உயர்ந்தோர் யார்? தாழ்ந்தோர் யார்?

 


உயர்ந்தோர் யார்தாழ்ந்தோர் யார்?

-----

 

     புராணங்கள் பதினெட்டு என்று சொல்வார்கள். அவற்றை மகாபுராணங்கள் என்பது வழக்கம். அவை அல்லாமல் உப புராணங்கள் பல உண்டு. புராணங்கள் யாவுமே இறைவனுடைய பெருமையை விரிவாக எடுத்துச் சொல்லத் தோன்றியவை. இறைவனுடைய திருவிளையாடல்களையும், இறைவன் தனது அடியார்களுக்கு அருள் செய்த திறத்தையும்  வரலாறுகளாக எடுத்துச் சொல்வன அவை. இந்தப் புராணங்களையும்உப புராணங்களையும் அன்றிஅந்த அந்தத் தலங்களுக்குத் தனித்தனியே புராணங்கள் உண்டு. அவை தலபுராணங்கள். தமிழ்நாட்டில் தலங்கள் மிகுதி. ஆகையால் தமிழிலுள்ள தலபுராணங்கள் பல. சில தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் உண்டு. கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் சிதம்பரத்திற்கும்மதுரைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தலபுராணங்கள் உள்ளன.

 

     இந்தப் புராணப் பெருங் கூட்டத்திற்கு நடுவிலே புதிதாக ஒரு புராணம் தோன்றியது. அந்தப் புராணம் தோன்றுவதற்கு முன்னாலே மற்றப் புராணங்கள் எல்லாம் சிறந்தனவாகபெரிய புராணங்களாகவே இருந்தன. இந்தப் புராணம் தோன்றிய பிறகு அவைகள் எல்லாம் சிறியவை ஆகி விட்டன. புதிதாக வந்த புராணம் "திருத்தொண்டர் புராணம்" என்றே அதன் ஆசிரியர் ஆகிய தெய்வச் சேக்கிழார் பெருமானால் சொல்லப்பட்டது. அதன் அருமை பெரியது என்பதால்அது "பெரியபுராணம்" என்று போற்றப்பட்டது. "பெரியபுராணம்" என்று பெயரிட்டவர் யாரும் இல்லை. அது மக்களால் பெரிதும் போற்றப்பட்டதால்இயல்பாகவே அந்தப் பெயர் அமைந்துவிட்டது.

 

      ஒன்று பெரியது என்னும்போதுமற்றவை சிறியனவாகத்தான் இருக்கவேண்டும். திருத்தொண்டர் புராணம் வந்த பிறகுஅது பெரியபுராணம் எனப் போற்றப்பட்டது. "பெரியபுராணம்" எனப்படும் திருத்தொண்டர் புராணம்இறைவனது அடியார்களைப் பற்றிச் சொல்லுகின்ற புராணம்."தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்று ஔவைப் பிராட்டி சொன்னபடிதொண்டர்களுடைய பெருமையைச் சொல்கிற அந்தப் புராணம்"பெரியபுராணம்" ஆகி விட்டது. அந்தப் புராணத்தில் வருகிறவர்கள் அடியார்கள் இறைவனைக் காட்டிலும் பெரியவர்கள்.

 

     திருத் தொண்டர்களால் சிறியவன் ஆகிவிட்ட இறைவவனே தான் அடியார்களினும் எளியவன் என்று சொல்லிக் கொள்கிறான். தாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றிய பெற்றான் சாம்பான் என்ற ஒருவர் இறைவனிடத்தில் பத்தி பூண்டு வாழ்ந்து வந்தார். "தோன்றிய" என்னும் சொல்லை நன்கு உள்ளத்தில் கொள்ளவேண்டும். "பிறந்த" என்று சொல்லாமல், "தோன்றிய" என்று சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு. "தோன்றில் புகழொடு தோன்றுக" என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்துப்படிதாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றிபுகழோடு திகழ்ந்தவர் பெற்றான் சாம்பான் என்னும் அடியவர்.  அவருக்குத் திருவருள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம். எதையும் அதற்கு உரிய மரபோடு செய்ய வேண்டும். "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்பார் திருமூல நாயனார். சிவம்தான் குருநாதனாகத் திருமேனி தாங்கி எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிவது. குருவை வணங்காமல் எந்த வழிபாடும் தொடங்கப்படுவது மரபு இல்லை. நல்ல குருநாதன் மூலமாக அவனுக்கு நற்கதி கொடுக்க வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய இறைவன் பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை செய்வித்து ஆட்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். 

