செய்த குற்றம் என்ன?
-----
குற்றம் ஏதும் செய்யாத நிலையில்,ஒரு துன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க நேர்ந்தால், அதைப் பொறுக்க மாட்டாமையால், இறைவனிடம் முறையிடுவது நல்லது. இறைவன் ஒருவன்தான் நமது முறையீட்டைக் கேட்கச் சலித்துக் கொள்ளமாட்டான். தக்க உதவியையும் செய்வான். வேறு யாரிடமாவது முறையிட்டால், கேட்பவர்க்கு சலிப்பு உண்டாகும். நன்மை அல்லாமல், வேறு வகையில் துன்பம் வந்தாலும் வரும். பிறவித் துன்பத்தைப் பொறுக்க மாட்டாத அருணகிரிநாதப் பெருமான், முருகப் பெருமானிடம், பிரமன் குற்றப்பட்டு விட்டதாக முறையிடுகின்றார். "பெருமானே! உன்னை வழிபட முடியாத நிலையில் என்னப் பிரமன் படைத்து விட்டானே, அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்" என்று முறையிடுகின்றார்.
இறைவன் திருவருளில் ஈடுபட்டு,வழிபட்டு, மனத்தினாலே சிந்தித்து, வாக்கினாலே பாடிப் பேரின்ப அனுபவத்தைப் பெற்றவர் அருணகிரிநாதர். அத்தகையவர், "பெருமானே! உனது திருவடியைத் தாழ்ந்து வணங்காத தலையையும், உனது திருமேனியைக் கண்ணாரக் காணாத கண்களையும், உனது திருவடியைத் தொழாத கைகளையும், உனது அருட்புகழழைப் பாடாத நாவையும் எனக்குத் தெரிந்துதான் பிரமன் படைத்திருக்கின்றான். அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று புலம்புகிறார். இது உண்மை அல்ல. முழுப் பொய்யே ஆகும். "மலடியின் மகன் நான்" என்று சொல்வது போல் இது இருக்கிறது. மகன் என்ற சொல்லே, அவனைப் பெற்றவள் மலடி அல்ல என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தப் பாட்டில் சூடாத சென்னி, நாடாத கண்,தொழாத கை ஆகியவற்றைப் பிரமன் படைத்திருக்கிறானே என்று மட்டும் சொல்லி இருக்கலாம். ஆனால் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே என்கிறார். அற்புதமான திருப்புகழ்ப் பாடல்களை மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சாத்தி மகிழ்ந்தவர் அவர். இந்தப் பாட்டைப் பாடியதும் அவர்தான். ஆகவே, அருணகிரிநாதர் பாடியது பொய் என்றுதான் தோன்றும். பொய்போலத் தோற்றினாலும் அது பொய் ஆகாது.
நற்பயன் விளையுமானால் பொய்யும் மெய்யே என்பார் திருவள்ளுவ நாயனார். தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் மெய்ம்மை.நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதல் பொய்ம்மை. தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதல் பொய்ம்மை.
"பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
உண்மையைச் சொல்வதனால் தீமை உண்டாகுமானால் அதைச் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் இருக்கலாம். நல்லது நடப்பதற்காக ஒரு பொய் சொன்னால், அது பொய் ஆகாது. பொல்லாதவன் ஒருவன் வேறு ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று துரத்திக்கொண்டு வருகிறான். ஒடி வருகிறவன் ஒருவனுடைய வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். துரத்தி வந்தவன் வந்து, "இங்கே எவனாவது வந்து ஒளிந்திருக்கிறானா?” என்றால் உடனே, "ஆம், இதோ இருக்கிறான்" என்று காட்டினால் நாம் அரிச்சந்திரன் ஆகிவிடமாட்டோம். "அவனை நாம் அறியேன்" என்று சொன்னால் அது பொய் அல்லவா என்று தோன்றும். உண்மையில் அது பொய் அல்ல. வாய்மை என்றால் என்ன? "வாய்மை எனப்படுவது யாது எனின்?யாது ஒன்றும் தீமை இலாத சொலல்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
பொய்யில் இரண்டுவகை உண்டு. ஒருவகைப் பொய், சொல்கிறவனுக்குப் பொய் என்று தோன்றும்; கேட்கிறவனுக்குத் தெரியாது. இது வஞ்சனை ஆகும். மற்றொரு வகை, சொல்கிறவனுக்கும் கேட்கிறவனுக்கும் பொய் என்று தெரியும். இதற்குக் கற்பனை என்று பெயர். புலவர்கள் மட்டும் அல்லாது அருளாளர்களும் இந்த வகையில் எத்தனையோ பொய்களை வாரி வாரி வீசி இருக்கின்றார்கள். அவர்களுடைய கற்பனைகள் உண்மை அல்ல; பொய்தான். ஆனால், இவற்றால்யாரும் ஏமாறுவதில்லை. படிக்கிறவர்களுக்கு இவை கற்பனை என்று தெரியும்.
