எந்நாளும் இன்பமே



இன்பமே எந்நாளும்

-----


    இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள். சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக் கொள்வர். எப்படி வாழவேண்டும் என்று “ஆசாரக்கோவை” கூறுகிறது.


“துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்

இன்ப வகையான் ஒழுகலும், - அன்பில்

செறப்பட்டார் இல்லம் புகாமையும், மூன்றும்

திறப்பட்டார் கண்ணே உள.”


இதன் பொருள் ---


    துன்பம் வந்த காலத்தில்,  அத்துன்பத்தில் அமைவுற்று வாழ்தலும், இன்பம் வந்த காலத்தில், பிறர்க்கும் இன்பம் செய்யும் வகையால் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும், வேறுபட்டவருடைய வீட்டில் நுழையாமையும் ஆகிய இம் மூன்றும் ஒருவழிப்பட்ட பெரியோரிடத்தே உண்டு.


    ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்ற பொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம். ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். துன்பங்களைக் கண்டு அஞ்சி, செயலைக் கைவிடுதல் கூடாது. அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும். எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும்இன்பமயமான அனுபவத்தின் ஊடே, துன்பக் கலப்பு இல்லாமல் இல்லை. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு, துயரம் மனைவாழ்க்கை” என்பதும், “இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, ஏழை மனைவாழ்க்கை” என்பதும் சுந்தரர் தேவாரம். 

    எனவே, பிறப்பும் – இறப்பும், இன்பமும் – துன்பமும் ஒருவருடைய வாழ்வில் இரவும் பகலும் போல மாறிமாறி வருபவை என்பதை,


‘‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

நன்பகல் அமையமும் இரவும் போல

வேறு வேறு இயலஆகி மாறு எதிர்ந்து

உளஎன உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்

இன்னா வெஞ்சுரம் நல்நசை துரப்ப

துன்னலும் தகுமோ? துணிவுஇல் நெஞ்சே’’ 


என்று அகநானூறு கூறும்.


  “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று அப்பர் பெருமான் பாடி உள்ளார். எந்நாளும் துன்பம் இல்லாமல் எப்படி வாழமுடியும்? முடியும்.

    வாழப் பிறந்த மனிதன் என்றும் வாடாத வகையில் இன்பத்தினையே நாடுவது இயற்கை. அந்த இன்பத்தினைப் பெறப் பலரும் பல்வேறு வகையில் முயல்கின்றனர். ஒரு சிலர் தம் முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். பலர் வீழ்ச்சி உறுகின்றனர். சிலர் வழியல்லா வழிகளில் சென்று இன்பம் துய்க்க முயல்கின்றனர். சிறுபொழுதே இருந்து பின்பு துன்பமாக மாறுகின்ற இன்பத்தைக் காணவே உலகில் பலரும் ஓடி உழல்கின்றனர். எண்ணிய இன்பத்தைப் பெற்று மகிழும் காலத்தினைக் காட்டிலும், நீண்டகாலம் துன்பத்தில் சுழலும் நிலையில் ஒரு சிலர் வாழ்வு அவலமாகவும் கழிகின்றது.

    “இன்பமும் துன்பமும் தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே’’ என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். பொருள்களில் இன்பமோ துன்பமோ பொருந்தி இருப்பது இல்லை. அது உள்ளத்திலே உள்ளது. இது வேண்டும் அது வேண்டும், இருப்பது போதாது, இன்னமும் வேண்டும் என்று எப்போதும் மனமானது அலைந்து கொண்டே இருப்பதால், எவ்வளவு காலம் முயன்றாலும் துன்பமே விஞ்சி நிற்கும். ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசை அறுதலே இன்பத்திற்கு ஊற்று. “இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” என்பது நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர் திருவாக்கு.

    இந்த அடிப்படை உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும். நாலடியார் அந்த உண்மையினை நமக்கு மேலும் உணர்த்துகின்றது, 

“அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி, 

உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால் 

இன்புற்று வாழும் இயல்பினார், எஞ்ஞான்றும் 

துன்புற்று வாழ்தல் அரிது’ -- நாலடியார். 