 

     உமாபதி சிவாசாரியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவர். அந்தப் பெரியாரிடத்தில் பெற்றான் சாம்பான் தீட்சை பெற்றுக் கொள்ளத் திருவுள்ளம் பற்றினான் இறைவன். பெரும் சிறப்புமிக்க பெற்றான் சாம்பான் ஆற்றிய பணி நாள்தோறும் திருக்கோயிலுக்கு விறகு வெட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் பணி. இவரின் திருப்பணிக்கு மகிழ்ந்த தில்லைக்கூத்தன்பெற்றான் சாம்பான் கனவில் தோன்றிதில்லைவாழ் அந்தணர்களால் தீண்டத் தகாதவர் போல் ஒதுக்கி வைக்கப்பெற்ற உமாபதிசிவத்திற்கும் விறகு கொண்டுபோய்க் கொடுக்கும் பணியினைச் செய்யும்படி கூறினார். அவரும் அவ்வாறே உமாபதி சிவத்தின் மடத்திற்கும் நாளும் விறகு கொடுத்து வந்தார். ஆனால்உமாபதிசிவம் அதனை அறியார். உமாபதிசிவத்தைக் கொண்டு பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை செய்விக்க இறைவன் திருவுள்ளம் பற்றினான்.

 

    ஒருநாள் கடும் மழை காரணமாக விறகு கொண்டு வரத் தடை ஏற்பட்டது. அன்று விறகு வந்து சேரவில்லை. எனவேமடத்தில் உணவு சமைக்கக் காலதாமதம் ஆனது. அதற்குக் காரணம் என்ன என உமாபதிசிவம் வினவ, மடத்திற்கு நாளும் விறகு கொண்டு வரும் சாம்பான் வரவில்லை என்பதைக் கேட்டஉமாபதிசிவம்அவர் வந்ததும் தமக்குத் தெரிவிக்கும்படி கூறினார். மறுநாள் பெற்றான் சாம்பன் மடத்திற்கு விறகு கொண்டு வந்தார். அவர் மடத்திற்கு வரும் முன் அம்பலவாணப் பெருமான்ஒரு பெரியவர் வடிவில் தோன்றிஒரு சீட்டினைச் சாம்பானிடம் கொடுத்து அதனை உமாபதிசிவத்திடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் அச் சீட்டைவிறகுக் கட்டுடன் கொண்டு வந்தார். பெற்றான் சாம்பான் வந்ததை அறிந்த சீடர்கள்உமாபதிசிவத்திடம் கூறினர். அவரைக் கண்டு மகிழ்ந்த உமாபதிசிவத்திடம் சாம்பான்பெரியவர் கொடுத்த ஓலையைக் கொடுத்தார். அதனைப் பெற்ற உமாபதிசிவம்அவ்வோலையில் இருந்த செய்தியைக் கண்டு திகைப்படைந்து பேரானந்தம் அடைந்தார். இறைவனே எழுதி அனுப்பிய ஓலை அது. அந்தச் சீட்டில் இருந்த செய்தி:

 

"அடியாற்(கு) எளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியாற்(கு) எழுதிய கைச்சீட்டுப் - படியின்மிசை

பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து

முத்தி கொடுக்க முறை." 

 

என்று வெண்பாவாக வரையப்பட்டு இருந்தது.

 

இதன் பொருள் ---

 

    அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன் ஆகிய நான்கொற்றங்குடியார் ஆகிய உமாபதிசிவத்துக்கு எழுதி அனுப்பிய இந்தச் சீட்டினைக் கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்குவேறுபாடு கருதாது சிவதீக்கை செய்துஅவனுக்கு முறையாக முத்திகொடுக்க வேண்டும்.

