சகமிக்க தண்டலையார் அடிபோற்றும்
மகராசர் சபையில் வந்தால்,
சுகமிக்க வேசையர்க்குப் பொன்நூறு
கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ
அகமிக்க சோறிடுவார்! அந்தணருக்
கெனின்நாழி அரிசி ஈவார்!
பகடிக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக்
கொருகாசு பாலிப் பாரே.
இதன் பொருள் ---
சகம் மிக்க தண்டலையார் அடி போற்றும் மகராசர் சபையில் வந்தால் - உலகில் சிறப்புற்று விளங்கும் திருத் தண்டலை இறைவரின் திருவடியை வணங்கும் பெருமன்னர்களின் அவைக்குப் போனால், சுகம் மிக்க வேசையர்க்கு நூறு பொன் கொடுப்பர் - இன்ப மிகத் தரும் கணிகையர்க்கு நூறு பொன் கொடுப்பார்கள், தமிழ் சொன்ன பேர்க்கோ அகம் மிக்க சோறு இடுவர் - தமிழ்க் கவி கூறியவர்க்கு வீட்டில் மிகுந்துள்ள சோற்றைப் போடுவர். அந்தணருக்கு எனின் நாழி அரிசி ஈவர் – அந்தணர்களுக்கு ஆயின் படியரிசி கொடுப்பர். பகடிக்கோ பணம் பத்து திருப்பாட்டுக்கு ஒருகாசு பாலிப்பார்! – பகடிக்கு எனில் பத்துப் பணமும், அழகிய பாவினுக்கு ஒரு காசும் அளிப்பார்கள்.
பகடி - ஏமாற்றுகிறவன் (வெளிவேடக்காரன்), ஆடம்பரக்காரன். பகட்டு – ஆடம்பரம், தற்பெருமை, கவர்ச்சி, ஏமாற்று, அதட்டு, பகட்டுதல் – வெளிமினுக்குதல், வேடங்காட்டுதல், ஆடம்பரம் காட்டுதல், வெருட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல்.
பகட்டுக் காட்டுவது செயற்கையானது. தொடக்கத்தில் பெருமை தருவது போல் இருந்து, நாளடைவில் எல்லாச் சிறுமைகளையும் ஒருசேரக் கொண்டு வந்து சேர்க்கும். இது ஆடம்பரம் செய்வோருக்கு மட்டுமல்லாது, ஆடம்பரத்தில் மயங்குவோருக்கும் பொருந்தும். புறத்தே பொலிவிழக்கச் செய்யும் நோய்களைப் போல் அல்லாது, உள்ளத்தில் அழுக்காறு, பேராசை முதலிய குற்றங்களை மிகுத்து, மனிதனை இழிநிலையில் தள்ளிவிடும். ஆடம்பரத்தால் அரசுகள் அழிந்து ஒழிந்ததை வரலாறு கூறும். உழைக்காமல், ஆடம்பரமாக வாழ எண்ணும் அற்பபுத்தி உள்ளவர்கள் பகட்டுக் காட்டுவார்கள்.
இவர்கள் மிகக் கொடியவர்கள் என்பதைக் காட்ட, “நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
“ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.”
என்னும் திருமந்திரப் பாடலில் ஆடம்பரம் காட்டுவோரை, ‘அறிவிலிகள்’ என்கிறார் திருமூல நாயனார்.
இதன் பொருள் ---
முயற்சி ஏதும் இல்லாமல், வயிறு வளர்த்தலையே பயனாகக் கருதி, தவம் செய்வோரைப் போல பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி, உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள்! உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீங்கள், வேடத்திற்குப் பொருந்துமாறு உண்மை அன்பை உள்ளத்தில் வைத்து, ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று, சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடையது.
“இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.”. – திருமந்திரம்
இதன் பொருள் ---
தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்களில் சிலர், ஒழுக்கத்தால் உயர்வு அடைய நினை யாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கத்தை உடையவராய் நிற்கமாட்டாமையின், தமது குலத்தன்மை அழிநுமாறு, அந்நிலையில் நீங்கி, உலகம் தம்மைக் கடவுளராக மதித்துப் போற்றப்படும் மிக உயர்ந்த நிலையைப் பெறுதற்பொருட்டு, தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இருசாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களைச் செயது பாழ்பட்டுவரும் கொடியவர்கள் ஆவர்.
பகட்டுக் காட்டி வயிறு வளர்ப்போர் எய்தும் நிலை குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடி உள்ளார்.
“பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து,
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்,
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.”
இதன் பொருள் ---
உள்ளத்தில் தவ உணர்வு இல்லாமல், புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியர் ஆகமாட்டார். அவர் பாவிகளே ஆவர். அவர் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. அவரது நடிப்பின் பயனாக இம்மையில் சிறிது இன்பத்தை நுகர்ந்தாலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைவர்.
பொய்வேடத்தால், ஆடம்பரத்தால் மயக்குதலும், மயங்குதலும் உலக இயற்கை என்பது அறிவுறுத்தப்பட்டது. உலக நடப்பை அறிந்து, செம்மைப்பட வேண்டும்.
No comments:
Post a Comment