'துரும்பாக இளைத்து விட்டாயே' என்று ஒருவரைப் பார்த்துச் சொல்கிறோம். உண்மையில் துரும்பு போல எப்படி இளைக்க முடியும்? அப்படிச் சொல்லும்போது,பொய் என்ற நினைவு சொல்பவனுக்கும் இல்லை; கேட்கிறவனுக்கும் இல்லை. மிகையாகச் சொல்வதாக அமையும்.. இப்படியே குழந்தையைப் பார்த்து, 'யானைக் குட்டி" என்கிறோம். யானைக்குட்டி போலக் கொழு கொழு என்று இருக்கிறதென்று பொருள். இதுவும் மேலாகப் பார்த்தால் பொய்யாகத் தோன்றும். ஆனால்,பொய் அல்ல.அலங்காரமாகச் சொல்வது. அதுபோல, அலங்காரமாக ஒரு பாடலை அருணகிரிநாதர் பாடுகிறார். அந்த நூல் "கந்தர் அலங்காரம்" எனப்படும்.
மிக உயர்ந்தவர்கள் தாம் விழைந்த பெரும்பயன் விளையாமல் துன்பப் படும்போது, தாம் குற்றப்பட்டு விட்டதாக எண்ணிப் புலம்புவார்கள். ஆனால், தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் இறைவனைப் பழிப்பார்கள்.அருணகிரிநாதப் பெருமான் சுவாமிகள் புலம்புவன எல்லாம். தம்மை நினைந்து சொல்வன அல்ல.
"வாழ்த்த வாயும்,நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே".
என்று அப்பர் பெருமான் புலம்பி உள்ளார். இறைவன் இந்த உடம்பையும், அதில் பொருந்தி உள்ள உறுப்புக்களையும் நன்றாகப் படைத்ததே, தன்னை நன்றாகத் தமிழ் செய்யத்தான். உடம்பால் பெற்ற பயன் இறைவனைத் தொழுவதே ஆகும்.
பெரியவர்களைப் புகழ்ந்தால் அவர்கள் நாணப்படு்வார்கள்; அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால், மனம் வாடுவார்கள். சொன்னவரைப் பழிக்கமாட்டார்கள். பொல்லாத மக்களிடத்தில்,அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் கோபம் கொள்வார்கள். சொன்னவருக்குத் தீங்கு செய்தாலும் செய்வார்கள். குரங்குக்கு உபதேசம் செய்த தூக்கணங்குருவி பட்ட பாடு நாம் அறிந்ததே.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் சிலவற்றை நாம் இயக்கலாம். சில தாமே இயங்குவன. இதயம் இருக்கிறது. அதை நம்மால் இயக்க முடியாது. அது நின்று விட்டால் மீண்டும் நம்மால் அதை இயக்க முடியாது. கை கால் தலை இவைகளை நாம் இயக்கலாம். நம்மால் இயக்குவதற்குச் சாத்தியமான, புறத்தில் இருக்கிற உறுப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை.
உயர்ந்த பொருளைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டால் மனிதர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள். சிறிய பொருளைக் கொண்டு,பெரிய பொருளை வாங்கவேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு இருக்கும். கிடைத்தற்கரிய பொருள் கிடைத்தால்,அதைக் கொண்டு மிகப் பெரும்பயனை அடைவதுதான் முறை. பணம் கொடுத்து மற்றப் பாண்டங்களை வாங்கிவிடலாம். இறைவன் தந்திருக்கிற பாண்டமாகிய உடம்பு எத்தனை பொருள் கொடுத்தாலும் வாங்க முடியாதது. நமது சுண்டுவிரல் போய் விட்டால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது. புதிதாக ஒன்றைப் பண்ணவும் முடியாது. அத்தகைய அரிய உறுப்புகளைக் கொண்டு, மிக அதிகமான பயனைப் பெற வேண்டும் என்று மனிதன் நினைக்க வேண்டும். இறைவன் திருவருளைப் பெறுவது ஒன்றுதான், நாம் அடைகிற பெரும்பயன். கையும் காலும் உடைய நாம், தன்னை வணங்கவேண்டும் என்றே இறைவன் கையும் காலும் உடையவனாக எழுந்தருளியிருக்கிறான்.