 

     இறைவன் திருமால்பிரமன் முதலாய மூர்த்திகளாலும்தேவர்களாலும்மற்றும் அவனைக் காணவேண்டும் என்று அருந்தவம் புரியம் முனிவர்களாலும் காண்பதற்கு அரியவன். ஆனால்அவனிடத்து அன்பு செய்யும் அடியார்களுக்கு எளியவன். மிகப் பெரியவர்கள் எல்லாரும் தமது அருமையை உணர்ந்து கொள்ளாதவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால்கீழ்மக்களோதன்னை இன்னான் என்று தாமே வியந்துகொள்வதோடுதம்மைப் பாராட்டுவதற்கு என்றே ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்வார்கள். "பணியுமாம் என்றும் பெருமைசிறுமை அணியுமாம் தன்னை வியந்து" என்றார் திருவள்ளுவ நாயனார். மிகப் பெரியவன் ஆகிய இறைவனை, "தன் பெருமை தான் அறியாத் தன்மையன்" என்றார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட இறைவன் தன் அடியார்களுக்கு எளிவந்து அருள் புரிவான் என்பதை,"ஈறு இலாத நீ,எளியை ஆகிவந்துஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும்கீறிலாத நெஞ்சு உடைய நாயினேன்" என்றும்"எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடையஎன் அப்பனே" என்றும், "தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்எளியவன் அடியார்க்கு" என்றும் பலவாறாகத் திருவாசகத்தில் வைத்துப் போற்றினார் மணிவாசகப் பெருமான். மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத் தேனைகடையூழிக் காலத்தில் தனது தனிமை கழிக்கத் தேவைப்படும் என்று கருதிமணிவாசகப் பெருமான் தமது திருவாயால் சொல்லஅம்பலவாணப் பெருமான் தமது திருக்கையால் எழுதிதனது கையெழுத்தையும் இட்டு வைத்தார் என்பது பெரியவர்கள் சொன்ன செய்தி. 

 

     தானே தனது கைப்பட எழுதிக் கொண்ட திருவாசகத் தேனைச் சுவைத்து அனுபவித்த இறைவன்,  "அடியார்க்கு எளியவன்" என்னும் சொற்றொடரை விரும்பி இருப்பார் போலும். எனவேஉமாபதி சிவத்துக்குத் தான் எழுதிய கடிதத்தில் தன்னை, "அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் என்பது அருமையிலும் அருமை. இனிமையிலும் இனிமை.

 

     நாம் யாருக்கேனும் கடிதம் எழுதினால்,இன்னார் எழுதுவது என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோம். கடிதத்தின் தலைப்பில் நம்முடைய பட்டங்களை எல்லாம் போட்டு நம் முகவரியை அச்சிட்டு வைத்துக் கொள்கிறோம். அப்படி இறைவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இறைவனுக்கு எத்தனையோ முகவரிகள் உண்டு. அவன் பெருமைகள் அளவிடற்கு அரியவை. அந்தப் பெருமானே தன்னுடைய கடிதத்தில் தான் விரும்பிய ஒரு முகவரியைப் போட்டுக் கொண்டான். சிற்றம்பலவன் ஆகிய இறைவன் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட பட்டம், "அடியார்க்கு எளியன்” என்பது. இறைவனே அடியார்க்கு எளியன் என்றால்அடியார்கள் அவனிலும் பெரியவர்கள் என்றுதான் பொருள்.

 

     பெற்றான் சாம்பான் கல்வி அறிவு இல்லாத பாமரராகதாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றியவர். ஆனாலும்இறைவன் மேல் பேரன்பு கொண்டதனாலும்தில்லைக் கோயிலுக்கு அவர் செய்து வந்த அரும்பணிஇறையருளால்மற்றொரு அடியவர் ஆன உமாபதிசிவத்துக்கும் பலன் கருதாது செய்யும் தொண்டுப் பணியாக மலர்ந்ததாலும் அவர் வீடுபேறு எய்துதற்கு உரிய பக்குவத்தினைப் பெற்றிருந்தார். ஒருவர் முத்தியைப் பெறுவதற்குத் தகுதி குலப்பிறப்போபெரும் படிப்பறிவோ இல்லைமாறாக அன்புள்ளத்தோடுபலன் கருதாது செய்யும் தொண்டுதான் முக்கியம்.இதனைத் தனது ஞானத்தால் உணர்ந்த உமாபதிசிவம் அவருக்கு முறையாக தீக்கை செய்தவுடன்ஒளிப் பிழம்பு தோன்றிஅவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்து இறைவன் திருவடியில் கலந்தார்.