இதன் பொருள் ---

யாவராலும் அறிதற்கு அரிதாகி, அறிய வேண்டியதாக உள்ளவற்றை, நல்லவற்றை உள்ளபடி அறிந்து, அறிந்தபடி காம, வெகுளி, மயக்கங்களின் வழியே செல்லாது, மனம் அடங்கி நடந்து, அஞ்ச வேண்டிய பழிபாவங்களுக்கு அஞ்சி, உயர்ந்தோர் விரும்பி மகிழத்தக்க நல்ல செயல்களையே செய்து வாழ்வதனால் உண்டாகும் பயன் குறைவு என்றாலும், அதனைக் கொண்டு இன்புற்ற வாழும் மனப்பாங்கு உள்ளவர்கள் எப்போதும் வாழ்வில் துன்பத்தை அடையமாட்டார்கள்.

    அரிய உண்மைகளை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. முதலாவதாக அறிவதை அறியவேண்டும். பலவற்றைக் கற்று வைத்து இருந்தாலும், உலகில் உள்ள உயர்ந்தோர் கூறிய அறவுரைகளை அறிந்து ஒருவன் ஒழுகவில்லையானால், பறவற்றைக் கற்று வைத்து இருந்தாலும் ஒருவன் அறிவு இல்லாதவனாகவே கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவ நாயனார். “உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவு இலாதார்” என்பது திருக்குறள். அந்த அறிவுதான் மாட்சிமைப்பட்ட அறிவு என்கிறது “பழமொழி நானூறு” என்னும் நூல்.

“அறிவினால் மாட்சி ஒன்(று) இல்லா ஒருவன்

பிறிதினால் மாண்ட(து) எவனாம்? - பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணி எல்லாம் ஆடையின் பின்.

இதன் பொருள் ---

சாணையால் பட்டை தீட்டப்பட்ட இரத்தினங்களால் ஆன அணிகலனும், பொன்னால் ஆன அணிகலனும், சந்தனக் கலவையும், மாலையும் ஆகிய இவை போன்ற அணிகள் யாவையும், ஆடை உடுத்த பின்னர் அணிந்து கொண்டால்தான், அழகு மிளிரும். அதுபோலவே, அறிவினால் வந்த பெருமைகளே ஒருவனுக்குப் பெருமை ஆகும். அறிவு இல்லாத ஒருவன் பிற செல்வங்களினால் பெருமை அடைவது இல்லை.

    செல்வத்தை உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர் என்பது கருத்து. எனவே அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்வது அவசியம். “கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, அறிய வேண்டியதை அறிந்து, அதன்படி ஒழுகினால், மனமானது காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களில் இருந்து விடுபடும். அப்படிப்பட்ட மனம் அஞ்ச வேண்டியற்கு அஞ்சும். “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்றார் நாயனார். “பிறர் அஞ்சவது அஞ்சி” என்பது புறநானூறு.

    அறிவும் அடக்கமும் அஞ்சுவது அஞ்சும் நல்லுணர்வும் மனிதனிடத்தில் அமைந்தால் நாட்டிலும் உலகிலும் இன்று காணப்படும் பல கொடுமைகள் இல்லாமல் போகும் என்பது உண்மை. இந்த அறிவும் அடக்கமும் நல்லுணர்வும் அமைந்த நல்ல உள்ளம் உடையோர் உலகம் விரும்பிய நல்ல காரியங்களைச் செய்வதோடு, உள்ளதைக் கொண்டு மகிழ்ந்து, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற நெறியில் நிற்பர். 

    அறிய வேண்டியவற்றை அறிந்து ஒழுகினால், தலையாய அறிவு நம்மிடத்தே தலைப்படும். அதுவே அறிவின் பயனும் ஆகும். “அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்” என்கிறார் திருவள்ளுவ நாயனார். தமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர் என்கிறார். எனவே, நாம் முதலில் தீய செறுவார்க்கும் செய்யா அறிவுடையராக வேண்டும். அந்தத் தலையாய அறிவின் வழி அடக்கம் அமையும். அஞ்சுவது அஞ்சும் பண்பும் உருவாகும். நாம் எல்லாரும் இன்பம் பெறுவோம் என்பது உறுதி. 

    “இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை” என்னும் அருளாளர் வாக்கு மெய்ம்மை ஆகும்.


எந்நாளும் இன்பமே

இன்பமே எந்நாளும் -----      இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் ...