலிமை.

புது - அழகு பொருந்திய,

குரும்பை - இளநீர்.

"மிருகமத புளகித இளநீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்" என்பது தேவேந்திர சங்க வகுப்பு.

செருக்க நெஞ்சகம் களிக்க ---

செருக்கு - மகிழ்ச்சி. 


அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- 


நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக

     நாயக மாமயில் ...... உடையோனே.     --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்து, உரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

 

மார சரம் பட, மோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும், தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.  --- (பாரநறுங்) திருப்புகழ்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

  தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கைதொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.


வள்ளி என்பது ஜீவான்மா;

முருகன் பரமான்மா;

நாரதர் வள்ளியினது தவ வலிமை.

தவ வலிமை ஆண்டவனை அருள்புரிய அழைத்துவரும்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே! நின் பெயர் யாது? நின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   இவ்வாறு பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.


"தாய்துயில் அறிந்து, தங்கள்

     தமர்துயில் அறிந்து, துஞ்சா

நாய்துயில் அறிந்து, மற்றுஅந்

     நகர்துயில் அறிந்து, வெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப்

     பெரும்பொழுது அதனில், பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி

     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்."

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி,  எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

அருள்வள்ளல் ஆகிய முருகப் பெருமானின் அருள்திறத்தைப் பேசிப் பணிந்து வழிபடுவதால் நற்கதி அடையாலம், அதை விடுத்து, பொறிகளின் வழியே மனதைச் செலுத்தி, ஆசைக் கடலில் விழுந்து, அறிவு மயங்கி அல்லல் படுதல் கூடாது என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.


குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- 

குரக்கினம் - குரங்கு இனம்.

தண்டம் - படை.

குவடு - மலை. குவட்டு இலங்கை - மலைகளால் சூழப்பட்டுள்ள இலங்கை.

இலங்கையர் கோனை வெற்றி கொண்ட, மேக நிறத்தவர் ஆன திருமால்.


திரி அட்சரும் --- 

அட்சம் - கண். திரி அட்சம் - முக்கண். 

சூரியன், சந்திரன், அக்கினி என்பதையே தமக்கு மூன்று கண்களாக உடைய சிவபெருமான். 

முக்கண்ணன். திரியம்பகன்.


கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- 

கடம் - மதநீர்.


விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- 

விம்பம் - ஒளி.

கிம்புரி - யானையில் கொம்பில அணியப்படும் பூண். பிரசண்டம் - வேகம்.

சிந்துரம் - யானை. அயிராவதம் என்னும் யானை.

சிந்துரத்தன் --- சிந்துரம் எனப்படும் யானையை வாகனமாக உடைய இந்திரன்.


மூம்மூர்த்திகளும் இந்திரனும் முருகப் பெருமானைத் துதிக்கின்றனர்.

படைத்து அளித்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே --- திருப்புகழ்.

மூவர் தேவாதிகள் தம்பிரானே - திருப்புகழ்.


பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- 

பிறப்பும் இறப்பும் துன்பத்திற்கு இடமானவை. துன்பத்தைத் தருபவை. 

அற்ப இன்பத்தை உடையது மானிடப் பிறவி. பிறவாத பேரின்பத்தை அடையத் துணையாக வாய்த்தது. இறையருளால் அரிதாகப் பெறப்பட்டது. பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, நன்னெறியில் வாழ்ந்து, பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலையை அடைந்தால் பேரின்பம் வாய்க்கும். அந்தப் பெருநிலையை உடம்பு உள்ளபோதே பெறுகின்ற நிலை சீவன் முத்த நிலை எனப்படும். சீவன் முத்தர்களாக உள்ள அடியார்கள் இறைவனைப் போற்றுவதை அடிகளார் இங்கே குறிக்கின்றார்.


செக த்ரயங்களும் --- 

செகம் - உலகம. திரயம் - மூன்று.  

மூவுலகங்களிலும் உள்ளவர்கள் முருகப் பெருமானைத் துதிக்கின்றார்கள்.


கருத்துரை

முருகா! உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.








No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...