 

      பெரியபுராணத்தில் வரும் தொண்டர்கள் பெரியவர்கள். இறைவனைக் காட்டிலும் அவர்கள் பெரியவர்கள் என்பதைத் திருக்கூட்டச் சிறப்பு என்னும் பகுதியில் குறிப்பாகச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். 

 

      குழந்தைக்கு ஒழுக்கத்தை ஊட்ட வந்த ஒளவையார்,  சிறியவர் யார்பெரியவர் யார் என்பதைச் சொல்கிறார். மேல் சாதிகீழ்சாதி என்று பிரிப்பதை அவர் சொல்லவில்லை. ஆயினும் இரண்டு சாதிகளைச் சொல்கிறார். ஆண் சாதிபெண் சாதி என்பதையும் அவர் சொல்லவில்லை. 

 

"சாதி இரண்டுழிய வேறு இல்லைசாற்றுங்கால் 

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் 

இட்டார் பெரியோர்,இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி"

 

என்றே பாடி வைத்தார்.

 

     இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் அப்படிக் கொடுக்காமல் இருக்கிறவர்கள் சிறியவர்கள் என்று நமது பெரிய பாட்டி சொல்கிறார். "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்பார்கள். நாம் தட்டியே விட்டோம். ஈகையின் பெருமையைத் திருவள்ளுவர் மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார். கொடுப்பவனுக்கு வாங்குகிறவன்  என்று ஒருவன் இருந்தால்தான் பெருமை. கொடுப்பதால் ஒருவனுக்கு இன்பம் உண்டாக வேண்டுமானால்,அவனிடத்தில் பெற்றுக் கொள்பவன் ஒருவன் இருக்க வேண்டும். ஒரு வகையில் பார்த்தால் கொடுத்தலும் பெறுதலும் ஒன்றாகவே நிகழ்வன என்பது விளங்கும். 

 

     புறநானூற்றுப் புலவர் ஒருவர் ஈதலையும் இரத்தலையும் பற்றிப் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னதுஉயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்கிறார். நமக்கு இறைவன் உடம்பையும்அறிவையும்பிற வசதியையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும்.  முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்துபொருளை ஈட்டாமல்பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக் கொண்டு "ஈ" என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல். 

 

"ஈ என இரத்தல் இழிந்தன்றுஅதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள் என கொடுத்தல் உயர்ந்தன்றுஅதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"  --- புறநானூறு.

 

     ஒருவரிடத்தில் சென்று,  "தா" என்று கையேந்தி நிற்றல் இழிவானது. அதைவிட இழிவானது "தா" என்று கேட்பவனுக்கு, "இல்லை" என்று சொல்வது. ஒருவன் "கொடு" என்று கேட்பதற்கு முன்பாகவேஅவனது முகக் குறிப்பை அறிந்து கொடுத்து உதவுவது உயர்ந்த செயல். அப்படிக் கொடுப்பதையும் கூட வேண்டாம் என்று மறப்பது அதனினும் உயர்வானது. 

     

     எதுவும் வேண்டாம் என்று விருப்பு வெறுப்பு அற்று இருப்பதே மேலான செல்வம். அதுவே மன நிறைவைத் தரும். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்றார் குமரகுருபர அடிகள். அப்படிப்பட்ட ஒரு செல்வத்தை இந்த நிலவுலகிலும் அல்லாமல்மேல் உலகிலும் காண முடியாது என்பதை உணர்த்த,

 

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை 

யாண்டும் அஃது ஒப்பது இல்'"

 

என்று திருவள்ளுவ நாயனார் அருமையாகச் சொல்கிறார். 