உடம்பில் உள்ள அங்கங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கொடுக்காவிட்டால், அவைகெட்ட வேலையைத்தான் செய்யும். அவற்றுக்குச் சரியான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பெரியோர்கள் ஆலயங்களுக்குச் செல்வது, ஆண்டவன் சந்நிதியில் சிரம் தாழ்த்தி வணங்குவது, கை கூப்புவது, அருட்பாடல்களை நாவினாலே ஓதுவது ஆகிய பல செயல்களைவைத்திருக்கிறார்கள். உடலில் உள்ள உறுப்புகளுக்கு இறைவனோடு தொடர்புடைய வேலையைக் கொடுத்தார்கள். இப்படி இந்த உடம்பு முழுவதையும் இறைவனின் திருத்தொண்டில் ஈடுபடுத்தினால், உடம்புபுனிதமாகும். "பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை" இது. பொத்தை ஊன் சுவர், புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு (நிணம்) ஒழுகிய பொய்க்கூரை ஆகிய இதை மெய் எனக் கருதி நின்று இடர்க்கடலில் விழுதல் கூடாது.இந்த உடம்பு கங்கை நீரில் கழுவினாலும் தூய்மை பெறாது. இதைப் புனிதப்படுத்தும் வழி இறை வழிபாடு ஒன்றுதான்.
அப்பர் பெருமான், "தலையே நீ வணங்காய்"என்று தொடங்கி, "திரு அங்கமாலை" என்னும் ஒரு திருப்பதிகத்தை அருளிச் செய்து, ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பணியைச் சொல்கிறார். உறுப்புகளைப் பெற்றதனால் பயன் அவற்றைச் செய்வதுதான்.
மனத்தில் இறைவனுடைய நினைவு உறைக்க வேண்டுமானால், அவன் நினைவு உண்டாவதற்குரிய செயல்களைப் புறத்தில் செய்து பயில வேண்டும். அதற்கு ஏற்ப உடம்பிலுள்ள அங்கங்களை இயக்க வேண்டும். ஒவ்வோர் அங்கத்துக்கும் ஒவ்வொரு வகை இயக்கம் இருக்கிறது. கால் நடக்கிறது.கை வேலை செய்கிறது.கண் பார்க்கிறது.வாய் பேசுகிறது. இவ்வாறு உள்ள உறுப்புகளை இறைவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.
வள்ளல்பெருமான்,முருகப் பெருமானை வழிபடாத அங்கங்கள் இன்ன இன்ன விளைவைப் பெறும் என்று ஒரு பாடலில் சொல்கிறார்.
“எந்தை! நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்று இருக்கும் வெறுவாய்;
எங்கள் பெருமான்! உனை வணங்காத மூடர்தலை
இகழ்விறகு எடுக்கும் தலை;
கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலம்நீர் சொரிந்த அழுகண்;
கடவுள்! நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்து இழவு கேட்கும் செவி;
பந்தம் அற நி(ன்)னை எ(ண்)ணாப் பாவிகள்தம் நெஞ்சம்
பகீர்என நடுங்கும் நெஞ்சம்;
பரம! நின் திருமுன்னர்க் குவியாத வஞ்சர்கை
பலியேற்க நீள் கொடுங்கை;
சந்தம்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள்வளர்
தலம் ஒங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வ மணியே!"
