மந்திரம் என்றால் என்ன

மந்திரம் என்றால் என்ன

----


    “மந்திரமும் தந்திரமும்” என்று சொல்லுவார்கள். மந்திரம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டது. தந்திரம் என்பது நூல்களை ஓதுவதால் உண்டாகும் அறிவு. சமூக வலைத்தளங்களில் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும், ஆற்றல் வாய்ந்த மந்திரங்கள் என்றும் பதிவுகள் உலா வருகின்றன. அவரவர் எதைப் படிக்கின்றார்களோ, அதை அப்படியே நம்பி, மேலனுப்பவும் செய்கின்றனர்.

    எந்த மந்திரமும் சொல் அளவிலோ, எழுத்து அளவிலோ, ஆற்றல் வாய்ந்த மந்திரம் ஆகாது. சற்குருவின் முகமாக அது உபதேசிக்கப்பட வேண்டும். ‘சற்குரு’ என்னும் சொல் பொருள் ஆழம் மிக்கது. வேட மாத்திரத்தால் குருவாக உள்ளவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்கள் நாம் நம்பும்படியாக எதையும் மிக அழகாகப் பேசுவார்கள். எல்லாம் பொருள் கருதியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குருவைத் தேடி நாம் அலைதல் வேண்டாம். அதற்காக மனம் ஏங்கி, இறைவனை வேண்டி இருந்தால் போதும். பலகாலம் ஏங்கி இருத்தலைக் கண்டு, பரம்பொருளே குருநாதனாக வந்து நம்மை அகப்படுத்துவார். இது யானையைக் காட்டி யானையைப் பிடிப்பது போல. ஆட்டினைக் காட்டி, வேங்கையைப் பிடிப்பது போல.


“ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்,

மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ?

கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா

வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே.”

என்பது சிவவாக்கியர் பாடல்.

இதன் பொருள் -- ஒரு வரம்பை ஏற்படுத்தி, அவ்வரம்பினைக் கடந்து வருகின்றவர்களைக் கொல்லுவதற்காகச் சொல்லி உள்ள உனது ஆஞ்ஞாபனையைக் கடந்து வந்த கயாசுரனைக் கொன்று, அந்தத் தோலைப் போர்வையாக இட்டுக் கொண்ட ஞானாசிரியனாகிய சிவபெருமானே! (கயாசுரன் என்பது உயிர்களிடத்துப் பொருந்தி உள்ள ஆணவத்தைக் குறிககும்.) ஒரு புலியைப் பழக்க விரும்பிய வேடுவன், ஒர் ஆட்டினை, அதைப் பிடிக்க நியமித்த ஓரிடத்தில் கட்டுவிக்க, புதருக்குள் மறைந்திருந்த புலியானது வெளிப்பட்டு வந்து, தனக்கு நல்ல இரை கிடைத்தது என்று ஆட்டின் மீது பாயும்போது, புலியை வசமாகப் பிடிப்பது போல, எனக்கு இவ்வுலகத்தில் யாவரும் கண்டு விருப்பும் கொள்ளுகின்ற, பொன்னைக் காட்டி, அதனிடத்தில் ஆசையை உண்டாக்கி, அதன் வழியே வருகின்ற உலக வாழ்க்கையில் அகப்படுத்தி, எனது அறிவை மயக்குவது திருவருளுக்கு அழகு ஆகுமோ? இனியாவது உமது திருவருட் சத்தியைக் கொண்டு எனக்கு மோட்ச வீட்டை உணர்வித்து, உனது திருவடியை அடைந்து குடியிருக்கின்ற பெரியோர்களிடத்தில், உங்களைப் போல் இவனும் நமக்கு ஒரு அன்பன் ஆவான் என்று சொல்லி, எனது ஞானானுபவ குணத்தை அவர்களிடத்திலும் வெளிப்படுத்துபம்படி வேண்டிக் கொள்ளுகின்றேன். 