 

     கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாகவே விளங்குகிறான். பணத்தை விரும்புபவர்கள்மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகின்றார்கள். வேண்டாம் என்று சொல்வபர் யாரும் இல்லை. அப்படி இருக்கநம்முடைய வறுமை நிலையை ஒருவன் கொடுக்கிறான் என்றால் அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனாலே இயலாது. அதற்கு ஒரு அசாத்தியமான மனத் துணிவு வேண்டும். ஆகையால்,"கொள்" என்பதற்கு எதிரே "கொள்ளேன்" என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார். 

 

     இறைத் தொண்டர்களின் நிலையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர்களிடத்தே எல்லாவற்றிலும் மேலான அருட்செல்வம் நிரம்பியிருக்கிறது. பொருட்செல்வத்தை உடையவர்கள் பிறருக்குக் கொடுத்தாலும்தமக்கே செலவழித்துக் கொண்டாலும் அந்தச் செல்வம் குறைந்துவிடும். மேலும் சம்பாதித்து நிரப்பிக் கொள்வார்கள். இலாபநட்டக் கணக்குப் பார்ப்பதற்கு உரியது அவர்களிடத்தில் உள்ள செவ்வம். ஆனால்இறைத்தொண்டர்களுடைய அருட்செல்வத்திற்குக் கேடும் இல்லைஆக்கம் என்று சொல்லப்படும் வரும்படியும் இல்லை. அவர்கள் இலாபநட்டம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைக் "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்என்று அறிமுகப்படுத்துகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். 

 

     அருட்செல்வத்தினால் வந்த அளப்பரும் பெருமை அது.. அதனைப் பெற்ற தொண்டர்களிடத்தில்ஒரு பெரிய சக்கரவர்த்தி நேரில் நின்று,  "உமக்கு வேண்டுவனவற்றைக் கேளுங்கள். தருகிறேன்"  என்று சொன்னால் அவர்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அப்பர் பெருமான் உழவாரத் திருப்பணி செய்யும்போது உழவாரப் படை பட்ட இடம் எல்லாம் பொன்னும் மணியும் வெளி வந்தன. அவற்றையெல்லாம் கல்லையும் மண்ணையும்புல்லையும்போல அவர் ஒதுக்கிவிட்டார்.  "புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்சொல்லோடும் வேறுபாடு இலாநிலைமை துணிந்து இருந்த நல்லோர்" என்று அப்பர் பெருமானை நமக்குத் தெய்வச் சேக்கிழார் அறிமுகப்படுத்துகின்றார். எனவே உலகச் செல்வம்,தொண்டர்கள் மதிக்காத ஒன்று என்பது விளங்கும். பொருளாளன் ஒருவன் எத்தனை மிகுதியான பொருளை அவர்களுக்குக் கொடுக்க முற்பட்டாலும் அவர்கள் சற்றும் ஆசைப்படமாட்டார்கள். 

 

     உலகச் செல்வத்தை விட்டுவிடுவோம். பெறுதற்கு அரிய முத்திச் செல்வத்தை எடுத்துக் கொள்வோம். அடியவர்கள் பிறவாமை இல்லாத நிலையைமுத்தியை அடையவேண்டும் என்றுதான் விரும்புபவர்கள். அந்த முத்தி நிலை மேல் உலகத்தில் கிடைக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணி இருக்கின்றனர். பிறவாத நிலை வேண்டும் என்கின்றனர்.

 

     தில்லைக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு வணங்கும் பேறுபெற்ற பிறகுதான்தாம் எப்படிப்பட்ட அருமையான பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்று அப்பரடிகள் மகிழ்ந்தார். பெருமானை வழிபட்டு மகிழ்வததானால்இந்தப் பிறவி வேண்டத்தக்கதே என்று எண்ணி மகிழ்ந்து,

 

"குனித்த புருவமும்கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும்,பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

 

என்று பாடிநமக்கு எல்லாம் ஒரு சிறந்த நல்வழியைக் காட்டி அருள் புரிந்தார்.

 

            பொதுவாகவேஎல்லா அடியவர்களும் பிறவி வேண்டாம் என்றுதான் கூறிப் போந்தார்கள். ஆனால்அப்பர் பெருமான்இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேறு கிடைக்குமானால்இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கதே என்றார்.