என்ன அலங்காரம் செய்து கொண்டாலும் இறைவனுடைய திருவடியில் வணங்காத தலை எதற்கும் பயன் இல்லை என்பதை அறிவுறுத்த, திருவள்ளுவ நாயனார்,"கோள்இல் பொறியின் குணம் இலவே,எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்றார். இறைவனுடைய திருவடியை வணங்குவதற்கு நமக்குத் தலை இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்யாவிட்டால், கேளாத காது போலவும், காணாத கண் போலவும், மணத்தைத் தெரிந்து கொள்ளாத மூக்குப் போலவும் தலை பயனற்றதாகிவிடும் என்று சொல்கிறார். இறைவனுடைய திருவடியை வணங்காத தலையைப் பற்றி வள்ளல்பெருமான், வேறு ஒரிடத்தில் பாடுவது மிகவும் அருமையாக இருக்கிறது.
“வீட்டுத் தலைவ! நின் தாள் வணங்கார்தம் விரிதலை, சும்-
மாட்டுத் தலை, பட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை,
ஆட்டுத் தலை, வெறி நாய்த்தலை,பாம்பின் அடுந்தலை, கல்
பூட்டுத் தலை, வெம் புலைத்தலை, நாற்றப் புழுத்தலையே'
என்று அவர் நாகரிகமாகத் திட்டுகிறார். இப்படிப்பட்ட தலையை உடையவனை, 'மாடே, பன்றியே, ஆடே, நாயே என்று திட்டுவது போலத் தலையை வைத்துச் சொல்கிறார்.
அருணகிரிநாதப் பெருமான்,முருகப் பெருமானைப் பார்த்து, 'உன்னுடைய திருவடியை வணங்காத தலையும், உன்னுடைய திருவடியின் பேரழகைக் காணாத கண்ணும், அதனைத் தொழாத கையும், அதனைப் பாடாத நாவும் பிரமன் எனக்கென்றே அறிந்து படைத்திருக்கிறானே' என்று புலம்புகிறார்.
"கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம்என்? குன்றுஎறிந்த
தாடாளனே! தென் தணிகைக் குமர! நின் தண்டை அம்தாள்
சூடாத சென்னியும்,நாடாத கண்ணும்,தொழாத கையும்,
பாடாத நாவும் எனககே தெரிந்து படைத்தனனே!"
என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.
இதன் பொருள் ---
கிரவுஞ்சமலை பிளவுபடுமாறு வேலை விடுத்து அருளிய மிகுந்த முயற்சியை உடையவரே! ஞானம் கொழிக்கும் அழகான திருத்தணிகை மலையில் எழுந்தருளி உள்ள முகாரப் கடவுளே! உமது தண்டை அணிந்த திருவடிகளைச் சூடிக் கொள்ளாத தலையையும், உமது திருவடியைக் கண்ணாரக் கண்டு மகிழாத கண்களையும், உமது திருவடியைக் கூப்பி வணங்காத கைகளையும், உமது அருட்புகழைப் பாடாத நாவையும் எனக்கென்றே தெரிந்து படைத்து வைத்துள்ளான். எல்லாவற்றையும் முறையாகச் செய்கின்ற அவனுக்கு நான் மட்டும் என்ன குற்றம் செய்தேன்?
(கோடாத --- ஒருபால் சாயாத,பட்சபாதம் இல்லாத. "கோடாமை சான்றோர்க்கு அணி" என்பது திருக்குறள். வேதன் --- பிரமன். (கோடாத வேதன் --- தனது தொழில் முறையில் கோணுதல் இல்லாத பிரமன்) தாடாளன் - தாளாளன். தாடாளன் என்று சீர்காழியிலுள்ள திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு; பெருமுயற்சியுடையோன் என்பது பொருள்.)
இறைவனுடைய ஆணையைத் தாங்கி இந்த உலகத்தை யெல்லாம் நெறி தவறாமல் படைக்கும் வேலையை உடைய பிரமன் சிறிதும் பட்சபாதம் இல்லாதவன். எல்லா உயிர்களையும் அவரவர்களுடைய வினைக்கு ஏற்றபடி படைத்திருக்கிறான். அப்படி இருந்தும் தன் அளவில் அவன் ஏதோ தவறு செய்துவிட்டான் அருணகிரிநாதருக்குத் தோன்றுகிறது. 'நான் அவனுக்கு எந்தவிதமான குற்றமும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் எனக்கு வேண்டாத உறுப்புக்களை அளித்திருக்கிறான். ஒருவேளை என்னையும் அறியாமல் அவனுக்கு ஏதாவது தவறு செய்துவிட்டேனோ? நானே அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாது. ஆகையால் உன்னைக் கேட்கிறேன்' என்று பாடி உள்ளார். நமக்கும் இது பொருந்தும்தானே.
