“சோறென்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே
செய்யும்! அருள் சுரந்து காக்கும்!
சோறென்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே
செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?
சோறென்ன, எளிதேயோ? தண்டலையார்
தம்பூசை துலங்கச் செய்யும்
சோறென்ன செய்யுமெனில், சொன்னவண்ணம்
செயும்! பழமை தோற்றுந் தானே.”
இதன் பொருள் ---
சோறு என்ன செய்யும் - உணவு என்னத்தைச் செய்யும்?, எல்லாம் படைத்திடவே செய்யும் - எப்பொருளையும் ஆக்குமாறு புரியும், அருள் சுரந்து காக்கும் - அருள் மிகுந்து காப்பாற்றும், சோறு என்ன செய்யும் - உணவு என்னத்தைச் செய்யும்? எல்லாம் அழித்திடவே செய்யும் - எப்பொருளையும் அழிக்குமாறு புரியும், அதன் சொரூபம் ஆக்கும் - உணவின் வடிவம் ஆக்கும், சோறு என்ன எளிதேயோ - உணவு அவ்வளவு அற்பமா? தண்டலையார் தம் பூசை துலங்கச் செய்யும் - தண்டலையாரின் வழிபாடு விளக்கமுறப் புரியும், சோறு என்ன செயும் எனில் - உணவு என்னத்தைச் செய்யும்? என்றால், சொன்னவண்ணம் செயும் - நாம் கூறியவாறு முடித்துத் தரும், பழமை தோற்றும் - பழமையை உண்டாக்கும்.
‘சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்ன எல்லாம் கேட்பான்' என்பது பழமொழி. ‘உணவின் பிண்டம்' ஆகையால், அதன் சொரூபம் ஆக்கும் என்றார். தாம் அளிக்கும் உணவுக்காகத் தம்மைப் பழைமையான உறவினர் என்று கூறி வருவோரை நோக்கிப் ‘பழமை தோற்றும்' என்றார். சோறு என்னும் சொல்லுக்கு மெய்யுணர்வு அல்லது ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்பது அப்பர் தேவாரம். தில்லையைத் தரிசிக்க முத்தி என்பர். தில்லையம்பலத்தைத் தரிசித்தோர்க்கு முத்தி கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
“தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனை தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.” -- திருவாசகம்.
No comments:
Post a Comment