    “பிறியாக் கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு” என்பது, குமரகுருபர அடிகள் அருளிய திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.  “அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமை” என்பது திருவாசகம். எனவே, இறைவன் மானிடச் சட்டை தாங்கித்தான் குருவாக வருவான். அப்படித் தானாக நம்மைத் தேடி வருபவர்தான் ஞானகுரு அல்லது சற்குரு. “மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே” என்று முருகப் பெருமானைப் போற்றுவார் அருணகிரிநாதர். “தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே” என்பது திருவாசகம். அப்படி வந்த சற்குரு பெருங்கருணை வைத்து, மந்திர உபதேசம் புரிவார். அது மந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பாடலாகவும் இருக்கலாம். அல்லது ஒரு வார்த்தையாகவும் இருக்கலாம். குருநாதன் உபதேசிப்பது எதுவோ, அதுவே மந்திரம் ஆகும். “நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியம் விளக்குகிறது. “சொன்னது மந்திரமா, இட்டது பச்சிலையா” என்பது திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்து அடிகளார் பாடியது. இறைவனைக் கருதி, எது சொல்லப்பட்டதோ அதுவே மந்திரம் ஆகும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    நான் பிறந்த ஊரில் இருந்த சிவானந்த மவுனகுரு சுவாமிகள் குறித்து அறியாதார் யாரும் இல்லை. கோணிப்பட்டை சாமி என்று அவரைக் குறிப்பிடுவார்கள். அவர் கோணிப்பட்டையைத் தான் கோவணமாக அணிந்து இருந்தார். அது ஏன் என்பது நான் அறிந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு. கதை அல்ல. திருநீறும் வில்வ இலையும் கொடுத்தே தன்னிடத்து வந்தவர்களின் தீராப் பிணியைத் தீர்த்து அருளியவர். பல்லாயிரக் கணக்கானவர்களை சைவர் ஆக்கிய புனிதர். எனது இளமைப் பருவத்தில் ஆறு ஆண்டுகள் தினமும் அவரைத் தரிசித்துப் பணி செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். அவர் உபதேசம் பெற்ற கதையை அவரே சைகையால் சொன்னார். குடியாத்தம் நகருக்கு அருகில் உள்ள மகாதேவ மலையில் அப்போது இருந்த ஒரு பெரியவரிடத்தில் உபதேசம் பெறச் சென்றார். குருவின் சந்நிதானத்தில் நின்றார். மகைதேவ மலையில் இருந்த குரு தெலுங்கு மொழியில் “ஏன் வந்தாய்” என்று கேட்டாராம். “உபதேசம் பெற வந்தேன்” என்று சொன்னாராம். “கழுதைக்கு என்ன உபதேசம்? போய், செய்கிற வேலையை ஒழுங்காகச் செய்” என்றாராம். குருவின் ஆணைப்படி, திரும்பி வந்து, அவர் சொன்னதையே உபதேசமாகக் கொண்டு, தான் செய்து வந்த திருக்கோயில் திருப்பணியை இறைச் சிந்தனையோடு செய்த அருளாளர்தான் எமது சிவானந்த மவுனகுரு சுவாமிகள்.

    இன்னொரு நிகழ்வை இங்கே சிந்திப்பது பயன் தரும். இராமானுஜர் அருளுபதேசம் பெறுவதற்கு வேண்டி, திருவரங்கத்தில் இருந்து, திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில், அவர் வாழ்ந்திருந்த இல்லத்தின் முன் சென்று நின்றாராம். “யார்” என்று உள்ளே இருந்து திருக்கோட்டியூர் நம்பிகளின் குரல் வந்தது. “நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்” என்று சொன்னாராம். “போய் வா” என்று விடை வந்தது. கதவு திறக்கவில்லை. இப்படி, பதினேழுமுறை சென்றும் குருதரிசனம் கிடைக்கவில்லை. படினெட்டு முறை சென்றும் உபதேசம் குருதரிசனம் கிடைக்கப் பெறாமல் திரும்பினார் இராமானுசர். அடுத்து முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளின் திருமாளிகை அடைந்து, திருக்கதவின் முன் நின்று, “அடியேன் இராமானுஜன் வந்துள்ளேன்” என்றாராம். திருக்கதவம் திறக்கப்பட்டது. நம்பிகளின் அருளுபதேசம் கிடைக்கப் பெற்றது. பதினேழு முறை ‘நான்” என்று சொன்னபோது கிடைக்காத அருளுபதேசம், “அடியேன்” என்று சொன்னதும் கிடைத்தது. ‘நான்’ என்னும் எண்ணம் உள்ளவரையில், குருதரிசனம் கிடைக்காது. 