மனிதர்கள் முற்பிறவியில் செய்திருக்கும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி அனுபவங்களை அடுத்த பிறவியில் தரவேண்டும் என்பது பிரமன் பெற்ற ஆணை. அவன் அந்த ஆணையைச் சரிவர நிறைவேற்றிக் கொண்டு வருகிறான். அதில் சிறிதும் கோடுவது இல்லை.பிரமன் தன்னுடைய வேலையைச் செய்வதற்கு ஏற்ற அறிவு படைத்தவன். எப்போதும் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன். வேதம் நித்தியமானது. அதைச் சொல்லித் தன்னுடைய தொழிலில் சிறிதும் குற்றம் ஏற்படாமல் செய்கிறவனாக அவன் இருந்தும், தனக்குச் சரியான வகையில் உறுப்புக்களை அமைக்கவில்லைஎன்று குறைபட்டுக் கொள்கிறார்.
கைகளைக் குவித்துக் கும்பிடுவது நமது நாட்டு வழக்கம். கோபுரத்தைக் கண்டாலும் கை குவியும். இறைவனுடைய நினைப்பை ஊட்டுகின்ற எந்தப் பொருளைக் கண்டாலும் கும்பிடுவது நமக்கு இயல்பு. நம்முடைய கைகள் தனித்தனியே இரண்டு வேறு பக்கங்களில் இருக்கின்றன. நடக்கும்போது வீசி நடக்கின்றன. கொடுக்கும்போது நீண்டு கொடுக்கின்றன. வாங்கும்போது நீண்டு வாங்குகின்றன. அடிப்பது, அணைப்பது ஆகிய சமயங்களில் எல்லாம் கைகள் வேலை செய்கின்றன. இத்தனை இருந்தும் நல்ல பயன் உண்டாவது இல்லை. ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கைகளும் குவித்துத் தொழுவதுதான் சிறந்த பயன் தரும் செயல். சில பெரியவர்களைப் பார்த்து, 'நீங்கள்கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருங்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'என்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சொல்வார்கள். அது போல் நம்முடைய கைகள் ஒரு வேலையையும் செய்யாமல் இறைவனுடைய சந்நிதானத்திற்கு முன் குவிந்து நின்றால் பெரிய நன்மை உண்டாகும். கையைச் சேர்த்துக் குவிப்பது, செயல்மாண்ட நிலையைக் குறிக்கும். "என் செயல் ஆவது ஒன்றும் இல்லை,இனித் தெய்வமே! எல்லாம் உன் செயலே" என்றும் இருக்கும் நிலை இது. கரம் குவித்தால் உள்ளம் மகிழும். "கரம் குவிவார் உள் மகிழும் கோன்" என்பார் மணிவாசகப் பெருமான்.
'பாடாத நாவை எனக்குப் படைத்தான்' என்று சொல்வதே ஒரு பாட்டாக இருக்கிறது. நாமாகப் புதிய பாடல்கள் பாடவேண்டும் என்பதில்லை. முன்னே பல அருளாளர்கள் பாடி வைத்த பாடல்களை இறைவன் முன் நின்று, பொருள் உணர்ந்து பாடவேண்டும்; அதனால் உள்ளம் நெகிழும்.
