வாழ்வாவது மாயம்
-----
இந்த நெடிய உலக வாழ்க்கை நிழலின் அசைவு போல் விரைவில் மறைகின்றது. இதனை நிலை என்று கருதிப் புலை நிலையில் இழிதல் கூடாது. பலவகையான கூட்டங்கள் சேர்ந்த ஒரு மாயக் கூட்டமே இந்த உலக வாழ்க்கை. தோன்றி நின்று அறிவை மயக்கி, பின் தெளிவித்து மறைவதே மாயை ஆகும்.
மனிதன் கண்டதைக் கொண்டு களிப்பு அடைகின்றான். பெற்றது எதுவாயினும் அதனைப் பெரிதாக எண்ணுவதும், அபிமானங்கள் புரிவதும், உள்ளத்தில் செருக்குக் கொண்டு ஆரவாரங்கள் செய்வதும் இயல்பாக உள்ளது. மயக்கமும் மாய மோகங்களும் வளர்கின்றன. பொய்யும் புலையும் புன்மையும் வளர்கின்றன. மெய்யும் நலமும் மேன்மையும் மெள்ளத் தளர்கின்றன. அல்லல் நிலைகள் எல்லாம் அறியாமையால் விளைகின்றன. அவலக் கவலைகளுக்கு மடமை இடமாய் நிற்றலால், அஞ்ஞான நிலை, கொடிய மருள், நெடிய இருள் என்று மண்டிக் கிடக்கின்றது.
உண்மையை ஒர்ந்து உணருகின்றோர் உள்ளம் உருகி நன்மை காண முடியும். உணராதார் நலம் ஏதும் காணாமல் வெறுமனே இழிந்து போகின்றனர்.
உலக வாழ்வை நிழல் அசைவு என்று பெரியோர்கள் கூறுவது, அதன் நிலையாமையைக் கருதி. நிழலின் அசைவானது மது கண் முன்னே இருப்பது போல் தோன்றி, அறிவை மயக்கி, கணத்தில் இல்லாது போவது. இதை மாயம் என்பர்.
"வாழ்வாவது மாயம்; இது மண்ணுவது திண்னம்:
பாழ் போவது பிறவிக் கடல்: பசிநோய் செய்த பறிதான்;
தாழாது அறம் செய்ம்மின் தடங் கண்ணான் மலரோனும்
கீழ்மேல் உற நின்றான் திருக் கேதாரம் என்னீரே".
என்பது சுந்தர்மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.
இதன் பொருள் ---
உலகவர்களே! பசியையும் நோயையும் போட்டு வைத்து இருக்கின்ற பையைப் போன்ற இந்த உடம்பு நிலைத்திருக்கும் என்பது பொய். இது மண்ணோடு மண்ணாய் மறைந்து ஒழிவதே மெய். ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ஆகும். அதன் பொருட்டு, நீங்கள் காலம் தாழ்த்தாது,விரைந்து அறச் செயல்களைச் செய்யுங்கள். பெரிய கண்களை உடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின் மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய சிவபரம்பொருள் எழுந்தருளி இருக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லி வழிபாடு செய்யுங்கள்.
மாடு, மனை, செல்வம் எனக் கூடி நிற்பன எல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு ஒடி ஒழியும். இந்த மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்து இருத்தல் கூடாது. அதற்கு இறையருள் கைகூடி இருத்தல் வேண்டும். "மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான்" என்று இறைவன் தனக்கு அருளிய மேன்மையை வியந்து போற்றினார் மணிவாசகப் பெருமான். மெய்யான ஆன்ம லாபத்தை அடையாமல், பொய்யானதில் மையல் மீதூர்ந்து, மயங்கிக் கிடப்பது, கொடிய துயரமாய் விரிந்து வரும்.
“Life’s but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage,
And then is heard no more: it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.” --- Macbeth.
"மனித வாழ்வு ஒரு அசைகின்ற நிழலைப் போன்றது. நாடக மேடையில் இடை இடையே கோமாளி வந்து, பிலுக்கி நடந்து, பிதற்றிப் போவது போலவும், மூடன் சொல்லிய பழங்கதை போலவும் வெறும் பாழானது. யாதொரு மேன்மையும் இல்லாதது"என மேக்பெத் என்னும் மேலை நாட்டாரும் தனது வாழ்நாள் முடிவில் இவ்வாறு குறித்துள்ளார்.