    நாம் ஒருவரைக் காண வேண்டி, அவரது முகவரியைக் வைத்துக் கொண்டு, அவர் வாழுகின்ற ஊருக்குச் செல்கிறோம். அந்த முகவரிக்குச் செல்லும் வழியைக் காட்டவே நல்லவர் ஒருவரின் துணை வேண்டும். தவறாக வழி காட்டுவோர் இல்லாமல் இல்லை. சரியான வழியைக் காட்டுபவரும், தவறான வழியைக் காட்டுவோரும் மனித வடிவில்தான் இருப்பர். (சற்குருவும், அசற்குருவும் மனித வடிவில்தான் இருப்பர்) ஒருவழியாக, நாம் காண விரும்பியவர் வாழுகின்ற வீட்டினைக் கண்டு, கதவைத் தட்டுகிறோம். காண விரும்பியவர் கதவைத் திறந்தால் மட்டம் போதாது. அவர் இதற்கு முன்னர் நாம் அறிந்தவராகவும் இருக்கலாம். முன்னர் பார்த்து அறியாதவராகவும் இருக்கலாம். நம்மை இன்னார் என்று அறிந்து, அவர் நம்மை வரவேற்கவில்லையானால், நாம் எடுத்த அத்தனை முயற்சியும் வீணே. அவராக வந்து கதவைத் திறந்து, நம்மைப் பார்த்து, விரும்பி வரவேற்றால் நமது எண்ணமும், முயற்சியும் நிறைவேறும். வீட்டிற்குள் அழைத்துச் சென்று இனிய சொற்களைப் பேசி, நம்மைத் தக்கபடி உபசரிக்கவில்லையானால், பலன் இல்லை. அதுபோலத்தான் குருதரிசனமும். நமக்கு நல்வினைப் பயன் இருந்தால்தான் குருதரிசனம் கிடைக்கும். 

    அப்பர் பெருமானது பெருமைகளைக் கேள்வியுற்ற அப்பூதி அடிகள், அவரைத் தமது குலகுருவாகக் கொண்டு இருந்தார். அப்பர் பெயரால் பல அறங்களைச் செய்து வந்தார். அப்பர் பெருமானை நேரில் பார்த்தது இல்லை. அப்பர் மீது தாம் கொண்டிருந்த அன்பின் அறிகுறியாகத் தாம் அமைத்த தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றுக்கும் “திருநாவுக்கரசு” என்னும் பெயரையே சூட்டினார். திருத்தல யாத்திரையின் போது, திங்களூர் வழியே சென்ற அப்பர், அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தரையும், அதில் தமது பெயர் வரைந்து இருப்பதையும் கண்டார். அதை அமைத்தவர் யார் என்று அங்கிருந்தவர்களைக் கேட்டு, அவர்கள் மூலமாகவே அப்பூதி அடிகள் இல்லம் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டார். அப்பூதி அடிகளின் வீட்டின் தலைக்கடை வாயிலில் வந்து நின்றார். அதை அறிந்த அப்பூதி அடிகள் விரைந்து வந்து அப்பரை வணங்கினார். அப்பரும் வணங்கினார். அப்போதும் அப்பர் எப்படி இருப்பார் என்பது அப்பூதி அடிகளுக்குத் தெரியாது. அப்பர் பெருமானே தம்மை இன்னார் என்று அறிவித்தபின்னரே, வந்தவர் அப்பர் என்பதை அறிந்து கொண்டார் அப்பூதி அடிகள். இப்படித்தான் குருதரிசனம் கிடைக்கும்.

    “இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்” என்று திருவாசகம் கூறும். மணிவாசகப் பெருமானை இறைவன் ஆட்கொண்ட விதமும் இவ்வாறுதான். மணிவாசகர் இறைவனைத் தேடிப் போகவில்லை. இறைவன்தான் மணிவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டார். “தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே” என்றுதான் மணிவாசகர் பாடி உள்ளார்.