 

"மறந்தாலும் இனி இங்குவாரோம் என்று அகல்வர் போல்

சிறந்து ஆர நடம் ஆடும்திருவாளன் திருவடி கண்டு,

இறந்தார்கள்பிறவாதஇதில் என்ன பயன்வந்து

பிறந்தாலும் இறவாதபேரின்பம் பெறலாம்ஆல்".

 

என்கின்றார் "கோயில்புராண" ஆசிரியர்.

 

இதன் பொருள் ---

 

     இனி இந்தப் பூதலத்தில் மறந்தும் வந்து பிறக்கமாட்டோம் என்று இந்தப் பிறவியினை வெறுத்து ஒழித்துச் சென்றவர்களைப் போலஉயிர்களுக்குத் திருவருள் சிறக்கத் திருநடம் புரிகின்ற திருவாளன் ஆகிய பெருமானின் திருவடிகளைத் தரிசித்துஇந்தப் பிறவியை நீத்து சிவபதத்தை அடைந்தவர்கள்மீட்டு இங்கு வந்து வினைப் பிறவியைச் சாராத தன்மையினால் என்ன பயன் உண்டு? (ஒரு பயனும் இல்லை) மீண்டு வந்து இந்த பூவுலகில் பிறந்தாலும்இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்கின்றதால் ஒழியாத பேரின்பத்தைப் பெறலாமே.

 

            அப்படிப்பட்ட தொண்டர்களிடத்தில் இறைவனே  எதிர் தோன்றி,  "மோட்சத்தைப்பெற்றுக்கொள்என்றுசொன்னால்மிகவும் அரிதில் பெறுவதற்குரிய அந்த மோட்சமாகிய செல்வமும் வேண்டாம் என்றுசொல்லிவிடுவார்களாம்"நாங்கள் எப்போதும் உனது திருவடியைக் கும்பிட்டுஅதனால் வருகின்ற இன்பத்தை இப்பொழுதே அடைந்துகொண்டிருக்கிறோமேஇதைவிடப் பெரிய இன்பம் மோட்சத்தில் உண்டாஅது எங்களுக்கு வேண்டாம்" என்று இறைவனிடமே சொல்லுகின்ற வீரம் தொண்டர்களிடத்தே உண்டு.

 

"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார், 

கூடும் அன்பினல் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" 

 

என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர்களை அடையாளம் காட்டினார்.

 

     எல்லோரும் ஆசைப்படுகின்ற வீடுபேற்றை எளிதாக அருள்பவன் பரம்பொருளாகிய இறைவன்அவன் "கொள்" எனக் கொடுக்கிறபோது, "கொள்ளேன்"என்று சொல்கிற மனத் துணிவு உடையவர்கள்கொடுக்கிறவனையும் விட மிகப் பெரியவர்கள்தானே. "கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வுகுடி கெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

      அடியார்களுக்குத் தங்களுடைய அன்பை இறைவனுக்குக் கொடுக்கத் தெரியும் அது, "ஈத்து உவக்கும் இன்பம்" ஆகும். அவனிடத்தில் இருந்து, "இது தா"என்று கேட்டு வாங்க அவர்களுக்குத்  தெரியாதுஉண்மையில் இறைவன்அடியார்களுக்கு அவர்களை அறியாமலே இனபத்தைக் கொடுத்து விடுகின்றான். அவர்கள் நினைப்பு இல்லாமே அந்த இன்ப அனுபவம் நிகழ்கிறது அனுபவத்தைத் தருகிறவன்,அனுபவிக்கின்றவன்அனுபவம் என்று மூன்றையும் கடந்த நிலையில் அந்த அனுபவம் நேருகிறதுஅந்த அனுபவநிலையில் கொடுப்பார்வாங்குவார்ஆகியவேற்றுமை இல்லை

 

        இத்தகைய தொண்டர்களிடையே சார்ந்தால், நாம் பெறவேண்டிய கதி கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அறிவுறுத்த, "தொண்டர் குழாம் சாரில் கதி அன்றி வேறு இல்லை" என்றார்.

