புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவரும்
காலனையும் போடா என்றே
இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி
னாறுவய தென்றும் பெற்றான்
அனங்காட்டும் தண்டலையார் அடியாரெல்
லாம்ஒருவர்க் கஞ்சு வாரோ!
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்
கொருநாளும் பயப்ப டாதே.
இதன் பொருள் ---
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு ஒருநாளும் பயப்படாது - பனங்காட்டு நரி எப்போதும் சலசல என்ற ஒலிக்கு அஞ்சிடாது; (அதுபோல), அனம் காட்டும் தண்டலையார் அடியாரெல்லாம் ஒருவருக்கு அஞ்சுவாரோ - அன்னங்களைக் காண்பிக்கும் (பொய்கைகளையுடைய) திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் அடியவர் எல்லாரும் ஒருவருக்கும் அஞ்சமாட்டார்; புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்சவரும் காலனையும் - காடுகளைக் காட்டும் மண்ணுலகும் வானுலகும் அஞ்சுமாறு வந்த எமனையும், இனம் காட்டும் மார்க்கண்டன் போடா என்று கடிந்து - அடியார்களின் உறவைக் காட்டும் மார்க்கண்டன் போடா என்று விலக்கி, என்றும் பதினாறு வயது பெற்றான் - எப்போதும் பதினாறு வயதினைச் (சிவபெருமானிடம்) பெற்றான்.
‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்பது பழமொழி.
மார்க்கண்டேயர் வரலாறு
அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து, தவத்தையே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்து வாழ்ந்து வந்தார். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார். வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி ஆகிய சிவபரம்பொருள் விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றார். முனிவர் பெருமான் புரமூன்று எரித்த பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டினார்.
அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீய குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும், கோல மெய்வனப்பு உடையவனும், குறைவிலா வடிவு உடையவனும், நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும், பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய சற்புத்திரன் வேண்டுமா? சொல்வாயாக" என்றார்.
"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",
"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம் எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான். --- கந்த புரைணம்.
முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றார். அரவாபரணர் அவ்வரத்தை அருளினார்.
மாண் தகு தவத்தின் மேலாம் மறைமுனி அவற்றை ஓரா,
"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி, யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான். --- கந்த புராணம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தருமபத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றார். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினார். ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.
மார்க்கண்டேயர், தாய்தந்தையரை நோக்கி, “நீங்கள் வருந்த வேண்டாம்; உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறி விடைபெற்று, காசித் திருத்தலத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து வந்தார். அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய
மெய்யனே! பரமனே! விமலனே! அழல்
கையனே! கையனேன் காலன் கைஉறாது
உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’ --- கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி, அவரை நெருங்கவும் கூடாதவனாய் திரும்பி, தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, அவன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராகி சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “ ஐயனே! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால், அவர் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; திருக் கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தமது மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்று கட்டளை இட்டான். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும், இடையறா அன்பின் தகைமையையும் கண்ணுற்று, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியோரே! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துள்ளான், உமக்கு இந்திர பதவியைத் தருவான், வருவீர்” என்றான். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார். நீ போ” என்றார்.
“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்
போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.” --- கந்தபுராணம்.
அது கேட்ட காலன் தனது தலைவனிடத்து அணுகி நிகழ்ந்தவை கூறினான். அது கேட்ட இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினான். அவனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். இயமன் “மைந்தா! நீ என்ன நினைத்தாய்? என்ன செய்கிறாய்? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யார்? ஈசனார் உமது தந்தைக்கு அளித்த வரத்தை மறந்தாயோ? நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, நான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், வானத்து மீன்களை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டு போகேன். விரைவில் வருவாய்” என்றான். மார்க்கண்டேயர் “அந்தகா! சிவன் அடியார் பெருமையை நீ அறியாய். அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி எமபுரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.”
“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். --- கந்தபுராணம்
“இவ்விடம் விட்டு விரைவில் போ, போ” என்ற வார்த்தைகளைக் கேட்ட இயமன் மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றாய். என் வலிமையைக் காண்பாய்” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசினான், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் இருந்தார். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் உனது உயிரை வாங்க எண்ணினான்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தார். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவற்றைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர்.
மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்
சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி
உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான். --- கந்தபுராணம்
பின்வரும் தேவாரப் பாடல்கள் மார்க்கண்டேயர் வரலாற்றை எடுத்துக் கூறும்.
“நலமலி தருமறை மொழியொடு
நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,
மலர்அவை கொடுவழி படுதிறல்
மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி தரு மறலி தன்உயிர்
கெட உதை செய்தவன் உறைபதி
திலகம் இது என உலகுகள் புகழ்
தருபொழில் அணிதிரு மிழலையே.” --- திருஞானசம்பந்தர்.
“நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே.” --- திருஞானசம்பந்தர்.
“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,
சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.” --- அப்பர்.
“மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.” --- அப்பர்.
“அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்தகாலன் தன்ஆருயிர் அதனை
வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்
எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்
இவன் மற்றுஎன் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன் கூர்உளானே.” --- சுந்தரர்.
இறையடியார்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை அறிவுறுத்தி,
“சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.”
எனவும்,
“நாமார்க்குங் குடியல்லோம், நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.”
எனவும்,
“கற்றுக் கொள்வன வாயுள நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள நீருள;
கற்றைச் செஞ்சடையான் உளன் நாமுளோம்;
எற்றுக்கோ நமனால்முனிவு உண்பதே.”
எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களை இங்கு வைத்துச் சிந்திக்கவும்.