“உற்றபெருஞ் சுற்றம் உற,நன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க; பசுவின்வால் - பற்றி
நதிகடத்தல் அன்றியே, நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில்.”
பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்கலாம். நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தைக் கடத்தல் இயலாது. பொருந்திய உறவினர் சூழ, ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல இல்லறத் துணையோடு பெருநெறியாகிய இல்லறத்தை செம்மையாக நடத்திடலாம். அதனால் பிறவியாகிய வெள்ளத்தைக் கடக்கலாம் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
ஆற்று வெள்ளம் பிறவியைக் குறிக்கும். பசுவின் வாலைப் பற்றி ஆற்று வெள்ளத்தைக் கடத்தல், நல்ல மனைவியோடு இல்லறத்தை நடத்தலைக் குறிக்கும். நாயின் வாலைப் பற்றிக் கடத்தல் தீக்குணம் பொருந்திய மனைவியோடு வாழ்தலைக் குறிக்கும்.