அருணகிரிநாதர் தலை, கண், கை, நாக்கு ஆகிய நான்கையும் இங்கே சொன்னாலும், உபலக்கணத்தால் காதையும் உள்ளத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருளில்தான், திருவள்ளுவ நாயானார் அருளிய, "கோள் இல் பொறியின் குணம் இலவே, எண்ட குணத்தான் தாளை வணங்காத் தலை" என்னும் திருக்குறளும் அமைந்து உள்ளது. உடம்பில் உள்ள உறுப்புகளில் மிகவும் சிறந்ததாக இருப்பது தலை. தலை என்பதே சிறப்புடைய பொருளைக் குறிக்கும் சொல். வடமொழியில் இதை "உத்தமாங்கம்" என்று சொல்வார்கள். உடம்பினால் வழிபடும் மனிதனுக்கு எல்லாவற்றிலும் சிறந்த உறுப்பாகிய தலை முருகப் பெருமானுடைய திருவடியைத் தாழ்ந்து வணங்க வேண்டும். "சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்" என்பார் மணிவாசகப் பெருமான். ஆகையால், தலையை முதலில் சொன்னார். ஐம்பொறிகளில் மிகவும் சிறந்தது கண். "கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை" என்பது நான்மணிக் கடிகை. கண் என்னும் பொறி நம் உள்ளத்தில் ஆசையை உண்டாக்குவதற்குத் துணையாக இருக்கிறது. பார்க்கின்ற பொருள்களெல்லாம் நமக்கு வேண்டுமென்று ஆசைப்படும்படி கண் வேலை செய்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் பொருளின் திறத்தைத் தெரிந்து பார்க்கும் ஆற்றல் நம் கண்ணுக்கு இருக்கிறது. மனிதனுடைய உடம்பு சிறந்தது. அதனில் அவனுடைய தலை மிகச் சிறந்தது. அதில் கண் மிகமிகச் சிறந்தது.
அடுத்தபடியாக,மனிதன் கைகளால் பல வேலைகளைச் செய்கிறான். விலங்குகளுக்குக் கால்கள் மட்டுமே உண்டு. கைகள் இல்லை. உலகம் முழுவதும் மனிதன் செய்கிற செயல்கள் மிக்க அற்புதமாக இருக்கின்றன. அவனுடைய கைகள் அவனுக்கு உறுதுணையாக உள்ளன. ஆகையால் மனிதனுடைய கைகள் மிகச் சிறந்தவை.
அப்படியே அவனுடைய நாவும் மற்ற உயிர்களுக்கு இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. விலங்கு முதலியன சில ஒலிகளைத்தான் எழுப்பும். மனிதன் மட்டுமே பேசும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். அவனுடைய நாக்கு மிகச் சிறந்தது. ஆகவே இந்தப் பாட்டில் மனிதனுக்குச் சிறப்பைத் தந்த தலையையும், கண்களையும், கைகளையும், நாவையும் எடுத்துச் சொன்னார். மற்ற உயிர்க் கூட்டங்களைப் போல இல்லாமல் சிறப்பான உறுப்புக்களைப் பெற்ற மனிதன் அந்த உறுப்புக்களைக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெற வேண்டும்.
தலையினால் வணங்குவதற்கும், கண்ணால் காண்பதற்கும், கையால் தொழுவதற்கும், நாவினால் பாடுவதற்குமாக இறைவன் திருவுருவத்தோடு எழுந்தருளியிருக்கிறான். நம்முடைய கண் முன்னே திருத் தணிகைமலை உச்சியில் நின்று தன்னுடைய திருக்கோலக் காட்சியை வழங்குகிறான். அவனுடைய திருவடியில் ஈடுபட்டுக் கீழே விழுந்து, அட்டாங்க பஞ்சாங்கமாகவணங்குவது மிகவும் முக்கியமானது. அவனுடைய திருமேனி உறுப்புக்கள் பலவற்றைக் கண்டு வணங்கினாலும் இறுதியில் அவனுடைய திருவடியை வணங்குவதுதான் தலையானது; பயனைத் தருவது. அதனால், அந்தத் திருவடியை வணங்காத தலையையும், அதனை நோக்காத கண்ணையும் அதனைத் தொழாத கையையும், அதனைப் பாடாத நாவையும் பிரமன் எனக்கென்றே படைத்தானே' என்று அருணகிரிநாதர் திருத்தணிகைப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிறார்.
திருத்தணிகைக் குமரனுடைய தண்டை அணிந்த திருவடிகளைத் தலையினால் வணங்கி, கண்ணாரக் கண்டு,கையாரக் கும்பிட்டு, நாவாரப் பாடி வழிபடவேண்டும் என்பதை கருத்து.
இறைவன் திருவருள் ஆணைப்படியே பிரமதேவன் படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான். அவன் குற்றப்பட்டான் என்றால், அந்தக் குற்றம் அவனது தலைவனாகிய இறைவனையே சாரும். அப்படி நேராகச் சொல்லாமல், மறைமுகமாக முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிளார். அருணகிரிநாதப் பெருமானுடைய உள்ளக் கருத்து முருகப் பெருமானுக்குத் தெரியாமலா இருக்கும்? நாமும் அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?