    அப்படி நம்மை அகப்படுத்தி ஆட்கொண்ட குருநாதர் உபதேசிப்பதே மந்திரம். மந்திர உபதேசம் பெற்றால் மட்டுமே போதாது. மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும். “உரு ஏறத் திரு ஏறும்” என்பார்கள். உரு ஏற ஏற, மந்திர ஆற்றல் பெருகும். மற்றபடி, சக்தி வாய்ந்த மந்திரம் என்று எதையாவது சொல்வது எல்லாம் அறியாமையே ஆகும். ஒரு மந்திரத்தைக் கோடி முறை உருவேற்றினால் ஆற்றல் பெருகும் என்று சொல்வார்கள். அப்படி உருவேற்றித் திரு ஏறிய அம்மையார் ஒருவரை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவேன்.

“பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்

நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,

பாவம் ஆயின பாறிப் பறையவே,

தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.”

என்பது அப்பர் தேவாரம். நூறு ஆயிரம் என்பது ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் என்பது ஒரு கோடி. பூவனூர்ப் புனிதன் என்பது திருப்பூவனூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும் சிவனைக் குறிக்கும். அவனுடைய நாமம் என்பது திருவைந்தெழுத்து. “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு. திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒரு கோடி முறை உருவேற்றியவர்கள், தமது பாவங்கள் (சஞ்சித கர்மங்கள்) எல்லாம் அழிய, இந்திர பதவியை விடவும் மேலான அருட்செல்வத்தை அடைவார்கள் என்கிறார் அப்பர் பெருமான்.

நாள் ஒன்றுக்கு 108 என்று வைத்துக் கொண்டால், மாதம் ஒன்றுக்கு 3240 ஆகிறது. ஒரு வருடத்துக்கு 38,880 ஆகிறது. இப்படி, 257 ஆண்டுகள் கழிந்தால்தான் ஒரு கோடி ஆகும். அவ்வளவுக்கு மனிதனின் வாழ்நாள் அமைவது இல்லை. ஒருநாளைக்கு 108 முறை சொன்னாலே போதும் என்று அமைந்து விடுபவர்கள் உண்டு. அது சிரத்தை ஆகாது. இருக்கின்ற வாழ்நாளில், எவ்வளவுக்கு சிரத்தையுடன் மந்திரத்தை உருவேற்றுகின்றோமோ, அவ்வளவுக்கு ஆற்றல் பெருகும் என்பதுதான் உண்மை.

அது போலத்தான், நூல்கள் ஓதுவதும். ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்திநின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை” என்பது பெரியபுராணம். சொல் நன்றாகத் தெரியும். ஆனால், அதன் பொருள் மறைந்து கிடக்கும். பொருளை உணர்தல்தான் அறிவு. புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.

     அறிதல், தெரிதல், கற்றல், என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,

“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்"

என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

    "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த, தாம் உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 

      மணல்கேணியைத் தோண்டுவது போல, முயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால், கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்க, கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலக நூல். இன்னொன்று அறிவு நூல். உலக நூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவு நூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் எல்லாம், அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.

     ஆக, கற்றல் என்பது மிக எளிதானதே. அதில் மனம் வைக்கவேண்டும். முயற்சி இருக்கவேண்டும். முயற்சியில் தான் எல்லாமே உள்ளது. முயற்சி என்பது தோண்டுவதைக் குறிக்கும். எவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு தண்ணீர் ஊறும். எவ்வளவு முயல்கின்றோமோ, அவ்வளவுக்கு அறிவு ஊறும். ‘கலை அறிவு’ என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. ‘அருள் அறிவு’ என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு.

     "பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டிப் பாரம். சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்." என்கின்றார் வள்ளல்பெருமான். திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான். “தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகவே இவ்வாறு அருளி உள்ளார்.

     நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவை, ‘கலை அறிவு’ என்கிறோம். 