உலக ஆசைகளில் வெறியாய் ஒடி அலைந்து, கலகமும் களிப்பும் மிகுந்து, ஒரு பயனும் காணாமல் வறிதே மாண்டு மறைந்து போவதே மானிட வாழ்வின் தன்மையாய் உள்ளது.
தேக, உலக போகங்களில் மோகம் கொண்டு, அவற்றை விழைந்து திரிபவர் ஆன்ம நலனை இழந்து விடுகின்றனர். மோகத்தை ஒழித்தவர் முத்தி இன்பத்தை அடைகின்றனர். சிற்றின்ப நிலையில் இழிந்து கிடக்கின்ற போது பேரின்பம் ஒழிந்து போகின்றது. அதனைத் துறந்து எழுந்தவர் உயர்ந்த பதவியில் சிறந்து திகழ்கின்றார். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து தெளிந்து, உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தால் பேரின்ப நிலையை அடையலாம். உயர்ந்த குறிக்கோள் இல்லாமை கேட்டையே தரும் என்பதை,
"பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளும் குறிக்கோள் இலாதுகெட்டேன்;
சேல் உலாம் பழனவேலித் திருக் கொண்டீச்சரத்து உளானே".
எனவரும் அப்பர் பெருமான் தேவாரப் பாடல் காட்டும்.
"சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்" என்று திருக்கொண்டீச்சரம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளினிடத்து முறையிடுகின்றார் அப்பர் பெருமான்.
உலகிற்கு உள்ள பெருமையாகத் திருவள்ளுவ நாயானர் காட்டுவதே அதன் நிலையாமையைத் தான். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது நாயனார் அருளிய திருக்குறள். நேற்று இருந்தவர் இன்று இல்லாமல் போனார், போவார் என்னும் பெருமையை இந்த உலகம் கொண்டு உள்ளது. உலகில் வந்து பிறந்தவர் யாரும் நிரந்தரமாக இங்கே இருந்தது இல்லை. இதனை நேரில் கண்டு இருந்தும், ஆன்றோர் வாக்கால் அறிந்து இருந்தும், நிலையற்ற உலக இன்பத்தையே ஒரு பொருட்டாக மதித்து, அதனையே குறிக்கோளாகக் கொண்டு இருந்து, வேடிக்கை மனிதர்களாக வாழ்ந்து, ஒழிந்து போவது மடமையிலும் மடமை ஆகும்.
மன்னர்களாய் மகிமை பெற்று இருந்தவரும் கூட மாண்டு, மண்ணோடு மண்ணாய் மறைந்து போகின்றனர். பெரும் செல்வந்தர்களாய், பெரும் பதவியில் திளைத்தவர்களாய் இருந்தவரும் இல்லாமல் போகின்றனர். இதை நோக்க உலக போகங்கள் அனைத்தும் நிலையற்றவை என்பது புலனாகும். உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஆன்றோர்கள் பலவாறாக அறிவுரை கூறியுள்ளதைக் கடைப்பிடித்து வாழ மறந்து போகின்ற அளவுக்கு மாயை மனித இனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது.
"முடிசார்ந்த மன்னரும், மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடிசாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவார் இல்லையே"
என்று உலகவரின் அறியாமைக்கு இரங்கி இவ்வாறு பாடியருளினார் பட்டினத்து அடிகளார்.
“A King may go a progress through the guts of a beggar.” (Hamlet 4-3) "ஒரு அரசன் மடிந்து மாறிப் பிச்சைக்காரன் குடலில் போய்ச் சேரலாம்' என மேல் நாட்டுக் கவிஞரும் இவ்வுலக வாழ்வின் நிலையாமையைக் குறித்துச் சொல்லி உள்ளார்.
இன்று உள்ளவர் நாளை இருப்பது என்பது நிச்சயம் இல்லை. இதுதான் உலக இயற்கை என்பதை அறியாமல் உலக மக்கள் வாழுகின்றார்கள்.
"இன்று உள்ளார் நாளை இல்லை என்னும் பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்!
அன்று வானவர்க்கா விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே"
"வென்றிலேன் புலன்கள் ஐந்தும்,
வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே
செந்நெறி அதற்கும் சேயேன்,
நின்றுஉள்ளே துளும்புகின்றேன்
நீசனேன். ஈசனே! ஓ
இன்று உள்ளேன் நாளை இல்லேன்
என்செய்வான் தோன்றினேனே".
