சிறுகாலையே செய்க
---
'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது. அறிவு ஒன்றே நல்ல சமுதாய வாழ்வை அளிப்பது. நாயனார் இத்தகைய மேலான அறிவுடைமையைக் கல்வி, கேள்விகளுக்கு அடுத்து அரசியலில் அமைத்துள்ளார். அற்ப அறிவு உடையவர்கள் உலகத்தில் அரசியலில் வாழ்கின்றார்கள். அவர்களை எங்கே சேர்ப்பது என்ற வினா தொடர்ந்து எழுவதும் நியாயமானதுதான். பின்னால் நட்பியலில் இதற்கு விடை பகருகிறார் நாயனார். புல்லறிவாளன் அவன் வாழும் வரையில் அவனுக்கும் அவன் சார்ந்து உள்ள சமுதாயத்துக்கும் ஒரு நோயாக இருப்பதோடு, பேயாக எண்ணி ஒதுக்கவும் செய்யப்படுவான் என்கிறார்.
“ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்.” -- திருக்குறள்.
(பெரியோர் சொல்லி இயக்கினாலும் செய்யமாட்டாதவனாய், தானாகவும் தெளிந்து செய்யாதவனாய் மதிக்கத் தக்கதாகிய, ஓர் உயிர் என்று மட்டுமே கொள்ளுதற்கு உரிய அப் பேதையின் மூச்சு, உடலில் இருந்து நீங்கும் வரையிலும் பொறுக்க முடியாத பெரும் துன்பம்)
“உலகத்தார் உண்டு என்பது, இல் என்பான், வையத்து
அலகையா வைக்கப் படும்.” -- திருக்குறள்.
(உயர்ந்தோர் உண்டு எனச் சொல்வதை, இல்லை என்று கூறுகின்ற அறிவிலியானவன், உலகத்தில் ஒரு பேயாக எண்ணி விலக்கப்படுவான்.)
அறிவே இல்லாதவன் எத்தனையோ வகையில் மேம்பட்டவன். ஆனால் இந்தப் புல்லறிவாளனோ தானும் வாழ்வில் ஏமாந்து உலகையும் ஏமாற்றுவான். அதனால்தான், திருவள்ளுவ நாயனாரோடு, நாலடியாரும் புல்லறிவாண்மையைச் சுட்டிக் காட்டி உலகைத் திருத்த நினைக்கின்றனர். வருமுன் காக்கும் திறமே சிறந்தது. எல்லோராலும் போற்றப் பெறுவதும் அதுவே. பெறுதற்கரிய மக்கட்பிறவியைப் பெற்று, உயிர் வளர்ச்சியில் உச்சத்தில் நிற்கும் மனிதன், சமுதாயத்துக்கும் தனக்கும் ஆற்ற வேண்டியவற்றை எண்ண வேண்டும். உலகவாழ்வு செம்மையாக வழிகாட்டுவது அறிவுடையோர் செயல் ஆகும். அதற்குத் தனி மனிதவாழ்வு செம்மையுற வேண்டும். அந்தச் செம்மை நலம் நாடி, வாய்ப்பு உள்ளபோதே நல்ல செயல்களைச் செய்தல் அறிவுடைமை ஆகும்.
உயிரின் பயணம் நீண்ட நெடிய ஒன்று. அப்பயண வழியில் உணவு விடுதிகள் இல்லை. தொலையா வழிக்குப் போகின்றவன், முன் எச்சரிக்கையாக, அந்த நீண்ட நெடும் பயணத்துக்குத் தேவையான உணவைச் சேகரித்துத் தோளில் சுமந்து செல்ல வேண்டும். இதைப் பொதி சோறு என்பர். வருங்காலத்துக்குப் பொதிந்து வைப்பது இந்த ஏற்பாடு. உரிய காலத்தில், இளமையிலேயே வருங்கால வாழ்வுக்குரிய பொதியினைக் கட்டிவைக்கும் நன்முயற்சியை ஒருவன் மேற்கொள்ளாவிட்டால், அதன் விளைவு பெருத்த வேதனையில் முடியும். மறுமையில் நம்பிக்கை உடையவர்க்கே இது பொருந்தும்.
இந்த உண்மைகளை உணராத புல்லறிவினார் வாடிவருந்தி நிற்கும் நிலையினை நாலடியார் கூறுகிறது. புல்லறிவினார் வாழ்வின் கடைசி காலத்தில் தமது செயலுக்கு வருந்தி, சோறு பொதிய நினைத்தாலும் அது நிறைவேறாத நிலையினையும் அது சுட்டிக் காட்டுகிறது. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த அந்தக் கேடுகெட்ட மதியினர், தம் இறுதி நாளில் அதை அனுபவிக்க நினைத்தாலும் முடியாது அலறுவர். அந்தப் பணமும் அவருக்குப் பயனற்றுப் போகிறது.