     ஒருவன் ஒரு பிறவியில் எத்தனை புத்தகங்களைப் படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், நாம் வாழும் நாளில் சுமார் ஆயிரம் நூல்களைப் படிக்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் ஒரு சில நூல்களையே முயன்றுதான் படிக்க முடிகின்றது. படிக்கப் படிக்க, மறந்துகொண்டே வருகின்றது. படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் முடியும். இந்த நூலறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது.  அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? என்றால் வள்ளல்பெருமான் ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகின்றார்.

     ஒரு ஆள் சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை, ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல் பெருமானாரின் கணக்கு.       

     நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் 10 கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 2 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 2,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கம் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்கவேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.

"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."

என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

     நூறு ஆண்டுகள் என்பது சௌரமான ஆண்டைக் குறிக்கும். சந்திரமான ஆண்டு என்பது 120 ஆகும். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில், 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார்.

     தொண்டரடிப்பொடி ஆழ்வார் போட்ட கணக்கு ஒருபுறம். இன்னொரு புறம், சேரமான் பெருமாள் நாயனார் போட்ட கணக்கு ஒன்றையும், பதினோராம் திருமுறையில் வரும் "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் பகுதியில் காண்போம்.


“விதித்தன வாழ்நாள் பெரும்பிணி  விச்சைகள் கொண்டுபண்டே

கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை, குங்குமக் குன்று அனைய

பதித்தனம் கண்டனம், குன்றம்வெண் சந்தனம் பட்டனைய

மதித்தனம் கண்டனம், நெஞ்சு இனி என்செய்யும் வஞ்சனையே.”

இதன் பொருள் ---

     நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு, பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலை உடைய தனங்களை முன்னே கண்டோம், பின்பு அத் தனங்கள், மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டன போல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்து விட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

     விதித்த வாழ்நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணினால், பெரிய நோய்கள் வந்து வெதுப்புகின்றன. காமநோயும் வந்து வெதுப்புகின்றது. இதில் என்னத்தைச் சாதிப்பது?

“வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல், மிக அவற்றுள்

ஈண்டிய வெந்நோய், முதலது  பிள்ளைமை, மேலது மூப்பு

ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு, இங்ஙனே

மாண்டன, சேர்தும் வளர்புன்  சடைமுக்கண் மாயனையே.” 

இதன் பொருள் ---

     படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள், மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இந்த உடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வரையறுக்கிறான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவகையாய்த் திரள்கின்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. வரையறுக்கப்பட்ட ஆண்டுகளிலும் தொடக்கப் பகுதி குழந்தைப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. அவைகளிலும் அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்? ஆகையால், நாம் மிக இளம் பருவத்திலேயே வேறு எதனையும் பொருட்படுத்தாமல், நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

    இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலை அறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? என்றால், அதுதான் இல்லை. நம்முடைய முயற்சி இன்மைதான் பிரச்சினை. முயற்று இன்மை, இன்மை புகுத்தி விட்டது.

     கற்பது என்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல என்று மிகவும் எளிதான வழியைத் தான் நம் மீது கருணை வைத்து திருவள்ளுவ நாயனார் காட்டினார் என்பதை உணர்தல் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித் தானே ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும்.

     நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையானது கல்விச் செல்வம் என்பதால், அதையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரை மட்டும் காணலாம்.

     "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, ‘நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா’ என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரமே இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். எனவே, தோண்ட வேண்டியது மணலைத் தான். கடினமான பாறையை அல்ல. எளிதான கற்றலைத் தான் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

“மந்திரம் என்றால் என்ன” என்ற தலைப்பில் அருளாளர் அ. ச. ஞானசம்பந்தனார் ஒரு அரிய நூலைத் தந்து உள்ளார். வாய்ப்பு நேருமாயின் படித்துப் பயன் பெறலாம்.



மந்திரம் என்றால் என்ன

மந்திரம் என்றால் என்ன ----      “மந்திரமும் தந்திரமும்” என்று சொல்லுவார்கள். மந்திரம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டது. தந்திரம் என்பது நூல...