உண்மையான அருட்செல்வத்தைப் பெற்றவர்கள் கூட்டமாகக் கூடி இருப்பார்கள்அவர்களைச் சார்ந்து இருந்தால் மனநிறைவு பெறலாம்வேறு யாரைச் சார்ந்தாலும் அந்த நிறைவு கிடைக்காது

 

     மனிதனுடைய குணத்தை அவனுடைய சார்பை உணர்ந்து தெரிந்து கொள்ளலாம்'உன்னுடைய நண்பர் இன்னார் என்று சொல்உன்இயல்பை நான் சொல்கிறேன்என்று ஆங்கிலத்தில் ஒருபழமொழி உண்டுநாமாக முயற்சி செய்து நன்மை பெறாவிட்டாலும், சார்பின் வலிமையினால் நன்மை பெறலாம்.  நல்ல குடியில் பிறந்துநல்ல பழக்கம் உள்ள மக்களோடு வாழ்பவன், மாறிப்போய்த் தீயவர்களோடு பழகினால்தீமையும் அவன் விரும்பாமல் அவனைச் சார்ந்து விடுகிறது

 

     எல்லாக் காலத்தும் உதவுகின்றஉயிரோடு ஒட்டி வருகின்றசெல்வமாகிய அருட்செல்வத்தைச் சேர்த்துக்கொண்டால்அது எல்லாக்காலத்தும் குறைவில்லாத நிறைவான இன்பத்தைத் தரும்அந்தச் செல்வத்தைத் தம்முடைய காணியாக்கிக் கொண்டவர்கள் தொண்டர்கள்அவர்களைச் சார்ந்தால் எல்லாஇடத்திலும் எந்தப் பிறவியிலும் கவலையில்லாமல் வாழஇயலும்இதனை எண்ணியே, "தொண்டர் குழாம் சாரில் கதியன்றி வேறு இல்லைகாண்" என்றுஅருணகிரியார் சொன்னார்

 

      பத்தி செய்வதில்,குரு பத்திஇலிங்க பத்திசங்கம பத்தி என மூன்று வகை உண்டு. கோயில் கோபுரத்தின் மேல் ஒரு கும்பம் உச்சியில் இருக்கிறது. வெறும் கும்பத்தைத் தனியே நிறுத்த முடியாது. கும்பத்தைத் தாங்கக் கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தைத் தாங்குகிற கட்டிடத்தைக் கட்டுவதற்கு அடித்தளம் அல்லது கடைக்கால். அவசியம். கும்பத்தை விட அகன்றது கோபுரம். கோபுரத்தை விட அகன்றது கட்டிடம். கட்டிடத்தை விட அகன்றது கடைக்கால். கடைக்கால் இல்லாமல்கட்டிடமும் இல்லைகும்பமும் இல்லை. கும்பத்தைப் போன்றது இலிங்க பத்தி. கோபுரத்தைப் போல இருப்பது குருபத்தி. கடைக்காலைப் போல இருப்பதுசங்கம பத்தி என்று சொல்லப்படும்தொண்டர்களுடைய பத்தி. தொண்டரிடத்தில் பத்தி என்னும் கடைக்கால் நன்றாக அமையுமானால் குருபத்தி என்னும் கட்டிடமும்,லிங்க பத்தி என்னும் கும்பமும் நன்றாக அமையும். அதனால் திருவருள் கிடைக்கும். எனவேதான்"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமேஎன்று தாயுமானவர் பாடுகின்றார். 

 

     எனவேஉயர்ந்தவர்கள் எனப்படுவோர் திருத்தொண்டர்கள் ஆகிய இறை அடியார்களே! அவர்கள்"தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் அருள்நிலையில் எல்லோரையும் வாழவைத்துஉயர்நிலைக்கு உயர்த்துபவர்கள். உயர்ந்தவர்கள்தான் ஒருவரை உயர்நிலைக்கு உயர்த்த முடியும். தாழ்ந்தவர்கள் தானும் உயர்நிலை அடைய முடியாது. பிறரையும் உயர்நிலையில் வைக்க முடியாது. 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...