என்று அப்பர் பெருமான் பாடினார்.
"நேற்று உள்ளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை, அந்தோ! போக்கினேன் வீணே காலம்,
ஆற்றில்என் அகண்ட ஆனந்த அண்ணலே! அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே".
என்று தாயுமான அடிகளார் வாழ்வின் நிலையாமையையும், அதில் இருந்து நீங்கி உய்யும் வழியையும் காட்டிப் பாடினார்.
"நன்றுளேன். அல்லேன், யார்க்கும்
நல்லறம் புரியேன்: அன்றிக்
கொன்றுளேன், அற்றம் பார்க்கும்
கூற்றுவன் விடுவான் அல்லன்;
இன்று உளேன் நாளை இல்லேன்:
யமன் வரும் போது, வெள்ளி
மன்றுளே இருந்த சொக்கே!
வழக்கு நீ என் சொல்வாயே?
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடினார்.
இவ்வாறு ஆன்றோர்களும் அருளாளர்களும் அறிவுறுத்திச் சென்று உள்ளதை ஓதி உணர்வு பெறாமல், ஓதியும் உணர்வு பெறாமல், உள்ளம் நிலையற்ற உலக போகங்களை விழைந்து, களியாட்டங்களில் திளைத்து மனிதர்களாகிய நம்முடைய வாழ்நாள் வீணே கழிந்து கொண்டு இருக்கின்றது.
வலைஞன் ஒருவன் நீர் நிலையில் தனது வலையை வீசினான். அதில் ஒர் ஆமையை வந்து பட்டது. அதனைப் பக்குவமாக அவித்துத் தின்ன விழைந்தான் கவலைஞன். பெரிய மண்பானையில் நீரை ஊற்றி, ஆமையை இதல் இட்டு, அடுப்பில் வைத்தான். ஆமை தனது நிலையை எண்ணி, "நாம் சுகமாய் நல்ல தண்ணீர் கிடைத்தது. இனி இங்கேயே நாம் நீண்ட காலம் இருக்கலாம்" என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டது. உலை நீரிலே சுற்றிச் சுற்றி வந்தது. வலைஞன் அடுப்பில் விறகை வைத்துத் தீயை மூட்டினான். மூட்டிய தீ விறகில் பற்றிப் பானையில் இருந்த தண்ணீர் கொஞ்சும் சூடு ஏறியது. அந்தச் சுடுநீர் கொஞ்சம் இதமாக இருப்பதாக எண்ணி ஆமை மிகிழ்ந்தது. தண்ணீர் வெம்மை ஏறிச் சுட்டது. ஆமை உடல் வெந்து செத்தது. வலைஞான் அதனை உண்டு மகிழ்ந்தான்.
மனிதனுடைய வாழ்வும் இவ்வாறே உள்ளது. உலக வாழ்வினு நிலையாமையை உணராது, பலப்பல மனக்கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சி மீதூரபட்டுக் களித்துத் திரிகின்றான். இறுதியில் எமன் வாயில் பட்டுத் தொலைந்து போகின்றான். உலையில் மாண்ட ஆமையின் நிலைக்கும், எமன் வாயில் அகப்பட்ட இவன் நிலையும் ஒன்றாகத் தானே உள்ளது. இந்தப் பேதைமை குறித்து,
"கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப,ஆமை
நிலை அறியாது அந்நீர் படிந்து ஆடி அற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலைஅகத்துச் செம்மாப்பார் மாண்பு"
என்று நாலடியார் கூறுகின்றது.
"வளைத்து நின்று ஐவர் கள்வர்
வந்து எனை நடுக்கம் செய்ய,
தளைத்து வைத்து உலையை ஏற்றித்
தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவு இல்லாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன்,
என்செய்வான் தோன்றினேனே"
என்று பாடினார் அப்பர் பெருமான்.
அபாய நிலையில் உள்ள ஆமையைச் சுட்டிக் காட்டி மனித வாழ்வின் பரிதாபங்களைப் பெரியோர்கள் விளக்கியிருக்கும் பலவகைக் காட்சிகளும் புலமை மணம் கமழ்ந்து சுவை தந்து திகழ்கின்றன. உறுதி நலங்கள் தெளிவு பெற உணர்வு நலங்கள் வருகின்றன. நிலையாமையை உணர்ந்து, நிறை இன்பம் பெறுதல் வேண்டும்.