70. அஞ்சாதவர்

போரஞ்சார் அதிவீரர்! பொருள் அஞ்சார்

     விதரணம்சேர் புருடர்! தோயும்

நீரஞ்சார் மறைமுனிவர்! நெருப்பஞ்சார்

     கற்புடைய நிறைசேர் மின்னார்!

வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா

     ரே! சொன்னேன் மதமா என்னும்

காரஞ்சா திளஞ்சிங்கம் கனத்தவலி

     யாம்தூதன் கால்அஞ் சானே.


இதன் பொருள் ---

    வார் அஞ்சா முலையிடம் சேர் தண்டலையாரே - கச்சுக்கு அடங்காத முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டருளி, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரே!

    அதிவீரர் போர் அஞ்சார் - பெரிய வீரர்கள் போர்செய்ய அஞ்சமாட்டார்கள், விதரணம் சேர் புருடர் பொருள் அஞ்சார் - கொடைப்பண்பு உடைய ஆடவர் பொருளுக்கு அஞ்சமாட்டார், மறைமுனிவர்கள் தோயும் நீர் அஞ்சார் – வேதம் உணர்ந்த முனிவர் முழுகும் நீரைக் கண்டு (முழுக) அஞ்சிடார், கற்பு உடைய நிறைசேர் மின்னார் நெருப்பு அஞ்சார் - கற்பினை உடைய ஒழுக்கம் மிகுந்த பெண்டிர் நெருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார், இளஞ்சிங்கம் மதம் மா என்னும் கார் அஞ்சாது - இளைய சிங்கம் மதமுடைய யானையாகிய மேகத்திற்கு அஞ்சிடாது, கனத்த வலி ஆம் தூதன் கால் அஞ்சான் - திண்ணிய வலிமையுடைய தூதுவன் நடைக்கு அஞ்சிடான்.

      மறைமுனிவர் நீரின் முழுக அஞ்சாமை போலக் கற்புடைய மாதர் நெருப்பில் முழுக அஞ்சார் என்றது சிறப்புடையது.


10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி, எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும் அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழி...