பெரியோரை இகழ்வோர் அறிவில்லாத மூடர்

பெரியாரை இகழ்வோர் அறிவில்லாத மூடர்

-----

"பெரியாரைப் பிழையாமை" என்பது திருக்குறளிலும், நாலடியாராலும் கூறப்படும் ஓர் அதிகாரம்.  தம்மினும் பெரியவர்களை இகழாமல் போற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்பது அறிவுத்தப்படுகிறுது. பெரியவர்கள் என்றது ஆற்றலிலும், தவத்திலும் பெரியவர்களை. இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் நாயனார்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்." --- திருக்குறள்.

கற்று உணர்ந்த பெரியவர்கள் உலகத்தில் இருப்பதே மிக அருமையானது. கற்று உணர்ந்த பெரியவர்களின் தொடர்பு கிடைப்பது மிகமிக அருமையானது. நல்வாய்ப்பாகக் கிடைத்தாலும், அந்த நட்பை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை" என்று தள்ளி வைத்து விட்டு, "தாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்" என்று இகழ்ந்து,  அருமையான வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்று சொல்கிறது "நாலடியார்".

“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை, 

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, 

பயம்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல, 

நயம் இல் அறிவினவர்” 

இதன் பொருள் ---

தம்மிடத்து உள்ள பொன்னைக் கொடுத்தாலும் கிடைத்தற்கு  அரிய பெரியோர்கள் நட்புத் தமக்குக் கிடைக்கப் பெற்று இருந்தும், அவர்களின் அரிய நட்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, அந்தோ! நல்லறிவு இல்லாத கீழ்மக்கள் பொழுதை வீணாகக் கழிப்பர்.

செல்வத்தை முயன்று தேடினால் பெறலாம். பெரியவர்கள் நட்பு முயன்று தேடினாலும் கிடைக்கப் பெறாது. கற்று உணர்ந்த பெரியோர்கள் ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது என்றால், அது அவன் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயன் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைத்த அருமையான நட்பை உரிய முறையில் பயன்படுத்தி, தமக்கு உறுதியைத் (நன்மையைத்) தேடிக்கொள்ளமால், வாழ்நாளை வீணாக்குவோர் அறிவு அற்ற (நயம் இல்லாத) மூடர்கள் ஆவார். மூடர்களிடத்திலும் அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார். பொருளையும் புகழையும் தேடி அலவைதால் பயனில்லை. நன்னெறியில் நடவாமையால் புகழானது நாளடைவில் தேய்ந்து போகும். பொருள் நிலையில்லாமல் நீங்கும்.

வள்ளல்பெருமான் இப்படிப்பட்டவர்களைக் கண்கெட்ட குருடர் என்றும், பாழாகிப் போன குட்டிச்சுவர் என்றும் இகழ்ந்து கூறுகிறார்.

"கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்தமைக்

காண்பதே அருமை, அருமை;

கற்பதரு மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்

     கருணையால் அவர் வலியவந்து,


இற்புறன் இருப்ப அது கண்டும் அந்தோ! கடிது

எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு

இயல்உறுதி வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்

     ஏமாந்து இருப்பர், இவர்தாம்

     

பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்று,மேல்

     புல் ஆதி உ(ண்)ணும் உயிர்களும்

போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்

     புறச்சுவர் எனப் புகலலாம்;

     

வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா

     மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

     வளர் வயித்திய நாதனே."              --- திருவருட்பா.

இதன் பொருள் ---

     நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டி உயரும் தவத்தோர் சிகாமணியாகும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வைத்தியநாதப் பெருமானே! கற்பதற்கு உரிய நன்னூல்களைக் கற்று உணர்ந்து ஒழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன் இருக்கும் இடம் தேடி கற்பகமரம் வந்ததுபோல, அருள் மிகுதியால் பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப் புறத்தே நிற்பார்கள் என்றால்,  விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது, தங்களுக்கு உறுதியானவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்து ஒழிகின்றார்கள்.  இவர்கள் அழகிய சுவையை அறியும் அறிவு உடையவர் ஆகார். மேலும், புல் முதலியவற்றை மேய்ந்து உண்ணும் விலங்குகளுக்கும் இவர் ஒப்பாகார். இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். 

நல்ல நூல்களைக் கல்லாமல், பிற நூல்களைக் கற்போர் உலகத்தில் மிக உண்டு. அறிவு நூல்களைக் கல்லாமல், உலகநூல் கற்போர் குறித்து நாலடியார் கூறும் அறிவுரையைக் கொள்ள வேண்டும். 

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், --- கலகல

கூஉம் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார்இல்." ---  நாலடியார். 

இதன் பொருள் ---

ஆய்ந்து அறிந்து, நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு  உதவுமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் உண்டாகும் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவதற்குத் துணை செய்ய மாட்டா.

