அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வடிவவேல் தனை (பொது)
முருகா! உனது திருவடியைத் தொழ அருள்வாய்
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் ...... தனதான
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம்
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர்
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
துனதுதாள் தொழமனந் ...... தருவாயே
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப்
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக்
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வடிவவேல் தனை வெகுண்டு, இளைஞர் ஆவியை வளைந்து,
அமர்செய் வாள்விழியர், நெஞ் ...... சினில் மாயம்
வளர, மால் தனை மிகுந்தவர்கள் போல அளவி வந்து,
அணுகு மாநிதி கவர்ந் ...... திடு மாதர்,
துடியை நேர் இடை தனம் துவளவே, துயில் பொருந்து,
அமளி தோய்பவர் வசம் ...... சுழலாதே,
தொலைவு இலா இயல் தெரிந்து, அவலம் ஆனது கடந்து,
உனது தாள் தொழ மனம் ...... தருவாயே.
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவு பங்-
கயனும், நான்மறையும், உம் ...... பரும் வாழ,
பரவை ஊடு எழு விடம் பருகி, நீள் பவுரி கொண்டு
அலகையோடு எரி பயின்று, ...... எருது ஏறி,
கொடிய வாள் அரவு, இளம் பிறையினோடு, அலை சலம்
குவளை சேர் சடையர் தம் ...... திருமேனி
குழைய, ஆதரவுடன் தழுவு நாயகி தரும்
குமரனே! அமரர் தம் ...... பெருமாளே.
பதவுரை
படி எ(ல்)லா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும் --- உலகம் முழுமையும் காத்து அருள் புரிகின்ற திருமாலும், அவன் பெற்று அருளியவனும்,தாமரையில் வாழுகின்றவனும் ஆகிய பிரமதேவனும்.
நான் மறையும் உம்பரும் வாழ --- நான்கு வேதங்களும், தேவர்களும வாழும்பொருட்டு,
பரவை ஊடு எழு விடம் பருகி --- திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அமுது செய்து,
நீள் பவுரி கொண்டு --- அழகிய பவுரிக் கூத்தை இயற்றி,
அலகையோடு --- பேய்களோடு ஆடி,
எரி பயின்று --- நெருப்பைத் திருக்கையில் ஏந்தி,
எருது ஏறி --- இபடத்தின் மீது இவர்ந்து,
கொடிய வாள் அரவு --- கொடிய ஒளி பொருந்திய பாம்புகளை,
இளம் பிறையினோடு --- இளம் பிறைச்சந்திரனோடு,
அலை சலம் –-- அலகளை வீசும் கங்கை நதியும்,
குவளை சேர் சடையர் தம் திருமேனி குழைய –-- குவளை மலர்களும் சூடியுள்ள திருச்சடையினை உடைய சிவபரம்பொருளினது திருமேனி குழையுமாறு,
ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே --- அன்போடு தழுவிய உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!
அமரர் தம் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
வடிவ வேல் தனை வெகுண்டு --- அழகும் கூர்மையும் பொருந்திய வேலைக் கோபித்தது போல எழுந்து,
இளைஞர் ஆவியை வளைந்து அமர் செய் வாள் விழியர் ... இளைஞர்களின் உள்ளத்தை வளைத்துப் போர் புரியும் ஒளி பொருந்திய கண்களை உடையவர்களும்,
நெஞ்சினில் மாயம் வளர --- உள்ளத்தில் வஞ்சகம் மிகுந்து நிற்க,
மால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் --- அன்பு மிக்கவர் போல நடித்து, அளவளாவி அணுகிப் பெரும் செல்வத்தைக் கவருகின்ற பொதுமாதர்கள்,
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே --- உடுக்கை போன்ற இடையானது, மார்பகங்களின் கனத்தினால் துவளுமாறு படுக்கையில் கலவியில் ஈடுபடுபவர்களின் வசமாகி மனக் கலக்கம் அடையாமல்,
தொலைவு இலா இயல் தெரிந்து --- அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்து ஒழுகி,
அவலமானது கடந்து --- அதனால் பயனற்ற செயல்களில் ஈடுபடுவதைக் கடந்து,
உனது தாள் தொழ மனம் தருவாயே --- தேவரீரது திருவடிகளை வணங்குகின்ற உள்ளத்தை அடியேனுக்குத் தந்து அருளுவீராக.