எவ்வுயிரையும் தம் உயிராய் ஒத்து நோக்கி அறம் ஆற்றாத புல்லறிவாளன் இறக்கும் காலத்தில், புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்துவிட்ட காலத்தில், தான் செய்யாது. விட்டவற்றை எண்ணித் திருத்தவோ அல்லது மூடிவைத்த பொன்னைக் குறிக்கவோ கையைக் குவித்துச் சைகை செய்கிறான்- வாய்பேச முடியாத் நிலை, பாவம். ஆனால், பக்கத்தில் உள்ளவர் அவன் புளிவிளங்காய் கேட்கிறான் என்று கருதி, போகும் உயிருக்குரது விரும்பிக் கேட்டதைக் கொடுக்க நினைப்பர். ஆனாலும், புளித்த விளாம்பழத்துக்கு அதுகாலம் இல்லையே எனக் கையை விரிப்பர்.
“பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றபடி, புல்லறிவாளர் பொருட்செல்வத்தை நிரம்பப் பெற்று வாழ்ந்த காலத்தில், அறச் செயல்களைச் செய்து வாழாது, சாகும் காலத்தில், கழிந்த நாளுக்கு இரங்கிச் செயலாற்ற நினைத்தாலும், அது முடியாத அவல நிலையை நாலடியார் பின்வருமாறு உணர்த்துகிறது.
சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்காய் ஆம்.”
உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்பவற்றை உணர்ந்து, நீண்ட நெடும் பயணத்தை உயிரானது மேற்கொள்ள உள்ளது என்பதையும் உணர்ந்து, அந்தத் தொலையா வழிக்கு உதவக் கூடிய உணவாகிய தானதருமங்கள் என்னும் கட்டுச் சோற்றை உழிருள்ள போதே கட்டி வைத்துக் கொள்ள எண்ணாமல், தருமம் செய்வதைப் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று, பொன்னையும் பொருளையும் புல்லறிவாளர்கள் பூட்டி வைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் வாய் பேச முடியாமல் இருந்துகொண்டு, கையால் சைகை செய்து தமது உறவினர்களிடம் தான துரமங்களைச் செய்யுமாறு காட்டுவார்கள். அவர்களோ இவரது சைகையைப் புரிந்து கொள்ளாமல், கடைசி காலத்தில் விளங்காய் தின்ன ஆசைப்படுக்றார் என்று நினைத்துக் கொள்வர். அந்த நிலையிலும் புல்லறிவாளருடைய பொருள் தானத்துக்கு உதவுவது இல்லை.
புல்லறிவாளர்கள் எதனையும் காலத்தில் செய்து கொள்ளாது ஏமாந்து, பின் வருந்துவார்கள். நற்செயல்களைப் பிறர் சொன்னாலும் செய்யமாட்டார்கள். தாமாகவும் உணர்ந்து செய்யமாட்டார்கள்.நற்செயல்களைச் செயல்களில் காலத் தாழ்வு கூடாது. இப்போது நாம் இளைஞராய்த் தானே இருக்கிறோம். பிறகு பொறுமையாக அறச் செயல்கள் புரியலாம் எனச் சோம்பியிருத்தலும் கூடாது, “அன்றறிவாம் என்னாது அறம் செய்க” என்கிறார் திருவள்ளுவ நாயனார். கையில் பொருள் உள்ள போதே மறைக்காமல் அறம் செய்யவேண்டும். இளமையை நம்பக் கூடாது. சூறைக் காற்று வீசும்போது, முற்றி முதிர்ந்த கனி வீழாமல் மரத்திலேயே இருக்க, பச்சிளங்காய் விழுந்து விடுவதும் உண்டு என்று நாலடியார் நவில்கிறது.
“மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்;
முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு”
இதையே, முன்றுறை அரையனார் இயற்றிய "பழமொழி நானுாறு" என்னும் நூலில் ஒரு பாடல் வேறொரு வகையால் விளக்குகின்றது. ஓடத்தில் ஏறும் முன்பே ஏறுபவரிடம் ஓடக்காரர் கட்டணம் வாங்கி விடவேண்டும். அவரை அக்கரை சேர்ந்தபின் அவருக்குக் கட்டணம் கொடுப்பதில் அக்கறை இல்லாமலும் போகக்கூடும். அதாவது, அவரிடம் கட்டணம் வாங்குவது அரிதாகவும் போய் விடலாம். சுங்கப் பணம் வாங்குவதும் இது போன்றதே. எனவே, எதையும் இளமை உள்ள போதே கல்வி கற்கவேண்டும். முதுமையில் கற்க முடியாமல் போகலாம் என்று இந்நூல் அறிவுறுத்துகிறது.
“ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண்டார்”
"சிறுகாலை" என்பதற்கு, "இளவயது" என்பதே சிறப்பான பொருள்.
"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை
உணரில் பொருள்அன்று,
தேன்அமர் கொன்றையினான் அடிக்கே
சிறுகாலை ஏத்துமினோ"
என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளார்.