      எனவே, தடுமாற்றம் என்னும் துன்பத்தில் இருந்து ஒருவன் விடுபடுவதற்கே கல்வி பயன்பட வேண்டும் என்பது தெளிவாகும். மனமானது தெளிந்து, அடங்கி நின்றால் வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது இல்லாமல் போகும். உலகநூல்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழியைக் காட்டும். ஆனால், உள்ளத்தில் உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்க அறிவு நூல்களே உகந்தவை. நல்ல நூல்களைக் கற்றாலும், கற்றவற்றின் பொருளை உணர்ந்து, "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதற்கு இணங்க, அவற்றின் வழி நிற்போர் மிகமிக அரிது. எனவே, “கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த பெரியோர் தமைக் காண்பதே அருமை அருமை” என்றார் வள்ளல்பெருமான்.  

கற்பதரு - கற்பக மரம். இது விண்ணுலகத்தில் உள்ளது என்று கூறுவர். தன்னை அடைந்தவர் விரும்பியதை அளிக்கும் வல்லமை வாய்ந்த மரம் இது என்று கூறுவர். இதனால் பயன் அடைய வேண்டுமானால், அது இருக்கும் இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். கற்கபக மரம் யாரையும் தேடி வராது. (மிடியன் - வறியவன், வறுமை நிலையில் உள்ளவன்) கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த மிக அருமை வாய்ந்த பெரியவர்களை அறிவில்லாத ஒருவன் தேடிச் சென்று, வலம் வந்து வணங்கி, அழைத்துப் போற்றவேண்டும். கற்பக மரமே இருக்கும் இடம் தேடி வறுமையாளன் ஒருவனிடம் வந்ததைப் போன்று, கற்ற பெரியோர் தாமே ஒருவன் இருக்கும் இடம் தேடி வலிய வருவாராயின், அது எவ்வளவோ உயர்ந்த பேறு என்பதை உணர்த்த, “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அப்படி வந்தவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது ஒருவனது கடன் என்பதை உணர்த்த,  “கடிது எழுந்து போய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளை அவர்களிடத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தங்கட்கு இயல் உறுதி வேண்டாது, கண் கெட்ட குருடர்போல் ஏமாந்து இருப்பர்" எனவும் அருளிச் செய்தார் வள்ளல்பெருமான்.

நயம் இல்லாத அறிவினை உடையவர், புலன் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அதையும் ஒழுங்காக அனுபவிக்க அறியாதவர்கள் இவர்கள். எனவே, சுவை அறியாத மக்கள் இனத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். புல்லை உண்ணுகின்ற ஆடு, மாடு முதலிய விலங்கினத்திலும் சேர்த்து எண்ணப்படுபவர்கள் அல்லர்.  இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்று எண்ணல் வேண்டும் என்பதை, “பொற்பினது சுவை அறியும் அறிவு உடையர் அல்லர்;  புல் ஆதி உண்ணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் காட்டுகின்றார். 

     எனவே, சால்புடைய பெரியோர்களைப் போற்றி வழிபடாத கீழ்மக்களின் கீழ்மை நீங்கவேண்டுமென இறைவனிடம் முறையிட்டு அருளினார் வள்ளல்பெருமான்.

‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' எனவும், ‘பிள்ளையின் அருமையை மலடி அறிவாளோ?'  எனவும், ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தது போல' எனவும் வழங்கப்படும் பழமொழிகளை வைத்து, பெரியோர்களின் அருமையை மூடர்கள் அறியமாட்டார் என்பதைக் கூறுகிறது குமரேச சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல். பாடலைப் பார்ப்போம்.

"மணமாலை அருமையைப் புனைபவர்களேஅறிவர்,

     மட்டிக் குரங்கு அறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,

     மலடிதான் அறிவது உண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள்,

     கணிகை ஆனவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை வரும்

     களவான நாய் அறியுமோ?


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,

     கொடிய பூனையும் அறியுமோ?

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்,

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர

     வனம் ஊடு தழுவும் அழகா!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

இதன் பொருள் ---

மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனம் ஊடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை பின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!, மயிலேறி விளையாடு குகனே - மயில்மதீது இவர்ந்து அருள் விளையாடல்களைப் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலைமீது எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே! 

மணம் மாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ - மணம் பொருந்திய மலர்மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களே அறிவர், அறிவற்ற குரங்கு அறியுமோ?? மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களே அல்லாமல், மலடியானவள் அறிவாளோ?  கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகை ஆனவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்;  விலைமகள் அறிவாளோ? கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர், கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர், கொடு மூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினை உடையவரே அறிவார்,  கொடிய கயவர்கள் அறிவார்களோ?

ஒருசந்தி - ஒருவேளை. நோன்பு இருக்கும் நாள் அன்று ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒரு சந்தி,  ஒருவேளை என்பது வழக்கம். நோன்பு நாளன்று ஒரு வேளைக்குச் சமைப்பதற்கு மட்டுமே பயன்படும் "பாண்டத்தை, ஒரு சந்தியின் பாண்டம்" என்று சொல்லப்பட்டது. நாய்க்கு  எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' என்று "தண்டலையார் சதகம்" என்னும் நூலிலும் சொல்லப்பட்டு உள்ளது.

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல்பெருமான் பிறிதோர் இடத்தில் பாடி உள்ளார். எனவே, கற்ற மேலோரைப் போற்றி, அவருடன் கூடி இருந்து, வாழ்நாளை வீணாகப் போக்காமல், நல்லறிவு பெற்று, குற்றம் அற வாழ்வதே வாழ்க்கை ஆகும். 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...